சில நேரங்களில் சில மனிதர்கள்
விடுதி அறையில் என்னோடு இருந்த தோழி ஒருத்தி ஜானு. அதிகம் பேசியதில்லை. எப்போதாவது பார்த்தால் சிரிப்பாள். பதிலுக்கு நானும் சிரிப்பேன். ஜானுவைக் குறித்துக் கூறவேண்டும் என்றால் அறையில் இருந்த இரண்டு ஒல்லியான பெண்களில் அவளும் ஒருத்தி. இன்னொருத்தி நான். கருமை கரந்த வெளிர் நிறம் அவள். உடலைக் காட்டிலும் ஒல்லியான முகம். சிறிய கண்கள். மிகச் சாதுவான பூனை ஒன்றின் தோற்றம் அவளுடையது. தேர்ந்தெடுத்த ஒரு சிலரோடு மட்டும் பழகும் ஜானு அதிகம் பேசாத பெண். எப்போதேனும் எதாவது கேட்டால் கேட்பவருக்குப் பதிலுரைப்பாள் அவ்வளவே. அறையில் அவளது நடவடிக்கைகளை வைத்து அவள் வகுப்பில் நன்றாகப் படிக்கும் பெண் என்று நாங்களாகவே யூகித்து வைத்திருந்தோம். ஒருநாள் இரவு உணவு வேளையில் ஜானு என்னருகில் வந்து அமர்ந்தாள். புதிதாக இருந்தது. அதுவரை அவள் அப்படி என்னோடோ வேறு யாருடனோ அமர்ந்ததில்லை என்றாலும் எதையோ பேச எத்தனிப்பதாக எனக்குத் தோன்றியது. அருகில் அமர்ந்தவள் தொடர்ந்தாள். கீதா. ம்ம். “ஒன்னு கேட்பேன். தப்பா எடுத்துப்பியானு தெரியல.” அவள் குரலில் ஒரு தயக்கம் தெரிந்தது. கேளு. பரவால. “இல்ல.. வந்து..” தயக்கத்தோடு இழுத்தாள். ...