நினைவோடை


கீதா மிஸ்.. சிறுவன் அழைத்ததன் பொருட்டு திரும்பினேன்.

என்ன பா..

இங்க‌ வாயேன்.. என்றான்.

ம்... வந்தாச்சு.. இரண்டு அடிகள் முன் சென்றேன்.

இங்க உக்காரு கீதா மிஸ்.. 

ம்ம் கொட்டிக்கொண்டே உக்கார்ந்து பின் என்ன வேணுமாம் சாருக்கு என்று வார்த்தையை நீட்டினேன்.

நா.. உனக்கொரு கத சொல்லவா..? என்றான்.

கதையா...? ம்ம்ம் சரி சொல்லு.. கேட்போம்...

ஒரு ஊருல.....   .... என்று தொடங்கியவன் சற்று நிறுத்தி 
ஆமா... எனக்கு மூனு கத தெரியும்.. உனக்கு எந்த கத வேணும்.. என்றான். மாத தேர்வு அப்போது தான் முடிந்திருந்தபடியால் தேர்வு பேப்பரை எடுத்து திரித்திக்கொண்டே பதிலுரைத்தேன். மூனு கதையா..? என்னென்ன கத?

ஒரு காக்கா கத,
ஒரு ராஜா கத,
அப்புறம் மூனுகண்ணி கத.. உனக்கு எது வேணும்.. என்று மூன்று விரல்களை காட்டினான்.

மூனுகண்ணியா..? நல்லாருக்கே எனக்கு அதுவே சொல்லு.... என்றபடி திருத்தத்தில் புகுந்தேன்.

சரி.. நான் சொல்லுவேன் நீ உம் சொல்லனும் சரியா..

உம்.. சரி.. 

ஒரு ஊருல ஒரு பெரிய வீடு இருந்ததாம்.. அந்த வீட்டுல மூனுபேரு அக்கா தங்கச்சிங்க இருந்தாங்களாம். அதுல ஒருத்தி பேரு மூனுகண்ணியாம்... 
பாவம் அவ.. அவங்க வீட்டுல யாருமே அவள பாத்துக்க மாட்டாங்களாம்... 
எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பாங்களாம்.. ஆனா எல்லா வேலையும் அவ மட்டுமே செய்வாளாம்‌‌.. சாப்பாடு கூட சரியா தரமாட்டாங்களாம்.. பாவம்ல, கீதா மிஸ்.. என்று நிறுத்தினான் அவன். 

மதுரா என்று தவறாக இருந்த வார்த்தையை சிவப்பு மையால் வட்டமிட்டு மூதுரை என்று திருத்திவிட்டு ஆமா ஆமா... ரொம்ப பாவம்.. அப்புறம் என்னாச்சு... என்றேன். 

அப்புறம் பாட்டிக்கிட்ட காக்கா வந்து வடை கேட்டுச்சாம்... 
பாட்டி , தரமாட்டேன்‌ போ னு சொல்லுச்சாம்.. 
உடனே காக்கா என்ன பண்ணிச்சு தெரியுமா?

பம்பரம் என்ற சொல்லில் பா நெடிலானதால் பொருள்மாறிப்போனது. அதை அடித்துவிட்டு என்ன பண்ணுச்சு... என்றேன்.

அந்த சிங்கம் ராஜாவை பாத்து  வேகமா ஓடிவந்துச்சி பாரு....

திருத்திய பேப்பரை கீழே அடுக்கிவைத்துக்கொண்டே பதில் கூறினேன் ம்ம்ம்.. என்னாச்சு ராஜாக்கு.. 

கீதா மிஸ்... சாய்ந்தரம் வீட்டுக்குப் போவேன்ல அப்போ எங்க வீட்டுக்கு நீயும் வரியா...? 
எங்க பாட்டி பெரிய டம்ளர்ல எனக்கு நெறைய காஃபி தரும். நா அதுல உனக்கும் தரேன்..

வரேன் குட்டி... என்று பேப்பரை எண்ணிக்கொண்டிருந்தேன். பேப்பரின் கசங்கள் ஓசையைக் கேட்டவன் அந்த பேப்பரைக் கீழ வையேன் என்றான். அவனது முகபாவனையைப் பார்த்து சரியென்று கொஞ்சியப்படி பேப்பரை கீழே வைத்தேன்.

கீதா மிஸ்... 
எங்க வீட்ல எங்க அம்மா என்ன நல்லா பாத்துப்பாங்க தெரியுமா...? 
பாட்டி தான் சாப்பாடு ஊட்டிவிடும்.. 
அக்கா எப்பவும் என்னோட வெளையாடுவா...  

நீ யாரு மாதிரி இருப்ப... 
அம்மா மாதிரி இருப்பியா ... 
பாட்டி மாதிரி இருப்பியா... இல்ல 
அக்கா மாதிரி இருப்பியா...  கீதா மிஸ்.. 

நானா...? ம்ம்ம்... 

நீ இப்போ ஒரு கதை சொன்னல்ல.. அதுல வர மூனுகண்ணி மாதிரி இருப்பேன்.... என்றேன். கன்னங்களைத்  தொட்டுப்பார்த்து சிரித்தான் சிறிதும் ஓசையின்றி. பதிலுக்கு நானும் சிரித்தேன்.

பள்ளிமுடிந்து மாலை மணியடித்தது. வகுப்பறை வந்த கண்ணனின் தாய் அவனது கையைப்பற்றி அழைத்துச் சென்றாள். நுழைவு வாயில் செல்லும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றவனின் வலது கையில் மூன்று விரல்கள் நீட்டியப்படியே இருந்தது விரலோடு அந்த மூன்று கதைகளும்..


Comments

  1. இறுதி எழுத்துகளில் இன்பம் நிறைந்திருந்தது...💫💎🪄

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: