ட்ராஃபிக் ஸ்டோரிஸ்:

ட்ராஃபிக் ஸ்டோரிஸ்...)



காலை நாங்கள் சென்ற ஆட்டோ ட்ராஃபிக்கில் நின்றுக் கொண்டிருந்தது. மௌனி அங்குமிங்கும் சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு என்னருகில் அமர்ந்திருந்தான். நாங்கள் இருந்த ஆட்டோவின் வலது புறம் ஒரு பொக்லிங் வண்டி பழுதடைந்த தண்ணீர் லாரி ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றது. நாங்கள் இருவரும் அதைப் பார்த்தோம். மௌனி எனைப்பார்த்துக் கேட்டான். "அம்மா அந்த தண்ணி லாரிக்கு என்னாச்சு.."


சமீபமாகதான் கவனிக்கிறேன். மௌனிக்கு வாகனங்கள் மிகவும் பிடிக்கிறது. எங்கிருந்தாலும் தன் கவனத்தை அருகில் இருக்கும் வாகனத்தின் மீது குவித்துக்கொள்கிறான். விளையாட்டு பொருட்களிலும் அதிகமாக வாகனங்களின் மாதிரிகள் தான் தேர்ந்தெடுக்கிறான். முன்னதாகவே இதையெல்லாம் கவனித்திருந்ததால் அவன் கேள்வி புதிதாக தோன்றவில்லை. 

"அது ரிப்பேர் ஆயிடுச்சு பா. அதனால சரி பண்ண எடுத்துட்டு போறாங்க.." என்றேன்.

அப்டினா?.. இது அவனது அடுத்த கேள்வி. 

நான் சிறிது யோசித்து பின் விளக்கினேன். "அப்படினா... உனக்கு உடம்பு சரியில்லனா அம்மா உன்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்ல.. அந்த மாதிரி.."

அப்ப லாரிக்கு உடம்பு சரில்லையா?.. என்றான். 

ம்ம்.. ஆமா. அப்டியும் சொல்லலாம். என்று நான் வேடிக்கைப்பார்க்கத் தொடங்கினேன். 

லாரிக்கு உடம்பு எப்போ சரியாகும்? என்றான் மீண்டும். 

என்ன சொல்வது என்று யோசித்தேன். ஏனெனில் மௌனியின் சந்தேகங்கள், அவனது கேள்வியின் நீளங்கள் குறித்து முன் அனுபவங்கள் அதிகமாகவே இருப்பதால் நான் கூறினேன். "நாளைக்கு சரியாய்டும். நாம திரும்ப பாக்கலாம்.. சரியா." என்றேன். 

ம். ஓகே. என்றவன். சில நொடிகளில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தான். அம்மா அந்த தண்ணி லாரிக்கு என்னாச்சு. 

நான் மீண்டும் பதில் கூற ஆரம்பித்தேன். இப்படியே அதே கேள்விகளை மாறி மாறி நான்கைந்து முறைக்கு மேல் அவன் கேட்க, நானும் அதற்கான பதில்களைக் கூற என்று நீண்டுக்கொண்டே சென்றது நேரம். இதற்குள் எங்கள் பயணம் முடிந்திருந்தது. அதன்பின் கிட்டத்தட்ட இருவருமே அந்த லாரியை மறந்துவிட்டதாக நான் நினைத்திருந்தேன். 

மறுநாள் காலை அதே நேரம் அதே இடம் அதேபோன்று ஆட்டோ பயணம்.. மீண்டும் எங்களை ஒரு தண்ணீர் லாரி கடந்துச்சென்றது. அதைப் பார்த்துவிட்ட மௌனி "அம்மா  தண்ணி லாரி சரியாய்டுச்சு பாரு".. என்று ஆட்டோவிலே துள்ளிக்குதித்து கைகளைத் தட்டத்தொடங்கினான். 

நேற்று பார்த்த லாரி இது இல்லை என்றாலும் அதனால் என்ன.. "ஆமால.. சரியாய்டுச்சு" என்று நானும் அவனோடு கைகளை தட்ட ஆரம்பித்தேன். எப்படியோ முப்பதிலிருந்து மூன்றாக்கும் வித்தை குழந்தைகளுக்கு மட்டும் கைவந்துவிடுகிறது. மந்திரக் காரர்கள் அவர்கள். 


Comments

Post a Comment

Popular posts from this blog

எழுத்தும் நானும்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

சில நேரங்களில் சில மனிதர்கள்: