எழுத்தும் நானும்:

கீழ் தளம் அல்லாது மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்ககத்தில் மூன்றாம் தளத்தில் இருந்த ஒரு சிறிய அறை அது. அறையின் உட்பகுதியில் அழகான பால்கனியில் சில செடி கொடிகள் அடங்கிய ஒரு தோட்டம் இருந்தது.

ஆரஞ்சு வண்ணப்பூச்சுக்களோடு சுவர்கள் கொண்ட அந்த அறையில் ஒரு பக்கம் பால்கனி வாயிலும் அதன்  எதிர்திசையில் அறையின் நுழைவு வாயிலோடு வரிசையாக மூன்று சன்னல்களும் அமைக்கப்பட்டிருந்தது. நானும் தோழியும் அந்த அறையில் சில நாட்களாக இருந்து வந்தோம். தோழி அதிகமாக பயணம் மேற்கொள்பவள் என்பதால் அங்கு நான் மட்டும் தனிமையில் இருக்கும் சூழலே பெரும்பாலும் அமைந்தது.

தோழியின் உடைமைகளோடு மாற்றி உடுத்திக்கொள்ள என் இரண்டு மூன்று ஆடைகளும் சில நூல்களும் அறையில் இருந்தன.

காலை எழுந்து தோட்டத்துச் செடிகளுக்கு நீர் ஊற்றிவிட்டு குளித்து கல்லூரி கிளம்புதல், கல்லூரிக்கு பின் என் வேலைகளை முடித்து மாலை அறை திரும்புதல் என்ற அன்றாடங்களில் அச்சமயம் அந்த அடுக்ககத்தில் நான் பழகியிருந்த கணிசமான மனிதர்களில் மலர் அம்மா ஒருவர். 

மலர் அம்மாவிற்கு என் அன்னையின் சாயல். கருத்த தேகம். ஒல்லியும் பருமனும் அல்லாத உடல் வாகு. குரலும் அப்படியே. அதனாலோ என்னவோ வேறெந்த உறவு முறையினைக் கொண்டும் என்னால் அவளை அழைக்கமுடியவில்லை.

தினமும் காலையில் அடுக்ககத்தின் வாசலைப் பெருக்கி கோலமிடுதல், அந்த மூன்று அடுக்கின் படிகளையும் பெருக்கி சுத்தம் செய்தல் ஆகியவை மலர் அம்மாவின் வேலைகளாக இருந்தன. 

சில நாட்களில் அவள் மாலையிலும் படிகளைச் சுத்தம் செய்ய வருவதுண்டு. அந்நேரங்களில் நான் எதிர்ப்புறம் இருக்கும் மொட்டை மாடியின் மேகங்களை ரசித்தவாறு படியில் அமர்ந்து நூல்கள் எதையாவது வாசித்துக் கொண்டிருப்பேன். அவள் வந்ததும் எழுந்துப் புன்னகைப்பேன். அவளும் பதிலுக்கு சிரித்துவிட்டு தன் வேலையைத் தொடர்வாள். 

தேர்விற்கான விடுப்பு நாள் ஒன்றில் அழைப்பு மணியடித்து நான் அறையின் கதவைத் திறந்தேன். எதிரில் மலர் அம்மா நின்றிருந்தாள்.

 'கொஞ்சம் தண்ணி குடு பாப்பா' என்றவளுக்கு நான் முதல் நாளே கல்லூரியில் இருந்து எடுத்து வந்திருந்த நீர் பாட்டிலைக் கொடுத்ததோடு அவளை அறையின் உள்ளே அழைத்தேன். அவள் மறுத்து 'யாராது பாத்தா எதாவது பேசுவாங்க பாப்பா எனக்கு தண்ணி போதும்' என்றாள். 

உண்மையில் அப்படி பேசும் அளவு அங்கு யாரும் இல்லை என்பதை நான் அறிந்திருந்தேன். மேலும் நான் இருந்தது மூன்றாவது தளம். அதற்கு மேல் தளங்கள் இல்லை என்பதால் யாரும் வரும் சந்தர்ப்பமும் இல்லை தான். ஆனால் எனக்கு அவளைக் கட்டாயப்படுத்தத் தோன்றவில்லை. அது ஒருவேளை அவளுக்கே அசௌகரியமாக இருக்கலாம் என்று நினைத்தேன். 

இச்சமயத்திற்கு பின் இரண்டொரு நாட்கள் அவள் என்னிடம் இதேபோன்று தண்ணீர் கேட்டிருந்தாள். எங்கள் சந்திப்பு அதோடு நின்றிருந்தது. 

ஒரு நாள் கல்லூரியில் ஒரு இலக்கிய விழா ஏற்பாடு செய்திருந்தனர். இலக்கிய விழாக்களைப் பொருத்தமட்டில் அனைத்து விழாக்களிலும் கலந்துக்கொள்வது வழக்கம். வகுப்பில் அதற்கென்று மதிப்பெண்கள் எதுவும் தனியாக வழங்கப்படவில்லை என்றாலும் எனக்கு அதன்மீது ஏதோ ஒரு நாட்டம் இருந்த வண்ணமே இருந்தது. என் கல்லூரி மட்டுமல்லாது பிற கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கும் அவ்வபோது சென்று வருவேன். குறிப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இலக்கிய விழாக்கள் மிக நேர்த்தியாக அமையும். அச்சூழலே ஏதோ புத்தக உலகில் நம்மை புதைக்கும் சூழலாக இருக்கும். வாழ்க்கைக் குறித்த பொறுப்புகள் எதுவுமின்றி புத்தகங்களோடு  பிணைந்துக்கொள்ளுதல் எத்தனை பேரின்பமான ஒன்று‌. கற்பனைக்காகக் கூற எதுவுமில்லை. இலக்கிய விழாக்களுக்கு எப்போதுமே புத்தகங்களின் மணம். வெகு விரைவாக நான் அதற்கு பழகி வந்திருந்தேன் என்று  தான் கூற வேண்டும். 

அன்றைய விழாவில் குறிஞ்சி மலர்களின் வகைகள் குறித்தும் இலக்கியத்தில் அதன் குறியீடுகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் அச்சூழல் பயன் தரக்கூடிய மற்றும் புதிய தகவல்கள் பல அறிந்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. விழாவை மதிய உணவோடு ஏற்பாடு செய்திருந்தனர். 

அன்று விழா முடிந்து மதிய உணவை அங்கேயே வகுப்பு தோழிகளோடு உண்டேன். ஒரு உணவு பொட்டலம் கூடுதலாக இருப்பதாகவும் பேருந்து நிறுத்தத்தில் யாரையாவது பார்த்தால் இதை அவர்களுக்கு கொடுத்துவிடும்படியும் ஒரு தோழி அதை என்னிடம் சேர்த்தாள். இது வழக்கமாக நிகழும் ஒன்றுதான். எப்போதாவது தான் இப்படி உணவுகள் மீதியாகும். அதை அச்சமயம் யாரேனும் ஒருவர் எடுத்துச்சென்று செல்லும் வழியில் யாருக்கேனும் தேவையெனில் கொடுத்துவிடுவதுண்டு.

திடுமென மலர் அம்மா நினைவெழ நான் அந்த உணவு பொட்டலத்தை அறைக்கு எடுத்து வந்தேன். எதிர்பார்த்ததைப் போல் நான் அறை நுழைந்த சிறிது நேரத்தில் அவளும் வந்தாள். நான் அவளை அழைத்து எடுத்து வந்திருந்த உணவு பொட்டலத்தை நீட்டினேன்.

 'ஐயோ வேணாம் பாப்பா யாராது பாத்தா எதாவது சொல்லுவாங்க' என்றாள் எப்போதும் போல் பயந்த பாவத்தோடு. 'யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அப்படி சொன்னாலும் அத நான் பாத்துக்கிறேன் நீங்க உள்ள வந்து சாப்பிட்டு போங்க' என்றேன். 

'இல்லை பாப்பா உள்ள வேணாம் நான் இங்கேயே உக்காந்துக்குறேன்' என்று சாப்பாட்டுப் பொட்டலத்தை கையில் வாங்கிக்கொண்டு படியிலேயே அமர்ந்தாள். நீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு நானும் அவள் அமர்ந்திருந்தப் படிக்கு அருகில் இருந்த ஒரு படியில் அமர்ந்தேன். 

அவள் பொட்டலத்தைப்பிரித்தாள். நான் அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நீ சாப்டியா பாப்பா என்றாள் மலர் அம்மா.

ஆச்சு.. நான் சாப்ட்டு தான் எடுத்துட்டு வந்தேன் என்றதும் அவள் சாப்பிடத் தொடங்கினாள். 

இப்படி ஒருவர் முன்னாடி அமர்ந்திருக்கும்போது யாரால் நிம்மதியாக உணவு உண்ண முடியும்.. என்னாலும் முடியாத காரியம் தான் அது. ஆகையால் நான் என் கைபேசியில் இருந்த ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்கினேன். சிறு சிறு பெட்டிகளாக நகரும் அந்த விளையாட்டில் அப்பெட்டிகளைச் சரியாக நகர்த்தினால் அவைகள் ஒன்றாக இணைந்து ஒரு மிருகமாக மாறும். அந்த மிருகம் வளர வளர மதிப்பீட்டு எண்கள் கூடும். எப்போதாவது அதை விளையாடப் பிடிக்கும். 

சில நிமிடங்கள் கடந்திருந்தது. நான்கு பெட்டிகள் இணைத்திருந்தேன். கிட்டத்தட்டப் விளையாட்டில் பாதி மிருகம் உருவாகியிருந்தது. 

'நீ ஒரே பொண்ணா' என்றார் மலர் அம்மா.

'ம்ம் ஆமா‌. ஒரே பொண்ணு. ஆனா வீட்ல நிறைய பொண்ணுங்க இருக்கோம்' என்றேன். பேசிக்கொண்டே ஐந்தாவது பெட்டியையும் இணைத்தேன் மிருகம் இன்னும் சற்று வளர்ந்தது.

நானும் ஒரே பொண்ணுதான்.. என்று விசும்ப தொடங்கினாள். 

நான் அதைப் பார்த்த கணம் சிறிது பதட்டமானேன். முதலில் கைபேசியை அணைத்து அருகில் வைத்துவிட்டு அவளைக் கவனிக்கத் தொடங்கினேன். நம் முன்னால் அமர்ந்து அழும் மனிதர்களுக்கு ஆறுதல் உரைப்பது ஒரு தனி கலை. நான் அதை சிறு அளவும் அறிந்திருக்கவில்லை. முதலில் என்ன பேசுவதென்று புரியாமல் பின் மெல்ல என்னாச்சு என்றேன்.

கண்களை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டு சாப்பாட்டை மீண்டும் பிசைந்தாள். அவள் கண்களை துடைக்க என் வார்த்தைகள் காரணம் என்றாள் ஒருவேளை ஆறுதல் என்பதும் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். மேலும் நான் அந்த சூழலை அல்லது அவளது அழுத்தத்தை மாற்ற நினைத்தேன். அதன்பேரில் 'நீங்க இங்க எத்தனை வீட்ல வேலை செய்றிங்க.' என்றேன்.

இந்த லைன் முழுக்க நான்தான் பண்றேன் பாப்பா. சாப்பிட்டுக்கொண்டே அவள் பதிலுரைத்தாள்.

எனக்கு அவள் உண்பது ஆசுவாசத்தைக் கொடுத்தது. இப்படியான தகவல்கள் எனக்குத் தேவையாக இருக்கவில்லை. இருந்தாலும் அவளோடு நான் இருக்கிறேன் என்ற உணர்வினை அளிக்கும்பட்சமாக அச்சமயத்தில் என்னால் அதை மட்டுமே செய்ய முடிந்தது. 

நான் தொடர்ந்தேன். ஓ.. ஒரு வீட்ல எவ்ளோ சம்பளம் தருவாங்க.

காலைல தினமும் வாசல பெருக்கி கோலம் போடனும். அப்புறம் தினம் இந்த படியெல்லெம் பெருக்கி வைக்கனும் மாசம் ஒருவீட்ல அறுநூறு ரூபா கொடுக்குறாங்க என்றாள்.

அவள் கோலங்களை சிலமுறைகள் பார்த்த நினைவிருக்கிறது என்பதால் நீங்க போடுற கோலத்துக்கு ஆயிரரூபா தரலாம். அவ்ளோ நல்லாருக்கு என்றேன்.

அப்படியா சொல்ற. என்னமோ. எனக்கு தெரிஞ்சது அது தான்.. அது வச்சி தான் இன்னைக்கு பொழப்பு ஓடுது.. என்று வெள்ளந்தியாக சிரித்தாள் மலர் அம்மா.

வீட்டுக்காரர் என்ன பண்றாரு.. 

அந்த கேள்விக்கு அவள் எதுவும் பேசவில்லை.

சிறிது நேரம் அமைதியாக கழிந்தது.

எனக்கு அவளின் மௌனம் புரியாமல் இல்லை. நான் வேறு ஏதேனும் பேசலாம் என்று கேள்வியை மாற்றினேன்.

எந்த ஊரு நீங்க.. சென்னை மாதிரி தெரியலையே என்றேன்.

பக்கத்துல காஞ்சிபுரம் பாப்பா.. கல்யாணம் பண்ணி தான் இங்க வந்தேன்.. கட்டிட்டு வந்தவன் அப்பவே உட்டு ஓடிட்டான்.. கடங்கார பையன். பாவி பயன்.. என் வாழ்க்கையே வீணாக்கிட்டு போய்ட்டான். மகராசன்.. 

இப்போதும் எனக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. சிறிது அமைதிக்குப் பிறகு கஸ்டம் தான்
புள்ளைங்க இருக்காங்களா.. என்றேன்.

இல்லை. அந்த கொடுப்பனையும் இல்லாம போச்சு.

அவள் உணவினை முடிக்கும் வரை பேசிக்கொண்டிருக்க திட்டம் என்பதால் தோன்றிய கேள்விகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாக இப்படி ஒருவரோடு பேசும் பழக்கம் எனக்கில்லை. ஒருவேளை அதுவரை அப்படியான சூழல்கள் எதுவும் அமையாமல் போயிருக்கலாம். ஆனால் அன்று அந்த உரையாடல் எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

உங்க கூட யாரு இருக்காங்க..

என்னைய பெத்ததுங்கள வச்சி நான்தான் பாத்துக்கிறேன். அதுக்கு தான் இந்த பொழப்பு.. வேலை எல்லாம்.. என்றாள்.

பரவால விடுங்க. உங்களை பெத்தவங்கள உங்க பிள்ளையா பாத்துக்குறிங்க. இதுல உங்களுக்கு எந்த அளவுக்கு சந்தோசம் இருக்கும்னு எனக்கு தெரியல ஆனா உங்கள நினைச்சு உங்க அப்பா அம்மா ரொம்பவே பெருமைப்படுவாங்க.. என்றேன்.. 

அவள் சிரித்தாள். வேற யாராவது இருந்துருந்தா எங்கள விட்டுட்டு அவங்க வாழ்க்கை முக்கியம்னு போய்ருப்பாங்க நீ பண்ணல. நாங்க என்ன புண்ணியம் பண்ணினமோ.. அப்படினு எங்கம்மா கூட எப்பவாது சொல்லும். என்றாள்.

ம்ம்.. பாத்திங்களா.. அவங்க சரியாதான் சொல்லிருக்காங்க‌. நல்லா பாத்துக்கோங்க அவங்கள. என்றேன். 

உணவு முடிந்திருந்தது. பேப்பரை மடித்து எடுத்துக்கொண்டு எழுந்து மொட்டை மாடி வந்து கைகளைக் கழுவினாள். நீர் அருந்திவிட்டு 'யாரும் இப்படி என்ன உக்கார வச்சி பேசினதில்ல பாப்பா. மனசு கொஞ்சம் லேசாயிருச்சி உன்ட பேசினதுல. நல்லாரு.. நான் வரேன்' என்று என் கன்னங்களை தடவி அந்த கைகளை தன் இதழுக்கு அருகில்  கொண்டு வந்து முத்தமிட்டாள். பின் பெருக்கிக் கொண்டே ஒவ்வொரு படியாக கீழே இறங்கினாள். 

இறங்கும் அவள் உருவத்தைப் பார்த்துக்கொண்டு நான் அங்கேயே நின்றிருந்தேன். படிகள் தோறும் இலக்கிய விழாக்களில் கமழும் புத்தக வாடை வீசத்தொடங்கியது. 

Comments

Popular posts from this blog

எழுத்தும் நானும்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

சில நேரங்களில் சில மனிதர்கள்: