All We Imagine as Light: (Payal Kapadia)

நகரத்திற்குத் தெரியும் 
ஒரு துயரத்தை எப்படி கடக்க வேண்டும் என்று. ஒரு தனிமையை எப்படி தகர்க்க வேண்டும் என்று. நகரத்திற்குத் தான் தெரியும் ஒவ்வொரு விளக்கொளிக்குள்ளும் ஓராயிரம் கதைகள் உண்டு என்று. 

எப்போது எனக்கு இந்த நகரம் பிடித்திருக்கும் என்று சிந்திக்கிறேன். முதல்நாள் பணி முடிந்து இரவுநேரத்தில் பேருந்துப் பயணத்தில் நான் கடந்த விளக்கொளிகளில்தான் இந்த நகரம் எனக்கு முதல் முதலாக பிடித்துப்போனதாக மாறி இருக்க வேண்டும். ஓயாத ஓசைகளுக்கு இடையே அந்த விளக்கொளிகள் இடைவிடாது மௌனித்திருந்தன. அந்த மௌனம் எதையோ உரக்கப் பேசியது. மிக உரக்க. அதை நான் ஆழ்ந்து கேட்க ஆரம்பித்தேன். இன்றுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்படித்தான் இந்த நகரத்தை பழகினேன். 

கிராமங்களில் இருந்து நகரத்திற்கு இடம்பெயரும் மனிதர்களின் கனவுகள் தாம் இங்கிருக்கும் விளக்குளில் ஒளிகளாக மின்னுகின்றனவோ என்று சிலவேளைகளில் தோன்றுவதுண்டு. எத்தனை ஆயிரம் மக்கள் கூட்டமோ அத்தனை ஆயிரம் கனவுகளின் குவியல். ஆனால் தன்னை நோக்கி வரும் மக்களின் விருப்பங்களை ஓரளவிற்காவது நிறைவு செய்வதில் தவறுவதே இல்லை இந்த நகரங்கள்.

நான் எனது கடந்த காலத்தைப் பார்க்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் மூன்று தோழிகளில் ஒருவராக நான் நின்றிருக்கிறேன். 

பணி நாட்களில் எனக்குப் பணி கற்றுக்கொடுத்த பெண் ஒருவர் இருந்தார். நாற்பதைக் கடந்தவர். இரண்டு பிள்ளைகளுக்கு அன்னையான அவர் குடும்ப வாழ்வினை வெறுப்பவராகவே இருந்தார். ஆனால் பெரும்பாலும் குடும்பத்தைப் பற்றி பேசுபவராகவும் இருந்தார். அலுவலகத்தில் தேநீர் வாங்கவும் அவ்வப்போது அலுவலகத்தைத் தூய்மைப்படுத்தவும் ஒரு பெண் இருந்தார். ஐம்பதைக் கடந்தவர்‌. இவர்கள் மத்தியில் வெறும் பதினெட்டு வயதில் நான் இணைந்தேன். முதலில் புதியதாக இருந்தாலும்கூட ஏதோ ஒரு புள்ளியில் மூவரும் இணைந்தோம். 

நாற்பதைக் கடந்தவர் எனக்கும் சேர்த்து மதிய உணவு எடுத்துவரும் அளவிற்கு, ஐம்பதைக் கடந்தவர் என் பணிகளில் என்னோடு சேர்ந்து உதவும் அளவிற்கு மூவரும் பழகியிருந்தோம். கல்லூரிக்கு அணிய என்று ஐந்து நாட்களுக்கு ஐந்து ஆடைகளும் அதைக் கடந்து ஒரே ஒரு தாவணிப் பாவாடையைக் கூடுதலாகவும் வைத்திருந்தேன் விடுதியில். அந்த வாரத்தின் ஐந்து நாட்கள் முழுவதும் ஐந்து ஆடைகள் உடுத்திவிட்டதால் வார இறுதியில் தாவணியை அணிந்து அலுவலகம் வந்திருந்தேன். ஐம்பதைக் கடந்த பெண் அன்று மட்டும் பத்து முறைகளுக்கு மேல் உன் ஆடை நல்லாருக்கு என்று மகிழ்ந்தார். நானும் அதே பத்து முறைக்கு மேல் நன்றி உரைத்து சிரித்திருந்தபேன். அன்று பணி முடிந்து செல்லும்போது "இது போன்ற ஆடை எவ்வளவு இருக்கும். எங்கு கிடைக்கும்?" என்று ஐம்பதைக் கடந்தவர் என்னிடம் கேட்டார். அம்மா வாங்கி கொடுத்தாங்க 500 ரூபாய் இருக்கும் தையல் காசோடு சேர்த்து என்றேன். 

ஏன் என்று கேட்டேன். தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும் ஏறக்குறைய என் சாயல் என்றும் கூறினார். அவளுக்கும் இந்த மாதிரி ஒரு ஆடை அணிந்தால் நல்லாருக்கும் என்றவர் ஆனால் என் வருமானத்துக்கு 500 அதிகம் தான் என்றார். 

பேருந்து பயணத்தின்போது அவர் கூறியதைச் சிந்தித்தபடியே சென்றேன். அன்று இரவு விடுதிக்குச் சென்றதும் அந்த ஆடையை நன்றாகத் துவைத்துக் காயவைத்தேன். என் நேரம் நன்றாக இருந்திருக்க வேண்டும். காலை நான் பணிக்கு செல்வதற்குள் ஆடைகள் காய்ந்திருந்தன. மடித்து பைக்குள் வைத்துக்கொண்டு அலுவலகம் வந்ததும் ஐம்பதைக் கடந்த பெண்ணிடம் ஆடையைக் கொடுத்தேன். கண்கள் பணிக்க வாங்கியவர் "ஏன் பாப்பா" என்றார். உங்க பொண்ணுக்கும் இந்த தாவணி நல்லாருக்கும். வாங்கிக்கங்க என்றேன். நாற்பதைக் கடந்தவரைப் பார்த்தார் ஐம்பதைக் கடந்தவர். தன் மகிழ்ச்சியை இருவரையும் பார்த்துத் தெரியப்படுத்தினார் அவர். மூவருமே மகிழ்ந்திருந்தோம். அன்பால் இணையும் தருணம் என்பது அலாதியான ஒன்று. அப்படி ஒரு தருணம் அது.


மூன்று பெண்கள். மூன்று வாழ்க்கை. மூன்று பார்வை. மும்பை நகரத்தின் வாழ்வியலோடு நகரும் இந்த மூன்று கதைகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பெருநகரங்களுக்கு இடம்பெயரும் பெண்களின் வாழ்க்கையைச் சுட்டிச் செல்கிறது. 


திருமணத்திற்குப் பின்னும் தனித்திருக்கும் பெண் ஒருத்தி. அவளோடு அறை பகிரும் பெண் ஒருத்தி. இவர்கள் பணியிடத்தில் நட்பாகிய பெண்ணொருத்தி. மூன்று பெண்களுக்கும் வயது, வாழ்க்கை முறை, அவர்களின் குணங்கள் வேறு வேறு. 

தனிமையில் வாடும் பிரபா. காதலனோடு உலாவும் அனு. தன் இருப்பிடத்திற்காக போராடும் பார்வதி. இவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் அன்பு, முரண், உதவி என நகர்கிறது படம். 

மண்ணில் பிறப்பெடுத்த எல்லோரும் சரியான ஒரு வாழ்விற்கு தகுதியானவர்கள்தான். 


குக்கரை குடும்பத்திற்கான குறியீடாக காட்சிப்படுத்துகிறார் பாயல். இந்தியாவில் சமையலுக்கும் பெண்களுக்கும் உள்ள பந்தம் உடலுக்கும் உயிருக்குமானது. பெண்களுக்கும் குடும்ப அமைப்பிற்குமான பந்தத்தையும் அப்படியே கூறலாம். விட்டுச் சென்ற கணவனிடம் இருந்து வந்ததாக கிடைக்கப்பெற்ற ஒரு சமையல் பாத்திரத்தைக் கட்டித் தழுவி அணைக்கும் பிரபா வெறும் ஒரு பாத்திரத்தை மட்டுமல்ல தன் ஏக்கத்தை, தனக்குள் இருக்கும் வேட்கையை, தன் ஆசைகளை என எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அணைக்கிறாள். தனிமையை வேதனையாக பாவிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும் உறவுகள் மீதான ஏக்கம் எத்தனை வலி நிறைந்தது என்று. 


தன் காதல் சேராமலும் போகலாம். ஆனாலும் காதலை கைவிடுவதாக இல்லை என்று தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் வெளிப்படுத்துகிறாள் அனு. 

"ஒருநாள் வீட்டிற்கு வரச் சொன்னார்கள். நானும் சென்றேன். திடீரென்று திருமணம் என்றார்கள். சில நாட்களில் கணவர் வேலை நிமித்தமாகப் பிரிந்து சென்றார்" என்கிறாள் பிரபா அனுவிடம். மிக விரைவில் அனுவிற்கும் இப்படி ஒரு அழைப்பு வரலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அனுவும் யாருக்காவது இப்படி ஒரு கதையைக் கூறலாம். 


"எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தால் என்ன, ஒரு பேப்பருக்கு இருக்க மதிப்பு உயிரோட இருக்க மனுசனுக்கு இல்லை" என்று சொந்த ஊருக்கே செல்கிறாள் பார்வதி. இன்னும் சில ஆண்டுகள் கழித்து பிரபாவின் நிலைப்பாடும் இப்படியாக அமையலாம். ஆனால் நிகழும் ஒன்றை மடைமாற்ற மற்றொன்று இருக்கும் என்பதைப் போல் இணக்கமான அன்பினை மூவரும் பற்றுகின்றனர்.

பிரபாவின் ஏக்கத்திற்கு அனுவும் பார்வதியும் துணையாகின்றனர். அனுவின் காதலை பிரபாவும் பார்வதியும் ஏற்கின்றனர். பார்வதிக்கு பிரபாவும் அனுவும் உறுதுணையாகின்றனர். 

பிரபாவோ அனுவோ பார்வதியோ வேறெங்கும் இல்லை. நம்மோடும் நமக்குள்ளும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 



Comments

  1. நல்ல உணர்வுப்பூர்வமான எழுத்து, வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

அனாகத நாதம்: