Super Happy Forever: (Kohei Igarashi)
தன் அன்பிற்கினிய உறவு உலகை விட்டு மறைந்த பிறகு அப்பிரிவை ஏற்கத் துணியாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் அந்த உறவு தொடங்கப்பட்ட புள்ளிவரைச் சென்றுப் பார்க்க முற்படுகின்றனர். இப்படி இருந்தோம், இப்படித்தான் சந்தித்தோம், இப்படிப் பழகினோம், இப்படியானது எங்கள் உறவு என்று சதா மறைந்தவர் உடனான நினைவுகளை அசைபோடுகின்றனர். மறைந்தவர்கள் விட்டுச்சென்ற பொருட்கள், அவர்களோடு உறவாடிய வார்த்தைகள், நினைவுகள் என ஒவ்வொன்றாகத் தேடியெடுத்து அருகாமையில் வைத்துக்கொள்ள தவிக்கின்றனர். எத்தனையோ சிரத்தைகளை மேற்கொண்டு எப்படியாவது ஏதேனும் ஒரு வகையில் அந்த உறவின் ஏதோ ஒரு பிடியை அல்லது அந்த உறவின் இருப்பைத் தன்னோடு தக்கவைத்துக்கொள்ளவென நிதம் போராடுகின்றனர். நகி சனோ துடிப்பான இளம்பெண். தன் பொருட்களை தொலைப்பதையே அன்றாடமாகக் கொண்ட, அப்படித் தான் தொலைக்கும் எந்த பொருளுக்காகவும் வருந்தாத ஒரு பெண் புகைப்பட கலைஞர். இசு நகரத்திற்கு சுற்றுலாப் பயணியாக வருகிறார். சனோ என்ற அதே பெயருடைய இளைஞர் ஒருவர் எதேச்சையாக நகியை சந்திக்கிறார். மிக இயல்பாக இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது...