TREES OF PEACE (Alanna Brown)

நான் கல்லூரி பயின்றது சென்னையில். இங்கு ஒரு அரசு விடுதியில் தங்கிப் படித்தேன். என் விடுதி மூன்றடுக்கு கொண்டது. கீழடுக்கும் இரண்டாம் அடுக்கும் கல்லூரி இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டது. முதலடுக்கு முதுகலை மற்றும் ஆய்வியல் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஓர் அடுக்கில் முறையே பத்து அறைகள் இருக்கும். ஓர் அறைக்கு முப்பது மாணவிகள் வீதம் இருந்தோம். உணவிற்கு, உறக்கத்திற்கு‌,  நீருக்கு என்று நாங்கள் பட்ட பாடு இன்னும் கண்களில் மறையவில்லை. 

விடுதியைப் பார்த்த முதல் நாளே 'படிப்பே வேண்டாம் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க' என்று அழ ஆரம்பித்துவிட்டேன். எல்லாமும் புதிது எனக்கு. அந்தக் கூட்டம் உட்பட. உறக்கத்தில் கையை நீட்டக் கூட உரிமை இருக்காது. உணவுக்கான வரிசையில் பத்து பதினைந்து பேரை தாண்டினால் சாப்பாட்டிற்குக் குழம்பு கிடைக்காது. காலை ஆறுமணிக்கு மேலானால் குளியல் அறை கிடைக்காது. காய்ந்த துணிமணிகளை எடுக்க தாமதமானால் நல்ல சுடிதாரோ மிடியோ திரும்ப கிடைக்காது. இப்படி ஒருமுறை என் கைபேசி தொலைந்தது. பிறகொருமுறை என் கடைசி இருநூறு ரூபாய். எதுவுமே போதாத ஒரு வாழ்க்கை அது. ஆனாலும் சில ஆறுதல்கள் இருக்கத்தான் செய்தன. என் தோழிகள்! இப்படியான அந்தச் சின்ன வலி பொதிந்த வாழ்க்கையை மீண்டும் நினைவுறுத்திப் படரவிட்டது நேற்று பார்த்த இத்திரைப்படம். 

நான்கு பெண்கள். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி. ஒருவர் வெளிநாட்டுப் பெண். இளம் பெண் ஒருத்தி. ஒரு கன்னியாஸ்திரி. 

வெளியே இனக்கலவரம் நடக்கிறது. இரண்டு இனங்கள் ஒன்றையொன்று தாக்கிக்கொள்கின்றன. கண்ணில் படும் மனிதர்கள் எதிராளியாக இருக்கும்பட்சம் துப்பாக்கியால் சுடப்பட்டோ கத்தியால் தலை துண்டிக்கப்பட்டோ வீழ்த்தப்படுகின்றனர். 
பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். 

தன்னால் முடிந்த வரை முடிந்த நபர்களையாவது காப்பாற்ற எண்ணி தன் கர்ப்பிணி மனைவியோடு இன்னும் மூன்று பெண்களை காப்பாற்றித் தன் வீட்டின் உணவுப்பொருட்கள் சேமிக்கும் சிறுபெட்டி போன்ற பாதாள அறையில் ஒளித்துவைக்கிறார் நாயகர். 

யார் இவர்கள் தெரியாது. எத்தனை நாள் இந்த உள்ளிருப்பு தெரியாது. இதன் முடிவு தான் என்ன தெரியாது. ஆனால் இருக்கும் சூழலுக்கு இந்த நாளை இப்படித்தான் கழித்தாக வேண்டும். ஒன்று இரண்டல்ல எண்பத்தோரு நாட்கள் அந்தப் பெட்டிக்குள் வாழ்ந்த நான்கு பெண்களின் நிலையை தத்ரூபமாகக் காட்டி ததும்ப வைக்கின்றன காட்சிகள். 

இது நாம் வாழும் இந்த மண்ணில் எங்கோ ஒரு மூலையில் நடந்தேறிய  உண்மைச் சம்பவம் என்று திரையில் காட்டப்படும் போது உள் உடைந்து அழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை. இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்திலும் மனதில் வலி நிறைந்த பதட்டத்தை உணர்கிறேன். ஒரே ஒரு கேள்வி வந்து உள்ளத்தைக் குடைந்தவாறே இருக்கிறது, 

"மனிதர்களுக்கு என்ன தான் வேண்டும்?"

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: