Liar's Dice (Geetu Mohandas)

வெளி மாநில பணியாளர்களின் நிலையை அழுத்தமாக பேசியிருக்கும் திரைப்படம். 

வெளியூர் வேலைக்குச் சென்ற கணவன் குறித்த எந்த தகவலும் சில மாதங்களாகவே இல்லாமல் போகிறது. கணவனைத் தேடி அவன் தந்துசென்ற முகவரிக்குச் செல்ல முடிவெடுத்து, தன் மூன்று வயது மகள் மற்றும் மகள் வளர்க்கும் ஆட்டுக்குட்டியோடு கிராமத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக நடக்கத்தொடங்குகிறாள் மலைவாழ் பெண். தன் கிராமத்தைத் தவிர்த்து வெளியுலகை அறிந்திராத பெண்ணுக்கு  வழிப்போக்கனாக வரும் ஒரு மனிதன் உதவுகிறான். முகவரி கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணின் கணவன் அங்கில்லை. டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது. டெல்லி சென்று தேடிப்பார்க்க எண்ணுகிறாள் அந்தப் பெண். அதே மனிதன் மீண்டும் உதவுகிறான். டெல்லி செல்லும் அவர்கள் அந்தப் பெண்ணின் கணவனைக் கண்டுபிடித்தார்களா என்பது படத்தின் இறுதிக்கட்டமாகிறது. 

தன் உழைப்பு, தன் வீடு, மகள், தனது கிராமம் தவிர்த்து வேறெதையும் அறிந்திருக்காத ஒரு பெண் திடுமென தன் பயணத்தில் குறுக்கிடும் மனிதனை எப்படி நம்புவாள்?
நீ யாரென்று எனக்குத் தெரியாது. நீ நல்லவனாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். உன் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனாலும் இப்போது எனக்கு உன்னைவிட்டால் வேறு வழி இல்லை என்ற மனநிலையில் வெறுத்துக்கொண்டே அம்மனிதனின் பின் நடக்கும், அந்தப் பெண் கதாபாத்திரத்தில் வரும் நாயகி முகம் இந்தக் கதைக்கு அத்தனை பொருத்தம்.

உனக்கு ஏன் நான் உதவ வேண்டும்? எனக்கென்ன கிடைக்கும் அதனால்? நான் கேட்கும் பணத்தை எடுத்து வை. அல்லது உன் நகையைக் கொடு. நீ கேட்கும் உதவியைச் செய்கிறேன் என்று கறாராக இருக்கும்போதும், அந்தப்பெண்ணின் கணவனைத்தேடி தெருவில் அலையும் போதும், அறைக்கான பணமில்லாததால் ஆட்டுக்குட்டியை ஓட்டிச் சென்ற விடுதி காப்பாளனைத் தாக்கும்போதும் நவாசுதின் கலைஞன் மட்டுமல்ல அதை தாண்டிய ஒருவர் என்றே தோன்றியது. 

இச்சமுதாயத்தின் பெரும்பாலான மக்களின் சாயல் இந்த இருவரும். 

மக்கள்தொகை அடர்த்தி, நவீனமயமாக்கல், புதிய புதிய கண்டுபிடிப்புகள் என்று நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டுக்கொண்டிருக்கும் ஜனநாயக நாட்டில் சாமானியனின் வாழ்வாதாரம் மட்டும் நாளுக்கு நாள் பின்தங்கிக்கொண்டே செல்வது உச்சப்பட்ச முரண். 

இறக்கும் வரை வாழ்ந்தாக வேண்டும் என்பது நிதர்சனம். ஒரு சாமானியன் வாழ என்ன செய்வது உழைப்பன்றி. அவனிடம் இருக்கும் ஒரே மூலதனம் அவனது கை கால்களும் உடலும் தான் அதனால் உழைக்கிறான். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையென்றால் பரவாயில்லை உழைக்கவே வேலை இல்லையெனில் என்ன செய்வான். இடம்பெயர்வது தான் வழி. ஆனால் அப்படி இடம்பெயரும் மனிதர்களின் பாதுகாப்பினை யார் பார்ப்பது. சமுதாயத்தின் பதிலற்ற பல  கேள்விகளில் இதுவும் ஒன்று. 

மனிதனுக்கு மனிதன் அன்பு பாராட்டி ஒத்துழைத்து கூடி வாழும் முறை இன்றும் கிராமப்புறங்களில் இருக்கவே செய்கிறது. நகரத்தை நோக்கி நகர நகர மனிதனின் சுயநலப் போக்கு வெளிவர தொடங்கிவிடுகிறது. இந்த அமைப்பு அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் படத்தில். 

ஒரு திரைப்படத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்ற உணர்வின்றி அமர்த்திய படம்.   

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: