Radiance (Naomi Kawase)

ஒரு திரைப்படத்தைப் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு விளக்க என்ன செய்யலாம். வெறுமனே கதைக்கூறல் போதுமானதா? அப்படியானக் கதைக்கூறலால் ஒரு முழு திரைப்படத்தையும் அவர்களால் உணர்ந்துக்கொள்ள கூடுமா? முடியாது. கலைக்கு முன்னிருக்கும் யாருமே பார்வையாளர்கள் தான்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு திரைப்படத்தை எவ்வாறு விளக்கலாம், அப்படியான விளக்கத்தில், பார்வையற்றப் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு எப்படியாக அமையும், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய எவ்வளவு உழைப்புத் தேவைப்படுகிறது என்பதை குறித்து ஆராய்கிறது இப்படம். 

முழு திரைப்படத்திலும் ஒரு சிறியக் காட்சிக்கூட திரையில் தோன்றவிடாமல் அந்தப் படத்தின் வசனங்களுக்கு பார்வையாளர்களின் முகப்பாவனைகளை மட்டும் வைத்து "சிரின்" (Shirin 2008) திரைபடத்தை உருவாக்கியிருப்பார் இரானிய இயக்குநர் Abbas Kiarostami. படத்தின் உணர்வுகள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் பெண்களின் முகங்களின் வழி பிரதிபலிக்கும் நமக்கு. முதல் முறை சிரின் திரைப்படத்தைப் பார்ப்போருக்கு எத்தனை வினோத முயற்சி என்று வியக்கத்தோன்றும். 

ஆனால் இச்சூழல் மாறுபட்டது. பார்வை குறைபாடுடைய பார்வையாளர்களுக்கு ஒரு திரைப்படத்தை அதன் உணர்வுகள் சற்றும் குன்றிவிடாமல் அப்படியே கொண்டு சேர்க்கும் வழி மிக கடியது. முற்றிலும் இம்முறை பார்வையாளர்களின் கற்பனையை மையமாக வைத்து நிகழ்த்தப்படுவது. அக்கற்பனைக்கு தோதாக காட்சிகள் சிறிதும் பிசகாமல் அப்படியே மொழியாக உரைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

" ஓர் அழகிய காலை வேளை அது. பறவைகள் பறந்து செல்கின்றன. சூரியன் மெல்ல உதிக்கத் தொடங்குகிறது. சூரியனின் ஒளிக் கதிர்கள் மஞ்சள் நிறத்தில் மினுங்குகின்றன. சூரியனின் ஒளி பட்டு கடல் நீரும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. அலைகள் மிகுந்த  சத்தத்தோடு ஓயாமல் கரையில் மோதுகிறன. கரையில் அழகிய பெண் வடிவிலான மணற் சிற்பம் ஒன்று உள்ளது. ஓர் ஆளுயரம் இருக்கும் அந்த சிற்பம் தன் வலது கையில்  ஒரு நீர் குடத்தை வைத்திருக்கிறது. அந்த சிற்பத்தில் இருக்கும் பெண்ணின் இடது கை அப்பெண்ணின்  உடலில்  இருந்து நழுவும் மேலாடையைப் பற்றி  இருக்கிறது. அலைகள் சிற்பத்தின் மீது மோதுகின்றன. சிற்பம் அலைகள் மோதி மோதி மெல்ல உடைகிறது. பிறகு நீரோடு கரைந்து கலக்கிறது." இது ஒரு காட்சிக்கான குரல் விவரணை என்று வைத்துக்கொள்ளலாம்.

பொதுவான பார்வையாளன் இக்காட்சிகளை முன்பு எப்போதோ எங்கேயோ பார்த்திருக்கலாம. அந்த அனுபவத்தில் அக்காட்சிகளை மனதில் ஓடச்செய்து அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் பார்வை குறைபாடுடைய ஒரு பார்வையாளனுக்கு அந்த காட்சிகள் குறித்தும் அது ஏற்படுத்தும்  உணர்வுகள் குறித்தும் எந்த முன் அனுபவமும் இல்லாமல் போவதால் "அந்த சிற்பம் நின்ற நிலையில் இருந்ததா? அல்லது படுத்த நிலையில் இருந்ததா?, அந்த சிற்பத்தின் விழிகள் மூடியிருந்தனவா? அல்லது விழித்த நிலையில் இருந்தனவா?, சிற்பம் அழுதுக்கொண்டிருந்ததா? அல்லது சிரித்த நிலையில்  இருந்ததா? சிற்பத்தில் இருக்கும் பெண்ணின் கையில் இருந்த குடத்தில் என்ன இருந்திருக்கும், வானில் பறந்த பறவைகள் இரண்டா? அல்லது  கூட்டமாகவா? என்ன பறவை? இப்படியாக சில நுணுக்கமான சந்தேகங்கள் வரக்கூடும். இப்படி சிறு சிறு நிகழ்வுகளைக் கூட கவனித்து செயல்படுவது பெரும்பணி.


ஒரு வசனம், அந்த வசனத்தை பேசும் மனிதனின் பெயர், அவரின் உயரம், அவர் தோளின் நிறம், சிகை அலங்காரம், அவர் இருக்கும் இடம், அதன் சூழல், அந்த சூழலில்  இருக்கும் பொருட்கள், பொருட்களின் அமைவு, நேரம், அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆடையின் நிறம், அந்த ஆடையின் அசைவு உட்பட கேமரா சென்றவழியெல்லாம் பதிவிக்கும் ஒவ்வொரு காட்சியையும் விளக்குவது என்பது அத்தனை எளிதானச் செயலாகத் தோன்றவில்லை. ஆனால் இப்படியான பார்வையாளர்களுக்கு ஒரு திரைப்படத்தை உணர்த்த இத்தனையும் தேவை என்பது உண்மை. ஆகையால் இப்பணி ஒரு தியானத்தைப்போல் மிக பொறுமையாக நிதானமாக கையாள வேண்டிய அளவிற்கு பொறுப்புடையது என்ற புரிதலை நிறைவாக உண்டாக்கியது இப்படம். 

படத்தில் பார்வை குறைபாடுடைய பார்வையாளர்களுக்கு ஒரு படத்தை கதைக்கூறலின் வழி நிகழ்த்தும் நிறுவனத்தால் கதை விளக்கும் பணிக்காக நியமிக்கப்படும் இளம்பெண்ணாக Masatoshi Nagase தோன்றியிருக்கிறார்.  சிறுக சிறுக தன் பார்வையை இழந்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்பட கலைஞராக பார்வையற்ற பார்வையாளர்களின் இடத்திலிருந்து Masatoshi Nagase தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதாக படம் மெல்ல நகர்கிறது. படம் முழுவதிலும் அங்கங்கே ஒளிக்கதிர்கள் மினுங்குகின்றன. பல இடங்களில் கேமரா கோணங்கள் மிகவும் ரசிக்க வைத்தன.

முற்றிலும் புதிய அனுபவம். 


Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: