சில நேரங்களில் சில மனிதர்கள்:

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் இரவு பத்துமணியைக் கடந்திருந்தது. நான் அமர்ந்திருந்த பேருந்து எந்தவித அசைவும் இன்றி நின்றுக்கொண்டிருந்தது‌. பெரிதாக நேரம் தாமதமாகிவிடவில்லை. ஆறுமணி நேரம் பயணம் செய்து வீட்டிற்கு செல்ல வேண்டும். இன்னும் சற்று நேரம் கடந்தாலும் வீடு சென்றடைவதற்குள் பொழுது காலையை நெருங்கிவிடும் என்பதால் பொறுமையாக அமர்ந்திருந்தேன். 

சிறிது நேரத்தில் நடத்துநர் பேருந்திற்குள் வந்தார். பிறகு ஓட்டுநர் அவரது இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கினார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பேருந்து நகர்ந்து வெளியேறியது. ஹாரன் ஓசையை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த இரவு வேளையிலும் சாலைகளில் மனிதர்கள் உறங்காமல் அங்கங்கு உலாவிக் கொண்டிருந்தனர். 

வழக்கமாக அமரும் ஓட்டுநரின் பின்னிருக்கையில் அமர்ந்து நான் வேடிக்கைப் பார்த்துகொண்டே என் பயணத்தை தொடர்ந்தேன். ஆரம்பத்திலேயே அப்பா இங்குதான் அமர வேண்டும் என்றும் முன்னாடியே இருப்பதால் இது உனக்கானப் பாதுகாப்பும் கூட என கூறியிருந்ததை நான் ஆழமாக நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையின் பேரில் இந்த இருக்கை எனக்கே எனக்கானது எனும் அளவிற்கு பழக்கமாகி போனது. பேருந்து சென்னையைக் கடந்துக்கொண்டிருந்தது. நடத்துநர் என்னருகில் வந்து நின்றார். ஆத்தூர் ஒரு டிக்கெட் என்று பணத்தை நீட்டினேன். டிக்கெட்டையும் மீத பணத்தையும் கையளித்துவிட்டு அவர் இருக்கைக்கு நகர்ந்தார். 

ஆசுவாசமாக முன் இருக்கையில் முதல் ஆளாக அமர்ந்திருந்ததால் பேருந்தில் எனக்குப் பின்னிருந்த இருக்கைகளில் எத்தனை மனிதர்கள் இருந்தார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. அது அவசியமென்றும் தோன்றவில்லை. சிறிது நேரத்தில் பேருந்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஓட்டுநரின் அருகில் இருந்த ஒரு பச்சை வண்ண ஜீரோ வாட்ஸ் விளக்கு மட்டும் ஒளிரவிடப்பட்டது. ஒருவிதமான மந்தமான வெளிச்சத்தில் அச்சூழலே ரம்மியமாக தென்பட்டது. நான் சாளரத்தைப் பார்த்துகொண்டே வந்தேன். சாலையும் தன் இருள் கண்களோடு என்னையே பார்த்துகொண்டு வருவதாய் அவ்வபோது உணர்ந்துகொண்டேன். உண்மை என்னவென்றால் நம் மனதைப் போல் நம்மை அனுசரிக்கும் நட்பு வேறில்லை. எல்லாவித பித்து நிலைக்கும் நம் மனதிடம் வரையறையற்ற அனுமதி உண்டு. 

நடத்துநர் தன் முன்னிருந்த டேப்ரிக்கார்டரை இயங்க விட்டார். சில நொடிகள் பிண்ணனி இசைக்குப் பிறகு "மல்லிகையே.. மல்லிகையே.. தூதாகப் போ.. என பாடகி சித்ராவின் குயில் குரலில் ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அந்த ஒரு நொடி ஏனோ பேருந்து அதுவரை கற்பனை செய்திடாத ஒரு அழகிய தோட்டத்தை பறந்தப்படி கடந்துகொண்டிருந்தது. இளையராஜாவின் மந்திர கோள் செய்த மாயம் அது என்பதை அந்த பாடலைக் கேட்ட காதுகள் அறியும். நான் முற்றிலும் பாடலில் மூழ்கிப்போனேன். மல்லிகையே முடிந்து "குயில் பாட்டு ஓ... வந்ததென்ன இளமானே... பாடல் தொடங்கியது."

குயிலே போ.. போ.. இனி நா..ன் தா..னே.. எனும் வரியில் அனிச்சையாக உதடுகள் பாடலோடு முனுமுனுக்கத்தொடங்கின. 

அத்தனை இரசனைகரமாக பாடி பழக்கமில்லை தான் எனக்கு. ஆனால் இளையராஜாவின் பாடல்களை பாடலோடு முனுமுனுக்காமல் வருவது பசி வேளையில் தன் முன்னிருக்கும் பிடித்த பண்டத்தை சுவைக்காமல் நகர்வதைப் போல் தான். பசியையும்  தூண்டிவிட்டு பண்டமாகவும் அவர் இசையே மாறி நிற்கும்.

சிறிது நேரத்தில் பேருந்து தன் முதல் நிறுத்தத்தில் வந்து நின்றது. நடத்துநர் பாடலின் ஓசையை குறைத்துவிட்டு பேருந்தின் படிகளுக்கு விரைந்தார். அவரை தள்ளிக்கொண்டு ஒரு கூட்டம் பேருந்தில் ஏறி கிடைத்த இடத்தில் அமர்ந்தது. மூன்றுபேர் அமரக்கூடிய ஒரு இருக்கையில் அதுவரை நான் மட்டும் அமர்ந்துவந்தேன். அந்த நிறுத்தத்தில் ஒரு முதியவரும் நடுத்தர வயதுடைய ஓர் ஆணும் நான் அமர்ந்திருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். 

நிறுத்தத்தில் இருந்து பேருந்து கிளம்பியது. இரவு பயணம் மற்றும் அந்த இருள் சூழலில் இரு ஆண்களோடு அமர்ந்து வருவது எனக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை அவ்வுணர்வை என் முகம் வெளிக்காட்டியிருக்க வேண்டும். நடத்துநர் அவருக்காக அமைக்கப்பட்டிருந்த தனி இருக்கையில் எனை அமர்ந்துக் கொள்ளுமாறு கூறினார். அது ஒருவர் மட்டும் அமரும் இருக்கை. நான் அமர்ந்தபோது ஓட்டுநரை பார்த்தேன் அவரும் என்னைப் பார்த்தார். இருவரும் பரஸ்பர புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். நடத்துநருக்கு என் நன்றியுணர்வை தெரியப்படுத்தினேன். அவரும் பதிலுக்கு பரவால என்பதைப்போல் தன் சைகையை காட்டினார். 

பின் நாங்கள் மூவரும் "நான் .. யாரு எனக்கேதும் தெரியலையே.... என புலம்பிக்கொண்டிருந்த இளையராஜாவின் குரலில் கரைந்துப்போனோம்.

அந்த குரல் அந்த வெளி அந்த வெளிச்சம் அதற்காகவே ஆன அந்த பயணம். நானறிந்த கொண்டாட்டமான இரவென்றால் அதுதான். 

சிறிது நேரம் கடந்திருக்கும் என் அலைபேசி ஒலிப்பதாகத் தோன்றியது.
கைபேசி வெளிச்சத்தில் மணியைப் பார்த்தேன். இரவு 12.15 ஐ காண்பித்தது. பின் அழைப்பை கவனித்தேன் புதிய அழைப்பு. எப்போதுமே புதிய எண்களில் இருந்து வரும் அழைப்பை ஏற்க ஒரு மனத்தடை இருந்துவந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தேன். சில நொடிகளில் அழைப்பு ஓசை முடிந்திருந்தது. 

"கூண்டுக்குள்ள என்னைவிட்டு கூடிநின்ன ஊரவிட்டு... பாடலோடு பேருந்து வளைந்து நெளிந்து சென்றுக்கொண்யிருந்தது. நான் வெளியை நோக்கினேன். 

மீண்டும் கைபேசி ஒலித்தது. 

ஒருமுறை அறைத் தோழி அவள் வாங்கியிருந்த புதிய எண்ணிலிருந்து வேறொரு தோழிக்கு அழைப்பு விடுத்து விளையாடிய சம்பவம் நினைவெழுந்தது. அப்படி யாராவது விளையாடக்கூடும் என்று அழைப்பை ஏற்று காதில் வைத்தேன். எதுவும் பேசவில்லை. 

நான் கைபேசியை காதில் வைப்பதை பார்த்த நடத்துநர் பாடலின் ஒலியை சற்று மட்டுப்படுத்தினார். என் தந்தை எனக்காக ஏன் பேருந்தின் முன் பகுதியை பரிந்துரைத்தார் என்பதையும் அவர் கூறிய பாதுகாப்பினையும் நான் அப்போது உணர்ந்தேன். 

"டேய்.. என்ன டா நினைச்சிட்டு இருக்க. போன எதுக்குடா ஆஃப் பண்ண." விசும்பலோடும் ஒருவித வேகத்தோடும் ஓர் ஆண் குரல் எதிர் முனையில் பேசியது.

"என் வீட்டு நகையை தூக்கிட்டு நீ ஓடிட்ட.. நான் தான் டா இங்க தினமும் சாகுறேன். நண்பன்னு நினைச்சு பழகினேன் பாத்தியா அதான் நான் செஞ்ச ஒரே தப்பு. எழுதி வச்சிக்கடா இத்தான் எனக்கு கடைசி நாள். நான் செத்துட்டேனு உனக்கு செய்தி வரும். அப்பக்கூட எம்மூஞ்சில வந்து முழிச்சிடாத.." மூச்சு விடாமல் பேசிய எதிர்முனை குரல் சற்று நிமிடத்தில் உடைந்து அழவதாக தோன்றியது. 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. உண்மை அது மட்டும் தான். இது ஒரு தவறான அழைப்பு. இப்போது நான் அதை தெரியப்படுத்தலாமா என்று சிந்தித்தேன். ஆனால் அம்மனிதரின் அழுகை ஏதோ ஒருவித புரியாத உணர்வை ஏற்படுத்தியது.

அனுபவசாலிகள் அழுகை மிக சிறந்த வலி நிவாரணி என கூறுவதுண்டு. அழுதால் எல்லாவற்றையும் கடந்து விடலாம் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால் அது இல்லாமல் எப்படியும் ஒரு துயரத்தை கடக்க வழியில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒருவேளை அப்படி கடந்து வந்தவர்கள் மிக அழுத்தமானவர்கள் என்று நிச்சயமாக கூறிவிடலாம்.

"எதாவது பேசித்தொல டா.. ஃபோன ஏன் ஆஃப் பண்ணி வச்ச. அம்பது பவுன் நகை டா.. ஒன்னா ரெண்டா எங்கம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன். நான் தான் டா அவ உலகம் உனக்காக அவள ஏமாத்திட்டு குற்ற உணர்ச்சில சாகாம சாகுறேன்." மீண்டும் ஒருமுறை அந்த குரல் அழுகைக்குள் புகுந்தது. விசும்பும் ஒலி மட்டும் எதிர்முனையில் இருந்த எனக்கு வந்து சேர்ந்தது.

துரோகத்தால் உண்டான வலி இது என்பது மட்டும் புரிந்தது. எந்த வலிக்குமே காலம் ஒன்றுதான் மருந்து. ஆனால் இந்த உண்மையை இப்போது யார் எந்த விதத்தில் கூறினாலும் இவர் புரிந்துக் கொள்ளவோ அல்லது ஏற்கவோ வாய்ப்பில்லை. ஏனெனில் இதுதான் மனித இயல்பு.

நேரத்தை கடந்த வேண்டாம்.  சொல்லிவிடலாமா.. என்ற சிந்தனை தோன்றாமல் இல்லை. ஆனாலும்கூட ஏனோ அந்தளவிற்கு மனம் துணியவில்லை. அம்மனிதர் தன் துயரங்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறார். எப்படியோ அவைகளும் கரைகின்றன. நான் அதை உணர்கிறேன். ஒருவேளை இது ஒரு தவறான அழைப்பு என தெரிந்துவிட்டால் தன் இயலாமை இன்னும் சற்று அம்மனிதரை வாட்டலாம் என்று தயங்கினேன். ஆனால் அதற்காக நான் என்ன செய்யக்கூடும் என்ற கேள்வியையும் மனம் கேட்டு வைத்தது.

"பேசு டா நாயே.. பேசித்தொல டா. ஏன் டா இப்படி பண்ண.. உன்ன நம்பினேன்ல." எப்போதாவது இப்படி தோன்றுவதுண்டு. வெளி தோறும் தொங்கும் மேகங்கள் இப்படி பதிலற்ற கேள்விகளாக இருக்குமோ என்று. நான் மேகத்தை பார்த்தபடி தான் அந்த மனிதரின் கேள்விகளையும் எதிர்கொள்கிறேன். ஆனாலும் நான் அமைதியாக இருந்தேன். என்னால் அச்சமயம் அது மட்டுமே முடிந்தது. 

"இப்போ பேசப்போறியா இல்லையா.. இல்லை எம்முன்னாடி இருக்க தூக்க மாத்திரையை முழுங்கிடுவேன். எனக்கு வேற வழி தெரியல. எங்கம்மா முகத்தை நேருக்கு நேர் பாக்க முடியல.. ஏன் டா இப்படி பண்ண". மீண்டும் அந்த குரல் விம்ம தொடங்கியது.

சில நிமிடங்கள் தொடர்ந்து அழுதபடியே இருந்த அக்குரல் முன் நான் வெறும் பொருளாக நின்றிருந்தேன். உயிரற்ற ஒரு பொருளாய். கொடுமையான ஒரு தருணம் என்றால் அது தான். அது என்பது சக மனிதனின் அழுகையை எந்தவொரு மறுமொழியுமின்றி சகித்துக்கொள்வதாகவோ பொறுத்துக்கொள்வதாகவோ இருப்பது.

நான் சொற்களின்றி அமர்ந்திருந்தேன். 

என் முன்னிருந்த நடத்துநர் என்னாச்சு என்பதை கைகளின் சைகையால் கேட்டார். ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். 

"நீ நல்லாவே இருக்க மாட்ட டா. நம்பிக்கைத் துரோகி. உன்ன அந்த ஆண்டவன் சும்மா விடவே மாட்டான். நான் பாப்பேன் அத." என்ற அம்மனிதரின் குரலில் அழுகை ஓய்ந்த ஒரு உணர்வு தென்பட்டதாக நான் எண்ணினேன்.

என் மனதில் ஒரு நம்பிக்கை துளிர் விட்டது. அந்த நபர் தன் வலியில் இருந்து சற்று மீளத் தொடங்கியிருக்கிறார். அதன் எதிரொலியாகத்தான் நான் பார்ப்பேன் என்ற வார்த்தை வெளியேறி இருக்கிறது என்று நானாகவே நினைத்துக்கொண்டேன்.

இருளைக் கிழித்துக் கொண்டு விரைந்த பேருந்து தேனீருக்காக ஒரு உணவு விடுதியின் முன் நின்றது. என்ன வீட்ல இருந்து ஃபோனா என்றார் நடத்துநர். பதில் கூறாமல் ஆம் என்பதாகத் தலையை ஆட்டிவைத்தேன். பத்து நிமிசம் வண்டி நிக்கும் இறங்குறவங்க இறங்கிக்கங்க பத்துநிமிசத்துல வண்டி கிளம்பிடும் என்று குரல் கொடுத்துக்கொண்டே நடத்துநர் இறங்கி சென்றார். 

அனேகமாக எதிர் முனையில் இருக்கும் மனிதர் என் பக்கமிருந்து கேட்ட முதல் குரல் இதுவாகத்தான் இருக்கும். அதன் விளைவாக ஹலோ.. டேய் சேகர் என்றது அந்த ஆண் குரல்.

அம்மனிதர் அழுதக் களைப்பில் இனி உறங்கிப் போகலாம் என எண்ணிக்கொண்டேன். நான் எதுவும் பேசாமல் அப்படியே அழைப்பைத் துண்டித்து முடித்தேன்.

டீ சாப்பிடுறியா? என்றார் தன் கையில் டீயோடு வந்து பேருந்து சாளரத்தின் வெளிப்புறம் நின்ற ஓட்டுநர். 

இல்லைங்ண்ணா. எனக்கு பழக்கமில்லை என்றேன்.

ஏன் என்றார் தேனீர் அருந்திக்கொண்டே. 

டீன்றது அவ்ளோ அவசியமான ஒரு உணவும் இல்லைல என்று சிரித்தேன்.

சரிதான். எந்த ஊரு என்றார் அவர்.

ஆத்தூர் என்றேன் நான். 

என்ன படிக்கிற என்றார் ஓட்டுநர். 

எம்.ஏ அண்ணா. 

நல்லா படி.. ஒரு காலத்துல பொண்ணுங்க வெளிய வரவே எவ்ளோ போராடனும். இன்னைக்கு தனியாளா இந்த நைட்ல துணிச்சலா ஒரு பஸ்ல ஏறி வீட்டுக்கு போறல்ல, இந்த தைரியம் உனக்கு உன் படிப்பு கொடுக்குறது தான். அதை புடிச்சிக்கோ. நீ பொழைச்சிப்ப.. என் தங்கச்சி உன்ன மாதிரியே தான் இருப்பா. நல்ல படிக்க வச்சிட்டேன். இன்னைக்கு நல்லாருக்கு. உன்ன பார்க்கவும் அவ நியாபகம் வந்துடுச்சு என்று புன்னகைத்தவர் கையிலிருந்த காலி கோப்பையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு உணவகத்தின் உள்ளே சென்றார். 

ஆம். இன்றும் கூட போராட்டம் ஓய்ந்தபாடில்லை. ஆனால் சரியோ தவறோ நாங்கள் எதிர்வினையாற்ற கற்றுக்கொண்டுள்ளோம். நிச்சயமாக அது எங்கள் கல்வி தந்திருக்கும் துணிச்சல் தான் என்று நானே எனக்கு பதிலுரைத்துக் கொண்டேன். 

மீண்டும் என் கைபேசி ஒலித்தது. அதே எண். நான் அழைப்பை ஏற்று காதில் வைத்தேன். 

பேருந்தை இயக்கினார் ஓட்டுநர் அண்ணா.

ஹலோ.. சேகர்.. என்றது எதிர்முனை குரல்.. குரலில் முன்பு காணாத ஒருவித தெளிவினை உணர்ந்தேன். 

மெல்ல நான் பேசத் தொடங்கினேன்.

"ஹாய்.. நீங்க நினைச்ச உங்க ப்ரண்ட் நான் இல்லை. நம்பர் எதுவும் மாத்தி போட்டுட்டிங்களா எனக்கு தெரியல. மன்னிச்சிடுங்க நான் இத முன்னாடியே சொல்லிருக்கனும் என்றேன்."

எதிர்முனையில் அமைதி.

சில நிமிடங்கள் நானும் அமைதி காத்தேன்.

"நீங்க அழுதிங்களா அதான் என்னால பேச முடியல என்றேன். மிகக் கனிவோடு‌ம் எந்த விதத்திலும் என் வார்த்தை அவரை துன்புறுத்திவிடக் கூடாது என்ற எச்சரிக்கையிலும்."

இதைக் கேட்டும் அம்மனிதர் பதிலேதும் கூறவில்லை. 

அவர் நிலை அறிந்திருந்ததால் நானும் அமைதியாக காத்திருந்தேன். ஒருவேளை அவர் அழைப்பைத் துண்டித்து விட்டு சென்றாலும் அந்த முடிவினை ஏற்கும் புரிதலோடு.

அவர் அமைதி சில நிமிடங்கள் நீடித்தது. 

நான் அந்த அமைதியை தாளாமல் தொடர்பில் இருக்கிறாரா என்று மீண்டும் சரிபார்த்துக்கொண்டேன்.

"நீங்க நல்லது தான் பண்ணிருக்கிங்க. நான் தாங்க நன்றி சொல்லனும் என்றது அந்த ஆண் குரல். "

என்ன கூறுகிறார் என்று ஒருநிமிடம் எனக்கு புலப்படவில்லை. நான் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்க மட்டும் நினைத்தேன்.

ஒருவேளை நீங்க அப்பவே அழைப்ப வச்சிருந்தா அந்த வேகத்துலயும் அப்போ இருந்த மனநிலையிலயும் எதாவது தவறா பண்ணிருப்பேன். என்றார் அவர். 

என்னாச்சுனு என்றேன் நான் சிறு அதிர்ச்சி கலந்த தொனியில்.

சேகர். என் பிரண்ட். ஒன்னா தான் ஸ்கூல் காலேஜ் எல்லாமே முடிச்சோம். நான் ஒரே பையன் என் அம்மா தான் என் உலகம். அவளுக்கும் நான் தான் எல்லாம். சின்ன வயசுலையே அப்பா இறந்துட்டார். எனக்காக அம்மா இன்னொரு வாழ்க்கைய கூட யோசிக்கல. என்ன நல்ல வளக்கனும்ன்ற விருப்பம் மட்டும் தான் அவளுக்கு எப்போதும். நான் நல்லாருக்கேன். நல்ல படிச்சேன். இப்போ சொந்த ஊருலையே நல்ல வேலையும் பாக்குறேன். வாழ்க்கைல எது எடுத்தாலும் தோல்வியை மட்டுமே சந்திச்ச சேகர் ஒரு நாள் தொழில் தொடங்க உதவி வேணும்னு வந்து நின்னான். என்னால அவன் கேட்ட உதவிய செய்ய முடியாது. நான் அதை சொன்னேன். ஒரே வாரத்துல திரும்பி தந்துருவேனு சொல்லி அம்மா நகையை கேட்டான். என் பால்ய கால நண்பன். அவன் கேட்டதால என்னால மறுக்க முடியல. ஒருவாரம் தானே அப்படினு அம்மா நகைங்கள எடுத்து கொடுத்தேன். கடைசியா அவன அப்போ பார்த்தது தான். மூனு மாசம் ஆச்சுங்க. மறுநாள்ல இருந்து அவன் போனும் வேலை செய்யல. அம்மாவுக்கு தெரிஞ்சா என்னைய என்ன நினைப்பானு யோசிக்கும்போதே நெஞ்செல்லாம் வலிக்கிது என்று மீண்டும் அழ தொடங்கினார் அந்த மனிதர்.

சிறிது அமைதிக்குப் பிறகு சர். ப்ளிஸ். அழாதிங்க. அம்மா இவ்வளோ அன்பானவங்கனு சொல்றிங்க. உங்கள தப்பா நினைக்க மாட்டாங்க. இந்த வாழ்க்கைல அவங்களுக்கு இந்த மாதிரி எத்தனை அனுபவங்கள் இருந்துருக்கும் இல்லையா. உங்கள புரிஞ்சிப்பாங்க. நீங்க வருத்தப்படாதிங்க என்றேன். 

நீங்க சொல்றது ரொம்ப சரி. எங்க அம்மா என்னை வெறுக்க மாட்டாங்க. ஆனா எனக்கு தான் நான் செஞ்சத நினைச்சா குற்ற உணர்ச்சியா இருக்கு என்றார் அவர்.

வார்த்தைகள் இன்றி வெறுமனே ஒரு ம்ம் புரியுது என்று உரைத்தேன்.

"கல்லு கிட்ட கூட சொல்லி அழுதா கஸ்டம் கரையும்னு சொல்லுவாங்க. இப்போ நான் கொஞ்சம் நிம்மதியா நினைக்கிறேன். சரி.. நடந்துடுச்சு என்ன பண்ணலாம். எல்லாத்தையும் கடந்துத்தான தீரனும். சத்தியமா என் முன்னாடி ஒரு டப்பா தூக்க மாத்திரை இருக்குங்க. இன்னைக்கே இந்த வாழ்க்கைய முடிச்சிக்க பாத்தேன். போய் சேரதுக்கு முன்னாடி என்ன இந்த இடத்துக்கு கொண்டாந்து நிறுத்தினவன்கிட்ட ஒரு வார்த்தை ஏன் பண்ணினனு கேக்க நினைச்சி தான்ங்க கூப்ட்டேன். அந்த கால் உங்களுக்கு வந்துடுச்சு. ஒருவேளை நான் இல்லைனா எங்கம்மா எவ்வளவு வருத்தப்படுவாங்கனு இப்போ நினைக்கிறேன். என்றார்  எதிர்முனை மனிதர்.

சில நிமிடங்களாக குரல் வழி அவரை கவனித்து வந்த அனுபவத்தில் அந்த மனிதரின் இந்த தெளிவானது எனக்கு நிறைவை அளித்தது. 

இந்த வாழ்க்கை இவ்வளவு தான் பாருங்களேன். சிந்திச்சு பாத்தா நம்ம வாழ்க்கைல ஒவ்வொரு நொடியும் ஒரு புள்ளி. எந்த புள்ளியில என்ன இருக்குனு யாருக்கு தெரியும் சொல்லுங்க. ஏதோ ஒரு புள்ளியில மரணம் நமகாக காத்திருக்கு. அது மட்டும் எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சும் நினைக்கும் போதெல்லாம் அதை அடைய ஏனோ அத்தனை சிரத்தைகளையும் எடுக்குறோம். மரணம் எதுக்குமே தீர்வாகாது இல்லையா என்றேன். 

உண்மை தான். எனக்கு வாழ்க்கைல ஒரு முக்கியமான நாள் இது. இனி நான் இந்த மாதிரி யோசிக்கக் கூடாதுனு முடிவு பண்ணிருக்கேன் என்றார் அந்த மனிதர். 

அவர் குரலில் தெரிந்த நம்பிக்கையை உணர உணர ஒருவித நிம்மதி எனைப் பற்றியது.

உங்க பேரு தெரிஞ்சிக்கலாமா என்றார் அவர்.

தாராளமாக தெரிஞ்சிக்கலாம்.. கீதா.. என்றேன்.

ரொம்ப நல்ல பேருங்க. மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைச்சிருக்கு. நன்றிங்க என்றார் அவர்.

உங்க பேரு என்ன என்றேன் நான். 

என் பேரு சமுத்திரம். என்று சிரித்தார் அம்மனிதர். முதல் முதலாக அந்த சிரிப்பொலியை கேட்டது ஒருவித புத்துணர்வை அளித்தது. சில நிமிடங்களுக்கு முன்பு வரை இதே குரல் அழுவதையும் நான் கேட்டுகொண்டிருந்தேன் என்பதை நினைவுகூரும் போது வினோதமாகத் தோன்றியது. 

சமுத்திரம்.. என்று ஒருமுறை உச்சரிந்துப் பார்த்தேன். 

ஆமாங்க என்றார் அம்மனிதர். 

இனி யாரின் ஆறுதலும் அவருக்கு தேவையாக இருக்காது என்று உறுதியாக என் மனம் நம்பியிருந்தது. நான் அழைப்பை வைத்து விடுகிறேன். பயணத்தில் இருக்கிறேன் என்றேன். 

தாராளமா. பாத்து போங்க. வச்சிடுறேன்ங்க என்ற அவரின் குரலோடு நான் அந்த அழைப்பைத் துண்டித்தேன். 

கையிலிருந்த ரொட்டித்துண்டை நீட்டினார் நடத்துநர். 

வாங்கிக்கொண்டு தங்க்ஸ் என்றேன். பதிலுக்கு சிரித்தவர் தன் முன்னிருந்த டேர்ரிகார்டரில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் ஓசையைக் கூட்டினார். 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் எனைச் சுட்ட நிலா... என பாட தொடங்கியது பேருந்து.. சாளத்தில் சாய்த்திருந்த விரல்கள் அனிச்சையாக தாளமிடத்தொடங்கியிருந்தன.

அப்பயணத்தின் காற்றில் அதுவரை உணர்ந்திடாத குளிர்பதம் திடுமெனத் தோன்றி மனதை வருடிக்கொடுத்தது. பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்தோடு நானும்.. 


Comments

Popular posts from this blog

எழுத்தும் நானும்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

சில நேரங்களில் சில மனிதர்கள்: