சில நேரங்களில் சில மனிதர்கள்:

ஆசிரியப் பணியின் இடையில் மக்கள் தொகை கணக்கெடுப்பினை மேற்கொண்டிருந்தேன். மாலை பள்ளிவேளை முடிந்து கணக்கெடுப்புத் தொடங்கும். இப்பணி அரசு பள்ளி ஆசிரியர்களுக்காக வழங்கப்படுவது. நான் அரசு பள்ளியில் இருந்ததால் எனக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. இப்பணியால் நான் வாங்கும் ஊதியத்தோடு சிறுத் தொகை கூடுதலாகக் கிடைக்கும் என்பதால் நான் அதையும் மேற்கொண்டேன்.

கணக்கெடுப்பிற்காகச் செல்லும் ஒவ்வொரு தெருவிலும் நான் பணிசெய்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருந்தார்கள். அவ்வபோது என்னோடு அவர்களும் வந்து கலந்துக்கொண்டனர். 

என்னிடம் கணக்கெடுப்பிற்காக ஒரு கையேடு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் வீட்டின் எண், அவ்வீட்டில் வசிக்கும் மனிதர்களின் பெயர் வயது மற்றும் அவர்களது தந்தை அல்லது துணைவி/ துணைவன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்‌. அந்தத் தகவல்களைக் கொண்டு கணக்கினை மேற்கொள்ள வேண்டும். வீடு மாற்றல் காரணமாகவோ அல்லது இறப்பின் காரணமாகவோ இல்லாமல் போனவர்களை நீக்கி புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் மனிதர்களையும் இடைப்பட்ட வருடங்களில் பிறந்திருந்த பிள்ளைகளையும் கணக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும். பின் கையேட்டில் உள்ள தரவுகளைக் கொண்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பார்க்கும்போதும் கேள்வியுறும்போதும் தோன்றியதை விட இப்பணிகள் என் நாட்களில் பெரும்பகுதியை தின்றன. குறிப்பாக இரவுகளை. இதனால் சில நாட்கள் சரியாக உறக்கம் கொள்ள முடியாமல் போனது.

ஒருமுறை எண் வரிசைகளின் அடிப்படையில் ‌ஒரு சிறு சந்திற்குள் இருந்த ஒரு குடிசை வீட்டிற்கு சென்றேன். என்னோடு என் மாணவர்கள் இரண்டு மூன்றுபேர் வந்திருந்தனர். நாங்கள் சென்ற வீட்டில் யாருமில்லை. வீட்டிற்கு வெளியே ஒரு குடமிருந்தது. குடத்திற்கு அருகில் ஒரு விளக்குமாறு வைக்கப்பட்டிருந்தது. அந்த குடிசையின் அருகில் ஒரு சிறு கீற்றாலான குளியலறை இருந்தது. பார்ப்பதற்கு ஒரு குடும்பம் இருப்பதைப் போல் சிறிதும் தோன்றவில்லை. 

மிஸ் யாருமில்லை. வேற யாரிடமாவது கேட்கலாம் வாங்க.. என்றான் ஒரு மாணவன். அவன் அறிவுறுத்தலின் பேரில் எல்லோரும் அந்தக் குறுகிய சந்தை விட்டு வெளியேறினோம். அப்போது  தான் கவனித்தேன் ஒரு பெண் எங்களை நோக்கி ஓடி வந்தார். கூட்டமாக வந்ததால் பயந்துவிட்டாரோ என்று தோன்றியது எனக்கு. அவள் என்னருகில் வந்து மூச்சிறைத்தாள். நான் அவளையும் மாணவர்களையும் பார்த்தேன். மாணவர்கள் அப்பெண்ணையும் என்னையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்கள். 

நடுத்தர வயதுப் பெண். கழுத்தில் தாலி இல்லை ஆகையால் இன்னும் மணமாகவில்லை என்று புரிந்துக் கொள்ளலாம். சுருங்கிய கருப்புநிறத்தில் மஞ்சள் பூப்போட்ட புடவை அணிந்திருந்தாள். உயரம் எனைக் காட்டிலும் சிறிது குறைவாகவே இருந்தாள். கோதுமை நிறம். அவள் கண்களோரம் இருக்கும் சுருக்கங்கள் அவள் வயதை சில வருடங்கள் கூடுதலாக காட்டியது. ஒருவேளை கூடுதலாகவும் இருக்க வாய்ப்புண்டு. 

மெல்ல.. மெல்ல.. ஏன் இப்படி ஓடி வரிங்க என்றேன். 

நீங்க கணக்கெடுக்கிறிங்களா என்றாள் அவள். 

என்னை முந்திக்கொண்டு மாணவர்கள் ஆமாம் என்றார்கள்.

அக்கா. இங்கேயே இருங்க கா. நான் எங்க பாட்டிய கூப்பிட்டுட்டு வரேன் என்று மீண்டும் ஓடினாள். 

வருடத்தில் நான்கைந்து முறைக்கு மேல் ஆதார் எண், குடும்ப அட்டை, ஓய்வூதியம்,  வருட கணக்கெடுப்பு என தொடர்ந்து ஏதாவது ஒரு கணக்கெடுப்பு நிகழ்ந்த வண்ணமே இருக்கும் சூழலில் ஊர் மக்களால் அதிகமாக அஞ்சத் தூண்டுவது ஓய்வூதிய கணக்கெடுப்பு தான். பதிவில் இல்லையென்று எழுதிவிட்டால் அடுத்த மாதத்திலிருந்து ஓய்வூதியம் கிட்டாமல் போகலாம் என்ற அச்சம் தான் அப்பெண்ணை இப்படி ஓடிவர வைத்திருக்கிறது என்று என்னால் யூகிக்க முடிந்தது.

சிறிது நேரத்தில் சென்ற பெண் திரும்பி வந்தாள். எங்க பாட்டி அங்க தான் உக்காந்துருக்கு. நீங்க அங்க வர்றீங்களா கா. என்றாள் கெஞ்சும் தோரணையில்‌. 

பரவால. அதனாலென்ன வாங்க போலாம். அனைவரும் அப்பெண்ணை பின்தொடர்ந்தோம். 

இரண்டு வளைவுகள் தள்ளி இருந்த ஒரு அடிபைப்பின் அருகில் அமர்ந்து ஒரு முதியவள் தென்னை கீற்றை பின்னிக்கொண்டிருந்தாள். 

நான் அருகில் சென்றேன். 

என்னை ஒருமுறை நிமிர்ந்து ஏறிட்டு பார்த்தவள் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை ஓரமாக துப்பிவிட்டு என்ன வேணும் என்றாள். அவளைச் சுற்றிய இடங்கள் எல்லாம் அவள் துப்பிய வெற்றிலை எச்சிலால் செம்மை பூசியிருந்தது.

அந்த அறுபத்து ஆறாம் நம்பர் வீட்ல நீங்க தான இருக்கிங்க பாட்டி  உங்க பேரு பாஞ்சாலை தான என்று கேட்டேன்.

ஆமா.. என்று இழுத்தப்படி கீற்றை இழுத்துப் பிடித்து பின்னினாள். 

கருத்த மேனியில் மேலாடை அணியாமல் சாயம் போன நூல் புடவை ஒன்றை உடுத்தியிருந்தாள் பாட்டி. பருமனும் ஒல்லியும் இல்லாத பாங்கு. நரைத்த முடி. வெற்றிலை போடுவதால் அவளது உதடுகளும் பற்களும் ஒன்றுபோலவே கறை படிந்து சிவந்திருந்தன. கைகளில் புள்ளியிட்டு ஒரு சிக்கல் கோலத்தை பச்சைக்குத்தியிருந்தாள்.  

கையேட்டில் கதவு எண் அறுபத்து ஆறு பாஞ்சாலை என்ற பெயரை பென்சிலில் ஒரு டிக் செய்துக்கொண்டு, உங்க வீட்டுக்காரர் பேரென்ன என்றேன். 

வெற்றிலை எச்சிலில் சிவந்திருந்த அவளது உதடுகள் புன்னகைப்பது தெரிந்தது. 

அவுக பேரு எதுக்கு உனக்கு.. என்று எனை சற்றும் கவனிக்காததைப்போலவும் அவளை கவனிக்க விடாமலும் கீழே குனிந்துப் பின்னலை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தாள். 

ஒருநாளைக்கு குறைந்தப் பட்சம் ஐம்பது வீடுகள் கணக்கெடுத்தால் தான் கொடுக்கப்பட்டிருக்கும் நாளுக்குள் கணக்கை ஒப்படைக்க முடியும் என்பதால் நான் மீண்டும் தகவலுக்காக அழுத்தம் கொடுத்தேன். 

"இதே தெருவுல மூனு பாஞ்சாலை இருக்கிங்க. வீட்டுக்காரங்க பேரையோ அப்பா பேரையோ வச்சிதான வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும் அதான் கேட்டேன் சொல்லுங்க பாட்டி" என்றேன். 

"எண்பத்தி ரெண்டு வயசுல பாஞ்சாலை நான் மட்டும் தான்டி இருக்கேன். ஊட்டு நம்பரு சரியாதான சொல்ற அப்புறம் என்ன.. போயி வேலைய பாரு" என்றாள் முதியவள். 

என்னை அழைத்து வந்திருந்த பெண்மணி சற்று அதிர்ந்து பின் பாட்டியிடம் கூறினாள். 'இப்படியே பேசிகிட்டிரு நீ இல்லனு உம்பேர அடிச்சிவுட போறாங்க அடுத்த மாசம் எப்படி பணம் வருதுன்னு பாப்ப‌' என்றாள்.

இடையில் நான் குறிக்கிட்டு இது ஓய்வூதிய கணக்கெடுப்பு இல்லைங்க. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு. நீங்க பயப்படுற மாதிரிலாம் எதுவும் ஆகாது‌ என்றேன். பாட்டி வீட்டுக்காரர் பேரென்ன என்றேன் மீண்டும் அப்பெண்ணிடம் ஒருமுறை. 

எனக்கு தெரியாதுக்கா. நான் இந்த ஊருக்கு வரதுக்கு முன்னாடியே தாத்தா இறந்துட்டாரு. பாட்டியும் சொன்னதில்லை. என்றாள் மீண்டும் அவளது முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

கிடைத்த தகவல்கள் போதுமானவை தான் என்று அந்த வீட்டை நிறைவு செய்து அங்கிருந்து அடுத்த வீட்டை நோக்கி நானும்  மாணவர்களும் நடந்தோம். 

இந்தாடி ரோசு புடவை.

என் பின்புறமிருந்து ஒரு குரல் வர திரும்பினேன்.

எம் புருசன் பேரு நான் ஒருநாளும் சொன்னதில்லை. எல்லா கோயில்லையும் தொந்தி வச்சிகிட்டு ஒன்னு உக்காந்துருக்கும் பாரு அத்தான் அவுங்க பேரு. என்றாள் முதியவள். இம்முறை அவள் முகமெல்லாம் சிவந்து இருந்தது.

நான் கையேடை திருப்பினேன். கதவு எண் அறுபத்து ஆறு பாஞ்சாலை பெயருக்கு அருகில் விநாயகம் என்றிருந்தது. 

அந்த சிவந்த முகத்தை ரசிக்கும் நோக்கில் பெயரை மாற்றி "என்னது கணேசனா" என்றேன்.. 

வெற்றிலை எச்சிலை மீண்டும் துப்பிவிட்டு. போடி.. போடி.. போய் கண்டுபுடி.. அப்புறம் எதுக்கு நோட்டை தூக்கிகிட்டு திரியிர என்றாள். 

நவீன யுகத்தில் வாழும் என் போன்ற யுவதிக்கு இது எத்தனை பழைமையான மற்றும் பிற்போக்குத்தனமான சிந்தனை மற்றும் கணவன் பெயரை ஏன் சொல்லக்கூடாது என்ற தர்க்கங்கள் தோன்றலாம். ஆனால் அவள் கொண்டிருக்கும் காதலை அவள் முக சிறு புன்னகையும் அவள் வெட்க கன்னங்களும் பறைசாற்றிய கணம் என் அறிவு தோற்கவே செய்தது. 

இந்த வயதிலும் தன் காதலை இந்த அளவு பற்றியிருக்கும் அவளைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அவள் பற்றியிருக்கும்  காதல் அவளைப் பற்றியிருந்ததை உணர்ந்தபோது தோன்றிய நுண் புன்னகையை மறைத்து அவள் கன்னங்களின் சிவப்பை மட்டும் கண்களில் வாங்கிக்கொண்டு கையேடோடு அடுத்த வீட்டை அடைந்தேன். 


Comments

Popular posts from this blog

எழுத்தும் நானும்

எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

சில நேரங்களில் சில மனிதர்கள்: