சில நேரங்களில் சில மனிதர்கள்:

மௌனிக்கு கண் பரிசோதனைக்காகச் சென்றிருந்தேன். வழக்கமாகச் செல்லும் சாலை ஒன்றின் ஓரத்தில் எப்போதும் கண்ணில்படும் கண் மருத்துவமனை அது. ஆனால் அன்றுதான் முதல் முறையாக உள்ளே சென்றிருந்தேன். இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட  வீடொன்றினைப்போல் காட்சியளித்தது மருத்துவமனை.

உள்ளே மருத்துவமனை சுவற்றில் கண்களின் அமைப்புப் படங்கள். மற்றும் கண்களை பராமரிக்கவென சில ஆங்கில வாசகங்கள். அந்த மருத்துவமனைக்காக வழங்கப்பட்ட சில விருதுகள். சில நற்சான்றிதழ்கள் போன்றவை வரவேற்பு அறையின் ஒருபக்கம் சுவர் ஓரமாக காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் அழகான குட்டிவிலங்குகள் விளையாடிக்கொண்டிருந்தன. 

உள்நுழைந்தவுடன் மருத்துவமனைக்கான எழுதப்படாத வழக்கத்தைப்போல் பெயர் முகவரி குறித்த விவரங்களை வாங்கிக்கொண்டு காத்திருப்பு அறையை காட்டினார் ஓர் இளம் செவிலி. நான்கு நான்கென மூன்று வரிசையாக இருந்த இருக்கைகளில் முதல் வரிசையில் ஒரு இசுலாமிய தம்பதியரும் இறுதி வரிசையின் வலது ஓரத்தில் இளம் பெண் ஒருத்தியும் இடது ஓர இருக்கையில் நாற்பதை கடந்தவர்போல் தோற்றமளித்த சிவப்பு  வண்ண சட்டையணிந்திருந்த ஆண் ஒருவரும் அமர்ந்திருந்தனர். 

நானும் மௌனியும் இரண்டாவது வரிசையைத் தெர்ந்தெடுத்தோம். அமர்ந்த சில நிமிடங்களில் மௌனி இருக்கைகளின் மீதேறிக் குதித்து விளையாட ஆரம்பித்தான். சிறிது நேரம் கடந்திருந்தது. இருக்கைகளின் இடது ஓரத்தில் இருந்த ஓர் அறையைத் திறந்துகொண்டு சீருடை அணிந்த இளைஞர் ஒருவர் வெளியேறினேர். இளம்பெண்ணுக்கும் சிவப்பு சட்டை ஆணிற்கும் கண்களில் சொட்டுமருந்து இட்டுவிட்டுக் கண்களைச் சிறிதுநேரம் மூடியிருக்குமாறு கூறி மீண்டும் அந்த இளைஞர் அறைக்குள் சென்றார்.

இடையில் பச்சை புடவை உடுத்திய நாற்பதை நெருங்கும் பெண் ஒருவர் உள்நுழைந்தார். எப்போதும் போல் பெயர் முகவரி தந்துவிட்டு நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் இருந்த மற்றொரு இருக்கையில் வந்து அமர்ந்தார்.

பரிசோதனைக்காக, முதல் இருக்கையில் அமர்ந்திருந்த இசுலாமிய தம்பதியரும் பிறகு மௌனியும் நானும் எங்களைத் தொடர்ந்து பச்சைப் புடவை பெண்ணும் என ஒவ்வொருவராக பரிசோதனை அறையினுள் சென்று வந்தோம். 

சிறிதுநேரத்தில் உள் அறையில் இருந்து ஒரு பெண் வெளியேறினார். நேராக எங்கள் பின் அமர்ந்திருந்த நாற்பதை கடந்த ஆணின் அருகில் சென்று அவரது கைபேசியை எடுத்து எதையோ பரிசோதித்தார். சந்தன நிறத்தில் சுடிதார் அணிந்திருந்த அந்த பெண்ணையும் இச்செயலுக்கு மறுப்பு தெரிவிக்காத சிவப்பு சட்டை மனிதரையும் பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. இருவரும் கணவன் மனைவி என்று. அந்த ஆணின் வயதை ஒத்திருந்தார். அடர் கருமை நிறம். உயரத்தைக் காட்டிலும் சற்றுக்கூடுதலான பருமனாக தெரிந்தார்.

செவிலி அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தாள். கணவன் மனைவி இருவரும் மருத்துவர் அறைக்குச் சென்றனர். 

முன் இருக்கையில் அமர்ந்திருந்த இசுலாமிய தம்பதியர் தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டிருந்தனர். பச்சைப் புடவை பெண் தனது முகநூல் பக்கத்தை கவனித்திருந்தார். பின்னிருந்த இளம் பெண்ணோ தன் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். காத்திருப்பு அறை தொலைக்காட்சியில் கரடி ஒன்று மூன்றாவது முறையாக மரத்தில் ஏறி நின்றது. அதைத்தொடர்ந்து பறவைகள் இரண்டு பேசிக்கொண்டன.

மௌனி தன் கேள்வியை ஐந்தாவது முறையாக என்னிடம் கேட்டு முடித்தான். "அம்மா உனக்கு ஏன் கண் செக் பண்ணல." 'எனக்கு வேற டாக்டர் வந்து செக் பண்ணுவாங்க'. நானும் இதே பதிலை ஐந்தாவது முறையாகக் கூறி முடித்தேன். 

உள்ளே சென்ற கணவன் மனைவி இருவரும் வெளியேறினர். அவர்களை அடுத்து முன் இருக்கையில் அமர்ந்திருந்த இசுலாமிய தம்பதியர் மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் அறையிலிருந்து வெளியேறிய சிவப்பு  சட்டை கணவர் முதல் இருக்கையில் சென்று அமர்ந்தார். அவரது மனைவி உள் அறைக்கும் காத்திருப்பு அறைக்கும் நடந்தவண்ணமாக இருந்தார். ஏதோ பதட்டத்தில் இருப்பவரைப்போல். 

பைக்குகள் இருந்த தின்பண்டத்தை எடுத்து மௌனி பிரித்து சாப்பிடத் தொடங்கினான். 

அருகில் வந்து கணவரின் சட்டைப் பைக்குள் இருக்கும் கைபேசியை எடுத்த மனைவியிடம் கணவன் கேட்டார். சரியாடுமா? என்று. கைப்பை பயன்படுத்தும் வழக்கமற்ற  பெண் போலும், தனது கைபேசியையும்  கணவரின் சட்டை பையில் வைத்து பயன்படுத்துகிறார் என்று தோன்றியது.

தனக்காக பணமே இல்லை என்றாலும் கூட ஒரு பணப்பையோ வங்கி அட்டையோ இவைகளை வைத்துக்கொள்ளவென்று ஒரு கைப்பையோ பயன்படுத்தாத பெண்கள் நகரத்தில் இருக்கின்றனர் என்பதை சந்தன சுடிதார் பெண் நினைவூட்டினார்.

இதற்குள் மௌனி கையிலிருந்த தின்பண்டம் கீழே விழுந்து சிதறியது. அழுவதைப்போல் எனைப் பார்த்த மௌனிக்கு பரவால.. ஒன்னுமில்லை.. எடுத்துக்கலாம் இரு.. என்றேன்.. 

கணவரின் அருகில் வந்த மனைவி  உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ரிப்போர்ட் முழுக்க நான் படிச்சிட்டேன். இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைனுதான் டாக்டரும் சொன்னாரு. நீங்க வருத்தபடாதிங்க சரி பண்ணிடலாம். நான் இருக்கேன் என்றார். 

மனிதனின் இயல்பு இது. நடப்பவைகளின் நிதர்சனம் அவர்களுக்கு தெரியாமலில்லை. ஏதேனும் குறை நேர்ந்தாலோ அல்லது குறை நேர்ந்துவிடுமோ என்ற சிறு அச்சத்திலோ கூட அதற்கான சமாதானமோ அல்லது ஆறுதலோ மனிதனுக்கு தேவைப்படுகிறது.

நான் சற்றுநேரம் அந்த மனைவியையே உற்றுப்பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவர் முகம் எதையோ சொல்லாமல் மறைத்தது. அல்லது எதையோ சொல்லாமல் சொல்வதைப்போல் தோன்றியது. கணவரிடம் இருந்து வங்கி அட்டையை வாங்கிச் சென்று சில ஆயிரங்களை கட்டணமாக செலுத்திய மனைவி மீண்டும் கணவரின் அருகில் வந்து இதெல்லாம் ஒன்னும் இல்லைங்க நீங்க தைரியமா இருங்க என்றார். 

கணவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவரால் தெளிவாக எதையும் காணமுடியவில்லை போலும். அவர் அணிந்திருந்த கருப்பு நிற கண்ணாடி மனைவியின் முகத்தில் தென்பட்ட வெறுமை, கணவரின் கேள்வி மனைவியின் ஆறுதல் ஆகியவை நடப்பவைகளை தெளிவாக விளக்கின

கணவன் மனைவியின் காதுகளில் எதையோ உரைத்தார். வாங்க என்று அவரது கைகளை இறுகப் பிடித்துக் கொண்ட மனைவி உள்ளறை நோக்கி அவரது ஒவ்வொரு அடிக்கும் ஒருமுறை பாத்து பாத்து என்றவாறு சற்று  கூடுதல் கவனத்துடன் அழைத்துச்சென்றார். 

மௌனியை அழைத்த செவிலியை தொடர்ந்து நானும் மௌனியும் மருத்துவர் அறைக்குள் சென்றோம். சில நிமிடங்களில் வெளியேறியபோது மௌனி கேட்டான் அம்மா உனக்கு ஏன் கண் செக் பண்ணல. எனக்கு வேறொரு டாக்டர் வந்து செக் பண்ணுவாங்க பா என்றேன். இருவரும் அதே இருக்கையில் மீண்டும் வந்து அமர்ந்தோம். 

உள்ளறையில் இருந்து திரும்பிய மனைவி கையோடு அழைத்து வந்த கணவரை அதே முதல்  இருக்கையில் அமர வைத்துவிட்டு யாரிடமோ கைபேசியில் உரையாடினார். அவர் கணவர் பக்கமாக திரும்புகையில் கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தார் கணவர். மனைவியின் முகம் சோர்ந்ததை நான் உணர்ந்தேன். 

மனிதன் வளர்ந்துவிடும் போது அவனது பால்யம் எங்கு சென்றிருக்கலாம். வேறெங்கு செல்ல முடியும் அது அவனது மனதிற்குள் தான் உறைந்து கிடக்க வேண்டும் அல்லவா? அளப்பரிய மகிழ்ச்சியின் போதும் நெகிழ்வான அன்பினை வெளிப்படுத்தும்போதும் வேதனையோடு ஏங்கும் போதும் வலியில் துடிக்கும் போதும் மனிதனது பால்யம் வெளிப்படுகிறது. 

அருகில் வந்து அவரின் தோள்பட்டையில் கைபதித்த மனைவி "சரியாய்டும். டாக்டர் சொன்ன எல்லா மருந்தும் வாங்கிட்டேன். அடுத்த வாரம் திரும்ப வரும்போது நீங்க முழுசா சரியாகி வருவிங்க." என்றார். 

சில நிமிடங்கள் சென்றது. சொவிலிக்கு நன்றி கூறிவிட்டு கணவரின் கைகளைப்பிடித்துக்கொண்டு வெளியேறினார் மனைவி. வெளியில் விடப்பட்டிருந்த தனது காலணிகளை அணிந்த மனைவி கணவரின் காலணிகளை அவர் அருகில் எடுத்துவைத்து அணியச் செய்தார். பிறகு அவரது கைகளைப் பற்றிக்கொண்டு தன் தலையை ஆட்டி ஆட்டி ஒரு சிறுமி போல் எதையோ கதையாடிக்கொண்டு ஒவ்வொரு அடியாக நடக்கத் தொடங்கினார். அவர்கள் என் கண்களில் இருந்து மறையும் வரை நான் அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். 

காலம் காலமாக உறவென்பது மனித வாழ்க்கைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?  ஏனெனில் உறவு மனித வாழ்வின் சாராம்சம். அன்போ அரவணைப்போ கையிலெடுக்கும்போது ஒரு உறவு தன் மதிப்பிலிருந்து சற்று மேம்பட்டதாகிவிடுகிறது.

பரிசோதனைக்கான தொகையைச் செலுத்திவிட்டு நானும் மௌனியும் காத்திருப்பு அறையை விட்டு வெளியேறினோம். என் காலணிகளை அணிந்த நான் மௌனியின் காலணிகளை எடுத்து அவன் அருகில் வைத்து அணிய செய்தேன். பின் தெளிந்த ஓடையாக தென்பட்ட ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே அவன் கைகளைப் பற்றி நடக்கத் தொடங்கினேன். 

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: