Paris, Texas (1984) (Wim Wenders)
சிறு வயதில் தோழியோடு தெருவில் விளையாடிகொண்டிருந்த ஒரு மாலையில் நாய்கள் தன்னை சுற்றி குரைத்தபடி தொடர்ந்து வர கையில் ஊன்றுகோளோடு ஒரு மனிதர் எங்களின் அருகில் நடந்து வந்தார். அதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை என்று தோன்றியது. அவர் காலில் ஒரு பெரிய காயம் இருந்தது. அந்த காயத்திற்கு மருந்தோ துணியாலான கட்டுகள் எதுவுமோ போடாமல் வெறுமனே விட்டிருந்தார். காயத்தில் அங்கங்கு இரத்தம் வடிந்து உலர்ந்திருந்தது. மேலும் காயத்தில் ஈக்கள் மொய்த்த வண்ணம் இருந்தன. அழுக்கான உடையோடு இருந்தவர் கையில் வேறெதையும் வைத்திருக்கவில்லை.
எங்களை கண்டதும் அருகில் வந்து அப்படியே அமர்ந்தவர் 'பசியா இருக்கு சாப்பிட எதாவது தரியா பாப்பா' என்றார். வேறெதுவும் தோன்றாதவளாய் வீட்டிற்குள் நுழைந்து பாத்திரத்தை உருட்டினேன். ஒரு பாத்திரத்தில் இருந்த கஞ்சி சாதத்தில் சிறிது உப்பிட்டுவிட்டு வேறு ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். எதுவும் அகப்படாததால் கஞ்சி சாதத்தை சொம்பு நீரோடு கொண்டு வந்து இரண்டையும் அவரது கைகளில் கொடுத்துவிட்டு 'தொட்டுக்க எதுவும் இல்லண்ணா' என்றேன்.
இது போதும் சாமி.. என்றவர் கஞ்சியை கரைத்து மொத்தத்தையும் குடித்து முடித்தார். மனிதன் மட்டுமல்ல எந்த உயிரினமும் தன்னை மறந்து உண்ணும் போதும் உறங்கும் போதும் அனிச்சையாக ஒரு வசிகரத்தைப் பெற்று விடுகின்றன. சொம்பு நிறைய நான் அளித்திருந்திருந்த நீரை பாதி அருந்தியவர் மீதி நீரில் பாத்திரத்தை கழுவி கனிவோடு என்னிடம் நீட்டினார். கோயிலில் கடவுளுக்கு வழங்கும் தட்சணையை போல்..
கையில் வாங்கியப் பாத்திரத்தை என் அருகில் வைத்து நான் அவரையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் தோழி கற்களை தரையில் விசிறி விளையாடுவதில் லயித்திருந்தாள்.
நான் அந்த அண்ணாவோடு மெல்ல பேசத் எத்தனித்தேன். மெல்ல மெல்ல "அண்ணா நீங்க யாரு இங்க எப்படி வந்திங்க. உங்க கால்ல ஏன் இவ்வளோ பெரிய காயம்" என்று என்னிடம் இருந்த கேள்விகளை எல்லாம் கேட்டு முடித்தேன்.
முதுகலை வரைப் படித்திருந்த அம்மனிதருக்கு அழகிய குடும்பம் குழந்தைகள் என எல்லாமும் இருக்கிறது. ஆனால் மிக தொலைவில். அவை எல்லாவற்றையும் துறந்து அவர் வெகுதூரம் பயணித்திருந்தார். ஏன் என்ற என் கேள்விக்கு என் விதி நான் இப்படி அழைந்து சாகிறேன் என்றார் கண்களில் நீர் சுரக்க. அந்த வயதில் அவர் வார்த்தைகளில் வெளிப்பட்ட துயரத்தை முழுவதுமாக புரிந்துக் கொள்ளும் பக்குவம் எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை.
அதன்பிறகு எப்போதாவது அம்மனிதரின் அந்த கண்ணீரின் நினைவு எழுவதுண்டு. ஒரு மனிதன் தனக்கான வாழ்வை வாழவும் அதிலிருந்து விலகிச் செல்லவும் அவன் சூழல் ஒரு காரணமாக அமைகிறது. குடும்பம், பொருளாதாரம் என்பதெல்லாம் அதில் அடங்கும்.
இத்திரைப்படத்தில் Travis Henderson தன் குடும்பத்தை விட்டு தொலைந்து நான்காண்டுகள் ஆகின்றன. சுய நினைவின்றி எதையோ தேடி கால்போகும் போக்கெல்லாம் நடந்து திரியும் Travis குறித்து ஒரு சிறு தகவல் அவர் சகோதரர் Walt க்கு கிடைக்கிறது. இறந்ததாக நினைத்திருந்த தன் சகோதரன் Travis உயிருடன் இருக்கும் செய்தி அறிந்து அவரை அழைத்துவர விரைகிறார் Walt.
ஒரு நீண்ட பயணத்திற்கு பிறகு கண்டறியபட்ட Travis தன் சுய நினைவையும் பேச்சுத் திறனையும் இழந்தவராக தென்படுகிறார். Travis ன் மகன் இப்போது வளர்ந்து எட்டு வயது சிறுவனாக இருக்கிறான் என்பதை walt தெரிபடுத்தியதோடு Travis ன் தொலைந்துபோன மனைவி குறித்தும் எந்தவித தகவலும் இதுவரை இல்லை என்பதையும் walt கூறுகிறார்.
எதுவும் நினைவில்லாத Travis க்கு walt கூறும் எல்லாமும் புதிராகவே தெரிகிறது. தன் சகோதரனிடமிருந்து விலகி மீண்டும் கால் போகும் போக்கில் நடக்கத் தொடங்குகிறார். மீண்டும் ஒருமுறை தொலைந்த தன் சகோதரனைத் தேடிச் செல்கிறார் walt.
ஒரு காட்சியில் மிக நீண்ட ரயில் தண்டவாளத்தில் நடந்துக்கொண்டிருந்த தன் சகோதரனை தடுத்து நிறுத்திய Walt உரைப்பார் 'அங்கு எதுவுமே இல்லை Travis' என்று. எவ்வளவு தூரம் சென்றாலும் எங்குமே எதுவுமே இல்லை தான். இல்லை என்ற வார்த்தை மட்டுமே இந்த வாழ்வின் நிதர்சனம். இது எல்லோரும் அறிந்த ஒன்று என்றாலும் Travis போல் பயணித்துக் கொண்டே தான் இருக்கின்றோம் எதற்காகவோ.. எங்கேயோ... பயணம் என்பது வெறும் பயணத்தை மட்டும் குறிக்காமல் இந்த ஒரு காட்சியில் அந்த ரயில் தண்டவாளம் எனக்கு வாழ்வாக தெரிந்தது.
தொலைந்து போன எல்லா மனிதருக்குள்ளும் ஒரு கதை இருந்திருக்கிறது. ஒருவகையில் இப்படியும் கூறலாம் கதைகளை இறுகப் பற்றிய மனிதர்கள் தொலைந்துப் போனவர்களாக இருக்கின்றனர்.
Travis ன் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது. துயர் பொதிந்த கதை. மிக அழகிய நீண்ட கவிதையாக படத்தின் பிற்பகுதியில் அக்கதை மென்மையாகக் கூறப்படுகிறது.
காட்சிகள் நிகழ்ந்துக்கொண்டிருப்பது ஒரு திரைப்படத்தில் என்பதை என்னால் சற்றும் ஏற்க முடியாத அளவு நான் ஒன்றிப் போன திரைப்படங்கள் மிக சில. அவற்றில் இதுவும் ஒன்று. கலை என்பது மனித வாழ்வோடு பிணைந்த ஒன்று என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் தெளிவித்தவண்ணமே இருக்கிறார் இயக்குநர் Wim Wenders.
👏👏👏
ReplyDelete😊
Delete