Posts

Showing posts from January, 2024

சில நேரங்களில் சில மனிதர்கள்:

Image
காலை ஏழு மணி பேருந்திற்காகக் காத்திருந்தேன். எப்போதும்போல அங்கிருந்த மரத்தில் காகங்கள் கரைந்துகொண்டிருந்தன. வாகனங்கள் ஒவ்வொன்றாக சென்றுகொண்டிருந்தது. சில பள்ளி மாணவர்கள் ‌ஒருபுறம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் கைக் கடிகாரத்தையும் சாலையையும்  ஊர்ந்து செல்லும் வாகனங்களையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன். கைபேசி ஒலித்தது. எடுத்து அழைப்பு வந்த எண்களைப் பார்த்தேன். புதிய எண்ணாக இருந்தது. பெரும்பாலும் புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் ஏதேனும் விளம்பரத்திற்காகவும் அல்லது கம்பெனி எண்ணாகவும் இருப்பதால் நான் அதைப்‌பொருட்படுத்தாமல் துண்டித்து விடுவதுண்டு. இம்முறையும் அதையே செய்து கைபேசியை பைக்குகள் வைத்தேன்.  பேருந்து வந்து என்னருகில் நின்றது. நான் ஏறி காலியாக இருந்த முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். மீண்டும் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். இதற்கு முன் வந்திருந்த அதே எண். பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன்.  ஹலோ கீதாவா என்றது எதிர்முனையில் கேட்ட பெண் குரல்.  ஆமாம். நீங்க.. என்றேன்.  என் பேரும் கீதா தான் என்றார் அப்பெண்.  ஓ.. அப்படிங்களா. என்ன வேண்டும

ட்ராஃபிக் ஸ்டோரிஸ்:

Image
ட்ராஃபிக் ஸ்டோரிஸ்...) காலை நாங்கள் சென்ற ஆட்டோ ட்ராஃபிக்கில் நின்றுக் கொண்டிருந்தது. மௌனி அங்குமிங்கும் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு என்னருகில் அமர்ந்திருந்தான். நாங்கள் இருந்த ஆட்டோவின் வலது புறம் ஒரு பொக்லிங் வண்டி பழுதடைந்த தண்ணீர் லாரி ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றது. நாங்கள் இருவரும் அதைப் பார்த்தோம். மௌனி எனைப்பார்த்துக் கேட்டான். "அம்மா அந்த தண்ணி லாரிக்கு என்னாச்சு.." சமீபமாகதான் கவனிக்கிறேன். மௌனிக்கு வாகனங்கள் மிகவும் பிடிக்கிறது. எங்கிருந்தாலும் தன் கவனத்தை அருகில் இருக்கும் வாகனத்தின் மீது குவித்துக்கொள்கிறான். விளையாட்டு பொருட்களிலும் அதிகமாக வாகனங்களின் மாதிரிகள் தான் தேர்ந்தெடுக்கிறான். முன்னதாகவே இதையெல்லாம் கவனித்திருந்ததால் அவன் கேள்வி புதிதாக தோன்றவில்லை.  "அது ரிப்பேர் ஆயிடுச்சு பா. அதனால சரி பண்ண எடுத்துட்டு போறாங்க.." என்றேன். அப்டினா?.. இது அவனது அடுத்த கேள்வி.  நான் சிறிது யோசித்து பின் விளக்கினேன். "அப்படினா... உனக்கு உடம்பு சரியில்லனா அம்மா உன்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்ல.. அந்த மாதிரி.." அப்ப

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

Image
பயணங்கள் எப்போதும் சிறப்பானவை. அதிலும் குறிக்கோள்கள் ஏதுமற்றப் பயணங்கள் மிக அலாதி. ஒவ்வொரு நொடியும் வியப்பில் ஆழ்த்தும் காலங்கள் அவை. எப்படியெனில் அவற்றை நினைக்கும்போது கூட அவைகள் உண்டாக்கிய உணர்வுகள் குறைவதேயில்லை. சிறு வயதில் நான் வசிக்கும் தெருவில் ஒரு சித்தப்பா இருந்தார். அவரது பெயர் பழனி. திரைப்படங்கள் எதுவும் அறிமுகம் இல்லாத என் பால்ய காலக்கட்டத்தில் நான் பார்த்து வளர்ந்த ஒரு உண்மையான நாயகர் அவர்தான். கண்களில் இட்டுக்கொள்ளும் மையினைப்போலக் கருப்பு நிறத்தில் இருக்கும் அவர் உடலில் முகத்தில் இருக்கும் கண்களும் எப்போதும் இளித்தப்படியே இருக்கும் அவரது பற்களும் மட்டுமே வெண்மையானவை. தோள் நிறத்தில் இருந்து சற்று மாறுபாடு கொண்டவை.  அவர் அப்போது ஓட்டுநர் பணியில் இருந்தார். வேலை முடிந்து அவரது வாகனத்தில் தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவார். பணி இல்லாத நாட்களில் பிள்ளைகளோடு விளையாடுவார்.  தெருவில் ஐஸ் வண்டி ஓட்டி வரும் ராமர் மாமாவுக்கு பழனி சித்தப்பாவைப் பார்த்தாலே சந்தோசம் முகத்தில் தாண்டவமாடும். தெருவில் அங்கங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ம

சிலநேரங்களில் சில மனிதர்கள்:

Image
மாணவர்கள் இயக்கத்தில் இணைந்த சில காலங்களில் அலுவலகத்திலேயே தங்கிவிட்டிருந்தேன். மாதம் இரண்டு முறை மாணவ தோழர்கள் கூட்டம் நடைபெறும். அச்சமயம் அலுவலகத்திலேயே நானும் இருந்ததால் அந்நிகழ்வை ஒருங்கிணைக்கத் தொடங்கியிருந்தேன். ஒவ்வொரு கூட்டத்திலும் புதிய புதிய மாணவ தோழர்கள் வந்துக் கலந்துகொள்வார்கள். அவர்களின் எண்களையும் முகவரிகளையும் பெற்று பத்திரப்படுத்திக் கொள்வேன். ஆர்பாட்டம்,  உண்ணாவிரதம், கவனம்  ஈர்ப்புப் போராட்டம் போன்றவற்றிற்கு அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவ்வாறு பத்திரப்படுத்துவதுண்டு. கூட்டத்தில் படித்த நூல்கள், முக்கியமான சமூக நிகழ்வுகள், அப்போதைய அரசியல் நிலைபாடு என பலவற்றைக் குறித்து கலந்துரையாடல் செய்வோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் வெவ்வேறு விதமான பார்வைகள். சென்னையின் பல இடங்களில் இருந்து அன்று ஒரே இடத்தில் கூடும் தோழர்களான எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியான நிகழ்வாக அது அமையும். ஒருமுறை மாணவ தோழர்கள்  கூட்டத்தில் புதிதாக இரண்டு மாணவர்கள் கலந்துக்கொண்டனர். வழக்கம்போல் என் எண்ணை பகிர்ந்துகொண்டு அவர்களின் எண்களை வாங்கிக்கொண்

கவிதைகள்:

Image
மௌனமும் அற்ற நிலையில்:  மெல்லிய சாக்பீஸ் கோட்டினைப் போல் ஒரே சுருதியில் பியானோ இசைக்கிறது. மஞ்சளும் ஆரஞ்சுமற்ற நிறத்தில்  கருமை கலந்த ஜீரோ வாட்ஸ் அறை. இந்த நீண்ட இரவில்  அறையின் இசையொடு  இலயித்த பாடலொன்றைப் பாடுகிறேன் ஆழ்மௌன அதிதொனியில் அன்றலர்ந்த ஒருசொல்லில் மௌனமும் அற்ற நிலையில். இசையின் நடனம்:  இடது தோள்பட்டையோடு  அணைத்த வயலினை வலது கையால் நரம்பு தேய்த்து கண்கள் மூடி வாசித்தேன்.  தன்  வெண்மையோடு அங்கங்கு  நீலம் பூத்த ஆடையை  விசிறிக்கொண்டு  ஆடத் தொடங்கியது  ஒருபாதி மனம். இசை  உச்சிக்குச் சென்று  மீள்கையில் தலைக்கு மேல் தூக்கியிருந்த வலது கையைப் பிடித்து  இடதுபுறமிருந்து  இடையைப் பற்றியது மீதிப்பாதி.  வளைந்தும்  சுற்றியும் நெளிந்தும் சென்றது  இசையும் நடனமும் மாறி மாறி  ஆடிக் கழித்துக் களைத்த கணம் ஒரே மூச்சாய்  இசையை  இழுத்து நிறுத்தி  விழித்தேன்.  முடிவுக்கு வந்தது இசை.  ஆடிய களைப்பில்  மூச்சிறைத்தது மனம்.