சில நேரங்களில் சில மனிதர்கள்:

காலை ஏழு மணி பேருந்திற்காகக் காத்திருந்தேன். எப்போதும்போல அங்கிருந்த மரத்தில் காகங்கள் கரைந்துகொண்டிருந்தன. வாகனங்கள் ஒவ்வொன்றாக சென்றுகொண்டிருந்தது. சில பள்ளி மாணவர்கள் ‌ஒருபுறம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் கைக் கடிகாரத்தையும் சாலையையும்  ஊர்ந்து செல்லும் வாகனங்களையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன்.

கைபேசி ஒலித்தது. எடுத்து அழைப்பு வந்த எண்களைப் பார்த்தேன். புதிய எண்ணாக இருந்தது. பெரும்பாலும் புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகள் ஏதேனும் விளம்பரத்திற்காகவும் அல்லது கம்பெனி எண்ணாகவும் இருப்பதால் நான் அதைப்‌பொருட்படுத்தாமல் துண்டித்து விடுவதுண்டு. இம்முறையும் அதையே செய்து கைபேசியை பைக்குகள் வைத்தேன். 

பேருந்து வந்து என்னருகில் நின்றது. நான் ஏறி காலியாக இருந்த முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டேன். மீண்டும் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். இதற்கு முன் வந்திருந்த அதே எண். பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தேன். 

ஹலோ கீதாவா என்றது எதிர்முனையில் கேட்ட பெண் குரல். 
ஆமாம். நீங்க.. என்றேன். 
என் பேரும் கீதா தான் என்றார் அப்பெண். 
ஓ.. அப்படிங்களா. என்ன வேண்டும். என்னை உங்களுக்குத் தெரியுமா? என்றேன் மிக மெல்லிய குரலில். 
ஆமாம். என் சகோதரனின் நண்பனின் நண்பன் உனக்கும் நண்பன் என்றார்‌ அப்பெண். மேலும்  தான் விழுப்புரத்தில் இருந்து அழைப்பதாகக் கூறித் தன் குரலை நிறுத்தினார். எனக்கு முதலில் புரியவில்லை. பின் என் நண்பனின் பெயரைக் குறிப்பிட்டார். எனக்கு புரிந்தது. ஓ.. சரிங்க மேடம். நான் கலேஜ் போயிட்ருக்கேன். ஏதாவது முக்கியமா பேச வேண்டுமா? என்றேன். 
அவர்.. தன் அமைதியை இன்னும் சில நிமிடங்கள் நீட்டியிருந்தார்.
பயணத்தில் கைபேசியை பயன்படுத்தும் பழக்கம் எனக்கில்லை. சாளர ஓரம் அமர்ந்து  வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகப்பிடித்த அன்றாடங்களில் ஒன்று. அதற்காகவே பதினைந்து  நிமிடங்கள் தொலைவில் உள்ள 8.45 மணிக்கு  தொடங்கும் கல்லூரிக்கு ஏழு மணி பேருந்திற்கே தயாராகி விடுவதுண்டு. இதைத் தவறவிட்டால் மற்ற எல்லா பேருந்துகளும் கூட்ட நெரிசலோடு வந்துசேரும். பயணம்  செய்த நிம்மதி இருக்காது. கைபேசியை பயன்படுத்தும் போதும் அதே உணர்வு தான். ஆகையால் நான் எந்தப் பயணங்களிலும் கைபேசி பயன்படுத்துவதில்லை. 

நான் தொடர்ந்தேன்.. "ஹலோ.. கீதா மேம். இருக்கிங்களா.. லைன்ல..."

ம். ஆமாம். எனக்கொரு சிறுஉதவி வேண்டும் என்றார் அப்பெண். 

எனக்கு மிகவும் வியப்பும் ஆர்வமும் மேலோங்கியது. என்னிடம் எதுவுமே  இல்லை யாருக்கும் கொடுப்பதற்கு. என்ன கேட்கப்போகிறார் என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே கூறினேன். "சொல்லுங்க. என்ன உதவி.. ?"

அவர் கேட்டார். இன்று எனக்கு ஒரு பணிக்கான நேர்காணல் இருக்கிறது. அந்த இடத்தின் முகவரி என்னிடம் உள்ளது. ஆனால் எனக்கு சென்னை இது தான் முதல் முறை. எப்படி போகவேண்டும் என்று தெரியவில்லை. அதைக் காட்டிலும் மனதில் பயமும்  தயக்கமும் அதிகமாக உள்ளது. என்னுடன் வரமுடியுமா கீதா ப்ளிஸ். எனக்கு சென்னையில் வேற யாரையும் தெரியாது என்றார் அப்பெண். 

என்னால் அவர் நிலையை புரிந்துகொள்ள முடிந்தது. நான் ஒரு நிமிடம் நேரம் கேட்டேன். அந்த ஒரு நிடத்திற்குள் பையில் பேருந்துக் கட்டணத்திற்கான பணமிருக்கிறதா என்று சோதித்துக்கொண்டேன். இரண்டு இருபது ரூபாய் தாள்களும் ஒரு ஐம்பது ரூபாய்  தாளும் சில சில்லரை காசுகளும் இருந்தன. ஒரு பெருமூச்சை இழுத்து விட்டேன். பின் கேட்டேன். நேர்காணல் எப்போது. 

அவர் சொன்னார். இன்று மதியம் பனிரெண்டு மணிக்கு.. 

நீங்க இப்போ எங்க இருக்கீங்க..

எந்த இடமென்று தெரியவில்லை..

நடத்துனரிடம் விசாரிக்கலாமே..

சரி என்றவர். சில நிமிடங்களில் அழைத்தார். பேருந்து இன்னும் ஒருமணி நேரத்தில் கோயம்பேடு வந்துவிடுமாம் என்றார்.

சரி. இறங்கிவிட்டு கைபேசியில் கூப்பிடுங்கள் என்றேன். 

இருவரும் இணைப்பைத் துண்டித்தோம். 

முதல் முறை என்கிறார் ஏன் தனியாக வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாமலில்லை தான். அதேசமயம் நண்பர்கள் யாராவது இப்படி விளையாடக்கூடுமோ என்றும் தோன்றியது. எதற்கும் சென்று பார்த்துவிடுவோம் என்று ஒருமனதாக முடிவெடுத்து அடுத்ததாக வந்திருந்த நிறுத்தத்தில் கல்லூரி நிறுத்தம் வரை செல்லும் பேருந்தை விட்டு இறங்கினேன். மாற்று வழியில் சிறிது தூரம் நடந்து பாரிஸை வந்தடைந்தேன். பின் கோயம்பேடு பேருந்தில் ஏறி ஒரு நீண்ட பயணத்திற்கு பின் நான் கோயம்பேடு அடைந்தேன். 

அதுவரை அப்பெண் அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. காத்திருப்போம் என்ற முடிவில் ஒரு கல் இருக்கையில் அமர்ந்து போகும் வரும் மனிதர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

அழும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு பேருந்திற்காக சென்றார் ஒரு இளம் ஆண். அவர் தந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. பிள்ளைக்கும் அவரின் சாயல் அப்படியே இருந்தது.

ஒரு ஆணின் பின்னாக அவர் செல்லும் தடத்திலேயே ஒரு இளம்பெண் சென்றுகொண்டிருந்தார். இருவருமே புத்தாடைகள் அணிந்திருந்தனர். அப்பெண்ணின் கழுத்தில் அவள் அழகை மறைக்குமளவு நகை அணிந்திருந்தாள். தோற்றமும் அவர்களது வயதும் அவர்கள் புதுமண தம்பதியர்கள் என காட்டிக்கொடுத்தது.

அருகில் ஒரு மெல்லிய பாடல் சத்தம் கேட்டு திரும்பினேன். ஐம்பதை மதிக்கத்தக்க ஆண் ஒருவர் என் இருக்கையின் அருகில் இருந்த தூணில் சாய்ந்தபடி வாய்த்திறக்காமல் ஒரு பாடலை ஓசை எழுப்பிக் கொண்டிருந்தார். நான் பார்க்கும்போது அவரும் எனைப்பார்த்தார். பின் நான் என் கடிகாரத்தைப் பார்ப்பதைப்போல் இயல்பு நிலையில்  அமர்ந்தேன். அவர் அவர் பாடலைத் தொடர்ந்தார். 

என் கைபேசி ஒலித்தது. அப்பெண் தான் அழைத்தார். பின் அவள் சொன்ன அடையாளம் வைத்து நானும், நான் சொல்லிய அடையாளங்கள் கொண்டு அவளும் ஒருவழியாக இருவரும் கண்டுகொண்டோம். 

அப்பெண்ணின் பெயர் மட்டுமல்ல அவளே ஆடி இல்லாமல் என்னைப் பார்ப்பது போல் தான் இருந்தாள். ஆனால் எனைக் காட்டிலும் சில வயது மூத்தவள். இருப்பினும் அவளைப் பார்க்கும்போது வயது எதுவும் தெரியவில்லை. 

ஒரு பழைய தோள் பையை மாட்டியிருந்தாள். இளஞ்சிவப்பில் சந்தனக்கோடுகள் இட்ட சுடிதார் அணிந்து துப்பட்டாவை முன்னாடி இருந்து போர்த்தியிருப்பதைப்போல் அணிந்திருந்தாள். பயணக் களைப்பு நன்றாக முகத்தில் தெரிந்தது. அவள் வலது கண்ணின் கீழ் கன்னத்தின் மேல் சிறுதழும்பு இருந்தது.

என் நிறம். என் உயரம். என் முகத்தில் புரையோடிக் கிடந்த அதே அமைதி அவள் முகத்திலும். 

நான் பார்த்ததும் சிரித்தேன். அவளும்  சிரித்தாள். சாப்டிங்களா என்றேன். இல்லை என்றாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஒன்பதைக் காட்டியது. "நேரம் இருக்கு சாப்ட்டே போலாம்" என்றேன். தலையசைத்துக்கொண்டே என் பின் தொடர்ந்தாள்.

பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்றோம். கொஞ்சம் நன்றாக இருக்கும்  என்று நினைக்கிறேன். ஆனால் நான் சாப்பிட்டதில்லை. சுவை இல்லாமல்  போனாலும் என்னை ஏதும் சொல்லாதீங்க என்று உணவகம் ஒன்றின் முன் அழைத்துச்சென்று நிறுத்தினேன். 

அந்தக் கடைக்கு அருகில் தான் நான் சொந்த ஊருக்குச் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம். ஆகையால் அந்த உணவகத்தை ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் பார்த்ததுண்டு. அது பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் நின்றுகொண்டே சாப்பிடும் உணவகம். 

அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் இங்கயா என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்டாள். 
நான் ஆமாம் என்றேன். 

அவள் யோசிப்பது நன்றாகத் தெரிந்தது. இருந்தும் கேட்டேன். 
"என்னாச்சு."

"இல்லை, எல்லாரும் பாப்பாங்கல்ல" என்றாள். 

நான் நிதானமாகக் கூறினேன். இங்க பல்லாயிரக்கணக்கான மக்கள் போகவும் வரவும் இருக்காங்க. அவங்க எல்லோருக்குமே தனிப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்கும். அடுத்த நொடி செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கும். 

கீதான்ற ஒரே பேருள்ள  இரண்டு பொண்ணுங்க இட்லி சாப்டுறத நின்னு வேடிக்கைப் பாக்குற அளவுக்கு அவங்களுக்கு நேரமில்லை.. நீங்க தாராளமா சாப்பிடலாம் என்று சிரித்தேன். அவளும் சிரித்தாள்.

உங்க  வயசென்ன இருக்கும் என்றாள். பத்தொன்பது என்றேன். நீங்க என்றேன் இருபத்தி ஆறு என்றாள். அருகில் இருந்த கழிவறையில் முகம் கழுவி தலையினைச் சரியாகப் பின்னலிட்டு திரும்பும்போது நான் உணவோடு காத்திருந்தேன்.

பின் இருவரும் காலை உணவு முடித்துக் கொண்டோம்.

சிற்றுண்டி முடித்து அடையார் பேருந்து ஒன்றில் இருவரும் ஏறிக்கொண்டோம். கீதா வைத்திருந்த முகவரி சீட்டினை நான் வாங்கிக்கொண்டேன். பேருந்து கோயம்பேட்டில் இருந்து நகர்ந்தது. 

நடத்துநரிடம் அம்முகவரிவைக் காண்பித்து எங்கு இறங்க வேண்டும் என்றும் அந்த இடத்தில் எங்களை இறக்கிவிடவும் கேட்டுக்கொண்டேன் . 

நாங்கள் இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தோம். நான் பேசத் தொடங்கினேன். 

சென்னைக்கு முதல் முறையா வறிங்க ஏன் தனியா வறிங்க என்றேன். 

வீட்ல வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லிட்டாங்க. அதுவும் சென்னைக்குனா சுத்தமா அனுமதி இல்லை. நான் கேட்டுக் கேட்டுப் பாத்தேன். யாரும் காது கொடுத்து கேக்குற மாதிரி கூட தெரியல.. அப்படியே சில வருடங்கள்  கூட ஓடிப்போயிடுச்சு. இனி முடியாது அப்படின்ற கட்டத்துல தான் இந்த கம்பெனி வேகன்ஸி கண்ல பட்டது. யாருக்கும் தெரியாம அப்ளை பண்ணிட்டேன். நைட் வரைக்கும் கூட வீட்ல கேட்டுட்டே இருந்தேன். பதிலே இல்லை. காலைல எழுந்து கெளம்பி வந்துட்டே இருந்துட்டேன் " என்றவள் கண்களில் ஏதோ ஒரு விரக்தி ஒட்டிக்கொண்டு இருந்தது. 

" தம்பி இருக்குறதா சொன்னிங்களே. அவர் உங்க கூட வந்துருக்கலாமே?"

இல்லை அவனுக்கு காலேஜ் இருக்கு. அப்புறம் வீட்ல அவன் இருந்தா தான் நான் இங்க நேர்காணல் வந்தது வீட்டுக்கும் அங்க என்ன நடக்குதுனு எனக்கும் தெரியவரும்னு தோணுச்சு அதான் அவன் கூட்டிட்டு வரல என்றாள். 

ஆனா அவன்தான் உங்க நம்பர் வாங்கிக்கொடுத்தான் என்றாள் வெகு நேரத்திற்குப்பிறகு ஒரு சிறு புன்னகையோடு.. 

நான் அவள் கைகளைப் பற்றிக்கொண்டு எல்லாம் சரியாய்டும். இந்த வேலையும் கிடைச்சிடும்.. நீங்க வருத்தப்படப்வேண்டாம். என்றேன். 

தாங்ஸ் கீதா.. 

பரவால. இதுக்கெல்லாம் எதுக்கு தாங்ஸ்.. 

நான் கூப்பிட்டதும் உங்க எல்லா வேலையும் விட்டுட்டு எனக்காக வந்து நின்னுருக்கிங்க. இதுக்கு முன்னாடி என் அறிமுகம் கூட இல்லாம உதவ யார் வருவாங்க. 

இது ஒரு பெரிய விசயம் இல்லைனு தான் தோணுது. உங்களுக்கு இந்த வேலை கிடைச்சா இன்னும் மகிழ்ச்சி என்றேன்.

சிறிது நேரம் இருவரும் சன்னலை வெறித்தோம்.

இதற்குள் நடத்துநர்  இறங்கும் இடத்தைக் கூறி பஸ் நிற்பதற்காக விசில் ஊதினார். 

நாங்கள் இறங்கினோம். நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து அருகில் ஒரு போக்குவரத்து காவலரிடம் நிறுவனம் குறித்து‌ விசாரித்தோம். அவர் நிறுவனம் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்று தெரியப்படுத்தினார். நன்றி பாராட்டிவிட்டு அவர் கூறிய திசையில் இருவரும் நடக்கத் தொடங்கினோம்.. 

மணி பதினொன்றைக் காட்டியது. ஒருவழியாக நிறுவனத்தைக் கண்டறிந்தோம். நிறுவனத்தின் வெளியில் நின்று அவளது பழைய கருப்புநிறப் பையை நான்  வாங்கி வைத்துக்கொண்டேன். பின் "நான் இங்கேயே தான் இருப்பேன். உங்களுக்காக. தைரியமா போய்ட்டு நல்ல செய்தியோட திரும்பி வாங்க." என்று புன்னகைத்தேன். எனைப்பாத்துக்கொண்டே அவள் நிறுவனத்தின் உள்ளே நுழைந்தாள். 

பையிலிருந்த இலக்கிய வரலாறு நூலினை எடுத்து புரட்டிக்கொண்டே நிறுவனத்தின் வெளியே போடப்பட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரம் புரட்டிப்பார்த்தேன். படிக்க எந்த நாட்டமும் வரவில்லை. பின் புத்தகத்தை மடித்து பைக்குள் திணித்துவிட்டு வரிவரியான கம்பிகளுக்கு இடையில் தெரிந்த சாலையில் அவ்வப்போது நடந்தோ பேருந்திலோ ஆட்டோவிலோ பயணிக்கும் மனிதர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். 

நேரம் சென்றது. கீதா நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து வெளியேறினாள். எனைப்பார்த்து புன்னகைத்தப்படியே நடந்து வந்தவள். எனக்கு வேலை கிடைச்சிடுச்சி கீதா என்றாள். 

நான் அவள் கைகளைப் பற்றிக்கொண்டு உங்களுக்குக் கிடைக்காம வேற யாருக்கு கிடைக்கும் என்றேன். அவள் சிரித்துக்கொண்டே கூறினாள் "மாசம் நாற்பதாயிரம் சம்பளம். தங்க இடமும் இங்கேயே இருக்கு. சாப்பாடும் சேர்த்து. நான் இந்த அளவுக்கு நினைக்கல கீதா. நீ இருக்க தைரியத்துல மட்டும் தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன். என்ன பண்ணினாலும் இந்த உதவிக்கு ஈடாகாது கீதா"  உணர்ச்சிவயப்பட்டவளை சற்று நிதானமாக்கி இனி எல்லாம் இனிதே என்றேன். 

அன்றே அவள் வேலையில் சேர்ந்தாள். நான் அங்கிருந்து விடைபெற்றேன். 

எப்போதாவது சென்னைக் காற்று சுதந்திரத்தை உணர வைக்கும். அன்று அப்படி உணர்ந்த ஒரு நாள்.

வாழ்வு விந்தைகளின் கூடாரம். காலை அந்த அழைப்பு வரும் முன்பு வரை இப்படி ஒரு பயணத்தையோ அறிமுகம்  இல்லாத ஒரு பெண்ணின் நட்பையோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் பேருந்தின் சாளர ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன். நிச்சயமாகச்  சொல்லலாம் அது புறத்தை அல்ல.. 

Comments

  1. நம்பிக்கை தரும் பதிவு. நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன்/நண்பி. எங்கேயும் எப்போதும் படத்தில் கூட இப்படி ஒரு காட்சி வரும். கீதாவின் நடை இதம். அன்பையோ, பொருளையோ, உதவியையோ கொடுப்பது மகிழ்ச்சி. அது மகிழ்வின் சூட்சுமம். தீரா அன்பு 🤝

    ReplyDelete
  2. படிக்க படிக்க நானும் உங்களுடனே பயணித்தேன்....
    அழகிய எழுத்து நடை...🌷

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எழுத்தும் நானும்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)