Drive My Car (Ryusuke Hamaguchi)
Drive My Car
Ryusuke Hamaguchi
இயற்கை இயங்கியவாறே இருக்கிறது சுழற்சியின் அடிப்படையில். ஆனால் ஏதோ ஒன்றின் மீதான பற்றைத் தானே எடுத்துக்கொள்வது மனித இயல்பு. சொல்லப்போனால் மனித வாழ்விற்கு அதுவே ஏதுவாகவும் அமைகிறது. அந்தப் பற்று சற்று நழுவும்போது குற்ற உணர்வாக உருப்பெற்று விடுவதுண்டு.
வாழ்க்கையில் மனிதனை ஆற்றுப்படுத்தும் காரணிகளில் குற்ற உணர்வும் ஒன்று.
தனது 22வது வயதில் என் தம்பி தற்கொலை செய்துகொண்டான். தற்கொலைக்கும் அவன் இறப்பிற்கும் இடையில் 30 நாட்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை மூவாயிரம் இறப்புக்குச் சமம். விவரிக்கும் திராணி இல்லை இப்போதும் எப்போதும். அவனது இறப்பிற்குப் பின் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரை நான் எதிர்கொண்ட கேள்விகள் தாங்கொணாக் குற்ற உணர்விற்குள் தள்ளின. "இப்படிப் பண்ணிட்டிங்களே" , "இப்படி ஒரு பையனை விட்டுட்டிங்களே" இப்படியாகப் பல கேள்விகள்.
இழப்பைச் சந்தித்த ஒரு குடும்பத்தின் துயரம் சொல்லொணாத ஒன்று. மூன்றாம் மனிதர்களான அவர்களுக்கு தோன்றிய கேள்விகள் என் நிலையில் இருந்து சிந்திக்கவே முடியாது. கொந்தளிக்கும் காயத்தைத் திரும்பத் திரும்பக் கீறி விட்டவர்களை என்னால் இப்போதும் மன்னிக்க முடியவில்லை. அவர்கள் ஏற்படுத்திய குற்ற உணர்வில் மூழ்கும் என்னால் என்னையும் மன்னிக்க முடியவில்லை. என் நிலையை என் குடும்பம் மட்டுமே அறியும்.
ஒரு நாள் என் சித்தி என்னை அழைத்தார். "இந்த உலகம் எல்லாமே விதிப்படி தான் இயங்குது கீதா. அவன் பிறந்தது எப்படி விதியோ அதே மாதிரி இதுவும் விதினே நம்புவோம். நீ என்ன பண்ண முடியும் சொல்லு? உன் சக்திக்கு மீறி நீ குடும்பத்த பாத்த. உன் மேல எந்த தப்பும் இல்லை கீதா. உன்ன நீயே வருத்திக்கிற அளவுக்கு நீ என்ன பண்ணனு நினைக்கிற? கடைசியாக ஒருமுறை கத்தி அழுதேன். என் குற்ற உணர்வுகளெல்லாம் உடைந்து விழும் அளவிற்கு.
குற்ற உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதன் உண்மையில் மனநோயினால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு நோயாளி. அந்நோயிலிருந்து குணம் பெற மருத்துவம் தேவைப்படுவதில்லை. "உன்மீது தவறில்லை. நிகழ்ந்தது இயற்கை" என்ற ஓரிரு வார்த்தைகள் மட்டும் தான். அரிதான மருத்துவத்தை கூட கண்டறிவதற்கான போதிய வசதிகள் கிடைக்கப்பெறும் இந்த சூழலிலும் ஒரு ஆறுதல் வார்த்தைக்கு தான் பஞ்சம் ஏற்ப்பட்டிருக்கிறது.
படம் பேசுகிறது:
நாடக நடிகர் மற்றும் இயக்குநர் யூசுகி தன் மனைவி ஓட்டோவோடு வசிக்கிறார். தொலைக்காட்சி தொடர் எழுதும் மனைவி ஒரு உதவியாளரை அறிமுகம் செய்கிறார். ஒருமுறை வெளியூர் பயணம் ரத்தாகி மீண்டும் வீட்டிற்கு வரும் யூசுகி தனது மனைவி அறிமுகம் செய்த உதவியாளரோடு உறவில் இருப்பதைக் காண்கிறார். எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
எப்போதும் இரவில் கதைசொல்லும் பழக்கமுள்ள மனைவி ஒருநாள் கூறும் கதை அவளது வாழ்வோடு ஒப்பிடுவதாக இருக்கிறது. மறுநாள் காலை 'இன்று மாலை கொஞ்சம் பேச வேண்டும் சீக்கிரம் வரமுடியுமா?' என்று கேட்கும் மனைவிக்கு பதிலுரைத்து அலுவலகம் செல்கிறார் யூசுகி. வீடு திரும்புகையில் யூசிகிக்கு அதிர்ச்சியளிக்கும் விதம் அவரது மனைவி இறந்திருக்கிறார். காலையில் மனைவி கேட்டதைப்போல சற்று முன்னதாக வீட்டிற்கு வந்திருந்தால் மனைவியைக் காப்பாற்றி இருக்கலாம் என்ற குற்ற உணர்வு யூசுகியை ஆட்கொள்கிறது. இதனால் தான் எப்போதும் ஏற்று நடிக்கும் ஒரு புகழ்பெற்ற கதாபாத்திரத்தை அவரால் நடிக்க முடியாமல் போகிறது. நடிப்பை கைவிடுகிறார்.
நீ தேடும் ஒன்று உனையும் தேடிக்கொண்டிருக்கிறது என்ற ரூமியின் வசனத்திற்கு ஏற்ப குற்ற உணர்வில் தவித்துக்கொண்டிருக்கும் யூசுகி நாடகத்தை இயக்கும் பணிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஹிரோசிமா செல்கிறார். அங்கு சந்திக்கும் மனிதர்கள், அந்த இடத்தின் சூழல், அம்மனிதர்களால் கிடைக்கும் அனுபவங்கள் என படம் நீள்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு கதை. ஒவ்வோர் அனுபவம். ஒவ்வொரு பார்வை. பார்வையைப் பொருத்து கருத்துக்கள். குரல் இல்லை என்றாலும் சிறிதோ பெரிதோ கருத்தில்லாத மனிதனை காண்பது அரிது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒரு கதையை முன்வைக்கிறது. ஒரு பார்வையை, பார்வையின் வழி ஆழமான கேள்விகளை முன்வைத்து வாழ்க்கையை அலசுகிறது.
தனது இணையை அப்படியே ஏற்க காதலுற்ற மால்நெஞ்சினால் மட்டுமே முடியும். ஆயிரம் குறை இருக்கலாம். ஆயிரத்திற்கும் கூடுதலான அழகிருக்கலாம் இல்லாமலும் போகலாம். உன் குறை எதுவும் பெரிதல்ல. எல்லாவற்றுக்கும் மேல் நாம் காதல் புரிகிறோம். அதனால் ஒரு வரத்தைப் போல உன்னை உள்ளமெங்கும் ஏந்துகிறேன் என்பது அன்பின் தெய்வநிலை. அதுதான் காதல்.
உண்மையைக் கேட்டு விடலாம். அதற்கொரு துணிவு வேண்டும் அல்லவா? அந்தக் கேள்விக்குப் பின் நிகழும் எதையும் ஏற்க வேண்டிய துணிவு அது. அப்படியான துணிவு என்னிடம் இல்லை அதனால் அவளது தவறுகளை தெரிந்தும் நான் அவளை புறக்கணிக்க முடியவில்லை எனும் யூசிகியின் முதிர்ச்சி அளப்பரியது என்று எண்ண வைத்தது.
எத்தனை நெருக்கமான உறவாக இருந்தாலும் சக மனிதனை மேலோட்டமாக அறிந்து செல்வதே நாகரீகம். நீ என் இணை. நான் உன்னை இந்த உலகினும் பெரிதாக விரும்புகிறேன் அதனால் உன் மனதில் இருக்கும் எண்ணங்களைக் கூட நான் அறிய வேண்டும் என்று நினைப்பது மடமை என்ற ததாசுகி கருத்தில் ஏனோ ஒன்றாமல் இருக்க முடியவில்லை.
இல்லாமல் போன ஒன்றையே பிடித்து நொந்துகொண்டிருக்கும் மனிதனுக்கு அருகிருக்கும் வாழ்க்கை பிடிபடுவதே இல்லை. அல்லது தெரிவதில்லை. இல்லாமல் போவதின் வெற்றிடம் என்பது இன்னொன்றிற்கான வாழிடம். வாழ்வின் பொருள் இது ஒன்று தான்.
எந்த ஒரு கருத்திற்கும் எதிர் கருத்தென்று ஒன்று உண்டு. அப்படி ஒரு பாத்திரமாகிறாள் மிஸாகி. நிதர்சனங்களை மட்டும் ஏற்பவள். மோசமான அனுபவங்களே தனது வாழ்வாக வாழும் மிஸாகி ஏழ்மையில் உழன்றவள். தன் தாயால் துன்புறுத்தலுக்கு ஆளானவள். மோசமான பால்யத்தை அனுபவித்திருந்த மிஸாகிக்கும் குற்ற உணர்வு இல்லாமல் இல்லை. நோய் துயரம் மரணம் போல மனிதனுக்குப் பொதுவான ஒன்றாக அமைந்துவிடுகிறது குற்ற உணர்வும்.
மரணம் வரும்போதும் அதை இசைந்து ஏற்கும்போது தான் மனிதன் வளர்கிறான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள் என்ற ஒன்று இருக்கும். அது அம்மனிதனுக்கு மட்டுமே சொந்தம். எட்டிப்பார்க்க துணிந்தால் காயம் மட்டுமே மிஞ்சும் என்ற மிக மிக அழுத்தமான கருத்துக்களை முன்வைத்து நகர்கிறது படம்.
நினைத்தால் சக மனிதனை காக்கவும் வழியுண்டு. நினைத்தால் சக மனிதனை மரணத்திடம் விட்டுவிடவும் வழியுண்டு. இது தான் இந்த வாழ்வின் சாராம்சம். நாம் எப்போது எதைக் கையில் எடுக்கிறோம் என்பதில் இருக்கிறது நம் முதிர்ச்சி.
ஹமாகுச்சி ஜப்பானிய இயக்குநர். 2000 ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது திரை வாழ்வில் 2021 ல் இயக்கி வெளிவந்த படம் தான் "ட்ரைவ் மை கார்". ஹாருகி முரகாமியின் 'Men Without Women' என்ற சிறுகதை நூலிலிருந்து இதே பெயரிலான ஒரு கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இப்படம் புகழ்பெற்ற பல விருதுகள் பெற்றுள்ளது.
நல்ல படைப்பு. அடர்
ReplyDeleteவான பதிவு. டொவீனோ தாமஸ் நடித்த ஒரு படத்தில் இதன் தாக்கத்தை உணர்ந்திருக்கிறேன்..
மகிழ்ச்சி தோழர்
ReplyDeleteகிட்ட தட்ட என்னோட மன நிலைய அப்படியே எழுதி வச்சிருக்கீங்க அக்கா .. நமக்கும் இது தெரியும். இயற்கையின் ஒரு பகுதி தான் நான் அப்டின்னு தெரிஞ்ச பின்ன தான் இந்த மாதிரியான உணர்வுகளில் இருந்து மீள முடிஞ்சுது ... அதுவரை அதுக்குள்ள ஒரு பித்தன் போல தான் கிடந்து உலள வேண்டி இருந்துச்சு .....
ReplyDeleteமகிழ்ச்சி தம்பி 🎈
ReplyDeleteசிறப்பு மா. படத்தை ஒருபடி மேல் உயர்த்துகிறது உங்கள் எழுத்து. இறந்துபோன உங்கள் சகோதரன் எங்கும் போகவில்லை. எங்களோடு இருக்கிறான் என்பதை உணர்கிறீர்களா ?
ReplyDeleteகண்டிப்பாக அண்ணா.
ReplyDelete