நினைவோடை ( தொடர்ச்சி)

ஒரு ரம்மியமான காலை அது.  வேலைப்பழுவை சற்று தள்ளி வைத்துவிட்டு டீ டம்ளரோடு வகுப்பறைக் கதவோரம் வந்து நின்றேன். வார்த்தைகளற்ற கவிதையொன்றினை போல் விரிந்து கிடந்தது வானம். பிறகுதான் கவனித்தேன் கதவோரம் இருந்த படிகளில் அவன்! அழுதழுது அவன்‌ கண்கள்‌ வீங்கிச் சிவந்திருந்தன.

காலை பிரார்த்தனை கூட்டத்திற்கு பிறகு ஒரு நடுத்தர வயது பெண், முகத்தில் அத்தனைக் கோபத்தையும் அப்பிக்கொண்டு கையில் நீண்ட கம்புடன் ஒரு சிறுவனை உருட்டி மிரட்டி அழைத்துவந்து பள்ளியில் விட்டுவிட்டு கிளம்பிச் சென்றிருந்தார். அனேகமாக அச்சிறுவன் இவனாக இருக்கக்கூடும். அவள் இவனது உறவுப்பெண்ணாக இருக்கலாம் எனத் தோன்றியது. 

விசும்பிக்கொண்டிருந்த அவனருகில் சென்று அமைதியாக அமர்ந்தேன். என்னைக் கண்டதும் அவன் சற்றுத் தள்ளி அமர்ந்து முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான். நானும் விடுவதாக இல்லை. அவனருகில் நகர்ந்து சென்றேன். அவன் என் பக்கம் முகம் திருப்பாமல் வீம்பாக அமர்ந்திருந்தான்.

தேநீரின் முதல் மிடறோடு மெல்ல பேசத்தொடங்கினேன். 

"உன் பேரென்ன?"

ஒரு பதிலுமில்லை.

"எங்கருந்து வர?"

பதிலில்லை.

சில நிமிடங்கள் மௌனம்.

"எனக்கும் சின்ன வயசுல பள்ளிக்கூடம்லாம் பிடிக்காது. வரவே மாட்டேன். காய்ச்சல்னு சொல்லி வீட்லையே இருந்துப்பேன்." என்றேன்.

ஒரு அசைவும் இல்லை அவனிடம்.

"எங்கம்மாவும் இப்படித்தான் என்னைய அடிச்சி இழுத்துட்டு வரும் தெரியுமா?" என்றேன். 

மௌனமே தொடர்ந்தது அவனிடம்.

"எங்க அம்மா என்னை கூட்டிட்டு வந்தாலும் நான் மறுபடியும் ஓடிப்போய்டுவேன். அப்படி ஒரு முறை ஓடும்போது துரத்திட்டு வந்து, அதோ அந்த கேட் முன்னாடி விழுந்து பாவம் எங்கம்மாக்கு அடிபட்டுடிச்சி" 
என்று முடித்து அவனைப் பார்த்தேன். பாதியளவு இருந்த தேநீர் நீர்த்திருந்தது.

அவன் முகம் சிறிதாக என் பக்கம் திரும்பியிருப்பதாகத் தெரிந்தது. 

"ஆனா அப்போல்லாம் எனக்குத் தெரியாது நா இதே பள்ளிக்கூடத்துக்கு டீச்சராவேன்னு."

முழுவதுமாகத் திரும்பி எனை பார்த்தபடி அமர்ந்தான். ஒரு கதை கேட்கும் ஆவலில்.

கடைசி மிடறு தேனீரை அருந்தி முடித்தேன்.

 "யாருக்குத் தெரியும் நாளைக்கு நீயும் கூட பெரிய வாத்தியாராகி இங்கயே வேலைக்கு வரலாம்."

கண்களை அகல விரித்து என்னைப் பார்த்தான்.

வெறும் தம்ளருடன்  வகுப்பிற்குத் திரும்பினேன். 

சில நிமிடங்கள் சென்றிருக்கும்.
வகுப்பெடுத்துக் கொண்டிருந்த எனது குரலை "மிஸ்" என்ற சின்ன குரல் குறுக்கிட்டது. குரலின் திசையில்  திரும்பினேன். வெளியே அழுது கொண்டிருந்த அதே சிறுவன். ஈரக் கண்களோடு "மிஸ், நான் உள்ள வரலாமா?" என்றான். தலையசைத்தேன். 

என் தோட்டத்தில் ஒரு பூ மலர்ந்தது. 

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: