I Am Not a Witch , கொட்டுக்காளி:
ஓர் எட்டு வயது சிறுமி சூனியக்காரி என்று ஊர்க்காரர்களால் அடையாளப்படுத்தப்படுகிறாள். மேலும் சிறுமி சூனியக்காரர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் முகாமில் இணைக்கப்படுகிறாள். முகாமில் மிக இளம் வயது சூனியக்காரியான சிறுமிக்கு அங்கிருக்கும் மூத்த பெண்மணி ஒருவர் சூலா என்று பெயரிடுகிறார்.
சூலாவின் முதுகில் ஒரு நீண்ட ரிப்பன் கட்டப்படுகிறது. ரிப்பன் அளவிற்கேற்றதொலைவு அவள் நடந்து செல்லலாம். ஓடலாம். அவளுக்கானப் பணிகளை செய்யலாம். அந்த முகாமில் சூனியக்காரிகள் என அடைக்கப்பட்டிருக்கும் மற்ற பெண்களுக்கும் இதே நிலைதான். தங்களது உடலில் ஒருபாகமாய் ரிப்பனின் இணைப்பைச் சுமந்தே திரிகின்றனர்.
இயக்குநர் Rungano Nyoni இப்படி ஒரு படைப்பை நம் முன் வைக்கிறார். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இது ஒரு பெண்ணிய மற்றும் சமூக நோக்கில் எடுக்கப்பட்ட படம் என்று விளங்கும்.
இயக்குநர் வினோத்ராஜின் "கொட்டுக்காளி" எனும் நவபடைப்பின் வீச்சும் அத்தகையது தான்.
குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு காதலை அல்லது காதல் குறித்த ஏதோ ஒரு எண்ணம் தோன்றிய ஒரு பெண். அப்பெண்ணின் எண்ணத்தை மாற்ற அல்லது மறக்கவைக்க அல்லது அப்படியான எண்ணத்தை அடியோடு துடைத்தெறிந்து குடும்ப ஆதிக்கத்தின் உறுதியை அப்பெண்ணுக்கு உணர்த்தவென ஒரு சடங்கிற்கு அவளது குடும்பமும் உறவினர்களும் அழைத்துச் செல்கின்றனர்.
குடும்பத்தால் சமூகத்தால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல போராட்டங்களை எதிர்கொண்டும் மாறாத அப்பெண்ணின் மனநிலை
வெறும் ஒரு சடங்கில் மாறிவிடுமா? அதற்கான சாத்தியங்கள் எந்த அளவிற்கு உண்மையானவை என்பதற்கு ஆதாரங்கள் இருக்கப்போவதில்லை. உன் எண்ணத்திற்கும் அதன் போக்கிற்கும் நாங்கள் எப்போதும் இணங்கப்போவதில்லை. நீ எங்களை அனுசரித்து உன்னை மாற்றிக்கொள்ளத் தான் வேண்டும் என்பதன் வெளிப்பாட்டின் இறுதிக்கட்டம் தான் இப்படியான சடங்குகள்.
பெண் தான் எதிர்த்து கேள்வி எழுப்பினாலும் தன்னை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் உரைக்காமல் மௌனித்தாலும் பேயாகிவிடுகிறாள் சுற்றத்தார்க்கு.
சூலாவும் மீனாவும் பாதிப்புக்குள்ளாகும் பெண்ணினத்தின் பிரதிநிதிகள்.
மீனாவின் மௌனம் ஒரு பெண்ணின் ஆழ்ந்த அழுத்தத்தின் விளைவு. பெண்ணுக்கு எதிரான அடக்குமுறையை சற்று அசைத்துப்பார்க்கும் விளைவு அது.
எந்த வாளினைவிடவும் வலியது மீனா சூடிநிற்கும் மாமௌனம்.
சூலாவின் முதுகில் வெளிப்படையாக கட்டப்பட்டிருக்கும் ரிப்பன் பெண்ணினம் மறைமுகமாகவும் நேரடியாகவும் காலகாலமாக அனுபவிக்கும் கட்டுப்பாடு கலாச்சாரம் குடும்ப மரியாதை கவுரவம் என்ற பெயர்களில் கட்டப்பட்டு அடக்கிவைக்கப்படுவதின் குறீயீடு.
தெரிந்தோ தெரியாமலோ பெண் பிள்ளைகள் பிறக்கும்போதே முதுகில் ரிப்பனோடு பிறந்து விடுகிறோமா என்ற எண்ணமும் அதுகுறித்த அச்சமும் தோன்றிவிடுகிறது படம் தந்த அனுபவத்திற்குப் பிறகு. எத்தனை கட்டுபாடுகள்! எத்தனை நிபந்தனைகள்!எத்தனை எத்தனை பழிகள்!பாசாங்குகள்!
கல்வி, வேலைவாய்ப்பு, சுய முன்னேற்றம் என்று பல காரணங்களைக் கொண்டு பெண்கள் வீட்டைக் தாண்டி தங்களது கனவுகளை நோக்கி நகரத்தொடங்கி அரை நூற்றாண்டைக் கடந்தும் மீனாவை இப்படி அழைத்துச்செல்லும் சடங்கும் நம்பிக்கையும் சம காலத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. ஆதிக்க மனோநிலையில் இருக்கும் மனிதர்கள் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் மனிதர்களின் முக்கியமாகக் குடும்பப் பெண்களின் மீறல்களால் அவர்களுக்குள் உண்டாகும் அச்சத்தின் வெளிப்பாடு தான் இப்படியான செயல்கள். இவை ஒருவிதத்தில் அப்பெண்களுக்கான அச்சுறுத்தலும் கூட.
தன் சுயத்தை உணரும் பெண்கள் இயல்பில் இருந்து ஒரு அடி அதிகமாக சிந்தித்துவிட்டாலும் அடக்குகிறேன் என்று அவளை இல்லாமல் ஆக்கி நடுகல் நட்டு அதற்கொரு புனிதத்தையும் தீட்டி விடுகின்றனர்.
சூலாவைப் போலும் மீனாவைப் போலும் உள்ள பெண்களின் வாழ்வோடு ஒன்றி நிற்கும் மனிதகுல சமுதாயத்தில் ஆண்களோடு சரிபாதி பெண்களும் இருக்கிறார்கள் என்பது துயரம் கலந்த உண்மை. அவர்களில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு எதிரில் இருப்பவர்களைக் காட்டிலும் அடங்கிப் போ எனும் பேர்வழிகள் தான் பெண்கள் மீதான அத்தனை அடக்குமுறைகளைக் காட்டிலும் ஆபத்தானவர்கள்.
சூனியக்காரிகள் குறித்த நம்பிக்கைகள், அவர்களின் வாழ்வு போன்றவை ஆப்பிரிக்க நாட்டின் வரலாறு மிகுதியாகவே பேசுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை ஒரு தொழில் போல் இம்முறை இயங்கி வந்துள்ளதை வரலாற்றின் வழி அறியலாம். அண்மைக் காலத்தில் இம்முறை வழக்கொழிந்து காணப்பட்டாலும் குடும்பத்திற்கு வேண்டாத பெண்களைப் பேய்கள் எனக்கூறி சூனியக்காரர்களுக்கான முகாமில் கொண்டு வந்து விட்டுவிடுவதாக படம் சுட்டுகிறது.
தன் வயதிற்கான இயல்பு, தன் சுதந்திரம், தனது பால்யம் உட்பட அனைத்தையும் தன் முதுகில் இருக்கும் ரிப்பனால் இழக்கும் சூலா ஒருவேளை அவள் ரிப்பனை அறுத்து எறிந்தால் எம்மாதிரியான விளைவு அவளுக்கு வருமோ அதே விளைவு தான் மீனாவிற்கும். சூலாவின் முடிவு சொல்லப்பட்டதிலும் மீனாவின் முடிவு சொல்லப்படாததிலும் தான் இந்த படங்களின் அழகு இன்னும் கூடுதலாக மிளிர்கிறது.
"I Am Not a Witch" இயக்குநர் "ருங்கானோ நியோனி" ஒரு ஜாம்பியன்-வெல்ஷ் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நடிகை. இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுகத்திற்கான BAFTA விருதை வென்றது மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் இருந்து பாராட்டுகளையும் பெற்றது. நியோனி இயக்கிய The List (2009) திரைப்படம் சிறந்த குறும்படத்திற்கான வெல்ஷ் பாஃப்டா விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
பி. எஸ். வினோத்ராஜ் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். கூழாங்கல் இவரது முதல் படம். 2021 ல் நெதர்லாந்தில் நடைபெற்ற 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு புலி விருதைப் பெற்றது. இந்த விருதை வென்ற இரண்டாவது இந்திய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 94வது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான இந்திய நுழைவாக கூழாங்கல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கொட்டுக்காளி 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.
சிறப்பான விமர்சனம். இரண்டு திரைபடங்களை ஒப்பிட்டு தெளிவான அலசல்.
ReplyDeleteநன்றி 😊
DeleteFantastic writing
ReplyDeleteThank you ❤️
Delete🪄🪄🪄🪄💕
ReplyDelete