கவிதைகள்:
மௌனமும் அற்ற நிலையில்:
மெல்லிய சாக்பீஸ் கோட்டினைப் போல் ஒரே சுருதியில் பியானோ இசைக்கிறது.
மஞ்சளும் ஆரஞ்சுமற்ற நிறத்தில்
கருமை கலந்த ஜீரோ வாட்ஸ் அறை.
இந்த நீண்ட இரவில்
அறையின் இசையொடு
இலயித்த பாடலொன்றைப் பாடுகிறேன்
ஆழ்மௌன அதிதொனியில்
அன்றலர்ந்த ஒருசொல்லில்
மௌனமும் அற்ற நிலையில்.
இசையின் நடனம்:
இடது தோள்பட்டையோடு
அணைத்த வயலினை
வலது கையால் நரம்பு தேய்த்து
கண்கள் மூடி
வாசித்தேன்.
தன்
வெண்மையோடு அங்கங்கு
நீலம் பூத்த ஆடையை
விசிறிக்கொண்டு
ஆடத் தொடங்கியது
ஒருபாதி மனம்.
இசை
உச்சிக்குச் சென்று
மீள்கையில்
தலைக்கு மேல் தூக்கியிருந்த
வலது கையைப் பிடித்து
இடதுபுறமிருந்து
இடையைப் பற்றியது மீதிப்பாதி.
வளைந்தும்
சுற்றியும்
நெளிந்தும் சென்றது
இசையும்
நடனமும்
மாறி மாறி
ஆடிக் கழித்துக்
களைத்த கணம்
ஒரே மூச்சாய்
இசையை
இழுத்து நிறுத்தி
விழித்தேன்.
முடிவுக்கு வந்தது இசை.
ஆடிய களைப்பில்
மூச்சிறைத்தது மனம்.
Comments
Post a Comment