சிலநேரங்களில் சில மனிதர்கள்:


மாணவர்கள் இயக்கத்தில் இணைந்த சில காலங்களில் அலுவலகத்திலேயே தங்கிவிட்டிருந்தேன்.

மாதம் இரண்டு முறை மாணவ தோழர்கள் கூட்டம் நடைபெறும். அச்சமயம் அலுவலகத்திலேயே நானும் இருந்ததால் அந்நிகழ்வை ஒருங்கிணைக்கத் தொடங்கியிருந்தேன். ஒவ்வொரு கூட்டத்திலும் புதிய புதிய மாணவ தோழர்கள் வந்துக் கலந்துகொள்வார்கள். அவர்களின் எண்களையும் முகவரிகளையும் பெற்று பத்திரப்படுத்திக் கொள்வேன். ஆர்பாட்டம்,  உண்ணாவிரதம், கவனம்  ஈர்ப்புப் போராட்டம் போன்றவற்றிற்கு அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவ்வாறு பத்திரப்படுத்துவதுண்டு.

கூட்டத்தில் படித்த நூல்கள், முக்கியமான சமூக நிகழ்வுகள், அப்போதைய அரசியல் நிலைபாடு என பலவற்றைக் குறித்து கலந்துரையாடல் செய்வோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் வெவ்வேறு விதமான பார்வைகள். சென்னையின் பல இடங்களில் இருந்து அன்று ஒரே இடத்தில் கூடும் தோழர்களான எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியான நிகழ்வாக அது அமையும்.

ஒருமுறை மாணவ தோழர்கள்  கூட்டத்தில் புதிதாக இரண்டு மாணவர்கள் கலந்துக்கொண்டனர். வழக்கம்போல் என் எண்ணை பகிர்ந்துகொண்டு அவர்களின் எண்களை வாங்கிக்கொண்டேன். நிகழ்வும் சிறப்பாகவே நடந்து முடிந்தது. எல்லோரும் விடைப்பெற்றனர். புதிதாக வந்திருந்த இரண்டு மாணவர்களும் என்னருகில் வந்து மிகுந்த கனிவோடு விடைகொடுத்தனர்.

பிறகு இரண்டு நாளில் ஒரு அழைப்பு வந்தது. இறுதியாக நிகழ்ந்த மாணவர்கள் கூட்டத்திற்கு புதிதாக வந்திருந்த இரண்டு தோழர்களில் ஒருவர் பேசினார். வழக்கமான நலம் விசாரிப்புகள் பரிமாற்றத்திற்குப் பின் 'ஞாயிறு காலை நம்ம ஏரியா சர்ஜில் ஒரு கூட்டம் இருக்கு நீங்களும் வந்து கலந்துக்கனும்' என்றார் அவர். என்ன கூட்டம் தோழர் என்றேன். 'பிரார்த்தனை கூட்டம் தோழர் நீங்க வந்தா மகிழ்ச்சி அடைவோம்' என்றார் மீண்டும்.

தவறில்லை தான். அவரது நம்பிக்கையை என்னோடும் பகிர்ந்துக்கொள்ள நினைத்திருக்கிறார். அச்சமயம் பகுதிநேர வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்ததால் எனக்கு அப்போது நேரம் இல்லை. அதை கூற ஏனோ ஒரு தயக்கம். சரிங்க தோழர். முடிந்தவரை முயல்கிறேன் என்றிருந்தேன். 

அந்த ஒரு வாரம் கடந்திருந்தது. ஒரு நாள் மாலை தோழர் ஒருவரின் திருமண விருந்தில் கலந்துக்கொண்டோம். விருந்து கோயம்பேட்டில் உள்ள ஜெ.பி ஹோட்டலில் நடைபெற்றது. சென்னையில் அப்படி ஒரு விசாலமான  அழகான இடத்தை அதற்கு முன் எங்குமே பார்த்ததில்லை நான். அடுத்தடுத்து சில தோழர்களும் என்னோடு வந்து சேர்ந்துகொண்டனர். உடன் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு அழைத்த கிருத்துவத் தோழரும் அவரது நண்பர் என்று ஒருவரை உடன் அழைத்து வந்திருந்தார். பார்த்ததும் வழக்கம்போல் வணக்கம் தெரிவித்தேன். அவர்களும் தலையசைத்தனர்.

விருந்திற்கு சொன்றதன் முதல் காரணம் தோழரின் திருமணம் என்றாலும் முக்கிய காரணம் அங்கிருந்த உணவு வகைகள். சென்னை வந்ததிலிருந்து அத்தனை வகையான உணவுகளை நான் அதுவரை அறிந்ததில்லை. விருந்து ஏற்பாடு செய்திருந்த தோழர் எங்கள் அனைவரையும் சாப்பிட சொன்னார். என்னோடு வந்திருந்த தோழர்கள் அனைவரும் உணவு அறைக்குள் சென்று ஆளுக்கொரு தட்டினை எடுத்து ஒவ்வொரு வகையிலும் ஒன்றென தட்டில் உணவுகளை நிரப்பிக்கொண்டு ஒரு பெரிய வட்ட மேசையில் வந்து அமர்ந்தோம். 

எங்களோடு இரு கிருத்துவ தோழர்களும் வந்து இணைந்துக்கொண்டனர். அருகில் வந்து அமர்ந்த அடுத்த நொடியே 'வரும்போது என்னைப் பாத்து சிரிச்சிங்களே ஏன் சிரிச்சிங்க' என்றார் இரு கிருத்துவ தோழர்களில் ஒருவர். அதெல்லாம் எதுவும் இல்லையே என்றேன். உண்மையாகவே அப்படி  எதுவும் நான் சிரித்ததாக நினைவில்லை. என் கவனம் முழுவதும் முன்னிருந்த சாப்பாட்டில் இருந்தது. அந்த தோழரோ பேசிக்கொண்டே இருந்தார். மிகவும் சுவையான உணவு. அந்த இருவரைத் தவிர மற்ற எல்லா மாணவ தோழர்களும் நன்றாகவே சாப்பிட்டு முடித்தோம். அவர்கள் இருவரும் ஏதோ குழப்பத்திலேயே இருந்ததாக தோண்றினர். 

நிகழ்வு முடிந்தபோது மணி இரவு பத்தினை காட்டியது. நாங்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம். ஒவ்வொருவராக விடைப்பெற்றனர். இறுதியாக அந்த இருவரும் மட்டும் என்னருகில் நடந்துக்கொண்டே "என்ன பாத்து ஏன் சிரிச்சிங்க" என்று ஒருவரும் "என் ப்ரண்ட பாத்து ஏன் சிரிச்சிங்க" என்று இன்னொருவரும் மாறி மாறி கேட்டுக்கொண்டே வந்தனர்.

ஒரு நிமிடம் நின்றேன். 'ஒருவேளை சிரிச்சிருந்தாலும் நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்வளவு பெரிய தப்பில்லை. ஏன் இதை பெரிய பிரச்சினை போல மாத்த நினைக்கிறிங்க‌. அதையே கேட்க என்ன காரணம்' என்றேன். 'இல்லை நீங்க சிரிச்சது வேற மாதிரி இருந்தது' என்றார் நான் சிரித்ததாக குற்றம் சாட்டியவர். இதை கேட்டதும் உண்டான கோவத்தை வெளிக்காட்டிவிடாதபடி எப்படி இருந்தது என்றேன். 'வேற மாதிரி தப்பா இருந்தது' என்று தலையை குணிந்தார் குற்றம் சாற்றிய அதே தோழர்.

நேரம் வீணாவதை உணர்ந்த கணம் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் பத்து பதினைந்தை காட்டியது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. பஸ் போயிடும் நான் போறேன் என்று நடக்க எத்தனித்தேன். நான் மட்டும் உங்க கூட்டத்துக்கு வரேன்ல நீங்க கூப்டா வர மாட்டிங்களா என்று நின்ற இடத்திலிருந்தே உரக்க கத்தினார் அந்த தோழர்.

என் முன்னாடி மெல்ல நகர்ந்துச் சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் அலுவலகம் செல்ல ஏறிக்கொண்டேன். வேறொன்றும் தோன்றவில்லை புன்னகைப்பதைத் தவிர.

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. மனிதனின் செயல்பாடுகளுக்கு பின்னிருக்கும் காரணங்கள் மிக விசித்திரமானவை. அன்றைய அந்நிகழ்வு உணர்த்திய உண்மைகள் மிகவும் வியக்க வைத்தன. 


Comments

  1. எதிர்பார்ப்புகளில் ஊறி கட்டிடத்தின் போன உறவுகள் குறுக்கிடுகையில், அனுதாபத்தோடு கடந்து செல்ல வேண்டியது தான்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: