சில நேரங்களில் சில மனிதர்கள்:
கதைகள் கேட்பதில் எப்போதும் அலாதி இன்பம் எனக்கு. கை நிரம்ப குவிந்திருக்கும் மிட்டாய்களைப் போல் கதைகள் எப்போதும் மனதிற்கு நிறைவான தித்திப்பை அளிப்பவை.
சிறு வயதில் ஒரு நாள் இரவு பிள்ளைகள் அனைவரும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தோம். இப்போதும் நினைவிருக்கிறது தெரு விளக்குகளின் மணம் கமழும் நாட்கள் அவை.. மல்லிகா சித்தி என் பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தாள். தோழி ஒருத்தி ஓடி வந்து சித்தி கதைக்கூறுகிறாள் என்று எங்களுக்கு கூற அனைவரும் சித்தியின் அருகில் ஓடிச் சென்று அமர்ந்தோம்.
நாங்கள் வந்ததையோ அமர்ந்ததையோ பொருட்படுத்தாத சித்தி பாட்டியுடனான உரையாடலை நிறுத்தாமல் தொடர்ந்திருந்தாள். "இப்பல்லாம் ஒரே வெக்கையா இருக்குது அத்தை. அதான் கதவை திறந்து வச்சிப் படுத்துக்குறேன். அப்போ கூட தூக்கம் வரல.
கதவெல்லாம் அப்படி தெறந்து வச்சிட்டு தூங்காத புள்ள.. திருடன் கிருடன் வந்துட போறான். என்றாள் பாட்டி அவள் பங்குக்கு.
ஆமா.. திருடன் வரானாம் திருடன். என்ன இருக்குது திருட அங்க.. சல்லி பைசா கூட வெக்காம மொத்தத்தையும் குடிச்சிபுட்டு போய் சேந்துட்டான் மனுசன். என்னமோ எம்பொழப்ப்பு இப்படி போவுது.. சரி இத கேளு. நேத்து ராத்திரி நடுசாமம் இருக்கும். "வெளக்கெதுக்கு எண்ணெய்க்கு கேடானு அதவேற அமைச்சுப்புட்டேன் அன்னேரத்துக்கு. துளியூண்டு தூக்கம் அப்பதான் எட்டிப் பாத்துச்சி.. அதுக்குள்ள ஏதோ சத்தம் வர வந்த தூக்கமும் ஓடியே போய்டுச்சி..
அப்படி என்ன சத்தம் அது.. என்றாள் பாட்டி.
குடுகுடுப்பை காரன் சத்தம் தான் என்றாள்.
சுற்றி அமர்ந்திருந்த எங்களின் காதுகளையும் மூளைகளையும் கூற்மையாக்கிக் கொண்டோம். எங்களின் பார்வை சித்தியின் வரண்டுப்போன உதடுகளையே நோக்கியிருந்தன.
பேசியபடியே இருந்த சித்தியை செத்த நிறுத்துடி.. என்ற பாட்டி.. "ஏண்டி கொமரிங்களா அந்தாட்ட போயி வெளாடுவிங்களா! இங்க ஒக்காந்து என்னத்த டி கேக்குறிங்க. ஓடுங்கடி அந்தாட்ட" என்று எங்களை விரட்டினாள்.
எங்களுக்கு இத்தான் வெளாட்டு. நீ சொல்லு சித்தி என்றேன். அவ்ளோ கஷ்டமா இருக்குனா நீ எழுந்து போ.. நாங்க கேட்டுக்குறோம்.. என்றாள் என் அருகில் அமர்ந்திருந்த வாய்த்துடுக்குத் தோழி.
குடுகுடுப்பைக்காரன் என்றால் அது நிச்சயம் பேய் கதையாகத்தான் இருக்கும். என்றாள் ஒரு தோழி.
"ஆமாமா, குடுகுடப்பைக்காரங்க அவங்க கூட எப்போமே பேய்ங்கள கூட்டிக்கிட்டே திரிவாங்களாம் போன லீவுக்கு நான் ஊருக்கு போனேன்ல அங்க இருந்த மாரி அக்கா சொல்லுச்சி.." என்றாள் வாய் துடுக்குத் தோழி.
"கொஞ்சம் கொஞ்சமா சத்தம் பக்கத்துல வந்துச்சி. அவன் என்னப் பண்ணப் போறானு நான் அப்படியே உக்காந்துருந்தேன்.' தூக்கம் வேற வரலையே என்ன செய்வேன்." சித்தியின் முகப்பாவனையை கூர்ந்து கவனித்த நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளை பிடித்துக் கொண்டு இன்னும் நெருங்கி அமர்ந்தோம்.
சித்தி தொடர்ந்தாள். சரி கொஞ்சம் வெத்தலை போடுவோம்னு பக்கத்துல கெடந்த பைய எடுத்து வெத்தலை பாக்க தேடிபுடிச்சி வாயில போட்டேன். பக்கத்துல வந்த குடுகுடுப்பக்காரன் எதுக்க இருந்த இந்த சந்துக்குள்ள வந்தான்.
கதையை நிறுத்தியவள்
கொஞ்சம் வெத்தலை தா.. என்று பாட்டியிடம் கேட்டாள். ஒரு பாக்கினை எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டு வெற்றிலையையும் ஒரு பாக்கினையும் சித்தியிடம் நீட்டினாள் பாட்டி.. உடன் சுண்ணாம்பு டப்பாவையும் சேர்த்து.
என் காதருகே வந்த தோழி "இங்க வந்து என்ன பண்ணிருப்பான் அந்த குடுகுடுப்பைக் காரன்" என்றாள்.
சித்தியை கண்காட்டி "சித்தியே சொல்லும் கொஞ்ச நேரம் பொறு" என்றேன்.
பாட்டியிடம் வாங்கிய பாக்கினை வாய்க்குள் வைத்து ஊரலிட்டுக்கொண்டு "அவன் இந்த தெருக்குள்ள எவ்வளவு தூரம் வந்துருப்பானு தெரியல.. கொஞ்சம் நேரத்துல அவன் குடுகுடுப்பை சத்தம் நின்னுப்போச்சு" என்றாள் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிய சித்தி.
சுவாரஸ்யம் ஒன்றும் இல்லாமல் கதை நகர நானும் என் தோழிமார்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
சித்தி வெற்றிலையை மடித்து வாய்க்குள் திணித்துக்கொண்டாள்.
"கொஞ்சம் நேரத்துல தெருக்குள்ள இருந்து திடுதிப்புனு ரோட்டுக்கே வந்தான் அந்தாளு.. இவன் எதுக்கு ஓடியாரானு பாத்தா.. கூடவே ஏய் ஓடு டி... ஏய் பின்னாடி வராத.. பிசாசே.. கட்டேரினு சொல்லிகிட்டே ஓட்டமும் நடையுமா வந்தான். வழக்கமா இவனுங்க இப்படி தான பேசுவானுங்க. இது ஒன்னும் புதுசில்லல. அதனால நானும் பெருசா எடுத்துக்கல.உத்துப்பாத்தப்போ தான் தெரிஞ்சது அவன் பின்னாடி கருப்பா யாரோ நிக்கிற மாதிரி ஒரு உருவம் நின்னுச்சி. எனக்கு அப்படியே தூக்கிவாரி போட்டுச்சி." என்றாள் சித்தி.
இதை கேட்டுக்கொண்டிருந்த நாங்கள் எங்களது வாய்களை அனிச்சையாக பொத்திக்கொண்டோம். என்னது உருவமா...? என்றால் என் தோழி.. இன்னும் இருக்கமாக என் கைகளைப்பற்றினாள் இன்னொரு தோழி.
"அந்த உருவத்துக்கிட்டதான் அவன் பேசிகிட்டே வந்துருக்கான் போல. நடுரோட்டுக்கு வந்தவன் பின்னாடியே அந்த உருவமும் வந்து நின்னது. அவன் ஏதோ கையை மடக்கி தலைல வச்சி என்னமோ உளறுனான். என் வாயில ஊறின வெத்தலை எச்சில துப்பக்கூட பயமா இருந்துச்சினா பாத்துக்க." சித்தி சில நொடிகள் பேசுவதை நிறுத்தினாள்.
பொறுமை இழந்து "அப்புறம் என்னாச்சு சித்தி" என்றேன்.
கொஞ்சம் நேரம் பாத்தேன். அப்படியே மனுசன் மாதிரி தான் இருந்தது அந்த உருவம். பாக்க பாக்க பயம் அதிகமாச்சி. வேறென்ன பண்ண முடியும் கண்ண மூடி தெரிஞ்ச சாமியெல்லாம் கும்பிட்டேன்.
அப்புறம் பேய் போயிடுச்சா? என்றாள் வாய்துடுக்குத் தோழி.
சாமிய வேண்டிக்கிட்டே மொல்லமா கண்ணத் தொறந்தேன் பாரு. இப்ப அந்த உருவம்.. என்று இழுத்து நிறுத்தினாள் சித்தி.
அந்த உருவம்..? கேள்வி பாவனையில் நாங்களும் ஒருமித்த குரலில் கூறினோம்.
இன்னும் பெருசாயி என் பக்கத்துல நிக்கிது.
"அய்யயோ.. என்ன இது? அப்புறம் என்னாச்சு என்றாள்" இன்னொரு தோழி.
"என்ன பண்ணுச்சு வந்து. என்றேன்.
அழுது தொழுது நிற்கும் பக்தர்களை கண்டும் காணாமலும் நிற்கும் கடவுள் சிலையைப்போல நமட்டு சிரிப்போடு எங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் பாட்டி.
"கண்ணெல்லாம் தண்ணியா ஊத்துது. கையை கூப்பிகிட்டே அந்த உருவத்தைப் பாத்தேன். அப்போ தான் கவனிச்சேன் அந்த உருவத்துக்கு வாலு வேற இருந்துச்சி" என்றவளின் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.
"கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு" என்றாள் சித்தி.
"முகமெல்லாம் வியர்த்து கொட்டுது. நான் பையன கூப்புடுறேன். கொரலே வரல. அப்புறம் எங்க அவனுக்கு கேக்கும். நான் என்ன பண்ணுவேன். அந்த கருமாரி தான் துணைனு மனசுக்குள்ளையே வேண்டிக்கிட்டேன்."
என் தோழி ஒருத்தி தான் அணிந்திருந்த பாவாடையில் தன் முகத்தை மூடியபடி அந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தாள். பயந்த முகத்தோடு நாங்கள் அமர்ந்திருந்தோம்.
பேயாவது பிசாசாவது. போடி அந்தாட்ட. இந்த பொடுசுங்கள வேற வச்சிகிட்டு பேசுறா.. என்றாள் பாட்டி. வெற்றிலை எச்சிலை துப்பிக்கொண்டே அட போங்கடிதான் நீங்களும்.. என்று எங்களையும் கடிந்துக் கொண்டாள்.
ஏய் நீ சும்மா இரு.. சித்தி நீ சொல்லு அப்புறம் என்னாச்சு என்றோம். ஒருமித்த குரலில்..
"அது சரி. நல்லாருக்கு டி. ஏய் மாதம்மா மவளே ராத்திரிக்கி நீ பயந்து கத்துறது என் வூட்டுக்கு கேக்குமுடி.. அந்நேரம் உன் ஆயாவ வாயில ரெண்டு அடிப் போட சொல்றேன் இரு" என்றாள் பாட்டி. பாட்டியின் வார்த்தைகளை பொருட்படுத்தும் எண்ணம் எங்கள் யாருக்குமே இருக்கவில்லை. நாங்கள் சித்தியின் கதையில் மூழ்கியிருந்தோம்.
சித்தி தொடர்ந்தாள். கருமாரி மட்டுமா நேரமாவ நேரமாவ தெரிஞ்ச அத்தனை தெய்வத்தையும் கூப்பிட்டேன் பாரு.. அவுத்துக்குள்ள என்னன்னா அந்த குடுகுடுப்பக்காரன் வேற ஓடுறியா இல்லையா?னு கத்துறான்.
அப்புறம்.. என்றேன்.
"போகமாட்டேன் போ டா.. னு ஒரு சத்தம் கேட்டுச்சு. யாரோ பொம்பள குரலு அது. அந்த குரல எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதுனு இன்னும் கொஞ்சம் உத்துப் பார்த்தேன்.. போகமாட்டேன் போ டானு திரும்பவும் சொல்லிட்டு ஏதோ மலை மேல இருந்து குதிக்கிற மாதிரி குதிச்சது பாரு அந்த உருவம் எனக்கு உசுறே போய்டுச்சி. "
நாங்கள் வழக்கத்தைப்போல் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக்கூட மறந்துப்போனோம். எங்களின் எல்லோரது கவனமும் சித்தியை நோக்கியே இருந்தது.
"குடுகுடுப்பை காரன் அதை அடிக்க கையோங்கினான். ஒடனே அந்த உருவம் அவன அடிக்க அதோட வாலை பிச்சி கையில எடுத்துடுச்சி. எனக்கு அப்படியே தலையே சுத்துது. முருகா முருகா னு அப்படியே தரையில விழுந்துட்டேன்."
அச்சச்சோ. நான் ஊட்டுக்கு போறேன் எனக்கு பயமா இருக்கு என்று அழத்தொடங்கி விட்டாள் என் தோழி ஒருத்தி. எனக்கும் பயமா தான் இருக்கு ஆனா முழுசா கேட்டுட்டு போலாம் இரேன் என்றேன். என் கோரிக்கையை ஏற்றவளாக என் கைகளை இறுக்கமாக பற்றியபடி என்னோடு அமர்ந்தாள் தோழி.
அந்த பயத்துலையும் அப்புறம் தான் கவனிச்சேன். அங்க நிக்கிற உருவம் நம்ம ஆவாரம் பூ மாதிரி இருக்கேன்னு தோணுச்சு. அந்த குரலும் அவ குரல் மாதிரி தான் இருக்குது. அப்புறம் தான் நல்லா பாக்குறேன் அது ஆவாரம் பூவே தான்.
பாவி.. நீ யா டி.. இதெல்லாம் பண்ண. உசுரு போயி உசுரு வந்துருச்சு.. வந்த ஆத்தரத்துக்கு அவள நாலு கேள்வி நருக்குனு கேக்கலாம்னு இருந்தேன்.
வெடித்து சிரிக்க ஆரம்பித்தோம் நானும் என் மற்ற தோழிகளும். சித்தியை பார்க்க பார்க்க இன்னும் சிரிப்பு பொங்கியது.
அவங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணாங்க என்றேன் சிரித்துக்கொண்டே.
"அந்த வெளக்கு ராசாக்கு தான் வெளிச்சம்" என்றாள் சித்தி.
"அவங்களுக்கு பேய் பிடிச்சிருச்சா"
அது என்ன கதையோ போ.. ராத்திரி இந்த கொடுமை ஆயிபோச்சி.. என்று பெருமூச்சொன்றை இழுத்து விட்டாள்.
அப்புறம் எப்படி அவங்க பெருசானாங்கலாம் என்றாள் இன்னொரு தோழி
போங்கடி பொழப்பத்தவளுங்கள.. அவ கெடக்குறா செவனேனு.. அவளைபோயி பேயி சாமின்னுகிட்டு என்றாள் பாட்டி.
"நான் சொல்றேன் நீ நம்ப மாட்ற பாரு" என்று பொய்க்கோவம் கொண்டாள் பாட்டியிடம்..
"அவ ஏறி நின்னது முருகாயி வீட்டு வாசல்ல இருந்த முருங்கை மரத்தோட அடிமரத்துல. அந்த மரத்துல இருந்த ஒரு சின்ன தளிர பிச்சி எடுத்து முதுகுக்கு பின்னாடி சொருகி வச்சிருக்கா.. அது தான் எங்கண்ணுக்கு வாலா தெரிஞ்சிருக்கு."
கதை புரிந்த மாத்திரத்தில் நாங்கள் இன்னும் கூடுதலாக விழுந்து புரண்டு சிரிக்கத்தொடங்கிவிட்டோம்.
ஏன்டி.. என்னத்த டி பொழைக்கிற நீ.. ஏன் டி மனுசன பாத்தா டி இத்தனை பயம் பயந்துருக்குற. அதுவும் அந்த பாவபட்ட பொம்பளையை பாத்து.. என்று பாட்டியும் சிரிக்க ஆரம்பித்தாள்..
எம்பொழப்ப்பு உனக்கு சிரிப்பா இருக்குது.. ராத்திரி நான் பட்ட பாடு என்னன்னு எனக்குள்ள தெரியும்.. என்று புலம்பினாள் சித்தி.
ஆனாலும் ரொம்ப மோசம் தான் சித்தி.. நீங்க அந்தம்மாவ போய் பேயினு .. வந்த சிரிப்பில் என்னால் அடுத்து பேச முடியாமல் போனது..
ஆவாரம் பூ எங்கள் ஊரின் அழைக்கப்படாத விருந்தாளி. திடுமென எங்கையாவது இருந்து வருவாள். ஒவ்வொரு வீட்டின் வாசலையும் கூட்டிப்பெருக்கி நீரூற்றி கழுவி தூய்மை செய்வாள். யாராவது குடுக்கும் உணவை வாங்கி உண்டுவிட்டு மீத உணவை பத்திரப்படுத்திக் கொள்வாள். அதிகப்படியாக இரண்டொரு மாதங்கள் இருப்பாள். பிறகு இந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு செல்வாள் என்பது எங்களின் அனுமானம். ஐந்தாறு மாதங்கள் கழித்து மீண்டும் ஊரடைவாள். ஐம்பதைக் கடந்த பெண். நிச்சயமாக கூற முடியும் அவளுக்கென்று வேறு குடும்பங்கள் அல்லது உறவுமுறைகள் என்று யாரும் இருக்கவில்லை. இந்த ஊரிலும் கூட அவள் வந்தாள் வரவேற்க்கவும் சென்றுவிட்டால் தேடவும் கூட யாரும் நினைத்ததாகத் தோன்றவில்லை.
ஒரு கதைக்குள் பயணிக்க வைக்க ஒன்று கதையோ அல்லது கதையாடியோ தான் காரணமாக இருக்க முடியும். இந்த கதையை கேட்டபோது எனக்கு பத்து வயதிருக்கும். இன்றுவரை மறக்காமல் பாதுகாப்பாய் நினைவில் தங்கியிருக்க காரணம் சித்தி கதைக்கூறிய முறை என்று தான் கூறுவேன். இப்போதுவரை சித்தி அளவிற்கு கதை கூறி என்னை யாரும் வியப்பூட்டவில்லை. என் ஆத்மார்த்தமான கதையாடியாக இன்றும் சித்தியை தான் மனம் கொண்டாடுகிறது.
அருமை...
ReplyDeleteநன்றியும் அன்பும்
Delete