சில நேரங்களில் சில மனிதர்கள்:


சென்னை வந்திருந்த முதல் ஆறுமாதங்களில் கல்லூரியை அடுத்து நான் செய்த பயனுள்ள ஒரு காரியம் என்றால் என் கல்லூரிக்கு அருகில் இருந்த ஒரு புத்தகக் கடையில் பகுதி நேரப் பணிக்காக இணைந்தது தான். 

முதல் நாள் சித்தப்பா என்னை அழைத்துச்சென்று இங்கு தான் பணி என்று ஒரு புத்தகக்கடையில் சேர்த்துவிட்டு சென்றார். புகழ்ப்பெற்றப் பதிபகமான என்.சி.பி.ஹச் பதிப்பகத்தின் ஒரு கிளை அது. வினோதமான பல புத்தகங்களை வேடிக்கைப்பார்த்தே அன்று நாள் கழிந்தது. என்ன பணி எவ்வளவு சம்பளம் என எது குறித்தும் எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. 'புத்தகங்களோடு இருப்பது உனக்கு ஒருவித நல்ல அனுபவத்தைக் கொடுக்கும், தவற விடாதே' என்று சித்தப்பா கூறினார். அது முற்றிலும் உண்மை என்பதையும் நான் அறிவேன். ஆகையால் வேறு எதை குறித்தும் சிந்திக்கத் தோன்றவில்லை. அந்த நாளை மட்டும் ரசிக்கத் தொடங்கினேன். 

மறுநாள் அந்த கடையின் மற்ற ஊழியர்கள் சிலரை அறிந்துக்கொண்டதில் கழிந்தது. அது ஒரு கிருஸ்துமஸ் வாரம். அங்கங்கு வண்ண விளக்குகள் மினுங்கி இரவுகளை வசீகரமாக்கியிருந்தன. பேருந்துகளில் நகருந்தோரும் வழியில் தென்பட்ட காகித நட்சத்திரங்கள் புன்னகைத்து வழிவிட்டன. எனக்கு அந்த இரவு மிக பிடித்த இரவாக நினைவில் தங்கியது. 

உற்சாகமாக மறுநாள் கல்லூரி முடிந்து ‌பணிக்குச்சென்றேன். புத்தகக் கடையில் இருந்த மற்றொரு ஊழியர் கையில் ஒரு துணியை கொடுத்து புத்தகங்கள் ஒவ்வொன்றையும் துடைத்து மீண்டும் அடுக்கி வைக்கச் சொன்னார். நானும் ஒவ்வொன்றாக எடுத்து துடைத்து மீண்டும் அடுக்கினேன். கார்ல் மார்க்ஸ், லெனின், மூலதனம், வால்காவிலிருந்து கங்கை வரை, புயலிலே ஒரு தோணி  கல்கியின்  பொன்னியின் செல்வன், திருக்குறள், பாரதியார் கவிதைகள், பஞ்சதந்திர கதைகள், இப்படியாக முன் பகுதியை முடித்தவுடன் உள் அறைக்குச் சென்று மீண்டும் அவ்வாறே செய்ய பணித்தார் அப்பெண். நானும் அவர் கூறியதைப்போலவே செய்து வந்தேன்.  அன்றைய நாள் அப்படியாக கழிந்தது. மீண்டும் சாந்தி தியேட்டர் பேருந்து நிலையம். கிருஸ்துமஸ் விளக்குகள் காகித நட்சத்திரம் இப்படியாக சில நாட்களை கடந்திருந்தேன்.

இந்த சில நாட்களில் எந்த அடுக்கில் எந்த நூல், எந்த நூல்களுக்கு கழிவு போன்ற சில தகவல்களை அறிந்திருந்தேன். சில புதிய மனிதர்களை சந்தித்திருந்தேன். ஒன்றிரண்டு நூல்கள் விற்ற ரசீதீல் கையெழுத்து போட்டிருந்தேன். மற்ற ஊழியர்களோடு சிரித்து பேசுமளவு நெருங்கியிருந்தேன். இப்படியாக என் பணி பயணத்தில் பத்து நாட்களைக் கடந்திருந்தேன். இந்த பத்து நாட்களில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் அடக்கம். நான் சென்னை வந்திருந்த ஆறுமாதங்களில் என் முதல் விடுமுறை காலம் அது. பணியினால் இந்த விடுமுறையில் வீடு செல்வதை நான் முற்றிலும் மறந்திருந்தேன். 

ஒரு நாள் மாலை திடுமென கிளைக்கு வந்திருந்த மேலாளர் 'உனக்கு இனி இங்க வேலை இல்லை நாளைல இருந்து நீ இங்க வர வேண்டாம்' என்று என் கையில் ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றை தந்துவிட்டு வேறு எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றார். அவர் வார்த்தைகளின் பொருள் புரிவதற்குள் கண்களிலிருந்து நீர் வழிய தொடங்கியது. அது நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி. நான் அந்த அழுகையை யார் முன்னிலையிலும் வெளிப்படுத்த விரும்பவில்லை. சடுதியில் உள் அறையில் புகுந்து நூல்களை துடைக்க ஆரம்பித்து விட்டேன். இனி இங்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது நினைவில் வரும்போது பொங்கிய அழுகையை என்னால் தடுக்க முடியவில்லை. துடைத்த நூல்களை மீண்டும் மீண்டும் தடவிப்பார்த்துக்கொண்டேன். அன்று இரவு விடைபெறும் போது மற்ற ஊழியர்களிடம் தகவலைக் கூறிவிட்டு அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். 

மிக மன வலி நிரம்பிய இரவு அது. பேருந்து நிறுத்தத்தில் விடுதிக்கு செல்லும் பேருந்துகளை ஒவ்வொன்றாக தவற விட்டுகொண்டு அமர்ந்திருந்தேன். 

நான் பணிக்குச் சென்றேன். தனிமையில் இரவின் கைகளைப் பற்றிக்கொண்டு ஊரை வேடிக்கைப்பார்த்தபடி உலா வந்தது எனக்கொரு புத்துணர்ச்சியை அளித்திருந்தது. அதுவரை நான்  அனுபவித்திடாத சுதந்திரம் அது. எனக்கே எனக்கான சுதந்திரமும் கூட. அந்த இரவின் காற்று என் துப்பட்டாவை வருடுந்தோறும் நான் பறந்துக்கொண்யிருப்பதாக பூரித்தேன். இழந்தது வெறும் பணியை மட்டுமல்ல என்பதை நான் மட்டுமே அறிந்திருக்க முடியும். கிருஸ்துமஸ்காக அலங்கரிக்கப்பட்டிருந்த விளக்குகள் அதுவரை அகற்றப்படாமல் தான் இருந்தன. ஆனால் அந்த இரவு ஏனோ தன் வசீகரத்தை இழந்திருந்தது.. 

வாழ்வென்பது எப்போதும் நிலையற்றது. வாழ்வது என்பது இன்பம் மற்றும் அது அல்லாத எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது என்ற அனுபவத்தை கற்றுத்தந்தந்திருந்தது அந்த இரவு.

மறுநாள் என்னை அந்த பணியில் இணைக்க காரணமான சித்தப்பாவின் நண்பர் பதிப்பகம் வரவைத்து சந்தித்தார். பிறகு உன்னை ஏன் மேலாளர் பணியில் இருந்து நீக்கினார் என்று கேட்டார். எனக்கு உண்மையாகவே காரணம் எதுவும் கூறப்படவில்லை. நான் தெரியாது என்று பதிலுரைத்தேன். நீ எதுவும் பணத்தை கையாண்டு சிக்கிக்கொண்டாயா என்ன? என்றார். எனக்கு அந்தக் கேள்வி வினோதமாகத் தோன்றியது. திருடும் பழக்கம் எனக்கில்லை. அவர் கேட்ட அந்த கேள்விக்கு வார்த்தைகளின்றி இல்லை என்று தலையாட்டினேன். காரணமே இல்லாமல் உன்னை ஏன் வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்றார் மீண்டும் அவர். அதே கேள்வி எனக்கும் உண்டு. ஆனால் நான் யாரிடம் கேட்பது என்று தான் தெரியவில்லை. நான் அமைதியாக நின்றிருந்தேன். சில நிமிடங்கள் அமைதிக்குப் பின் எனக்காக ஒரு தேனீர்  வரவழைத்தார். பிறகு சரி விடு. இங்க இல்லைனா வேறொரு வேலை தேடிக்கலாம். நீ இதையெல்லாம் பெருசா எடுத்துக்காத என்றவர் யாருக்கோ கைபேசியில் அழைத்து ஏதோ விவரங்களை கேட்டார். பிறகு நாளையிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிடு. உனக்கு அங்கு தான் வேலை என்று என்னை விடுதிக்கு அனுப்பி வைத்தார். மீண்டும் வேலை கிடைத்தது. ஆனால் அன்று மேலாளர் என்னை ஏன் பணிநீக்கம் செய்தார் என்ற கேள்விக்கு 
மட்டும் இன்றுவரை எனக்கு பதில் கிட்டவில்லை. ஆண்டுகள் எத்தனையோ கடந்த நிலையிலும் அந்த ஒரு இரவினை நினைக்கும் தோறும் மெல்லிய சலனம் ஒன்று தோன்றாமலில்லை. 



Comments

  1. கடைசி வரை அந்த மேனேஜெரிடம் கேட்காமலே வந்துட்டீங்க... போங்க . இன்னொரு தடவ சந்திச்சா கேட்டுரனும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: