கோசலை

கோசலை (2022)
- தமிழ்ப்பிரபா  
நீலம் பதிப்பு 


இந்த நூலை கடந்த மூன்று மாதங்களாக வாசிக்கிறேன். எப்போதும் வாசிக்கும் நூலை தலையணைக்கு அருகில் வைத்திருப்பது வழக்கம். 200 பக்கங்கள்  கொண்ட ஒரு நூலை வாசிக்க எதற்காக மூன்று மாதங்கள் என்று கேட்கலாம் தான். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரம் போதாமல் அடுத்த நாளிடமிருந்து இரண்டொரு மணி நேரங்களைக் கடன் வாங்கி ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான அம்மாவாக இருப்பதால் மூன்று மாதம் தேவையானது.

இந்த மூன்று மாதங்கள் கோசலை என்னோடு சேர்ந்தே  உறங்கியிருக்கிறாள். பலநேரங்களில் நானும் மௌனியும் கோசலையோடு விளையாடியிருக்கிறோம். சிலவேளைகளில் கோசலையோடு மதிய உணவு உண்டிருக்கிறேன்.

கோசலைக்கும் மொட்டைமாடியில் நின்று விசும்பாடும் மேகங்களைப் பார்க்கப் பிடிக்கும் என்பதுதான் அவள் மீது எனக்கு அத்தனை வாஞ்சையை ஏற்படுத்தியது.

அவள் ஒரு பெண். என்னைப்போல் 
என் தாயைப்போல் நான் சந்திக்கும் பார்க்கும் வியக்கும் பெண்களைப் போல அவளும் ஒரு சராசரி பெண். அந்த முழுமையைத்தாண்டி  கோசலையிடம் எந்த ஊனத்தையுமே நான் உணரவில்லை. தன் குழந்தையைச் சுமக்கும்போது பெருத்த வயிற்றினைத் தாங்கமுடியாமல் தவித்தபோதும், ஜோதி அவனது தாய் வீட்டின் முன் அடித்துத் தள்ளும்போதும், ரேவதியின் இறப்பிலும், கோசலையின் இறப்பிற்கு முந்திய நாள் அவள் உணர்ந்த மூப்பிலும் அவளுக்கு முன் என் நெஞ்சை அழுத்தியது அந்த ஊனம் தான். 

நாவலில் ரேவதியின் இறப்பு நான் எதிர்பார்க்காதது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள சில நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் நாவலின் ‌முடிவு குறித்து முன்னதாகவே உணர்ந்திருந்தேன். தினமும் கல்லூரிக்குச் சென்று திரும்பும் போது பேருந்துகளில் இருந்து பார்த்த பகுதியான சிந்தாதிரிப்பேட்டையைச் சில வரலாற்றுத் தகவல்களோடு அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

ஒரு பெண்ணுக்கு ஏன் கல்வி அவசியம்? ஒரு பெண் கற்றால் அவள் குடும்பத்தின் ‌கல்விக்கு அது வழியமைக்கும்.  இங்கு கோசலை தான் பிறந்து வளர்ந்த ஊரை குடும்பமாக ஏற்கிறாள். அவள் கல்வியில் அவள் குடும்பமான அப்பகுதியே மேம்பட்டுத் திகழ்கிறது. 
இந்நூலில் மிகவும் இரசித்த ஒன்று இதில்  இடையிடையே தோன்றும் கடிதங்கள். இரசித்த கதாபாத்திரம் சித்தி. 

சிறு வயதில் வீட்டின் அருகில் இருந்த அங்கன்வாடியிலிருந்த ஒரு தனியறையை நூலகமாக திறந்திருந்தனர். நானும் தம்பியும் தினம் தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குருவின் கதை, அக்பர் பீர்பால் என எடுத்துவந்து வாசிப்போம். என்னைவிட வேகமாக வாசிக்கும் தம்பி சீக்கிரம் ஒரு நூலை முடித்துவிட்டு அடுத்தடுத்து வாசிக்கத் தொடங்கிவிடுவான். நானோ கதைகளின் இடையியே இருக்கும் வண்ண பொம்மைகளில் லயித்து வரைய ஆரம்பித்து விடுவேன். இப்படி சில பால்ய நினைவுகளை மேலெழ செய்திருக்கிறாள் கோசலை. 

இந்நாவலில் ஒரு முரண்பட்ட கதாப்பாத்திரமாக எனக்குத் தோன்றியது கோசலையின் தந்தை தான். ஒரு சிறந்த பொதுவுடமைவாதியான தந்தை ஏன் கோசலையின் காதலை ஏற்க மறுத்தார்? அதற்காகச் சாதியை ஏன் காரணமாகக் கொண்டார்? மகள் அனுபவித்த கொடுமைகளிலும் அவர் ஏன் கோசலைக்கு அடைக்கலம் தராமல் போனார்? என்று பல கேள்விகளை தூண்டிய கதாபாத்திரம் அது. நாவலின் இறுதிக்கட்டத்தில் இதற்கான பதில் இருக்கப்பெற்றாலும் மிக விரைவாகக் கூறிச்சென்றதைப்போல உணர்ந்தேன்.

என் பால்யத்தில் என் தந்தை ஒரு பொதுவுடமைவாதி. எங்கள் வீட்டில் நாங்கள் உறங்க இடமிருக்காது. ஆனால் அங்கங்கு புத்தகங்கள் குவிந்திருக்கும். சுவரில் தலைவர்களின் புகைப்படங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். என் தந்தை பல போராட்டங்களில் கலந்து அடிக்கடி சிறை சென்று வருவதுமுண்டு. தந்தையைப் பார்க்க பல தோழர்கள் ‌வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அப்போதே லெனின் மார்க்ஸ் மற்றும் அம்பேத்கரை நான் அறிந்தே இருந்தேன். ஆனால் கோசலை தம் வாழ்வில்  பெரும்பகுதியை  கடந்தபின் சாம்பவ மூர்த்தி ஐயாவால் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அறிந்துகொள்வது, அதற்கு முன் குறைந்தபட்சம்  பெயரளவில் கூட அவள் அவரை அறிந்துக்கொள்ள, ஒரு சிறு சந்தர்ப்பமும் அமையாமல் போயிருக்குமா?  என்று தோன்றியது. 

தமிழ்ப்பிரபாவின் நாவல்களில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது. நல்ல வாசிப்பு அனுபவம் கொடுத்த நாவல். வாழ்த்துகள் தமிழ்ப்பிரபா.

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: