சில நேரங்களில் சில மனிதர்கள்:
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் இரவு பத்துமணியைக் கடந்திருந்தது. நான் அமர்ந்திருந்த பேருந்து எந்தவித அசைவும் இன்றி நின்றுக்கொண்டிருந்தது. பெரிதாக நேரம் தாமதமாகிவிடவில்லை. ஆறுமணி நேரம் பயணம் செய்து வீட்டிற்கு செல்ல வேண்டும். இன்னும் சற்று நேரம் கடந்தாலும் வீடு சென்றடைவதற்குள் பொழுது காலையை நெருங்கிவிடும் என்பதால் பொறுமையாக அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் நடத்துநர் பேருந்திற்குள் வந்தார். பிறகு ஓட்டுநர் அவரது இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கினார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பேருந்து நகர்ந்து வெளியேறியது. ஹாரன் ஓசையை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த இரவு வேளையிலும் சாலைகளில் மனிதர்கள் உறங்காமல் அங்கங்கு உலாவிக் கொண்டிருந்தனர். வழக்கமாக அமரும் ஓட்டுநரின் பின்னிருக்கையில் அமர்ந்து நான் வேடிக்கைப் பார்த்துகொண்டே என் பயணத்தை தொடர்ந்தேன். ஆரம்பத்திலேயே அப்பா இங்குதான் அமர வேண்டும் என்றும் முன்னாடியே இருப்பதால் இது உனக்கானப் பாதுகாப்பும் கூட என கூறியிருந்ததை நான் ஆழமாக நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையின் பேரில் இந்த இருக்கை என...