All We Imagine as Light: (Payal Kapadia)
நகரத்திற்குத் தெரியும் ஒரு துயரத்தை எப்படி கடக்க வேண்டும் என்று. ஒரு தனிமையை எப்படி தகர்க்க வேண்டும் என்று. நகரத்திற்குத் தான் தெரியும் ஒவ்வொரு விளக்கொளிக்குள்ளும் ஓராயிரம் கதைகள் உண்டு என்று. எப்போது எனக்கு இந்த நகரம் பிடித்திருக்கும் என்று சிந்திக்கிறேன். முதல்நாள் பணி முடிந்து இரவுநேரத்தில் பேருந்துப் பயணத்தில் நான் கடந்த விளக்கொளிகளில்தான் இந்த நகரம் எனக்கு முதல் முதலாக பிடித்துப்போனதாக மாறி இருக்க வேண்டும். ஓயாத ஓசைகளுக்கு இடையே அந்த விளக்கொளிகள் இடைவிடாது மௌனித்திருந்தன. அந்த மௌனம் எதையோ உரக்கப் பேசியது. மிக உரக்க. அதை நான் ஆழ்ந்து கேட்க ஆரம்பித்தேன். இன்றுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்படித்தான் இந்த நகரத்தை பழகினேன். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயரும் மனிதர்களின் கனவுகள் தாம் இங்கிருக்கும் விளக்குளில் ஒளிகளாக மின்னுகின்றனவோ என்று சிலவேளைகளில் தோன்றுவதுண்டு. எத்தனை ஆயிரம் மக்கள் கூட்டமோ அத்தனை ஆயிரம் கனவுகளின் குவியல். ஆனால் தன்னை நோக்கி வரும் மக்களின் விருப்பங்களை ஓரளவிற்காவது நிறைவு செய்வதில் தவறுவதே இல்லை இந்த நகரங்கள். நான் எனது கட...