சில நேரங்களில் சில மனிதர்கள்:
வழக்கமாகப் பேருந்து பயணங்களில் ஓட்டுநரின் பின் இருக்கையில் அமர வேண்டும். வேறெங்கும் இடையில் இறங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் ஒரு அழைப்பைத் தர வேண்டும் என்பதெல்லாம் வீட்டின் அன்புக்கட்டளைகள். என் பாதுகாப்பிற்காகத்தான் என்று உணர்ந்திருந்ததால் இதையெல்லாம் மீறவும் தோன்றியதில்லை. இக்கட்டளைகளில் மிக முக்கியமானது இரவுப்பயணம் கூடாது என்பது.
சென்னையில் இருந்து வீட்டிற்குச் செல்லும்போது இரவுப்பயணங்கள் தான் சரியாக இருக்கும். அதனால் சில முறை வீட்டிற்குத் தெரியப்படுத்தாமலேயே சென்றுவிடுவதுண்டு. அப்படி ஒருமுறை தேர்தல் சமயத்தில் சென்னையில் இருந்து ஊருக்குச் செல்ல கோயம்பேடு வந்திருந்தேன். மணி பத்தைக் காட்டியது. பெரும்பாலும் பேருந்தே இல்லை. வெகு நேரமாக பலர் பேருந்துக்காகக் காத்திருந்தனர். மணி பதினொன்றானது. பேருந்து ஒன்றுகூட இல்லை. விழுப்புரம் சென்று அங்கிருந்து மாறும் நோக்கத்தோடு சிலர் விழுப்புரம் பேருந்துகள் நிற்கும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். பயனில்லை.
பையில் எப்போதும் எதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன். அன்று பாடப்புத்தகமான இலக்கிய வரலாறு இருந்தது. படிக்கலாம் தான். ஆனால் அங்கிருக்கும் மனிதர்கள், அந்த மின்விளக்கின் ஒளி, எண்ணற்ற குரல்கள் இவற்றின் சூழலில் படிப்பு ஒட்டாது என்று தோன்றியது.
சுற்றிப் பார்த்தேன். இரும்பு இருக்கைகள் எதுவும் உட்கார இடம் இல்லாமல் நிரம்பியிருந்தன. அருகில் இருந்த ஒரு இருக்கையில் ஓர் இளைஞர் மட்டும் தாராளமாக அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்று அமரலாமா? இல்லை வேண்டாம் என்று மனமே கேள்வி கேட்டு அதுவே பதிலும் கூறிக்கொண்டது. வெகு நேரமாக நின்றதால் கால்கள் வலிக்கத் தொடங்கின.
என்னருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுடைய தம்பதியரில் அந்தக் கணவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நிற்பதன் அசௌகரியத்தை என் முகத்தைப் பார்த்து அவர் தெரிந்திருக்க வேண்டும். வெகுநேரமாக அவர்கள் அங்குதான் பேருந்திற்காக அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்ததால் அவர்களை அன்னியமாக நினைக்கத் தோன்றவில்லை. பதிலுக்குச் சிரித்தேன். "இங்க வா. உக்காரு" என்றார் அவர். என்னால் நிற்கமுடியவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் கபடமற்ற அந்த அன்பை மறுக்கமுடியாமல் போய் அமர்ந்தேன். அவர் மனைவி என்னிடம் "பேரு என்ன மா" என்றார். கீதா என்றேன். குங்கும வண்ணத்தில் மஞ்சள் பூப்போட்ட பூனம் புடவை கட்டியிருந்தார் அவர். இரண்டு கைகளிலும் பளபளவென கண்ணாடி வளையல்கள் மினுங்கின. மஞ்சள் அப்பிய முகம். பள்ளிபருவத்தில் எனக்கும் கண்ணாடி வளையல்கள் மிகப்பிடிக்கும். சென்னை வந்த பிறகு மறந்த எத்தனையோ விருப்பங்களில் இதுவும் ஒன்றாகியிருந்தது.
"எதாவது சாப்பிடுறியா" என்றார் அந்தக் கணவர். "இல்லை ணா. நான் ஹாஸ்டலையே சாப்ட்டேன். எனக்கு வேண்டாம் நீங்க சாப்ட்டு வாங்க" என்றேன். "பனண்டு மணிக்கு யாரு சாப்பிடுவாங்க நீ சின்ன புள்ளைல. பாக்க அசதியா தெரியிர அதான் கேட்டேன்" என்றார். பரவால ணா. எப்போதும் இந்த நேரத்துல தூங்கிடுவேன். அதான் அப்படி இருக்கு" என்றேன். அவரது மனைவியோ அமைதியாக என்னைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். போக வர இருக்கும் மற்ற பேருந்துகள் தொடங்கி அப்போதிருந்த அரசியல் வரை அவர் பேசிக்கொண்டே இருந்தார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சட்டென்று மனைவி கழிவறை செல்ல எழுந்தார். நானும் வருவதாகக் கூறி எழுந்து உடன் நடந்தேன். "பேசிகிட்டே இருக்காருல. நீ படிக்கிற புள்ள, உனக்கு இப்படி பேசுறதெல்லாம் புடிக்குமானு தெரியல. ஆனா நல்ல மனுஷன். மனசுல எதுவும் வச்சிக்காத" என்றார். "பரவால கா" என்றேன். சில நிமிடங்களில் நான் திரும்பி வந்தேன். மனைவி அங்கு இல்லை. அண்ணாவிடம் கேட்டபோது "அவ அப்படி தான் யானை அசையிறாப்ல ஆடி அசைஞ்சு வருவா. நீ உக்காரு" என்றார்.
நேரம் நள்ளிரவு இரண்டைக் காட்டியது. கிட்டத்தட்ட பேருந்திற்காக நின்றவர்கள் அமர்ந்தும் அமர்ந்த நிலையிலேயே உறங்கவும் தொடங்கியிருந்தனர். "கீதா மா, இப்ப பாரேன் பாத்ரூம் உள்ள இருந்து வரவங்கல்ல சரியா மூனாவது ஆளா அவ வருவா" என்றார் அண்ணா. சொன்னதைப் போலவே மூன்றாவதாக வெளியேறினார் அவர் மனைவி. "எப்படி ணா" என்று கண்களை அகலமாக்கிக் கேட்டேன் அவரிடம். "அதலாம் அப்படிதான்டா. அவதான் என் உலகம் எல்லாம். எப்போ என்ன பண்ணுவானு அப்படியே தோணிடும். பெரும்பாலும் அது சரியா தான் இருக்கும்". என்று சிரித்தார். அதற்குள் மனைவி எங்களைச் சேர்ந்திருந்தார். "என்னைப் பாத்துதானே சிரிக்கிறிங்க" என்றார் செல்லமாகக் கொஞ்சியபடி. "இவகிட்ட புடிச்சதே இது தான் தெரிஞ்சிகிட்டே கேப்பா எல்லாத்தையும்" என்று அவரின் கன்னத்தை இடித்தார் அண்ணா.
விழுப்புரம் பேருந்து ஒன்று இருக்கிறது வரவங்க வாங்க என்றார் ஒரு நடத்துநர். அங்கிருந்து ஒரு பெரும் கூட்டம் ஓடியது. வா போலாம் என்று அண்ணாவும் அவரது மனைவியும் எழுந்து பைகளை எடுத்தனர். நான் எழுந்து ஓரமாகப் போய் நின்று கொண்டேன். நீ வரலையா என்றார் அண்ணா. இல்லை, நீங்க போய்ட்டு வாங்க என்றேன். ஏன் என்று திகைத்தவர் மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். சுபா வா அடுத்த பஸ்ல போலாம் என்று மனைவியையும் அழைத்தார். அந்த அக்காவின் பெயர் சுபா என்று அப்போது தான் தெரியும். பெரும்பாலும் உறவைச் சொல்லி அழைத்து விடுவதால் பெயர் கேட்கும் அவசியம் எதுவும் எனக்கு ஏற்படுவதில்லை. எனக்கொன்றும் புரியாமல் "போகலையா" என்றேன். "சேர்ந்து போலாம்" என்று சிரித்தார் அண்ணா.
உண்மையில் என்னிடம் நூற்றி இருபது ரூபாய்தான் கையில் இருந்தது. பேருந்து கட்டணம் நூற்றி பத்து. விழுப்புரம் சென்று மாறினால் ஒருவேளை கூடுதலாகலாம். அதனால் தான் தயங்கி நின்றேன். ஆனால் என்னால் இவர்கள் பயணம் தாமதமாகிறதே என்று மனதில் ஒருபுறம் உறுத்தியது.
அண்ணாவிற்கு மனைவியை கிண்டலடித்தும் பாடியும் சிரித்துமாகச் சிலநேரம் கடந்தது. கள்ளக்குறிச்சி செல்லும் தம்பதியர் அவர்கள். அண்ணாவின் தாய் தந்தையரிடம் அவர்களின் இரு பிள்ளைகள் வளர்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் ஒரு உணவகத்தில் இருவரும் பணி செய்கின்றனர். பண்டிகை காலக்கட்டத்தில் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கமாக இருக்க இப்போது பிள்ளைகளைக் காணவும் தேர்தலில் ஓட்டுப்போடவும் இருவரும் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இவைகளை கேட்டு என் புராணத்தைக் கொஞ்சம் பேச நேரம் நான்கைக் காட்டியது.
ஆத்தூர் பேருந்து ஒன்று வந்தது. அண்ணா சென்று முதலில் ஒரு இருக்கையில் இடம் பிடித்தார். கூட்டம் அலைமோத அந்த இருக்கை பறிபோனது. கடைசி இருக்கை கிடைத்தது மூவரும் அமர்ந்தோம். சன்னலோரம் எனக்கு. நான் சொல்லியும் கேட்காமல் எனக்கும் சேர்த்து அண்ணா டிக்கெட் வாங்கினார். திரும்பத் திரும்ப சிரமம் தரோமே என்று மனதிற்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. இரவெல்லாம் தூங்காத களைப்பில் நான் சன்னல் கம்பியில் சாய்ந்தேன். அழைத்து தன் தோள்மீது சாய்ந்துக்கொண்டு தூங்கு என்றார் சுபா அக்கா. ஓர் அன்பு தன் தோள்மீது தலைசாய்த்துக்கொள்ள அனுமதிக்கும் போது யாரால் மறுக்க முடியும். நிம்மதியாக உறங்க தொடங்கினேன்.
விழுப்புரத்திற்கு முன் சாப்பிடுவதற்காக பேருந்துகள் நிற்பது வழக்கம். மணி காலை ஏழு என்று காட்டியது. மூவரும் டீ குடிக்க இறங்கினோம். எப்போதும் இப்படி இறங்கும் பழக்கம் எனக்கு இல்லை. தேவையில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் உணவு உண்ணும் அளவிற்குப் பணம் எதுவும் இருக்காது என்பது தான் உண்மை. அன்று அங்கு இறங்கினேன். கொஞ்சம் சாக்லேட் அப்புறம் ஒரு சிப்ஸ் பாக்கெட் ரெண்டு பிஸ்கட் பாக்கெட் வாங்கினேன். பேருந்தில் ஏறி அமர்ந்தோம். அந்த காலை அந்த பயணம் அப்போதைய மனநிலை அடுத்து உறக்கம் கொள்ளவில்லை. சூரிய வெளிச்சத்தில் மிளிரும் மேகங்கங்களையும் புல்வெளிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்தேன்.
கள்ளக்குறிச்சியில் பேருந்து நின்றது. அவர்கள் இறங்கிய போது, வாங்கிய பண்டங்களை அவர்களின் பிள்ளைகளுக்காக என்று கொடுத்தேன். உனக்கேன் சிரமம் என்றார் அண்ணா. அத்தை கொடுத்தேனு சொல்லுங்க என்றேன். மனமுவந்து சிரித்தார். அங்கிருந்து பேருந்து கிளம்பியது. அவர்கள் கொடுத்திருந்த உறவின் ஈரம் மனதில் வருடிக்கொடுக்க நான் சன்னலை பார்த்துக்கொண்டிருந்தேன். பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
Comments
Post a Comment