ABBAS KIAROSTAMI

#AbbasKiarostami
(Iranian film director)

அப்பாஸ் அவர்களின் திரைப்படங்கள் கொந்தளிப்புகளின் முடிவில் தியான விழிப்பைத் தர வல்லவை. அல்லது  மயக்கத்தை அமைதியென்று நம்பும் புலன்களின் மேல் பெருங்கல்லை எறிய விழைவது. எளியவர்களின்  வாழ்க்கையை கண்ணெதிரில் காண்பதுபோன்ற தோற்றத்தைத் தனது கதைசொல்லல் வழியே காட்டுவதாலேயே அப்பாஸ் சினிமா விரும்பிகளால் பெரிதும் கொண்டாடப்பட்டவர். இன்றும் கொண்டாடப்படுபவர். 


இவரது அனைத்துப் படங்களிலும் பயணமும் பயணத்தில் தன்னைத்தானே அவிழ்த்துக்கொள்ளும் வாழ்க்கையின் விரல்களாக உரையாடல்களும்  இருக்கும். திடீரென்று தோன்றி மிக உயரிய கருத்துக்களைச் சாதாரணமாகச் சொல்லிச் செல்லும் கதாபாத்திரங்கள் இவருடையவை.


'டென்' படத்தில் ஒரு சிறுவனுக்கும் தாய்க்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் சமூகத்தில் பெண் நிலையையும் பெரியவர்கள் குறித்த  சிறுவனின் பார்வையும் வெடிப்புறக் கிளம்பும். 


'Like someone in love'  திரைப்படத்தில் வீட்டிற்கும் தன் காதலனுக்கும் தெரியாமல் பாலியல் தொழிலில் ஈடுபடும் இளம்பெண் ஒருத்தி, ஓர் இரவு வயது முதிர்ந்த பேராசிரியர் ஒருவரோடு தங்க நேர்கிறது. அடுத்த நாள் காலை தேர்விற்கு அவரோடே செல்லும் அப்பெண்ணைக் கல்லூரியில் கண்டு  பின்தொடர்கிறான் காதலன். மேலும் தன் காதலியோடு வந்திருக்கும் வயது முதிர்ந்த பேராசிரியரைக் கண்டதும் அவர் தன் காதலியின் உறவினர் என்று கருதிக்கொள்கிறான்.  


தன் ஆத்மார்த்தமான காதலுக்குச் சொந்தமான பெண்ணைக் குறித்து எதுவுமே தெரியாத ஒரு காதலன், துணை ஏதுமற்ற நிலையில் தன்னோடு இரவு தங்க வந்திருக்கும் பெண்ணின் நிலையறிந்து அவளை முடியும்வரை பாதுகாக்க எண்ணும் முதியவர், பிடிக்கவில்லை என்றாலும் தன்னால் வெளியேற முடியாத ஒரு நிலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் அந்த பெண். படம் முழுதுமே ஒருவிதப் பதற்றத்தோடே கடந்தேன். மனம் இந்த மூவரில் யாருக்குமே ஒருவித பாதகமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே இருந்தது. அப்பாஸ் படங்களிலேயே இது சற்று மாற்றம்.

மனிதனைப் பொருத்தமட்டில் அவனது ஒவ்வொரு எண்ணத்திற்கும் செயலுக்கும் எதாவது ஒரு காரணம் இருக்கும். அதைச் சொல்லாமல் சொல்லிச் செல்லும் கூறல் முறை பெரும்பாலும் இவருடையது.  


'Taste of Cherry' படம் வழியாகவே அப்பாஸ் எனக்கு அறிமுகமானார்.  அதன்பிறகு இரண்டாண்டுகள் கழித்தே "Where Is the Friend's House?" படம் பார்க்க வாய்த்தது. யாரிந்த மனிதர் என்ற தேடலோடு அவரின் மற்ற படங்களையும் தேடிப் பார்க்கத் தொடங்கினேன். மனிதர்களுக்குப் பின்னால் தான் எத்தனை எத்தனை கதைகள்! எத்தனை எத்தனை பார்வைகள்! 
வாழ்க்கை அலுக்காமல் எழுதிச்செல்லும் கதைகளாகக் காலகாலமாக மனிதன் இருக்கிறான்!


'Through the Olive Trees' (1994) திரைப்படத்தில் ஒரு மெல்லிய காதல் சொல்லப்பட்டிருக்கும். டெக்ரான் நிலநடுக்கத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் இறுதிக்காட்சிகளின் முடிவை அழகிய இசையோடு முடித்திருப்பார். தனது எல்லாப் படைப்புகளின் இறுதிகட்டங்களுக்கும் இசையால் காற்புள்ளி வைத்து விலகிக்கொள்பவர் அப்பாஸ்.  


இவரது படைப்புகளின் உச்சம் 'Shirin' (2008). திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும். காமெராவோ பார்வையாளர்களான பெண்களின் முகங்களையும் அவற்றின் மெய்ப்பாடுகளையும்  காட்சிப்படுத்தியவாறு இருக்கும். ஒவ்வொரு வசனமும் அம்முகங்களில் உணர்வுகளாகப் பிரதிபலிக்கும். இப்படியான ஒரு கதைசொல்லலை அதுவரை நான் பார்த்தது இல்லை. 


தனது ஒவ்வொரு படைப்பிலும் மேலும் மேலும் பிரமிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார் அப்பாஸ். 

- கீதா கார்த்திக் நேத்தா

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: