சில நேரங்களில் சில மனிதர்கள் (தொடர்ச்சி)


மதிய உணவு இடைவேளை முடிந்து மாணவர்கள் வகுப்பிற்குள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். வருகைப் பதிவேட்டைத் திறந்து காலைவேளையில் வந்திருந்த மாணவர்களுக்கு மாலை வருகையைப் பூர்த்தி செய்தேன். மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களின் வகுப்பு ஆசிரியை நான். பள்ளி நுழைவு வாயிலில் இருந்து பார்த்தால் வகுப்பறை நன்றாக தெரியும். வகுப்பில் இருந்து பார்த்தாலும் அதேபோல் நுழைவு வாயில் தெரியும்.

வகுப்பிற்கும் வாயிலுக்கும் இடையில் வரிசையாக நான்கு வேப்பமரங்களும் நுழைவு வாயிலின் இடதுபுறம் அலுவலகமும் வலது ஓரமாக ஒரு பொது அறையும் இருந்தது. பொது அறை மாணவர்களின் மதிய  உணவு  உண்ணும் அறையாகவும் பள்ளி நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்திகொள்வதுண்டு.

சிறிது நேரம் சென்றது. பெரிய வேன் ஒன்று வந்து நின்றது. அதுவரை பார்த்திராத சிலர் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு நேராக மாணவர்கள் மதிய உணவு உண்ணும் அறையின் வாசலில் வந்து நின்றனர். அறை பூட்டியிருந்தது .வேன் கிளம்பியது. இதற்குள் பள்ளி இருக்கும் பகுதியின் கவுன்சிலர் வந்தார். அலுவலகத்திலிருந்து சாவியை வாங்கிக்கொண்டு வந்து அறையை திறந்தார். உடன் வந்தவர்கள் அறையின் உள்ளே சென்றனர்.

இது வழக்கம் தான். அந்த பகுதியிலேயே பள்ளி வளாகம் தான் பெரியது. அரசு இலவசங்கள் வைப்பதும் இப்படி யாராவது வந்து தங்கிச் செல்வதும் பள்ளிக்கும் மாணவர்களும் பழகியே இருந்தது. அதனால் புதிதாக உணர எதுவும் இல்லை. நான் பாடத்தை தொடங்கினேன்.

அன்று புவியியல் பாடம். வானியல் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் ஒரு குரல் குறிக்கிட்டது. 'மிஸ் அந்த அண்ணா கூப்டுறாங்க' என்றாள் ஒரு மாணவி. திரும்பி வெளிச்சத்தில்  ஆடிய நிழலை பார்த்தேன். கதவருகே ஒரு இளைஞர் நின்றார். முன்பின் பார்த்ததாக தெரியவில்லை. கைகளை சற்று உயர்த்தி நெஞ்சிற்கு நேராக வைத்து வணக்கம் தெரிவித்தார். மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளிக்குறித்த தகவல்கள் அறிய வருபவர்கள், ஆசியர்கள் யாரையாவது சந்திக்க வரும் மனிதர்கள் இப்படி யார் வந்தாலும் வாயிலுக்கு நேராக இருக்கும் இந்த வகுப்பிற்கு வருவதுண்டு‌. பதிலுக்கு வணக்கம் கூறினேன். என் சந்தேகிக்கும் பாவனையை அவர் புரிந்திருக்க வேண்டும். குடிக்கத் தண்ணி என்றார். உங்களுக்கா என்றேன். ஆமாம் மிஸ் எல்லோருக்கும் என்றார். அப்போது  தான் புரிந்தது. சற்று முன் பள்ளிக்கு வந்தருந்த சிலரில் ஒருவர் என்று. நீர் குழாயை காட்டச்சொல்லி மாணவன் ஒருவனை அனுப்பினேன். இரண்டு மூன்று தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக்கொண்டு வகுப்பை கடக்கும் போது மீண்டும் வணக்கம் தெரிவித்தார் இளைஞர். மரியாதை நிமித்தமாக தலையசைத்தேன்.

நிலவை கடந்து பூமிக்கு வந்திருந்தோம். கடலின் அலைகள் குறித்து சென்றுக்கொண்டிருந்தது எங்களது உரையாடல். மிஸ்.. மீண்டும்  வேறொரு குரல். திரும்பினேன். ஃபோன்ல ஜார்ஜ் இல்லை. உங்ககிட்ட ஸ்மார்ட் போன் சார்ஜர் எதுவும் இருக்குமா என்றார் அதே இளைஞர். சார்ஜர் சாக்லேட் பேனா பென்சில் கைக்குட்டை நாப்கின் போன்றவைகளை கைப்பையிலேயே எப்போதும் வைத்திருப்பது வழக்கம். ஆனால்  ஒரு நிமிடம் யோசித்தேன்.  தரலாமா? வேண்டாமா? என்று. பிறகு ஏதோ ஒரு தெளிவு பிறக்க எடுத்து கொடுத்தேன். என் சந்தேகத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும் இங்கேயே போட்டுவிடுறேன் மிஸ் என்றவர் அழைப்பு எதுவும் வராது என்று வகுப்பிற்குள் நுழைந்து சார்ஜர் மாட்டிவிட்டு சென்றார். சில வேளைகளில் நானும் இப்படி செய்வதுண்டு. அதனால் விட்டுவிட்டேன்.

மாலை பள்ளி முடியும்போது சார்ஜரை எடுத்துக்கொண்டு கைபேசியை அந்த இளைஞரிடம் கொடுக்கச் சொல்லி என்  வகுப்பு மாணவனிடம் கொடுத்தனுப்பினேன். பிறகு வீட்டிற்கு கிளம்பினேன். பள்ளி முடிந்த பிறகு சில மாணவர்கள் என்னுடன் வீட்டிற்கு வந்து படித்துவிட்டு செல்வதுண்டு. அப்போது வந்திருந்த ஒரு மாணவி கூறினாள் "மிஸ் பஸ் ஸ்டாப்கிட்ட பெருசா மேடை போட்ருக்காங்க நாமலும் போலாம் மிஸ் டேன்ஸ் பண்ண போறாங்கலாம்" என்றாள் ஆர்வமாக. இதுபோன்றவற்றில் பெரிதாக எனக்கெதுவும் ஆர்வமில்லாததால் நீங்க போய் பாத்துட்டு வாங்க என்றேன். இல்லை மிஸ் நீங்களும் வாங்க. எப்படி இருக்குனு பாத்துட்டு வரலாம் என்று விடாப்பிடியாக இழுத்தாள் ஒரு மாணவி.

மூன்று மாணவிகளோடு எனையும் சேர்த்து நால்வராக சென்றோம்.  மாணவர்கள் முன்னதாகவே சென்றிருந்ததால் மேடையின் இடதுபுறம் இருந்த இருக்கைகளில் எங்களுக்காக இடம் பிடித்து வைத்திருந்தனர். பெரும்பாலும்  கூட்டத்தையோ நெரிசலையோ விரும்பாததால் அமைதியாக தோன்றிய  இடது புறம் ஆறுதலழித்தது. போய் அமர்ந்து கொண்டோம்.

எங்கள் ஊரிலிருந்து நான்காக பிரியும் சாலை அது. நான்குபுறமும் வேறு வேறு கிராமங்கள் இருக்கும். நான்கு பக்கம் செல்லும் பேருந்துகளும் அங்கு நின்று செல்வது வழக்கம். முக்கியமான பேருந்து நிறுத்தம் அது. மேலும் ஒரு கபடி மைதானமும் கணிசமான கடைகளும் ஒன்றிரண்டு உணவகங்களும் நிறுத்தத்தைச்சுற்றி இருந்தன.

அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்படியான நிகழ்வுகள் அங்கங்கு நடந்துக் கொண்டிருந்தது. முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பெற்ற திரை பாடல்களுக்கான நடன நிகழ்ச்சி அது. நாங்கள் சென்ற அரைமணி நேரத்திற்கு பிறகு நடன நிகழ்ச்சி ஆரம்பமானது.

"நான் உங்கள் வீட்டு பிள்ளை.. இது ஊரறிந்த உண்மை" பாடல் முதல் பாடலாக தொடங்கியது. வயது முதிர்ந்த எம்.ஜி.ஆர் சாயல் கொண்ட ஒரு ஆண் மேடையில் வந்திருந்து கைகளை மாற்றி மாற்றி தூக்கியும் ஆட்டியும் அசைத்தும் நடித்துக் கொண்டிருந்தார். மேடையின் கீழிருந்த அத்தனை கண்களும் அவரையே நோக்கியிருந்தது.

இரண்டாவதாக "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே  தான் சுகம் சுகம் சுகம்"... பாடல் ஆரம்பமானது. மேற்கு  திசையைப் பார்த்தபடி முகப்புப்பகுதி இருந்த மேடை அது. மேடைக்கு இடதுபுறம் இருந்து பார்க்கும்போது மேடையில் நேராக ஆடிக்கொண்டிருந்தவர்களின் முகம் எதுவும் சரியாக தெரியவில்லை. உடன் ஆடுபவர்களின் நடனத்தை தான் பார்க்க முடிந்தது. இதற்குள் முன் இருக்கைகள் நிரம்பி விட்டிருந்தன. வேறு வழியின்றி இடதுபுறம் இருந்து பார்த்தவர்கள் மேடைக்கு நேராகச் சென்று நின்றுகொண்டு பார்த்தனர். சுற்றிப் பார்த்தால் மேடையின்  இடதுபுறம் நானும் பிள்ளைகளும் மட்டுமே அப்போது இருந்தோம். வீட்டிற்கு  கிளம்பும் நோக்கத்தில் நான் எழுந்து இருக்கையின் அருகில் நின்று கொண்டேன். என்னோடு ஒரு மாணவி மட்டும் எழுந்து நின்றாள். மற்ற மாணவிகள் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். இரண்டு  பாடல்கள் முடிந்தது.

அடுத்ததாக "நல்லப்பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" என்ற பாடலுக்கு எங்கள் பள்ளி மாணவன் ஒருவனை தூக்கிக்கொண்டு மெல்ல ஓடியும் நடந்தும் பையனை இறக்கிவிட்டும் தூக்கிக்கொண்டும் என விதவிதமாக நடித்தார் அதே முதியவர். என்னுடன்  நின்ற மாணவி வாயில் கையை வைத்து சிரித்துவிட்டாள். ஒரு வாரத்திற்கு முன்பு தீப்பெட்டியை வைத்து தங்கள் வீட்டை பற்றவைத்து விட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் அவன். நல்லவேளையாக பாதிப்புகள் எதுவும் இல்லை. சில பொருட்கள் மட்டும் சேதமாகியிருந்தன. ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு "சும்மா பத்தவச்சா என்னாகும்னு பாத்தேன்" என்று கூறிய வருங்கால ஆய்வாளரைத் தூக்கிக்கொண்டு அவர் அந்த பாடலுக்கு நடித்தது மிக பொருத்தமாகவே தோன்றியது.

இதற்குள் எங்கேயோ கூட்டத்திற்குள் ஓடிய என்னுடன் இருந்த மாணவி சில கடலை மிட்டாய்களோடு திரும்பினாள்.

"தங்கப்பதக்கத்தின் மேலே".. பாடல் தொடங்கியது. எம்.ஜி.ஆர் போல் முகசாயல் கொண்ட அதே ஆணும் வயது முதிர்ந்த ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் இழுத்தும் தள்ளியும் பிடித்தும் விளையாடிகொண்டிருந்தினர். மேடைக்கு கீழே இருந்த சில முதியவர்கள் இருக்கையில் அமர்ந்தபடியே உடலசைத்து ஆடிகளித்தனர். மேடையை காட்டிலும் மேடைக்கு கீழே அமர்ந்து பார்க்கும் ஒவ்வொரு முகமும் இரசனை ஊட்டுவதாக தோன்றியது.

திடீரென தோன்றிய தூரத்து உறவான அத்தை ஒருத்தி தோன்றி நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடி விட்டு நகர்ந்தாள். இதற்குள் அப்பாடல் முடிந்திருந்தது.

"புதிய வானம் புதிய பூமி"..  என்று அடுத்த பாடல் இசைக்கப்பட்டது. உடல் மெலிந்த இளமையான எம்.ஜி.ஆர்  ஒருவர் வந்து கையசைத்து பாடினார். பாதிப்பாடலில் ‌இரண்டு இளைஞர்கள் மேடையில் தோன்றி மேடையை அதிர வைத்தனர். கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் ரசிகர்கள். மிஸ் அங்க பாருங்க சார்ஜர் என்றாள் கடலை மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டே என்னோடு நின்ற மாணவி. எனக்கொன்றும் புரியவில்லை. கேள்வித்தொணியில் பார்த்தேன். ஒரு நிமிசம் இருங்க என்றவள் பாடல் முடியும் வரை காத்திருந்தாள். பாடல் முடிந்த கையோடு நகர எத்தனித்த  இளைஞர்களை பார்த்து ஓய்.. சார்ஜர் என்றாள் மாணவி. மேடையில் இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் திரும்பிப் பார்த்தார். அப்போது தான் கவனித்தேன். மாலை பள்ளியில் பார்த்த இளைஞர். ஒப்பனைகள் அவர் முகத்தை மறைத்திருக்கிறது. எங்களையும் கண்டுக்கொண்ட இளைஞர் எனக்கு வணக்கம் தெரிவித்தார். திரும்பவுமா? என்று ஒருவித சோர்வைத் தந்திருந்தாலும் ஒரு போலியான சிரிப்பால் அந்த வணக்கத்தை  அணுகினேன். மாணவிகளுக்கு கையசைத்து மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்துக்கொண்டும் மேடைக்கு வலதுபுறமாக கீழிருந்த உடைமாற்றும் அறைக்குள் சென்றார் அந்த இளைஞர்.

"விழியே.. விழியே.. என்ற பாடலுக்கு முன்பு ஆடிய முதிர்ந்த தம்பதியர் வந்து தோன்றினர். அச்சமயம் எதேச்சையாக என் பள்ளி தோழி முன் வர மகிழ்ச்சியோடு இருவரும் நலம் விசாரித்துக்கொண்டு பழங்கதைகளை பேச தொடங்கினோம். இடையில் இரண்டொரு பாடல்கள் கடந்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு எங்களை மறந்திருந்தோம்.

இருவரும்  மேடையை கவனிக்கத் தொடங்கியிருந்தபோது "கொண்டை ஒருபக்கம் குழுங்க குழுங்க" பாடல் பகுதிக்கு மேல் கடந்திருந்தது. ஒரு இளம் பெண்ணும் மெலிந்த எம்.ஜி.ஆரும் அதே இரண்டு இளைஞர்களும் ஆடினர். அப்போது  தான் கவனித்தேன் மேடையின் வலது ஓரத்தில் நின்று ஆடினார் சார்ஜர்  இளைஞர். அவரது நடனம் எங்களுக்கு தெரிந்துவிடக்கூடாத நோக்கத்தில் தன்னை மறைத்துக் கொள்வதைப் போல் இருந்தது. மாணவிகள் எட்டிப் பார்த்தும்  மேடைக்கு அருகில் சென்றும் ரசித்து கைகளை தட்டினர். நடனத்தின் இடையிடையே எட்டிப்பார்க்கும் மாணவிகளுக்கு கையசைத்து விளையாடினார் இளைஞர். போகும் போது மாணவிகள் கைகளை கொடுத்து பாராட்டை தெரியப்படுத்தினர். எனக்கென்னவோ  சார்ஜர் இளைஞரின் இந்த செயற்பாடுகள் சிறுபிள்ளைகளின் விளையாட்டைப் போல தோன்றியது. இதற்குள் என் தோழி விடை பெற்றாள்.

'நானும் கிளம்புறேன். நாளைக்கு மறக்காம வீட்டுப்பாடம் பண்ணிட்டு வந்துடுங்க' என்றேன் மாணவிகளிடம். மிஸ் இன்னும் ஒரேயொரு பாட்டு மட்டும் பாக்கலாம் மிஸ். அப்புறம் எல்லாருமே போலாம் என்று கொஞ்சியபடியே புடவை தலைப்பை இழுத்தாள் ஒரு சிறுமி. சரி என்று சம்மதித்து நின்றேன்.

"நீல நிறம்.. வானுக்கும் மண்ணுக்கும்.. நீல நிறம்".. பாடல் ஆரம்பித்தது. முந்தைய பாடலுக்கு ஆடிய அதே ஆணும் பெண்ணும் இந்த பாடலுக்கும் அதே உடையில் வந்து நின்றனர். நன்றாகவே ஆரம்பமானது. மேடை முழுக்க  நீல நிற விளக்குகள் எரிய விடப்பட்டது. அச்சூழலே அந்த இரவை இன்னும் இருள் படிந்ததாக காட்டியது. முழுவதுமாக வீட்டிற்கு போகும் மனநிலையில் நடனத்தை ரசிக்கத் தோன்றவில்லை.

இந்த பாடலில் சார்ஜர் இளைஞரை ஒழிந்துக்கொள்ள இடம் தராமல் உடன் ஆடிய இளைஞர் இடது புறமாக தள்ளி விட்டிருந்தார். வெட்கப்பட்டுக் கொண்டே கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டிருந்தவர் முதலில் நின்றார். திடுமென மேடையில்  இருந்து கீழே குதித்தார். அவரின் இச்செயல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏதோ ஒரு பயம் தொற்றியது. சில நொடிகள் என் முன் நின்றவர் பின்பு என் முகத்தைப் பார்த்தார். இடுப்பில்  கைவைத்துக்கொண்டு பாவமாக முகத்தை காட்டினார்". பின்பு ஏதோ நினைத்தவர் தயங்கி  தயங்கி உடை மாற்றும் அறையின் பக்கம் சென்றுவிட்டார். பாடல் இசைத்துக்கொண்டே இருந்தது. மற்ற மூவரும் ஆட்டத்தை தொடர்ந்திருந்தனர்.

எனக்கொன்றும் புரியவில்லை. நான் என் பின்பக்கமாக பார்த்தேன்.  என்னைத்தவிர அங்கு யாருமில்லை. சிறிது நேரம் குழப்பத்தோடு நின்றேன். நான் அங்கு நிற்பது ஏதோ ஒரு உருத்தலைத் தந்திருந்தது. மனம் ஏனோ படபடக்கத் தொடங்கியது. மீண்டும் மேடையை பார்த்தேன். பிறகு திரும்பி  பார்க்காமல் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். சாலையில் யாருமில்லை. அந்த இளைஞரின் இச்செயல் மீண்டும் மீண்டும் கண்முன் வந்துச்சென்று ஒருவித மனப்பாரத்தை உணரச்செய்தது. 

பயத்தில் முகம் வியர்த்ததை உணர்ந்தேன். சந்தன வண்ணத்தில் தேன் வண்ண கோடுகள் வரைந்த புடவையை அன்று உடுத்தியிருந்தேன். புடவை தலைப்பில் முகத்தை துடைத்துக் கொண்டே நடந்தேன். என் பின்னிருந்து ஓடிவந்து கைகளைப் பற்றியது ஓர் விரல். இதயம் படபடக்கத் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்‌. என்னுடன் நின்றிருந்த சிறுமி 'என்ன மிஸ் விட்டுட்டே வந்துட்டிங்க' என்ற சினுங்களோடு நின்றாள். அடுத்ததாக எதைகுறித்தும் ஆராயவிடாமல் ஆசுவாசப்படுத்தியது சிறுமியின் முகம். அப்போது  தான் கவனித்தேன். சாலையின் இருபுறமும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருவரும் கைகோர்த்துக்கொண்டே நடந்தோம். மெல்லிய  குளிரோடு அந்த ஆண்டின் முதல் பனி பெய்யத்தொடங்கியிருந்தது. ஏதோ ஒன்றிலிருந்து விடுவித்தது அந்த முன்பனி மாலையின் மெல்லிய குளிர் காற்றும் சிறுமியின் பற்றுதலும்.

"அந்த நதி என்ன
உனை கேட்டு
நடை போட்டதோ
இங்கு அதை பார்த்து
உன் நெஞ்சம்
இசை போட்டதோ...
நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா
என் கண்ணோ
நீல நிறம்..."

நான் நடக்க நடக்க இசையோடு தேய்த்துக்கொண்டிருந்தது பாடல்  வரிகள். வீடடைந்தேன். எங்கும் அமைதி. பேரமைதி. 

Comments

  1. யாரோ யாரால் ஏதோ உணர்கிறோம் .. ஏனோ நாமும் ஏதோ உணர்த்றோம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: