எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

பயணங்கள் எப்போதும் சிறப்பானவை. அதிலும் குறிக்கோள்கள் ஏதுமற்றப் பயணங்கள் மிக அலாதி. ஒவ்வொரு நொடியும் வியப்பில் ஆழ்த்தும் காலங்கள் அவை. எப்படியெனில் அவற்றை நினைக்கும்போது கூட அவைகள் உண்டாக்கிய உணர்வுகள் குறைவதேயில்லை.

சிறு வயதில் நான் வசிக்கும் தெருவில் ஒரு சித்தப்பா இருந்தார். அவரது பெயர் பழனி. திரைப்படங்கள் எதுவும் அறிமுகம் இல்லாத என் பால்ய காலக்கட்டத்தில் நான் பார்த்து வளர்ந்த ஒரு உண்மையான நாயகர் அவர்தான். கண்களில் இட்டுக்கொள்ளும் மையினைப்போலக் கருப்பு நிறத்தில் இருக்கும் அவர் உடலில் முகத்தில் இருக்கும் கண்களும் எப்போதும் இளித்தப்படியே இருக்கும் அவரது பற்களும் மட்டுமே வெண்மையானவை. தோள் நிறத்தில் இருந்து சற்று மாறுபாடு கொண்டவை. 

அவர் அப்போது ஓட்டுநர் பணியில் இருந்தார். வேலை முடிந்து அவரது வாகனத்தில் தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவார். பணி இல்லாத நாட்களில் பிள்ளைகளோடு விளையாடுவார். 

தெருவில் ஐஸ் வண்டி ஓட்டி வரும் ராமர் மாமாவுக்கு பழனி சித்தப்பாவைப் பார்த்தாலே சந்தோசம் முகத்தில் தாண்டவமாடும். தெருவில் அங்கங்கு விளையாடிக் கொண்டிருக்கும் மொத்த பிள்ளைகளுக்கும் அப்படியே. பெட்டியில் இருக்கும் ஐஸ் முழுவதையும் பழனி சித்தப்பா வாங்கியதோடு பிள்ளைகள் எல்லோருக்கும் அதைப் பகிர்ந்தளிப்பார். எல்லா பிள்ளைகள் மீதும் அவருக்கு இருந்த அன்பு போல் பிள்ளைகளான எங்களது அன்பும் மிகுதியாக அவர் மீது இருந்தது. 

ஒருமுறை எங்கள் அனைவரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சித்தப்பா ஒரு நகர்வலம் வந்தார். நகர்வலம் ஒரு அடிபம்பு இருந்த இடத்தில் நின்றது. வீட்டிலிருந்து சில தெருக்கள் தள்ளி வந்திருந்ததை நான் உணர்ந்தேன். வாகனத்தில் இருந்து அனைவரும் இறங்கினோம். வண்டியில் இருந்து ஒரு வாலியை எடுத்த சித்தப்பா அடிபம்பிலிருந்து நீர் பிடித்து வண்டியை கழுவினார். வண்டியில் வந்திருந்த மற்ற பிள்ளைகள் அங்கங்கே சிதறி ஓடியும் விழுந்தும் விளையாடிக்கொண்டிருந்தனர். தெருவிளக்கினைத் தவிர்த்து வேறெங்கும் மின்சார வெளிச்சம் இல்லாத நாட்கள் அவை. வீடு திரும்பும் போது உடன் வந்திருந்தப் பிள்ளைகளை அந்த இருளில் தேடிப்பிடித்து அழைத்துச்செல்வதற்கு சித்தப்பாவிற்கு சற்று சிரமமாகவே இருந்ததாகத் தோன்றியது.

அன்று நான் வீடு சேர்ந்தபோது அப்பா வீட்டில் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் எங்க போன என்றார். நான் விளையாடப்போனேன் என்றேன். மிக மெல்லமாக கண்ணத்தில் ஒரு அடி வைத்தார். அவர் அடித்தது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் அன்பான அப்பா அடிக்க துணிந்தாரே என்ற துக்கம் நெஞ்சைப் பிழிய அழுது விட்டேன். வெகு நேரம் வாசற்படியில் அமர்ந்து எழவே இல்லை நான். பிறகு அப்பாவே என்னைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்து நிலையைப் பொருமையாக என் கைகளைப் பிடித்துக்கொண்டு விவரித்தார். "இந்த மாதிரி நீ வெளில போனா எங்கயாவது தொலைஞ்சிடுவ உனக்கு திரும்ப வீட்டுக்கு வர தெரியாம போய்ட்டா நாங்க உன்ன எப்படி கண்டுபிடிப்போம். இப்போலாம் குழந்தைங்க நிறைய திருடுறாங்களாம் நான் கேள்விப்பட்டேன்" என்றார். நான் சித்தப்பா கூட தான போனேன் என்றேன் பதிலுக்கு. 'சித்தப்பாக்கூட நிறைய பிள்ளைங்க போறாங்கல்ல அவரால எல்லா பிளைங்களையும் எப்படி பாத்துக்க முடியும். அவருக்கும் அது கஸ்டம் தானே. நீ இங்கேயே விளையாடு. உனக்கு தெரிஞ்ச இடத்துலே மட்டும்' என்றார். ஒருவகையில் அப்பா கூறுவது சரிதான். மேலும் அவர் எதை கூறினாலும் நன்மைக்காகத் தானே என்று நம்பத் தொடங்கினேன்.

இந்த நம்பிக்கையின் நற்பயனால் வீடு பள்ளியைக் கடந்து எந்த நல்ல இடத்தையும் சூழலையும் கற்பனையில் கூட காணமுடியாமல் போனது ஒருபுறம் இருந்தாலும் இதனால் பயம், தயக்கத்தோடு புதிதாக எதையுமே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கூட இல்லாமல் போனது.

இப்படி வளர்ந்த என் வாழ்வின் மிக முக்கியமானக் காலக்கட்டத்தில் எனை அப்படியே அழைத்துவந்து சென்னை பெருநகரத்தில் தனியாக விட்டுவிட்டு குடும்பத்தினர் சென்றுவிட்டனர். சிறுவயதில் எந்த வார்த்தைகள் எனை முடங்க வைத்ததோ சென்னை வந்தபிறகும் அந்த வார்த்தைகளில் இருந்து மீளவே எனக்கு சில காலங்கள் தேவைப்பட்டன. 

சென்னை, விடுதி, பகுதி நேர வேலை, விடுமுறையில் வீடு என்றிருந்த வாழ்வின் இடையே சில நண்பர்களும் இருக்கவே செய்தனர். 

ஒருமுறை உடன் வேலைப்பார்த்த நண்பன் ஒருவன் அவன் வீட்டு திருமணத்திற்கு அழைத்திருந்தான். எப்படியும்  தனியாக எங்கும் போகும் துணிச்சல் இல்லை என்பதால் நான் அந்த அழைப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு முதல் நாள் நண்பன் அழைத்து 'நீ கண்டிப்பா வரல்ல நான் வீட்ல சொல்லிட்டேன். நீ கிளம்பும்போது கால் பண்ணிடு' என்றான். நண்பனின் அத்தனை எதிர்பார்ப்பை ஏமாற்றவும் மனம் வரவில்லை. இரவு முழுவதும் சிந்தித்தேன். ஒரு திருமணத்திற்கு சென்று வருவது அத்தனை தவறாகாது தான். மேலும்  இது தனியாக இல்லையே நண்பனின் குடும்பத்தோடு தானே என்று முதலில் நானே சமாதானம் ஆனேன். விடுதி திரும்பிய பிறகு வீட்டில் தெரியப்படுத்திக்கொள்வோம் என்ற ஒரு தெளிவான முடிவோடு அடுத்த நாள் காலை திருமணத்திற்காக விழுப்புரம் பயணித்தேன். மிக மிக தயங்கி தயங்கி வீட்டிற்கும் தெரியாமல் நான் செய்த முதல் பயணம் அது.

திருமண வீட்டில் முதலில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. நல்ல வரவேற்பாகவே இருந்தது. நான் மணப்பெண்ணின் தம்பியின் தோழி என்றதும் ஒவ்வொருவரின் பார்வையும் பலவிதமாக இருந்தது. முதலில் அச்சூழல் ஒருவிதத் தயக்கத்தைக் கொடுத்திருந்தாலும் நானும் நண்பனும் இயல்பாகவே இருந்தோம். பிறகு அனைவரும் திருமணத்திற்காக விழுப்புரத்தில் இருந்து புதுக்கோட்டை பயணித்தோம். 


'மெய்வழி சாலை' ஊரின் பெயர். அப்படி ஒரு அடர்ந்த இருளை நான் அதற்குமுன் எங்குமே பார்த்ததில்லை. கண்களுக்கு புலப்படும் எந்த இடத்திலும் சிறு வெளிச்சம் கூட இல்லாத ஒரு இடத்தில் அனைவரும் பேருந்தை விட்டு இறங்கினோம். சிறிது தூரம் நடந்துச்சென்று ஒரு சிறு மண்டபத்தை அடைந்தோம். அங்கு தான் திருமணம் நிகழவிருப்பதாக கூறினர். அங்கு மட்டும் மின்சார வெளிச்சம் இருந்தது. மண்டபத்தின் பிற்பகுதியில் இருந்த அறைகளில் சிறு சிறு குழுக்களாக ஓய்வெடுக்க சென்றோம். 

அன்று இரவு வெகு நேரம் தூக்கமில்லை. தங்கியிருந்த அறையின் வாயிற் படியில் வந்து அமர்ந்தேன். முற்றிலும் புதிய சூழல் அது. நண்பனைக் தவிர்த்து அறிமுகம் சிறிதும் அற்ற மக்கள் அவர்கள். நான் எப்படி இங்கு வந்தேன். எதற்காக வந்தேன். எந்தச் செயலுக்கான ஆயத்தம் இது என்று பல சிந்தனைகளை அந்த இருளும் குளிர் காற்றும் திரும்ப திரும்ப வந்துச்செல்லும் கடல் அலையினைப்போல் அழித்தும் பின் தூண்டியும் விளையாடிக்கொண்டிருந்தது. 

எப்படியோ அந்த நாள் புலர்ந்தது. சிறு உறக்கத்திற்கு பின் கண்களைத் தேய்த்துக்கொண்டே வாயிலைக் பார்த்தேன். வானம் பல வண்ணங்களில் மினுங்கியது. அங்கங்கு பறவைகள் பறந்துச்சென்றன. மண்டபத்தின் இடது புறம் சில மரங்களும் வண்ண வண்ண மலர்களும் செழித்திருந்தன. பசுமையான புல்வெளிகளில் மனிதர்கள் நடக்கத் தோதாக ஒரு சிறு கற்களால் ஆன நடைபாதை இருந்தது. மண்டபத்தின் முற்பகுதியில் அழகிய மயில்கள் மேய்ந்துக்கொண்டிருந்தன. ஒரு நிமிடம் நான் எங்கிருக்கிறேன் என்று சரியாக சிந்தித்துக் கொண்டேன். கையில் காப்பி தட்டோடு நண்பன் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தான். சுய நினைவு வந்தவளாய் குளித்து முடித்து திருமண நிகழ்விற்கு தயாராக மண்டபம் வந்தேன்.  

எல்லாம் தயாராக இருந்தது. அப்போது தான் ஒன்றை கவனிக்க நேர்ந்தது. அங்கிருக்கும் ஆண்கள் அனைவரும் தலையில் ஒரு வெள்ளை நிற முண்டாசு கட்டியிருந்தனர். பெண்கள் அனைவரும் தலையில் தாங்கள் அணிந்திருந்த துணியால் முக்காடிட்டிருந்தனர். பார்க்க புதிதாக தோன்றியது. எல்லோரும் அமைதியாக உட்கார்ந்து திருமண தம்பதிகளை பார்த்துக்கொண்டிருந்தோம். மாப்பிள்ளையின் முன் ரோஜா மலர்களும் மணப்பெண்ணின் முன் மல்லிகைப்பூக்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இருவரும் தங்களது முன்னிருந்த அலங்காரிக்கப்பட்ட நீர் குடத்தின் மேல் மலர்கள் தூவி பிரார்த்தித்த பின் தங்கள் கைகளில் அள்ளிய மலர்களை மூன்றுமுறை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர். பின் மணப்பெண்ணின்  கழுத்தில் நீதி தாலி கட்டினார்  மாப்பிள்ளை. பிறகு தங்கள் கழுத்திலிருந்த மாலைகளை மாற்றினர் திருமணம் நிறைவடைந்தது. இத்தனை எளிமையான திருமண முறையை அதற்கு முன் அறிந்திருக்கவில்லை நான். 

ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் அமர்ந்திருந்த அந்த மண்டபத்தில் நான் பெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தில் தம்பதியர் நன்றாக என் கண்களுக்கு தெரிவதைப்போல முன்னாடி அமர்ந்திருந்தேன். ஆகையால் தம்பதிக்கு பின் அமர்ந்திருந்த பெண்களை அவ்வப்போது கவனிக்க நேர்ந்தது. பெரும்பாலும் அவர்கள் கழுத்திலும் காதுகளிலும் விலைமதிப்பற்ற தங்கத்தாலான காதணி மற்றும் கழுத்து நகைகளை மிகையாக அணிந்திருந்தனர். கூந்தலை மூடி மறைத்திருந்ததால் அப்பெண்களின் கூந்தலின் நீளமோ வண்ணமோ என் கண்களுக்கு புலப்படவில்லை. 

பச்சை நிற பூப்போட்ட மேலாடையும் கருப்பு கால்சராயும் அணிந்து கூந்தலை நன்கு விரித்து விட்டிருந்த நான் அப்பெண்களை பார்க்கும்போதெல்லாம் அவர்களின் கூந்தல் வெளியே தெரியும்படி இருந்திருந்தால் இன்னும் அழகாக தெரிவார்கள் என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

திருமணத்திற்கு பின் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முழுமையான சைவ உணவுகள் அவை. எப்படியும் பத்து வகையான உணவுகளாவது பரிமாறப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவும் அவ்வளவு சுவைமிகுந்ததாக இருந்தது. இதற்குள் நண்பனின் குடும்பத்தோடு நன்றாக பழகியிருந்தேன் என்று நினைக்கிறேன். நண்பனின் சகோதரி விருந்து முடிந்ததும் ஊரை சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாள். 


ஊர் முழுவதும் மண் சாலையாக இருந்தது. நகரங்களில் இருப்பது போல் தார் சாலை இல்லை. அங்கங்கு சில குடிசை வீடுகள் இருந்தன. வீட்டிற்கு வெளியே திண்ணைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வீடுகள் பார்ப்பதற்கு மிக நேர்த்தியாக காட்சியளித்தன. ஆனாலும் எந்த வீட்டிலும் மின்சாரம் இல்லை. எனக்கு மிக விசித்திரமாக தோன்றியது. மர்மமாகவும் கூட.

அருகிருந்த பெட்டி கடைக்குச் சென்றேன். அங்கு  ஒரு நடுத்தர வயது பெண் இருந்தார். நான்  கடையின் அருகில் சென்றதும் அவர் சிரித்தார். நானும் புன்னகைத்தேன். கல்யாணத்துக்கு வத்திக்களா என்றார். ஆமாம் என்று தலையாட்டினேன். அப்போது எங்கிருந்தோ ஒரு மயில் வந்து அங்கு நின்றது. நான் மிரண்டு கத்தினேன். பயப்படாதீங்க அது ஒன்னும் பண்ணாது என்று கடையிலிருந்து ஒரு கைப்பிடி காரபூந்தியை அள்ளி தரையில் வீசினார் அப்பெண். மயில் பூந்தியை ஒவ்வொன்றாக கொத்தித் தின்றது. ஒரு சிறு பாத்திரத்தில் நீர் கொண்டுவந்து கொட்டிக்கிடந்த பூந்திக்கு அருகில் வைத்துவிட்டு கடைக்குள் நுழைந்தார் கடைக்காரப் பெண்.

நான் அதே மிரட்சியுடன் பூந்தியை கொத்திக் கொண்டிருக்கும் மயிலையே பார்த்தவாறு நின்றிருந்தேன். எதாவது வேணுமா என்றார் அப்பெண். இல்லை எதுவும் வேண்டாம் என்றவள் சட்டென்று நினைவு வந்தவளாய் அந்த ஊரின் மின்சாரம் இல்லாதற்கான காரணத்தைக் கேட்டேன். 

அப்பெண் சொன்னார் " உலகம் இருளில் தான் உருவாகியிருக்கும் அல்லவா எப்படியும் உலகத்தின் அழிவும் இருளில் தான் இருக்கும் இதற்கிடையில் வந்த மின்சாரம் எங்களுக்கு தேவைப்படவில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்றார். எனக்கோ மிகுந்த அதிர்ச்சி. இதை எப்படி எடுத்துக்கொள்வது என்ற புரிதல் சற்றும் இல்லாமல் இருந்தது. தோற்றம் அழிவைக் காட்டிலும் மின்சாரம் தோன்றியது முதலே உலகத்திற்கு பல நன்மைகள் கிடைத்திருக்கிறது. எனினும் தெருவிளக்குகள் கூட இல்லாத காலத்தில் இருந்த பாதுகாப்பு உணர்வு இப்போது இருக்கிறதா என்பது கேள்விக்குறியது தான். 

நான் தொடர்ந்தேன். மின்சாரம் தேவையில்லை. நீங்கள் சொல்வதைப் போல் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படிதான் வாழ்ந்து இருப்பார்கள். ஆனால் வீட்டை இன்னும் சற்று விசாலமாக கட்டி இருக்கலாம் அல்லவா. நான் பார்த்தவரை எல்லா வீடுகளும் ஒரே மாதிரியான வடிவோடு ஒரே அளவில் மட்டுமே இருக்கிறதே என்றேன். அவர் நிதானமாக பதிலுரைத்தார். இப்படியான பேராசைகள் தான் அழிவுக்கு காரணமாகிறது. எங்களுக்கு இந்த வெயிலிலும் மழையிலும் இருக்க பாதுகாப்பிற்கு ஒரு வீடு மட்டும் தான் வேண்டும். அதற்கு இந்த அளவுள்ள ‌வீடுகள் போதும் என்றார். இதை கேட்டதும் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தேன். இத்தனை புரிதலோடான மனிதர்கள் நான்  சந்திப்பது முதல்முறை. 

பிறகு அப்பெண்ணைக் குறித்து விசாரித்தேன். அவர் இரண்டு பிள்ளைகளின் தாய். பிள்ளைகள் நன்றாகப் படித்து வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். அப்பெண்ணும் கணவரும்  இங்கு வசிக்கின்றனர். கேட்டறிந்ததில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை இதுவாக தான் இருந்தது. 

நான் மீண்டும் தலையின் முண்டாசு மற்றும் முக்காடுகள் குறித்து கேட்டேன். இங்கு எங்களோடு பல உயிர்கள் வாழ்கின்றன. கால்நடைகள் பறவைகள் விலங்குகளும் இதில் அடங்கும். எங்கள் தலைக் கேசத்தால் அவைகளுக்கு எந்த பாதிப்பும் நிகழாத வண்ணம் நாங்கள் எங்கள் தலையை மூடிக்கொள்கிறோம். மேலும் இங்கு உயர்ந்தவர் இறைவன் மட்டுமே. அவர் முன் நாங்கள் பணிந்து இருக்கிறோம் என்ற நம்பிக்கையும் இதில் அடங்கும் என்றார்.

என்னால் மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் போனது. நிச்சயமாக நான் எங்கேயோ வேற்று கிரகத்தில் நிற்கிறேன் என்றே தோன்றியது. மேலும்  ஜாதி மதம் போன்ற எந்த வேறுபாடுகளும் அங்கு இல்லை என்பதை அந்த பெண்ணின்  வழி அறிந்துக்கொண்டேன். மெய்சிலிர்த்து ஒருகணம் பேச மறந்தேன். ஒரு புரிதலும் மனம் முழுக்க கருணையும் கொண்ட மனிதன் எப்படியெல்லாம் வாழ எண்ணுவனோ அப்படி இருந்தது அந்த ஊர். ஒருமுறை தலையை சுற்றி சூழலைப் பார்த்தேன். எங்கும் அமைதி. பறவைகளின் கீச்சொலிகளைத் தவிர்த்து வேறு ஓசைகளே இல்லை. 

நான் வழக்கமான என் புன்னகையால் அப்பெண்ணுக்கு விடைகொடுத்தேன். அவரோ நான்கைந்து மயிலிறகு நீட்டி சிரித்தார். நான் வாங்கிக்கொண்டு மீண்டும் தலையுயர்த்தி ஆகாயத்தை பார்த்தேன் அந்த அடர்ந்த மலைநெல்லி மரங்களின் இலைகளுக்கு இடையில் சூரிய ஒளி கூட மிக மென்மையாக தரையை பட்டும் படாமலும் தொட முயன்றது. 


ஏதோ சிந்தனையில் நேராக சில அடிகள் நடந்தேன். மிக தாராளமான கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றபோது தான் அறிந்தேன் அது அவ்வூரின் நம்பிக்கைக்குரிய கோயில் என்று. ஊதுபத்தியின் மணம் கூடாரம் எங்கும் நிறைந்திருந்தது. என் நண்பனின் தங்கையோடு இன்னும் சில பெண்கள் தலையில் புக்காடிட்டப்படி மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். நானும் அவர்கள் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டேன். தெய்வ சிலைகள் ஏதுமில்லாத வழிபாட்டினை அப்போது தான் அறிந்தேன். பெண்கள் வெகுநேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தனர். நான் கோயிலின் உள்ளே மேய்ந்துக்கொண்டிருந்த மயில்களை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே சிறிது நேரம் சென்றது. 

எல்லோரும் கோயிலை விட்டு வெளியேறினோம். பிறகு நெல்லி மரத்தில் இருந்து கீழே உதிர்ந்து கிடந்த நெல்லிக்கனிகளை எடுத்து சுவைத்தபடி இன்னும் சற்று நடந்தோம். மரங்களின் இடையில் நடந்ததால் அன்றைய நன்பகல் வெப்பம் சிறிதும் தெரியவில்லை. பின் மண்டபம் திரும்பினோம். திருமணத்திற்கு வந்த உறவினர்களை மணமக்களோடு வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் ஒரு புகைப்படக்காரர். நான் சென்று மீண்டும் புகைபடத்திற்காக நிற்கும் மனிதர்களை வேடிக்கைப்பார்க்க தொடங்கினேன். 

எத்தனை எத்தனை முகங்கள். அவற்றில் தான் எத்தனை எத்தனை பாவங்கள். கேமரா என்றதும் உண்டாகும் ஈர்ப்புக்கு தனி உணர்வு. புகைப்படம் எடுக்கும் இடத்தில் நான் வெகுநேரம் நின்றிருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனைப்பார்த்த புகைப்படக்காரர் மணப்பெண்ணின் புடவையை சரிசெய்யும் வேலையை என்னிடம் ஒப்படைத்தார். பின் உறவினர்கள் யாரும் புகைபடத்திற்காக வராத சமயத்தின் இடையில் ஒருமுறை 'சாலை பிள்ளையா நீ' என்றார் முதலில் எனக்கு புரியவில்லை. நான் அவரை  எனக்கு புரியாத தோரணையில் பார்த்தேன். அவர்  அதை உணர்ந்திருக்க வேண்டும். மீண்டும் 'இந்த ஊரா' என்றார். நான் ஒரு பகடிக்காக 'யாதும் ஊரே' என்றேன். அவர் வாய்விட்டு சிரித்தார். நானும் சிரித்தேன். பின் இல்லை பிறந்த ஊர் சேலம், படிக்கும் ஊர் சென்னை என்றேன். சம்பந்தமே இல்லாமல் இங்கு எப்படி என்றார். இரவில் இருந்து அதைதான் நானும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன் என்றேன். மீண்டும் அவர் சிரித்தார். நான் அங்கிருந்து விடைபெற்றேன். 

நேரம் மாலையை நெருங்கும் போது நான் அங்கிருந்து வீட்டிற்கு பயணம் மேற்கொண்டேன். சரியாக இந்த பயணம் தொடங்கி முடியும்போது ஒரு நாள் தான் நிறைவடைந்திருந்தது. எனக்கென்னவோ சில நாட்கள் நான் என் வாழ்விலிருந்தே விலகிச்சென்றுவிட்டு மீண்டும் வந்து இணைந்ததைப்போல் ஒரு தோற்றம். மெய்வழிச்சாலை என் நினைவில் இருந்து சற்றும் விலகவில்லை. முற்றிலும் புதிய அனுபவம். உலகம் எத்தனை விசித்திரமாக உள்ளது என்ற சிந்தனையோடு சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். தலையில் வெள்ளை நிற முண்டாசு அணிந்த ஒரு இளைஞனை கடந்துச்சென்றது நான் பயணித்த பேருந்து. 

ஒரு பயணம் எத்தனை பெரும் அனுபவத்தை கொடுத்து விடுகிறது. சில நூறு  நூல்களை கற்றதைப்போல என்று எழுதி முடித்துவிட்டு என் டைரியை மூடினேன். அப்பாவின் அழைப்பினால் கைபேசி அடிக்கத் தொடங்கியது. 

Comments

  1. எங்க அக்கா இருக்கு அந்த மெய்வழிச்சாலை... முண்டாசுப்பட்டி மாதிரி இன்னும் ஒரு ஊரா ...

    ReplyDelete
  2. கட்டுரைக்கு ஏற்ற ஊர். மெய் வழிச் சாலை. மெய்யை ததும்புகிறது. எளிமையாக வாழ்தல் வரம். பல்லுயிர் ஓம்புதல் அறம். எதிர்பார்ப்பில்லாத பயணத்தில் எஐஅலாமே எதிர்பாராதவையாகவே இருக்கும். என் நண்பன் உடன் இப்படித்தான் இலக்கில்லாமல் வருகிற பஸ்சில் ஏறி, எங்காவது இறங்கி, எது கிடைக்கிறதோ அதையெல்லாம் சாப்பிட்டு, எப்படி எப்படியெல்லாமோ சுற்றி, நதியில் பயணிக்கிற சருகுகளாய் ஊர் திரும்பிய அனுபவம் தான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது. பழனி சித்தப்பா துவக்கி வைத்த பயணத்தின் ருசி, நிற்காமல் தொடரட்டும்.இசையமைப்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எழுத்தும் நானும்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

சில நேரங்களில் சில மனிதர்கள்: