MEMOIRS OF GEISHA

Memoirs of Geisha

தெளிந்த நீரோடையாக, நிசப்தமான நிலைக்கண்ணாடியாக காட்சியளிக்கும் காலம் தன்னகத்தே எண்ணற்ற இரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. நிகழ்ந்தவற்றின் மீதோ நிகழ்பவற்றின் மீதோ காலத்திற்கு எந்தப் பற்றும் பரிவும் இல்லை. கடந்து போய்க்கொண்டே இருப்பது காலம். 

வரலாற்றின் பின்னணியில் எந்த ஒன்றையும் அறிய குறிப்பாய்ப் பெண்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ள நூல்களே சிறந்த ஆவணமாக இருந்துள்ளது. இப்போது திரைப்படங்களும் அதில் இணைந்திருக்கின்றன. அந்த வகையில் 1997 ல் வெளியாகியுள்ள Arthur Golden எழுதிய 'memoirs of Geisha' என்னும் நூல் அதே பெயரில் Rob Marshal என்பவரால் 2005 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1929 ல் நடைபெறுவதாகக் கூறப்படும் இக்கதை நிகழும் காலகட்டத்தின் முன்பிருந்தே இப்படியான Geisha முறைகள் கீழை நாடுகள் பலவற்றில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.


பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பழக்கத்திலிருந்த இம்முறையில்
கெய்ஷா என்பவர் ஆடல் பாடல் இசை மருத்துவம் போன்றவற்றை முறையாக கற்றறிந்து தேர்ந்திருப்பவர். சமூகத்தில் முக்கியமான செல்வந்தர்களையும் அரசாங்க பிரமுகர்களையும்‌ தன் ஆடல் திறமையினாலும் இசையாலும் மற்றும் தனது உரையாடலினாலும் மகிழ்விப்பவர். இதற்காக அச்செல்வந்தர்களால் நன்கொடை வழங்கப்படும். மற்றும் சமூகத்தில் செல்வாக்கும் புகழும் கிடைக்கப்பெறும். 

சீனா, ஜப்பான், கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்ட இம்முறை இந்தியாவில் தேவதாசி முறையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அடிமைக்குடும்பங்களின் பெண்களை விலைக்கு வாங்கி அவர்களில் திறமையானவர்களைக் கெய்ஷாவாகவும் மற்றவர்களை அவர்களுக்குப் பணிவிடை செய்பவர்களாகவும் தயார்படுத்தியுள்ளனர் என்ற வரலாறையும் இந்த திரைப்படம் பதிவு செய்கிறது.

இந்தியாவில் தாங்களாகவே விரும்பி கோயிலுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பெற்றோரால் கோயிலுக்குக் கொடையளிக்கப்பட்டவர்கள், தீட்சைப் பெற்றவர்கள், கோயிலில் நடனம் ஆடும் அலங்காரதாசிகள் என நான்கு வகையாக இம்முறை செயல்பாட்டில் இருந்துள்ளது. ஆடல் பாடலில் நாட்டமுள்ள பெண்கள் அவற்றை கற்றுத் தேர்ந்தனர். பிற பெண்கள் கோயில் தூய்மைப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இப்படியாக ‌இந்தியப் பெண்கள் முதலில் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து கடவுளின் துதிபாடும் கலைகளை பரப்பியிருப்பதாக இந்திய வரலாறு கூறுகிறது. 

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது கோயிலுக்கு 400 தாசிகளை நியமித்து அவர்களுக்குக் குடியிருப்புகளை இராஜராஜ சோழன் வழங்கினான் என்றும் சோழர் காலத்தில் தாசிகள் சமூக மதிப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று வரலாற்றில் குறிப்புகள் உண்டு. 

ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் புழக்கத்திலிருந்த கெய்ஷா முறை இரண்டாம் உலகப்போருக்குப் பின் சொல்லி வைத்தாற்போல் அத்தனை நாடுகளிலும் தனக்கான வீரியத்தை இழந்துள்ளது. இந்தியா உட்பட.

இத்திரைப்படம் இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய மற்றும் போருக்குப் பின்னான காலகட்டத்தில் ஒரு கெய்ஷா தன்னைக் குறித்து பார்வையாளர்களுக்கு கூறுவதாக விரிகிறது. 

வாழ்க்கை எல்லா உயிர்க்கும் பொதுவானது. கெய்ஷாவாக இருந்தாலும் புலன் உணர்வுகள் இருக்கும் அல்லவா. கெய்ஷா என்பதால் உணர்வுக்கும் அரிதாரம் பூச வேண்டுமா என்ன? இந்த படத்தில் ஒரு மெல்லிய காதலுண்டு. என்னைக் கவர்ந்தது அது தான்.

தன் கையறு நிலையைக் கடக்கவோ அங்கேயே நிற்கவோ அறியாத சிறுமி அந்த ஊரின் ஒரு முக்கிய பிரமுகரான சேர்மேனை சந்திக்கிறாள். அனிச்சையான இந்த சந்திப்பு அவளுக்குள் ஒரு மாற்றத்தை‌ நிகழ்த்துகிறது. ஒரு பனிகூழும் உடன் தன் கைகுட்டையையும் தந்து சென்ற சேர்மேனின் நினைவுகளில் கைக்குட்டையின் துணையோடு வாழத் தொடங்குகிறாள். துயரம் என்னவெனில் புகழ்பெற்ற கெய்ஷாவாக மாறிய பிறகும் தன் மனதின் எண்ணங்களையும் அன்பையும் அவரிடம் தெரிவிக்க முடியாமல் அவள் தவிப்பது தான். 

ஒரு செல்வந்தரின் அழைப்பை ஏற்று விருந்துக்கு செல்லும் கெய்சாவின் மேலாடையை வலுக்கட்டாயமாக நீக்கி மார்பகங்களை மட்டும் பார்த்துவிடும் வெறியில் அவளது அழுகையையும் மன்றாடல்களையும் மீறி அவள் ஆடைகளை கலைத்துவிட்டுச் செல்வார் அந்த செல்வந்தர். இது தான் கெய்ஷாக்களின் நிதர்சனமான நிலை என்பதை கூற வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் இதுவும் ஒன்று. 

அழகு, புகழ், நன்கொடை, செல்வம் போன்றவற்றால் ஒரு கெய்ஷா அனுபவிக்கும் இன்பங்களைக் காட்டிலும் துரோகங்களும் அதன் விளைவுகளால் ஏற்படும் துன்பங்களும் அதிகம் என்பதற்கான காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.

இந்தப் படத்தின் காட்சிச் சட்டகங்களும் கண்ணையும் மனதையும் ஒருசேர கவரும் வண்ணங்களும் எப்போது நினைத்தாலும் அப்படியே மனதில் வந்து படர்ந்துகொள்கிறது.

- கீதா கார்த்திக் நேத்தா.

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: