எழுத்தும் நானும் (தொடர்ச்சி)
கதை ஒரு மனிதனின் வாழ்வோடு பிணைந்த ஒன்று. சிந்தித்தால் நமக்கு கூறப்பட்ட, இன்னும் கூறப்படாத கதைகள் எல்லாம் யாரோ வாழ்ந்த, வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்வாகவே இருக்கும். ஒரு கதை கேட்ட மாத்திரத்தில் அதன் இயல்பில் இருந்து பூதாகரமாகி கட்டற்று திரிந்த காலமென்றால் அது மனிதனின் பால்யமாகத்தான் இருக்கும். என் பால்யம் அப்படியானதில் தான் என் வாழ்வும் முழுமையை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.
எனக்கு தந்தை வழி பாட்டிகள் இருவர். அதில் மூத்தவர் கிருஷ்ணம்மாள். இப்போது நினைத்தாலும் அவளது முந்தானையின் எண்ணெய் பிசுகு வாடை நினைவெழும் எனக்கு. அவள் பிசைந்தூட்டிய பிடி சோறு, என் உறக்கத்திற்காக அவள் பாடிய தாலாட்டுப் பாடல், மாலையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் மடிசாய்த்துக்கொண்டு அவள் உறைத்த மாயக்கதைகள்.. தன் தகரப்பெட்டிக்குள் எனக்காக சேர்த்திருந்த இளஞ்சிவப்பு சில்க் புடவை.. இப்படி என் பால்யம் முழுவதிலும் அவள் வாசனை ஏராளம்.
மிக மெல்லிய குரல் அவளுக்கு. அப்போது தான் பிறந்திருந்த ஒரு குட்டிப்பூனையின் குரல் அது. தடிமனான அரசாங்கம் அளித்த கறுப்பு நிற கண்ணாடி ஒன்றை எப்போதும் அணிந்திருக்கும் பாட்டியின் சிறு முகவெட்டிற்கு அந்த கண்ணாடி ஒருபோதும் பொருந்தியதேயில்லை. அவள் அதை துறந்ததுமில்லை. இதனாலேயே ஊரில் கண்ணாடி ஆயா என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டாள். அறியவும்பட்டாள்.
பாட்டிக்கு இடி என்றாலும் இருள் என்றாலும் பயம் தொற்றிக்கொள்ளும். மழை வரும் நாட்களில் எல்லாம் மிக நெருக்கமாக பேரப்பிள்ளைகளை அணைத்துக்கொண்டு இடி சத்தத்திற்கு 'அர்சுனா.. அர்சுனா..' என்று குரல் எழுப்பும் பாட்டியிடம் 'ஏன் அப்படி கூப்டுற' என்று ஒருமுறைக் கேட்டேன். என் கேள்விக்கு வானத்துக்கு மேல சண்ட நடக்குது. அதான் இடி இடிக்குது. ஆனா அந்த இடி நம்ம மேல விழாம அர்சுனன் பாத்துப்பான் அதுக்குத்தான் அவன கூப்பிடுறேன் என்று விளக்கம் சொல்வாள். இது உண்மையாக இருக்குமா என்று சிந்திக்கும் அளவிற்கான புரிதல் அப்போது இருந்திருக்கவில்லை எனக்கு. ஆனால் அச்சமயம் கேட்ட இடி சத்தங்கள் மேலே யாரோ சண்டைட்டுகொள்வதைப் போலத்தான் இருந்தன.
இருள் பயத்தால் எப்போதும் இரவில் தான் உறங்கும் கட்டிலுக்கு அருகில் ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கை எரிய விட்டே உறங்குவாள் பாட்டி. அவளோடு தான் நானும் உறங்குவேன். நான் உறக்கம் கொள்ளாத நாட்களில் அவள் உறங்கியபின் அந்த மண்ணெண்ணெய் விளக்கில் சுடரின் அசைவை உற்று நோக்கியபடியே வெகுநேரம் அமர்ந்திருந்த நினைவெழுகிறது இப்போதும்.
பாட்டிகூறும் கதைகளில் தான் எப்போதும் வாத்துகள் பேசின, தவளைகள் பாடின, மழை அழுதது, யானைகள் சமைத்தன, குரங்குகள் வேலைக்குசென்று பணம் சம்பாதித்தன. முயல்கள் வேட்டையாடின. அக்கதைகளில் மனிதனோடு எந்த உயிரினமும் எந்த வகையிலும் வேறுபடவில்லை. முரண்பட்டதும் இல்லை.
விதவைகள் நலனிற்காக ஒரு கணிசமானத் தொகையினை மாதாமாதம் அரசாங்கம் அளித்துவந்தது. அச்சமயம் அது 150 ரூபாய். அப்பணம் அப்போது பாட்டிக்கும் கிடைத்துவந்தது. தனது இலவசத் தொகையில் மூன்று மாத தொகையை சேர்த்து வைத்திருந்த பாட்டி ஒருநாள் என்னை டவுனிற்கு கூட்டிச்சென்றாள். நடுவில் நீலக்கல் வைத்து அதைச் சுற்றி ஐந்து வெள்ளைக் கற்கள் பதித்த ஆறுக்கல் மூக்குத்தி ஒன்றை வாங்கி மூக்குக்குத்திவிட்டு அழகுப்பார்த்தாள். 'பொண்ணுக்கு பொறுமை தானே முக்கியம். அதுக்குதான் மூக்கு குத்துறது, இனி நானே மன்னை விட்டு போனாலும் என் பேத்திக்கு என் நெனவு போகாது' என்று பெருமைப் பேசிக்கொண்டாள். அவள் கூறியதைப்போல் ஒவ்வொரு முறை கண்ணாடி பார்க்கும்போதும், பார்ப்பவர்களில் யாராவது என் முகத்தில் இருக்கும் மூக்குத்தி குறித்து பேசும்போதும் அவள் நினைவு தான் முதலில் எழும்.
பாட்டி என்னை கொஞ்சும் பொழுதெல்லாம் 'மயிலம்மா' என்று அழைப்பதுண்டு, அந்த பெயர் சொல்லி அவள் என்னை அழைக்கும்போது என் சகோதரன் நான் வெறுப்பாகுமளவு சிரித்துவிடுவதும் இதனால் நான் சினுங்களோடு 'இந்த பேரே எனக்கு பிடிக்கல என்னை அப்படி கூப்பிடாத' என்று அந்த இடத்திலிருந்து வெளியேறுவதும் வீட்டின் அன்றாடமானது. அப்படி நான் வெளியேறும் பொழுதெல்லாம் இந்த பேருக்கு என்னவாம் இப்போ என்ற சமாதானத்தோடு பின்தொடர்வாள் பாட்டி. பாட்டிக்கு பிறகு பலமுறை சிந்தித்திருக்கிறேன் மயிலம்மா என்ற பெயரில் ஒரு குறையும் இருக்கவில்லை தான்.
சிறுவயதில் பள்ளி செல்ல நான் விரும்பியதேயில்லை. எதாவது ஒரு காரணம் கூறி அடிக்கடி விடுப்பு எடுத்து கொள்வேன். அதிகமாக விடுப்பெடுத்த நினைவு ஆறாம் வகுப்பில் தான். அப்போது என் வகுப்பு ஆசிரியர் சண்முகம் வாத்தியார். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற தடிமனான உடல்வாகு அவர். எனக்கென்னவோ அவரை கண்டாலே ஒரு வித அச்சம் தொற்றிக்கொள்ளும். அதனாலோ என்னவோ பள்ளிக்குச் செல்லும் ஆர்வம் முற்றிலும் அற்றுப்போனது.
நானெடுத்த விடுப்பு நாட்களுக்கு என்னை காட்டிலும் அதிகமாக வகுப்பிற்கு வெளியே நின்றது பாட்டியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு விடுப்பிற்குப் பிறகும் என்னை பள்ளிக்கு அழைத்துவந்து வகுப்பில் விட்டுச் செல்வது அவள்தான். 'காரணமே இல்லாம எதுக்கு இந்த பிள்ள இவ்ளோ லீவ் போடுறா. டி.சி தரசொல்றேன் கூப்டு போங்க இவ படிச்சி என்ன பண்ண போறா? என்று சண்முகம் வாத்தியார் ஒவ்வொரு முறையும் கோவத்தோடு கத்திவிடுவார். அத்தனை கத்தலுக்கும் அமைதிக்காத்து பொறுமையுடன் வகுப்பின் வாசலிலேயே என்னோடு நிற்பாள் பாட்டி. சிறிது நேரத்திற்கு பிறகு வாத்தியாரே சமாதானம் ஆகி 'இம்புட்டு வயசுல இந்த புள்ளைக்காக அலையிரல உம்முகத்துகாக விடுறேன்' என்று மீண்டும் என்னை வகுப்பிற்குள் அனுமதிப்பார். பாட்டிக்கு படிப்பு வாசனை கூட தெரியாது. அந்நாட்களில் ஒவ்வொரு நாள் வகுப்பிற்கு வெளியே நிற்கும்போதும் என்னைவிட அவள் முகம் அடைந்த கலவரம் இன்னும் என் கண்களிலேயே ஒட்டியிருக்கிறது. இன்று நான்கு பட்டங்கள் பெற்றாயிற்று. அவள் கலவர முகத்தை நெஞ்சில் தாங்கி.
ஏழெட்டு பேரப்பிள்ளைகளோடு ஆடு, மாடு, நாய், பூனை, புறா, கோழி என ஒரு பட்டாளத்தையே வளர்த்து வந்த பாட்டிக்கு நானும் வீட்டில் வளர்த்துவந்த செம்பருத்தி பூச்செடியும் ஒன்றுதான். என் அழுகைக்கும் சரி செடியின் நோய்மைக்கும் சரி ஒன்றுபோலவே துடித்துப்போவாள்.
நாள் முழுக்க பழுப்பு அரிசியையும் கறுப்பு அரிசியையும் பிரித்தெடுக்கும் வேலையில் தன்னை ஆழ்த்தியிருக்கும் பாட்டிக்கு உப்பு, புளி, காரம் சேர்க்காமல் கூட அறுசுவையோடு பரிமாறு கைப்பக்குவம். தன் விரலில் இருந்து மார்பகம் கடந்து காதுமடல் வரை பச்சைக் குத்தியிருக்கும் மேலாடை அணியாத மேனியில் ஒன்றல்ல ஓராயிரம் கதைகள் திரிந்திக்கொண்டிருந்தன. அவைகளின் பொருளென்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்வதற்குள் என்னையும் மண்ணையும் நீங்கியிருந்தாள் பாட்டி.
அவள் கூறிய கதைகளும் கதைப்பாடல்களும் தான் பிற்காலத்தில் வாசிப்பைத் துண்டியிருந்தன. அவளற்ற தனிமையை நூல்களும் நூலுரைக்கும் கதைகளும் இன்றுவரை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.
பாட்டி தாத்தா கதைகளை கேட்காத பலரில் நானும் ஒருவன் .. அவர்கள் எனக்கு கதைகளை சொல்லியதாக நினைவில்லை ..ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்களின் கடந்த காலம் பற்றி சொல்லி இருக்கிறார்களா ... நீங்கள் சொன்னது போல பாட்டி அதில் தேர்ந்தவர் ... நான் சிறுவயதிலேயே இருக்கும்போது என்னை ஒத்த வயதுடைய சிலர் என்னோடு அலைந்து திரிய நேரும் அப்படி எங்காவது நாங்கள் அவரின் கண்ணில் பட்டால் இவன் கூடலாம் யேண்டா கூட்டு சேருற இவன் தாத்தா நமக்கு என்ன பண்ணான் தெரியுமா அப்படினு செத்துப்போன ஆளலாம் திட்டிட்டு இருப்பாங்க ... அப்போது இருந்த அறிவிற்கு இந்த கிழவி வேற அப்டினுதான் தோணும் ... நான் கதைகளை வாசிக்க அல்லது கேக்க ஆரம்பிச்ச காலகட்டம் ல அவங்க இல்ல. இல்லைனா இன்னும் நெறைய மனிதரின் கதைகளை கேட்டு அறிய முடிந்திருக்கும் அக்கா ....
ReplyDeleteஆமாம் தம்பி. சிலர் இப்படியும் இருந்தார்கள்.
Delete