எழுத்தும் நானும் (தொடர்ச்சி)


கல்லூரியின் முதல் பருவம் அது. ஒரு நாள் மதிய உணவிற்குப் பிறகு ஒரு அழைப்பு வந்தது. சித்தப்பா அழைத்திருந்தார். 'இன்று "வின்" தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வு இருக்கிறது நீ சென்று கலந்துகொள்' என்றார். 'கன்னிமாரா நூலகத்தில் காத்திரு. நண்பர் பெரியசாமி வந்து உன்னை அழைத்துச் செல்வார்' என்று அழைப்பைத் துண்டித்தார்‌. என்ன நிகழ்வு அது?, நான் சென்று என்ன செய்ய வேண்டும்? என்றெல்லாம் எந்தவிதமான கேள்விகளும் என்னிடம் இல்லை. சித்தப்பா சொல்லியிருக்கிறார். ஆகையால் நான் செல்ல வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. கன்னிமாரா நூலகம் சென்றேன். அத்தனை பெரிய நூலகத்தை அப்போது தான் முதல்முறையாகக் கண்டேன். அதற்கு முன்னால் எதற்கெல்லாம் நான் வியந்திருப்பேன் என்று நினைவில்லை. அன்று அந்த அளவிற்கு வியந்தேன். 

நூலகத்தின் உள்ளே சென்றேன். எங்கும் அமைதி. புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பும் சிறு ஓசைக்கூட அந்த அமைதியில் பிரதிபலித்தது. ஒருமுறை சுற்றிப்பார்த்தேன். அங்கிருந்த ஒரு வட்டமேசை மீது சில நூல்கள் பரப்பப்பட்டிருந்தன. ஒரு நூலை எடுத்துப் பார்த்தேன். மிகப் பழைய நூல். பக்கத்தில் இருந்த வேறொரு நூல் தமிழ் அகராதி என்றிருந்தது. தமிழுக்கு எதுக்கு அகராதி என்று தோன்றியது. அப்போதிருந்த என் அறியாமைக்கு இப்படி தோன்றாமல் இருந்திருந்தால் தான் வியப்பு. சில நிமிடங்கள் இருக்கையில் அமர்ந்தேன். அந்த இருக்கையின் மறுபுறத்தில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் மீண்டும் மீண்டும் தன் மூக்கில் நழுவி வரும் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டே புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தார்.

அச்சமயம் எதுவும் வாசிக்கத் தோன்றவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அந்த அமைதி ஏதோ ஒரு சோர்வைத் தந்தது. எழுந்து நூலகத்தை விட்டு வெளியேறினேன். நூலக வாயிலின் அருகேயிருந்த ஒரு மரத்தினடியில் வந்து அமர்ந்து கொண்டேன். ரம்மியமாகக் காற்று வீசியது. மரத்தின் தாழ்வான கிளையொன்றில் இரண்டு குருவிகள் மாறி மாறிப் பாடிக்கொண்டிருந்ததன. என்னைப்பற்றித்தான் பாடிக்கொள்கின்றனவோ என்று மயங்கியது என் நெஞ்சு. அந்த சலசலப்பில். இடையே ஒரு அணில் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் தாவித்தாவி ஓடிக்கொண்டிருந்தது. எனக்கென்னவோ அந்த அணிலின் அலைவுகளில் கடல் அலைகள் நினைவில் எழுந்தன. மரத்தினடியில் சிவப்பு நிற வண்டுப்பூச்சிகள் இரண்டு ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டே நகர்ந்தன. ஒரு சமயம் இடதுபுறம் பூச்சியின் திசையிலும் மறு சமயம் வலதுபுறம் பூச்சியின் திசையிலும் ஒரு  கோடிட்டபடி அவை சென்றது சிறந்த இணைக்கான சான்றாகக் தோன்றியது. காற்றில் அலையும் இலைகளின் நிழலும் அதற்கேற்ப அசைவது, ஒரு பாடலுக்கான இசையைச் சுருதி தப்பாமல் ரசிக்கும் தேர்ந்த ரசிகனின் கைத்தாளத்தை ஒத்திருந்தது. இப்படியே இவைகளுடன் சிலநேரம் கழிந்தது. 

இதற்குள் பெரிசாமி அண்ணா அங்கு வந்திருந்தார். என்னை அழைத்தவர் 'ஏன் வெளிய உக்காந்திருக்க உள்ளே போய் எதாவது படிச்சிருக்கலாமே' என்றார். நான் பதிலுறைக்க எத்தனித்தேன். அதற்கெதுவும் அவகாசம் தராமல் சரி வா போலாம் என்று நடந்து சென்றுகொண்டே இருந்தார். என்னால் மெதுவாகத்தான் நடக்க முடியும். ஆமை நகர்வதைப்போல. அப்படி நடப்பது பிடிக்கும். பிறந்து வளர்ந்தது நகரமாயினும் நகரத்தின் சாலைகளில் சுற்றித்திரியும் அந்தச் சுதந்திரம் எனக்கு புதிது. அதனால் சாலையோரங்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடப்பேன். சிலநாட்கள் இப்படியே பழகியிருந்ததால் பெரியசாமி அண்ணாவின் நடை வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாமல் போனது. இரண்டொரு முறை நின்று அழைத்துச்சென்றவர் பிறகு வேகத்தைக் குறைத்து என் வேகத்திற்கு நடந்தார். 

இன்னைக்கு ஒரு கவிதை மன்றம் இருக்கு. அதுல தான் நாம பேசப்போறோம் என்றார் அண்ணா. நீ எதாவது எழுதினியா என்றார் என்னிடம். இல்லை ணா எழுதிய  சில கவிதைகள் விடுதியில் இருக்கு என்றேன். சரி நான் ஒன்னு எழுதிருக்கேன் அதையே வாசி என்று நான்கைந்து பக்கங்கள் கொண்ட ஒரு நெடுங்கவிதையை நீட்டிக்கொண்டே நடந்தார். அதை வாங்கினேன். சில நிமிடங்கள் வாசித்துக் கொண்டே நானும் நடந்தேன். இரண்டு பக்கங்கள் வரை வாசித்திருப்பேன். அதற்குள் அண்ணா கேட்டார் என்ன எதாவது புரிஞ்சதா? கவிதை எனக்கு புரியாதோ என அண்ணா நினைத்திருக்கூடும் என்று உணர்த்தியது அவரது கேள்வி. 

பெரியசாமி அண்ணா நிறையப் படிப்பவர். கல்லூரி உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். எத்தனையோ மாணவர்களை அவர் அறிந்திருக்கக்கூடும். கற்றலிலும்  கற்பித்தலிலும் நன்கு அனுபவம் பெற்றவர். சிறுவயது முதலே வீட்டிற்கு வருவார். வீட்டிலேயே முதல் முறையாகக் கல்வி வாசனை வீசியது  சித்தாப்பாவால் தான். அதனால் வீட்டில் சித்தப்பாவிற்குப் பெரும் மரியாதை இருந்தது. அவருக்கு மட்டுமன்றி வீட்டிற்கு வரும் அவரது நண்பர்களுக்கும் வீட்டில் அதே மரியாதை செலுத்தப்பட்டது. நானும் பெரிசாமி அண்ணாவும் ஓரிரு முறை சந்தித்திருக்கிறோம். ஆனால் நலம் விசாரித்துக்கொண்ட நினைவுகள்  மட்டும் தான் உண்டு. ஆகையால் என்னைக் குறித்த அவரது அவதானிப்பு அவர் இடத்திற்கு சரியாகவே தோன்றியது.

நான் கூறினேன். ஓ.. நல்லாப் புரிஞ்சதே என்று. முழுசா படிச்சிட்டியா என்றார் மீண்டும். ‌இல்லை இரண்டு பக்கங்கள் படிச்சேன் என்று பதிலுரைத்தேன். சரி என்ன புரிஞ்சது சொல்லு என்றார். என்னை மாதிரி ஒரு பொண்ணு சென்னைக்குப் படிக்க வரும்போது அவ வீட்டுத் திண்ணைக்கிட்ட அவளோட  உணர்வுகளைப் பகிர்ந்துக்கிட்டா எப்படி இருக்கும். அதான் இந்தக் கவிதை என்றேன். நடையை நிறுத்தி நிதானமாக திரும்பி என்னைப் பார்த்தார் அண்ணா. பரவாலையே. ரெண்டு பக்கத்துலயே புரிஞ்சிக்கிட்டியே என்று புன்னகைத்தபடியே நடந்தார். 

வழியில் இன்னும் இரண்டு அண்ணாக்கள் எங்களோடு வந்து இணைந்தனர். சென்னை எக்மோர் சாலையில் ஒன்றாக சேர்ந்து நடந்து சென்றோம். ஒரு சாலையோரக்கடையில் ப்ரட் ஆம்லெட் ஆர்டர்  செய்தார் பெரிசாமி அண்ணா. பழக்கமில்லாத உணவு என்பதால் நான் பேருக்காக ஒரு துண்டை மட்டும் எடுத்துக்கொண்டேன். மற்ற மூவரும் பகிர்ந்துண்டனர். பிறகு அனைவரும் "வின்" தொலைக்காட்சி அலுவலகம் சென்றோம். இதற்குள் மணி மாலை ஆறைக் காட்டியது. 

நிகழ்ச்சி தொடங்க சில நிமிடங்கள் இருந்தன. தொலைக்காட்சி  குழுவில் ஐந்து நபர்கள் பங்கேற்க வேண்டும் என்றனர். நாங்கள் நால்வர் இருந்தோம். இறுதியாக அடுத்தொரு அண்ணாவிற்கு அழைப்பு விடுத்து அவர் வந்தபிறகு நிகழ்ச்சித் தொடங்கியது. 
ஒவ்வொருவராக கவிதை வாசித்தோம். பத்து நிமிடங்களில் வாசித்துவிட்டதால் நிகழ்ச்சி நேரத்தை நீட்டிக்க பெரிசாமி அண்ணா மீண்டும் ஆளுக்கொரு கவிதை கொடுத்தார். இருபது நிமிடங்களாக நீண்டது நிகழ்ச்சி. கேமரா அணைக்கப்பட்டது. அப்போது தான் கவனித்தேன் சித்தப்பா கேமராவிற்கு அருகில் அமர்ந்திருந்தார். 


அவர் எப்போது அங்கு வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சித்தப்பாவின் அருகில் சென்று நின்றேன். உங்க பொண்ணா சார் என்றார் கேமரா மேன். சித்தப்பா ஆமாம் என்றார். நாலுபேர்லையே இந்தக் குட்டிபொண்ணு நல்லா வாசிச்சாங்க என்றார் கேமரா மேன். சித்தப்பா சிரித்தார். அனைவரும் வெளியேறினோம். பெரியசாமி அண்ணா சித்தப்பாவிடம் "நீ வேணா பாரேன் கீதா பெரியாளா வந்துருவா. அவள நல்லா ஊக்கப்படுத்தினா போதும்" என்றார். சித்தப்பா மீண்டும் சிரித்தார். நேரம் இரவு எட்டைக் காண்பித்தது. பிறகு நான் விடுதிக்குப் பேருந்து ஏறினேன். அண்ணாவும் சித்தப்பாவும் பேருந்து நிறுத்தத்தில் நின்று வழியனுப்பினர். அன்றிரவு உறங்குவதற்கு முன் அந்த இனிய நாளின் அனுபவத்தையும் இரு சிவப்பு  நிற வண்டுப் பூச்சிகளையும் என் டைரியில் எழுதினேன். உறக்கம் எனை தழுவியது. 

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: