Joyland (Saim Sadiq)

ஆதி காலத்தில் பெண்கள் பிள்ளைகளைப் பெற்று பேணிக் காப்பதிலும் தன் வாழ்விடத்தைச் சுத்திகரித்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலும் முழு காலத்தையும் கழித்தார்கள் என்பது வரலாறு. காரணம் பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாள முடியும். அனேகமாக அந்த பொறுப்பினை அவர்களாகவே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். வேட்யையாடுதலைக் காட்டிலும் மிகவும் சிரத்தையான இப்பணிகள் பிற்காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. திருமணம் என்ற குடும்பமுறை சடங்கின் அடிப்படையில் ஒரு பெண் மீதான அத்தனை அடக்குமுறைகளும் இன்றுவரை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது மறுப்பதற்கில்லா உண்மை. இதற்கு மாறாக அப்போதே அவள் வேட்டையாடுதலை தேர்வு செய்திருந்தால் மனிதர்களின் தோற்றத்திலும் அதனால் ஏற்படக்கூடிய சமூக முன்னேற்றத்திலும் கணிசமான தோய்வு ஏற்பட்டிருக்கலாம். 

படம் பேசுகிறது:

பழமை மாறாத ஒரு ராணா குடும்பத்தில் நிகழும் சில சம்பவங்கள் தான் இந்தப்படம். (ராணா என்பது குடும்பப் பெயர்.) 

ஒரு பெண்ணுக்கு தான் தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் பிள்ளை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அது அவளது பிள்ளை தான். இந்த சமூகத்தில் பெண் பிள்ளை என்றால் ஒருவித சலிப்பு ஏற்பட முதல் காரணம் பெண் மீதான பார்வை. அவளது அடிமைத்தனம். இதன் விளைவு ஆண் பிள்ளை குடும்ப பெருமை என்பது தந்தைவழி சமுதாயத்தின் எழுதப்படாத விதியாக இருந்துவருவது. 

ஆண்பிள்ளை பிறக்கரவிருப்பதாக கூறி பிரசவத்திற்காக மருத்துவமனை செல்லும் ஒரு பெண்ணில் இருந்து தொடங்குகிறது படம். அப்பெண்ணுக்கு ஏற்கெனவே மூன்று பெண் பிள்ளைகள் இருக்கும்பட்சத்தில் நான்காவதாகவும் பெண் பிள்ளை பிறக்கிறது. பிரசவத்திற்கு பின் அப்பெண்ணின் முகத்தில் இருக்கும் இறுக்கமான அமைதி அழுத்தமானது.

திருமணமாகி முதன் முதலாக கருத்தரிக்கும் பெண் அதுவும் குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆண் பிள்ளை என்று தெரிந்தும் தாளமுடியாத மன அழுத்தத்தால் தன் வாழ்வை முடித்துக்கொள்ள துணிகிறாள். அப்பெண்ணின் செயல் சமூகத்தில் ஒரு பெரும் கேள்வியை முன் வைக்கிறது. பெண் என்றால் உணவு சமைக்க, வீட்டு வேலைகளை செய்ய, பிள்ளைகளைப் பெற்க என்று மட்டும் நினைத்திருக்கும் குடும்பத்தில் தன் உடலை வருத்தி ஒரு குழந்தையைப் பெற்றெடுடுத்து தரும் பெண்ணைக் காட்டிலும் இன்னும் பிறக்காத அவள் சுமக்கும் ஆண் குழந்தைக்கும் அக்குழந்தையின் தந்தைக்கும் இந்த இருவரால் அந்த குடும்பத்திற்கும் பெருமை என்று பேசும் ஒரு ஆண்மைய எண்ணத்திற்கு மாறாக "பெண் இருந்தால் தான் ஆண். அவள் அனுமதித்தால் தான் ஆண் இனம்" என்ற தெளிவை திடமாக முன்வைத்திருக்கிறார் இயக்குநர்.

யார் பெண். இந்த சமூகம் வைத்திருக்கும் பாதத்திற்குக்கூட பொருத்திப் போகாத கட்டுப்பாட்டிற்குள் முழு உடலையும் நுழைத்து சிக்குண்டு தவித்தாலும் அதிலேயே தன்னை மீண்டும் மீண்டும் மாட்டி வதங்கும் ஒரு உயிரினமா?  பிள்ளைப்பெற்கும் இயந்திரமா? அடிமைகளா? திருமணம் என்ற பெயரில் ஒருவனுக்கான உடைமையா? எப்படி யாரை கேட்டாலும் காலங்காலமாக பதிலற்று வெறும் கேள்வியாகவே நிலைத்துவிட்ட வார்த்தைகள் இவை.

ஓர் ஆண்மைய சமூகத்தில் பெண்ணுக்கு விருப்பபடுவதற்கான உரிமைகள் கூட எந்த வயதிலும் இருப்பதில்லை என்பது எத்தனைத் துயரம். 

போதிய திறன் இருந்தும் பாலின அடிப்படையில் திருநங்கைகள் எப்படியெல்லாம் பின்னுக்குத் தள்ளபடுகிறார்கள், தங்கள் வாழ்விற்கான ஒரு சிறு முற்சிக்குக்கூட  எத்தனை மெனக்கெடல்கள் தேவைப்படுகிறது. சமூகத்தில்  முன்னேற்றம் கண்டாலும் அவர்கள் மீதான பார்வை எப்படியானதாக இருக்கிறது என்று பிபா கதாப்பாத்திரத்தின் வழி விளக்குகிறது படம். 

பெண் என்பவள் வேறொன்றும் இல்லை அவள் ஆழி. மீப்பெரும் சமுத்திரம்.  வீரிட்டு எழுந்தால் ஒரு புல் பூண்டும் நிலைக்கொள்ளாது. பெண்ணே நினைத்தால் தான் அது வாழ்வு, குடும்பம், கணவன், பிள்ளை இன்னும் எல்லாம். ஒரு மும்தாஜின் உறுதி ஒரு ஆணின் பிறப்பைத் தடுக்கும் என்றால் இவ்வுலகில் சரிபாதி பெண்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டும்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட முதல் பாக்கிஸ்தானிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ஜாய்லேண்ட். அகடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. 

இயக்குநர் Saim Sadiq அவருக்கு இது முதல் திரைப்படம். இப்படத்திற்கு முன் இரண்டு குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். இவரது இரண்டாம் படமான 'டார்லிங்' படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை தான் "பிபா" பாத்திரத்திரமாக இப்படத்தில் விளக்கியிருக்கிறார். இயக்குநர் தனது கடைசி இரண்டு படைப்பிலும் திருநங்கைகள் குறித்து ஒரு தெளிவானப் பார்வையை சமூகத்தின் முன் வைக்கிறார். மேலும் ஜாய்லேண்ட் தன் குடும்பத்தை மையப்படுத்துகிறது என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

  1. சரசரவென சரளமாக வழுக்கிக் கொண்டு சறுக்கு விளையாட்டு விளையாடும், இந்த மாயாஜால எழுத்து, கூடுதல் மகோன்னதம் தருகிறது இந்த பெண் சமத்துவத்திற்கான படைப்பிற்கு.. பெண்ணியம் குறித்த ஆழமான பார்வை இந்த எழுத்திற்குள் ஒளிந்திருந்து, படிக்கையில் நுனி முதல் அடி வரை தீராத பரவசத்தை அள்ளி அள்ளி தெளிக்கிறது ❤️🌼✍️🤝💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: