சில நேரங்களில் சில மனிதர்கள்:

அறை இருந்த அடுக்ககத்தில் இருந்து நேராகச் சென்று ஒரு சிறு வளைவை அடையும் பாதை பேருந்து நிலையத்தைச் சென்றடையும். அடுக்ககத்தில் தொடங்கி ஏழில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது பேருந்து நிலையம். காலை ஏழு மணிக்கு அறையில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்குவேன். 

அப்பாதையில் சில தெருக்கள் குறிக்கிடுவதுண்டு. மேலும் அவ்வழியில் ஒரு உணவகம், சில அலுவலக வளாகங்கள், ஒரு சலூன் ‌உடன் அருகிலேயே ஓர் அண்ணாச்சி கடை ஆகியவை அமைந்திருந்தன. நேராகச் சென்றபின் பேருந்து நிலையத்தை நோக்கி இருந்த சிறு வளைவில் சின்னதாக மரத்தடி பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அங்கிருந்து இரண்டு நிமிட நடையில் பேருந்து நிலையம். 

வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடப்பது தான் எப்போதும் வழக்கம். சரியாக அண்ணாச்சி கடை அல்லது சலூன் அருகில் வரும்போது ஒரு இளைஞர் எப்போதும் என்னைக் கடந்து செல்வார். நல்ல உயரமான ஆண். திராவிட நிறம். இறுக்கமான முகம். முழுக்கை சட்டையை அணிந்து இடுப்புப் பகுதியில் சட்டையை மடித்துவிட்டுருப்பார். மேலும் ஒருபக்கம் மாட்டும் பையை நேர்த்தியாக மாட்டியிருப்பார். பார்த்த மாத்திரத்தில்  கூறிவிடலாம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மனிதர் என்று. எப்போதாவது அவரை பிள்ளையார் கோயில் வளைவிலோ அல்லது அறையிருந்த அடுக்ககத்தின் அருகிலோ கடப்பேன். அன்றெல்லாம் நான் சில நிமிடங்கள் தாமதமாகவோ அல்லது விரைவாகவோ கிளம்பியிருக்கிறேன் என்று எண்ணிக்கொள்வேன். 

அந்த நடையில் வேறு யாரையும் இப்படி தினமும் நான் கடந்திருக்கவில்லை. அண்ணாச்சி கடை, சலூன், பிள்ளையார் கோயில் போன்று அந்த இளைஞரும் கிட்டத்தட்ட அந்த பாதையோடு ஒன்றாக தோன்றுமளவு அவரைக் கடந்துச்செல்லுதல் என்பது அப்போது அன்றாடமாகி இருந்தது. 

ஒருமுறை சரியாக அண்ணாச்சி கடையில் இருந்து சற்றுத் தள்ளி நடந்துச்செல்கையில் சில நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு ஓடி வந்தன. நான் நாய்களிட்ட சத்தத்திலும் அதனால் ஏற்பட்ட பதட்டத்திலும் அப்படியே சில நொடிகள் நின்றுவிட்டேன். நான் நின்றது நாய்களுக்கு இன்னும் வசதியாக இருந்ததைப் போல் அவை எனைச் சுற்றி மாறி மாறி ஓடி சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

பயத்தில் எனக்கு வியர்க்கத் தொடங்கிவிட்டது. காதுகளை அடைத்துக்கொண்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். யாரோ நாய்களை விரட்டும் குரல் கேட்டுக் கண்களை மெல்லத் திறந்துப்பார்த்தேன். அந்த இளைஞர் நின்று நாய்களை விரட்டிக் கொண்டிருந்தார். நாய்கள் அங்கிருந்து ஓடி மறைந்தன. நிச்சயமாக நான் அவருக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பயத்தால் உண்டான படபடப்பில் நான் என்ன பேசுவதென்று தெரியாமல் அவரைப் பார்த்துக்கொண்டு மட்டும் நின்றேன். ஆனால் அவரோ நான் கூற நினைத்ததைப் புரிந்துக் கொண்டவர் போல் பரவால என்று கையசைத்தார். நான் அங்கிருந்து பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். 

அதன் பிறகான நாட்களில் அவர் முகத்தில் நான் முன்பு கண்டிருந்த இறுக்கங்கள் இல்லை. அல்லது அந்த இறுக்கங்களைக் கடந்து நான் அவரைப் பார்க்கத் தொடங்கியிருந்தேன் என்றும் கூறலாம். அவர் மீதான எனக்கிருந்த பிம்பம் சற்று மாறியிருந்தது. ஒருவேளை  இதுவே அவரது இயல்பான முகமாக  இருக்கலாம். ஆனால் ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் நம் அனுமானத்திற்கு ஏற்றார் போல் கணித்துக்கொள்வது சமுதாயத்தின் பொதுப்புத்தி என்றாலும் அவற்றை கடந்து ஒன்றை அதன் இயல்புபடிப் பார்க்கவும் ஏற்கவும் செய்வது என்பது தான் மனிதனின் சரியான முதிர்ச்சி நிலை. நிச்சயமாக அப்படியான ஒரு பக்குவத்தை அந்த மனிதருக்குப் பின் தான் நான் உணரவே செய்திருந்தேன். அச்சம்பவத்திற்குப் பிறகும் எப்போதும் போல இருவரும் ஒரே நேரத்தில் அதே இடத்திலோ அல்லது கொஞ்சம் முன்னும் பின்னுமாகவோ கடந்துச் செல்வோம் ஆனால் எதுவும் பேசிக்கொண்டதில்லை.

சில நாட்களில் அறையின் கீழ் வீட்டு சுஜா அம்மாவோடு நன்றாகவே நெருங்கிப் பழகியிருந்தேன். விடுமுறை நாட்களில் எனக்கும் சேர்த்து உணவு தயாரிக்கும் அளவிற்கு சுஜா அம்மா என்னை கவனித்துக்கொண்டார். அன்றும் விடுமுறை நாள் என்பதால் அவருக்கு ஒரு உதவியாக இருக்க எண்ணி அவர் வீட்டின் பழுதடைந்த மிக்ஸி கிண்ணத்தை எடுத்துக்கொண்டு சரிசெய்து வர அருகில் இருந்த ஒரு மிக்ஸி பழுதுப்பார்க்கும் நிறுவனம் சென்றேன். அடுக்ககத்தைத் தொடர்ந்து அடுத்த சில வீடுகள் தள்ளி இருந்த பக்கத்துத் தெருவில் தான் இருந்தது அந்த அலுவலகம். 

வீட்டில் பழுதடையும் பொருட்களையெல்லாம் சரிபார்க்கும் நிறுவனங்களும் இப்படி அருகிலேயே இருந்தால் எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்று ஒருமுறை அந்த அலுவலகத்தின் அருகாமையை எண்ணிப் பூரித்துக்கொண்டேன்.

நண்பகல் நேரம் அது. ஒட்டுமொத்த சென்னையிலேயே ஒரே நாளில் எல்லார் வீட்டிலும் மிக்ஸி பழுதானதைப்போல் அந்த நிறுவனம் முழுக்க மிக்ஸி பழுதுப்பார்க்க வந்த மக்கள் குழுமியிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் முதியோர்களாக இருந்தனர். அங்கங்கு அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருந்த தோரணையைப் பார்த்தபோது சில வாரங்களாகவே இவர்கள் இங்குதான் தங்கியிருப்பார்களோ எனத் தோன்றியது. அடிக்கடி வந்துச்செல்லும் ஒரு பழக்கப்பட்ட இடத்தினைப் போல் அவர்கள் ஆசுவாசமாக இருந்தனர். வீட்டில் இருக்க முடியாததால் இப்படி ஏதேனும் பழுதுப்பார்க்க வந்துவிடுவார்களா அல்லது இவர்களை வெளியே அனுப்பவேண்டும் என்று எண்ணியே இப்படி மிக்ஸியைப் பழுதாக்கி குடும்பதினர் அனுப்பிவிட்டனரா என்று பல சிந்தனைகள் தோன்றியது அவர்களைப் பார்க்கும்போது. 

அந்த நிறுவனத்தின் உள்ளே மிகுந்த வெம்மையை உணர முடிந்தது. ஒருவேளை அது நண்பகல் என்பதால் இருந்திருக்கலாம். அங்கிருந்த முதியோர்களை காண்கையில் நாம் வெளியே செல்ல இன்னும் மூன்று நாட்கள் ஆகலாம் என்ற முடிவோடு டோக்கனை வாங்கினேன். முன்னூற்று ஆறு என்ற எண் இருந்தது. சுஜா அம்மாவை அழைத்து கூட்டம் குறித்தும் டோக்கன் எண்ணையும் தெரியபடுத்தினேன். அவருக்கு அந்த நிறுவனத்தின் சூழல் குறித்து முன் அனுபவம் இருப்பதாக கூறி பின் நீ மிக்ஸியை அங்கேயே கொடுத்துட்டு வந்துவிடு நான் சென்று வாங்கிக்கொள்கிறேன் என்றார். சரி என்று அழைப்பை துண்டித்து விட்டு அருகில் இருந்த ஒரு பாட்டியிடம் மிக்ஸியை எங்கு கொடுக்க வேண்டும் என்று விசாரித்தேன். 

இதற்குள் ஏம்மா ப்ளூ சுடிதார். இங்க வாங்க, சார் கூப்பிடுறார் என்றார் வாட்ச்மென். சாரா.. என்ற சந்தேகத்தோடு நான் அவர் காண்பித்த அறையை பார்த்தேன். ஒரு சிறு சாளரம் அளவு கண்ணாடி முன்பக்கமாக வைக்கப்பட்டிருந்த அறையின் உள்ளே நான் தினமும் கடக்கும் இளைஞர் அமர்ந்திருந்தார். அவர் முன்னிருந்த கண்ணாடி சாளரம் வெளியே காத்திருக்கும் மனிதர்களை அவர் பார்க்க தோதாக அமைந்திருந்தது. நான் அந்த அறையினுள் சென்றேன். 'மிக்ஸி கிண்ணத்தை இங்க வைங்க என்ன பிரச்சினை என்றார் அந்த இளைஞர். நான் 'ப்ளேடு போய்டுச்சுனு சொன்னாங்க' என்றேன். 

யாரு என்றார் அவர்.

நெய்பர் ஆண்ட்டி என்றேன்.

சரி கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க கூப்பிடுறேன். என்றார் இளைஞர். 

ஆனால் என் எண் முன்னூற்று ஆறு என்று கையிலிருந்த டோக்கனை நீட்டினேன். 

பரவால. இது சின்ன வேலைதான் நீங்க வெளிய இருங்க என்றார் மீண்டும்.

அவர் இருந்த அறையை ஒரு‌முறை சுற்றி நோட்டமிட்டேன். அவர் அமர்ந்திருந்த மேசைக்கு அருகில் நூற்றுக்கணக்கான மிக்ஸி கிண்ணங்கள் பழுதுப்பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அனைத்துக் கிண்ணத்திலும் ஒவ்வொரு எண் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. முதல் முறை பார்க்கும் போது அந்த இளைஞரின் முகத்தில் அவர் வயதைத் தாண்டிய இறுக்கங்கள் ஏன் தோன்றியிருக்கும் என்று என்னால் இப்போது யூகிக்க முடிந்தது. அந்த மொத்த நிறுவனத்திலும் அவர் ஒரே ஊழியர் மட்டும் தான். இந்த ஒரு காரணம் மட்டுமே போதுமானதாக தோன்றியது அந்த இறுக்கத்திற்கு. இப்படி ஒரு வெம்மை, இத்தனை கூட்டம் இவ்வளவு பழுதடைந்த கிண்ணங்கள். ஒருவேளை இது அவருடைய சொந்த நிறுவனமாகவேகூட இருக்கலாம் ஆனாலும் இது சராசரி மனிதனைக் காட்டிலும் மிகுதியான உழைப்பாகத் தோன்றியது. 

இளைஞரின் அறையை விட்டு வெளியேறினேன். நான் முன்னதாக அமர்ந்திருந்த இருக்கையில் வேறொரு முதியவர் அமர்ந்திருந்தார். ஆகையால் வாயிலுக்கு அருகிலேயே மற்றொரு இருக்கையைப் பார்த்து அமர்ந்தேன். 

சிறிது நேரத்தில் நான் கொண்டு வந்திருந்த மிக்ஸி கிண்ணத்தை சரி செய்த நிலையில் வாட்ச் மேன் என்னிடம் சேர்த்துவிட்டு நூறு ரூபாய் கட்டணம் என்றார். நான் அதை செலுத்திவிட்டு ரசீதோடு வெளியேறி வாயிலருகே வந்திருந்தேன். வெளியேறும் முன் அந்த கண்ணாடி சாளரத்தை ஒருமுறை  பார்த்தேன். ஒருவேளை அந்த இளைஞர்  பார்த்தால் இம்முறையாவது நன்றி கூற வேண்டும் என்ற ஆவலில். ஆனால் அவர் என்னைப் பார்க்கவில்லை. அந்த அளவிற்கு நேரமில்லாமல் அவர் வேலையை செய்துக் கொண்டிருந்தார் என்று புரிந்தது. நான் வெளியேறினேன். யாரோ அழைத்ததைப்போல் தோன்றிட திரும்பிப்பார்த்தேன் யாரும் நிற்கவும் இல்லை. அழைத்ததைப்போன்ற சுவடும் இல்லை. நான் சுஜா அம்மாவிடம் மிக்ஸி கிண்ணத்தை ஒப்படைத்துவிட்டு அறை சேர்ந்தேன். 

மறுநாள் அதே நேரம். அதே அண்ணாச்சி கடை முன் இருவரும் கடந்து சென்றோம். ஆனால் இம்முறை அந்த இளைஞர் இன்னும் புதிதாக எனக்குத் தோன்றினார் என்பது தான் உண்மை. இம்முறை அவரோடு அவர் நிறுவனமும் கண்முன் வந்துசென்றது. மிக விரைவாகச் சுழலும் இப்பூமியில் யாரும் யாருக்கும் உதவி செய்யும் சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டச் சூழலில் பலன் எதிர்பாராமல் உதவும் மனிதர்களும் மிக அறுகிவிட்டனர் என்றே அதுவரை எண்ணியிருந்தேன். 

அவருக்கு கூற வேண்டிய இரண்டு நன்றிகளும் எனக்கு மிகுந்த பாரத்தை அளித்தன. சரியாக அவர் என்னை கடக்கும் சமயம் நான் அவரைப் பார்த்து சின்னதாகப் புன்னகைத்தவாறு கூற எத்தனித்தேன் உங்க உதவிக்கு நன்றி தோழர் என்று. ஆனால் அந்த இளைஞரோ என்னைப் பார்த்தும் பார்க்காததைப்போல் கடந்துசென்றுகொண்டே இருந்தார். ஒருவேளை வேறு எதையேனும் எண்ணிக்கொண்டுச் சென்றிருக்கலாம் தான். இருந்தாலும் யாரும் புன்னகைத்தால் பதிலுக்கு புன்னகைப்பது தானே நாகரீகமான செயல் என்று கேட்ட மனதிற்கு நாகரீகம் என்பது எப்போதும் கட்டாயமில்லை தானே என்று பதிலுரைத்து பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.


Comments

Post a Comment

Popular posts from this blog

எழுத்தும் நானும்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

சில நேரங்களில் சில மனிதர்கள்: