Blackbird blackbird blackberry: (2023)(Elene Naveriani)
தாய்வழி உறவில் எனக்கொரு அத்தை இருந்தாள். நல்ல உயரம். உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு. கோதுமை நிறம். கூடுதல் குறைவில்லாத போதுமான அழகு. திருமணம் செய்து கொள்ளவில்லை. படிப்பறிவற்ற அத்தை தன் தாயின் முதுமை காலத்தில் அவளைக் கவனித்துக்கொண்டாள். சில ஆண்டுகள் கடந்து படுக்கையிலிருந்து விடைக் கொடுத்த பாட்டியோடு அத்தையின் இளமையும் விடைப் பெற்றிருந்தது.
பாட்டியின் இறப்பிற்குப் பிறகு தனியாக வசித்துவந்த அத்தையை எப்போதாவது சாலையில் கடக்கும்போது காண்பதுண்டு. சிறு வயதில் பார்த்த அத்தைக்கும் நான் பணிக்குச் செல்கையில் பார்க்கும் அத்தைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அப்போது இளமையோடு இருந்த அத்தை தனியாக வாழ்ந்த காலங்களில் தலை நரைத்து உடல் தளர்ந்து தென்பட்டாள்.
சில ஆண்டுகளுக்குப்பிறகு இத்திரைப்படத்தில் வரும் Etero அத்தையை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தினார்.
48 வயதான திருமணமாகாத கிராமத்து பெண் Etero. காலம் கடந்து காதல் வயப்படுகிறார். ஊரார் அறியா வண்ணம் இரகசியமாக அக்காதலை காதலர்கள் மறைத்து வேறு வேறு ஊர்களுக்கு சென்று தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
ஊரில் Etero குறித்து அவரது தோழிகளே கேளிக்கையாக பேசி சிரிக்கும் போதெல்லாம், காய்கறி கடையில் அத்தை வந்தால் உடனே அவளுக்கானப் பொருட்கள் எதுவும் வழங்காது 'உனக்கென்ன அவசரம் ஒன்டிக்கட்ட தான ஆற அமர வாங்கிக்கலாம் இரு' என கூறும் கடைக்காரர் சன்முகம் முகமும் அடிக்குழாயில் நீருக்காக குடத்தோடு காத்திருக்கையிலும் அத்தையை பார்த்து அதிகமாக பாயும் 'உனக்கென்ன புள்ளையா குட்டியா கொஞ்சநேரம் நில்லு என்ற வார்த்தைகளும் தான் காதோடு வந்துச் சென்றன.
மக்களால் மிக எளிதாக கூறப்படும் இந்த வார்த்தைகளை அத்தையால் அத்தனை எளிதாக கடந்திருக்கக்கூடுமா என்ற வினா அதை காணுந்தோறும் நெஞ்சில் எழுந்ததுண்டு. Etero அவளைக் குறித்த எள்ளல் பேச்சுக்களை கடந்தபோது அத்தையை நினைத்தும் நான் சற்று பெருமூச்சு விட்டிருந்தேன்.
படத்தின் இறுதியில் தனக்காக ஒரு நிமிடம் அமர்ந்து சிறுபிள்ளைபோல் அழும் Etero ஏனோ அந்த அழுகையில் எனக்கான ஒரு ஆறுதலை கையளித்திருந்தாள்.
மறு நாள் வீட்டிற்கு அழைப்பு விடுத்து அத்தை குறித்து தெரிந்துக்கொள்ள முற்பட்டேன். அத்தை மதமாறிக்கொண்டாள் என்ற செய்தியையும் இறைத்தூதருக்கு தன்னை முழுவதுமாக ஒப்பிவித்து கிருத்துவ ஆலயம் ஒன்றில் அடைக்கலம் அடைந்தாள் என்பதையும் அறிந்தேன்.
வாழ்வின் மீதான வேட்கை தானே எதையாவது பற்றிக்கொள்ள தூண்டும்.
துறவறமே என்றாலும் கூட அது அவளுக்காக அவள் தேடிய துணை என்றே எனக்குத் தோன்றியது. ஆமாம் அத்தையும் எனக்கொரு ஆறுதலை கையளித்திருந்தாள்.
❤️
ReplyDeleteThank you
Delete