எழுத்தும் நானும் (தொடர்ச்சி)
கம்யூனிசத்தில் இணைந்த காலகட்டத்தில் சில நண்பர்களின் அறிமுகம் கிடைத்திருந்தது. அந்த சமயங்களில் ஒரு நண்பர் தான் ஒரு கவிஞர் என்று என்னிடம் அறிமுகம் ஆனார். பார்க்க நல்ல படித்த நாகரிகமான ஆளாக இருந்தார். என் தோழி அவரிடம் எனக்கும் கவிதை மேல் விருப்பம் உள்ளது என்று முன் எப்போதோ தெரிவித்ததாக என்னிடம் கூறினாள். வந்தவர் அப்படியே அமர்ந்துவிட்டார். அந்த இடம் ஒரு பூங்கா. உண்மையாகவே எனக்குக் கவிதை மேல் மிகுந்த ஆர்வம் தான். ஆனால் பழக்கமில்லாத ஆணோடு அமர்ந்து பேசுமளவிற்கு கவிதை அறிவு இல்லை என்றே தோன்றியது.
ஒரு தற்காப்பிற்காக இப்படி அறிமுகம் ஆகும் மனிதர்களை அண்ணா என்று அழைத்து விடுவதுண்டு. சிலர் பரவால மா அண்ணா எல்லாம் வேண்டாம் பேர் சொல்லியே கூப்பிடுங்க என்று தங்களின் பெருந்தன்மையைக் காட்டுவார்கள். பலர் அச்சச்சோ அவ்வளவு வயசாகலமா என்று பேச்சை வளர்ப்பார்கள்.
அப்படித்தான் அன்று அந்தக் கவிஞர் அண்ணாவாகினார். தான் எழுதியதாகக் கூறித் தன் பையிலிருந்த ஒரு நோட்டை எடுத்து சில நெடுங்கவிதைகளை வாசிக்கத்தொடங்கினார். எங்கள் இருவருக்கும் ஒன்றுமே ஒட்டவில்லை. புரியவும் இல்லை. நானும் தோழியும் ஏதோ போல் அமர்ந்திருந்தோம். கவிதைகளுக்கு இடையே அடிக்கடி வானம் பார்த்தார். அப்புறம் புல்வெளிகளை. சில வரிகளைத் திரும்பத் திரும்பக் கூறினார். ஓரளவிற்கு வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தான் நாங்கள் இருவருமே. சில வேளைகளில் கவிதைகள் குறித்து உரையாடச் செய்வோம். ஆனால் எங்களுக்கே அந்த நாள் என்னவோ அத்தனை சலிப்பூட்டியது.
உளவியல் அடிப்படையில் ஒரு அளவிற்கு தான் மனிதனின் கவனம் குவியும் அல்லவா? நாற்பது நிமிடங்களுக்கு மேல் கடந்திருந்தது. அவர் முடிக்கவில்லை. வலிந்த முகத்தோடு நானிருந்தேன். தோழி நெளிந்தாள். கையிலிருந்த நோட்டை பைக்குள் வைத்தபோது ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது. மதிய வேளை அது. பசி வந்துவிட்டது. நாங்கள் அமர்ந்திருந்த பூங்காவின் எதிரில் தான் எங்கள் விடுதி.
தோழி சைகை காட்டினாள் போய்டலாமா? என்று. கண்டிப்பா என்று கண்ணசைத்தேன். விடுதியின் அறை மிகச் சிறியது. வராண்டாவோ தூய்மையில்லாமல் அழுக்குப் படிந்திருக்கும். அதனால் பூங்காவிற்கு வந்து படிப்பது எங்களின் வழக்கமாக இருந்தது.
கவிஞர் அண்ணா எழுந்தார். எனக்கும் தோழிக்கும் அத்தனை விடுதலை உணர்வு. பூரிப்பில் சிரித்துக்கொண்டோம். ஆனால் அவரோ பூங்காவைச் சுற்றிப்பார்த்து நடக்கத் தொடங்கினார். தோழி என்னைப் பார்த்து 'கேளு டி போலாம். பசிக்கிது' என்றாள். எனக்குக் கவிதையில ஆர்வம் இருக்குனு சொன்னது நீதான். அதைப்போலவே இதையும் நீ தான் கேக்கனும் என்றேன். பழிவாங்குற நேரமா டி இது என்று பற்களைக் கடித்தவள், ஒருவழியாகத் துணிந்து சில அடிகள் முன்னால் நடந்தவரை அழைத்தாள். 'தோழர் நாங்க கெளம்புறோம். சாப்பிடுற நேரம் என்றாள்'. சரிங்க தோழர் நீங்க கெளம்புங்க அதான் கீதா இருக்காங்களே என்றார் கவிஞர் அண்ணா. கீதா இங்க வாங்களேன் இந்த வானத்துல நீல நிறம் எப்படி வந்ததுனு நினைக்கிறிங்க? என்றாரே, தலை சுற்றத் தொடங்கியது எனக்கு. நான் முழித்தேன். தோழி குறிக்கிட்டு 'ரெண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து போட்டுட்டு தான் வெளிய வந்தோம் தோழர். நான் மட்டும் போனா வார்டன் கேப்பாங்க. சரிங்களா. நன்றிங்க தோழர் என்று என் கையைப் பிடித்து நடந்தவள் விடுதி வந்துதான் விடுவித்தாள். தலை வலிக்கிது டி. இன்னும் கொஞ்சம் நேரம் போயிருந்தாலும் காதுல இரத்தம் வந்துருக்கும். முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் உன்னைப் பத்தி பேசியிருக்க மாட்டேன். நல்லவேளை இப்பவே தப்பிச்சோம் என்று அறைக்குள் சென்றாள். ஆனால் உண்மையில் அந்தக் கையெழுத்து வழக்கமெல்லாம் விடுதியில் இல்லை. இப்போது இதையெல்லாம் நினைத்தால் நகைப்பாக உள்ளது.
பெரும்பாலும் அந்த சமயத்தில் கிடைக்கப்பெற்ற அத்தனை நண்பர்களுக்கும் ஒரு வாசிப்பாளராகவும் கவிஞராகவுமே நான் அறிமுகமாகியிருந்தேன். சட்டக்கல்லூரி தோழர் ஒருவர். நல்லக்கண்ணு தோழர் அவர்களை சந்தித்தபோது அறிமுகமாகியிருந்தார். இரண்டாவது சந்திப்பில் தன்னை எழுத்தாளர் என்றவர் தான் எழுதிய அனுபவக் கட்டுரைகள் விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது என்றும் பெருமையாகச் சொன்னார். இந்த முறையும் சும்மா இருக்கவில்லை தோழி. கீதா கவிதைகள் என்று என் பைக்குள் இருந்த டைரியை எடுத்து கொடுத்துவிட்டாள். பத்து பக்கங்கள் இருந்திருக்கும். அப்போதுதான் இரண்டாவது முறையாக எழுதத் தொடங்கியிருந்தேன். அதை வாசித்தவர் மிகவும் அருமையான கவிதைகள் கீதா. உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறேன் என்றார். என் நூலின் கட்டுரைகளுக்கு இடையிடையே உங்க கவிதைகளை பயன்படுத்திக் கொள்கிறேன். நூலில் உங்கள் பெயரும் இடம்பெறும் என்றார். என் தோழிக்கோ அளவில்லாத பூரிப்பு. எதையோ சாதித்துவிட்ட பெருமை கொண்டாள்.
எனக்கு இது போன்றவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. நான் இப்போதுதான் எழுதக் கற்று வருகிறேன். ஒரு நூல் வெளியிடுவது என்பது என்னளவில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. அதைச் சரியாகக் கொண்டு வர வேண்டும். வாழ்வில் ஒரு நூல் வெளியிட்டாலும் மனதிற்கு நிறைவைத் தர வேண்டும். இது சரிவராது. என் நூல் வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதுவரை அவசரம் இல்லை. என் டைரியை கொடுங்கள் என்றேன். அந்த தோழரோ டைரியை படித்துவிட்டு தருகிறேன் என்று கையோடு எடுத்துச் சென்றுவிட்டார்.
சில வாரங்களுக்குப் பிறகு நான் மீண்டும் டைரியை கேட்க கைபேசியில் அழைத்தேன். உன் கவிதை என் புக்ல வரும். புக்கு வந்ததும் உன் டைரியை தரேன் என்று கைபேசியை வைத்து விட்டார். தோழியும் இன்னும் சில தோழர்களும் ஒரு நூல் சாதாரணமா கீதா. போடட்டும் விடுங்க. உங்க கவிதைகள் நூலா வந்தா உங்களுக்கும் பெருமை. வாசிக்கிற எங்களுக்கும் பெருமை இல்லையா என்று மூளைச்சலவை செய்யத்தொடங்கினர்.
சில நாட்கள் கடந்தன. தோழர் அண்ணாவாகினார். நம்ம நூல் பத்தி கொஞ்சம் பேசணும் என்று விடுதியின் எதிரே உள்ள பூங்காவிற்கு வரச்சொன்னார். நானும் தோழியும் சென்றோம். ஒரு மர நிழலில் அமர்ந்தோம். கையில் ஒரு அட்டையும் சில பேப்பரையும் தந்தவர் நான் சொல்றத அப்படியே எழுது என்றார். நான் ஏன் எழுதனும் என்றேன். என் புக்குல உன் கவிதைகள் வரப்போகுதுல. அப்போ நீதான் எனக்கு இனிமே உதவியாளர். அப்படினா நீதான் எழுதனும் என்றார்.
நான் தோழியை முறைத்தேன். எனக்கு தெரிந்த ஒரே வன்முறை அப்போது அதுதான். எழுது டி. கவிதை வருதுல இந்த ஒருமுறை மட்டும் என்றாள் அவள். என் கவிதைகள் எதுவும் உங்க புக்குல வர வேண்டாம். புக் போடனும்னு நான் நினைக்கவே இல்லை. யாருக்கும் உதவியாளரா இருக்கும் அளவிற்கு நான் இன்னும் வளரல என்றேன்.
கொஞ்சம் தடுமாறியவர். தயவு செஞ்சு ஒரு உதவியா இத பண்ணிக் கொடும்மா. என் புக்கே உங்க கைல தான் இருக்கு. ஏம்மா சொல்லேன் மா என்று தோழியைக் கேட்டுக்கொண்டார். இந்த ஒருமுறை மட்டும் எழுதிக்கொடு டி என்றாள் கெஞ்சும் பாவனையில் அவளும்.
எப்படியோ எழுத அமர்த்திவிட்டார்கள். அந்தத் தோழர் அண்ணா பேசத் தொடங்கினார். வானம், பூமி, கடல், நிலா எல்லாம் திரும்பத் திரும்ப வந்து போனது. பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேசியதைக் கொஞ்சம் விட்டும் விடாமலும் நான் எழுதத் தொடங்கினேன். சில மணி நேரங்கள் ஓடின. கை வலிக்க தொடங்கியிருந்தது. எங்க எழுதினத படி என்றார் தோழர் அண்ணா. நீங்களே படிங்க என்று கையில் திணித்து விட்டு நான் எழுந்து பூங்காவை விட்டு வெளியேற நடந்தேன். என்ன மா இது. நான் அவ நல்லதுக்கு தானே பண்றேன். அவ கவிதையும் தானே புக்ல வருது என்று நியாயம் கேட்க ஆரம்பித்தார் தோழர் அண்ணா என் தோழியிடம். அது விடுங்க ணா. சரி பாப்போம் என்று அவள் கூறியது காதில் விழுந்தது. பூங்காவின் வெளியில் வந்தேன். ஓடிவந்ததில் மூச்சிறைத்து "நல்ல வேளை டி எழுந்து வந்துட்ட" என்று பின்தோளில் கையைப் போட்டு நக்கலாகச் சிரித்தாள் தோழி.
சில நண்பர்கள் உதவியால் நூலும் அச்சாகி வந்திருந்தது. முதல் பக்கத்திலும் இறுதிப்பக்கத்திலும் எனது கவிதைகள் இடம்பெற்ற நினைவு. நான் எழுதியிருந்ததை விட அதிகபட்சம் பிழை நூலில். பூங்காவில் நான் எதை அவர் கூறக் கூற எழுதினேனோ அதுதான் அவருடைய அனுபவக்கட்டுரைகள் என்று அச்சாகி இருந்தது. இந்த அதிர்ச்சி கூட பரவாயில்லை. அட்டைப்படமென ஒன்று இருந்தது. புத்தகத்திற்கு ஒரு பெயர் வைத்து அந்தப் பெயரை கருப்பு வண்ணத்தில் ஒரு பெருக்கல் குறியிட்டு அடித்து பிறகு இன்னொரு பெயரை அதற்கு கீழ் அச்சாக்கி இருந்தனர். நான் தான் அட்டை வடிவம் என்று பெருமையாக வேறு சொன்னார் தோழர் அண்ணா. புத்தகத்தில் குறிப்பிட்ட இரு தலைப்புகளுமே எனக்கு எப்படி நினைவில் தங்கவில்லையோ அதேபோல் அந்த பெருக்கல் குறி மனதை விட்டு மறையவும் இல்லை.
நூல் வெளியீட்டு விழா வேறு ஏற்பாடு செய்திருந்தார். அவரது பள்ளித் தோழியின் பரதநாட்டியம் தான் விழாவின் தொடக்க நிகழ்வு. மூன்று மணிநேரம் ஒப்பனைக்குப் பிறகு முகத்தைத் காட்டிய தோழி ஆடத்தொடங்கும்போது திடீரென பாடல் நின்றுவிட்டது. ஏதோவொரு பக்தி பாடலுக்கு பயிற்சி எடுத்திருந்தார் போலும். பாடல் நின்றுவிட்டதால் அழகு மலராட பாடல் யாரோ ஒருவரின் கைபேசியில் இருந்து இசைக்கவிடப்பட்டது. பாவம் அவர் பக்தி பாடலுக்கான பயிற்சியை அழகு மலராட பாடலுக்கு நிரப்ப அது ஒருமாதிரி பள்ளி ஆண்டு விழா நடனமாக நிறைவடைந்தது.
ஸ்கூல்ல இவ தான் நல்லா ஆடுவா அதான் ரொம்ப கெஞ்சிக் கேட்டு இந்த நிகழ்வுல ஆட வச்சேன் என்று மேடையில் தெரிவித்தார் தோழர் அண்ணா. அப்பெண் பள்ளி நாட்களில் ஆடியிருக்கிறார் போலும். அதன் பிறகு நடனத்தைக் கைவிட்டிருக்கிறார். தோழர் அண்ணாவோ பள்ளியில் ஆடிய நடனமே தான் வேண்டும் என்று நச்சரித்ததாலோ என்னவோ அவரே பயிற்சி எடுத்திருக்கிறார். அவளின் நிலை எனக்கும் என் தோழிக்கும் புரியாமலில்லை. தோழர் அண்ணாவை நினைக்கும்போது தான் சற்று அதிர்ச்சியாக இருந்தது. என்ன மனிதர் இவர் என்று தோன்றுமளவிற்கு.
தவறுதலாக என் கல்லூரி தோழி ப்ரியாவிடம் நூலை காட்டிவிட்டேன். கொஞ்சம் பயமா இருக்கு டி அட்டைப்படம் பாக்கும்போது. அதுவும் அந்தக் பெருக்கல் குறி மறக்கவே முடியாது. உன் கவிதை இந்த புக்குல ரெண்டு தானே நான் அத மட்டும் ஃபோட்டோ எடுத்துக்குறேன். எனக்கு புக்கு வேண்டாம் என்று பாவமாக முகத்தை காட்டியபோது தான் எனது அந்த இரு கவிதைகளும் மூலையில் உட்கார்ந்து அழத்தொடங்கிருக்கனும். இது எல்லாவற்றையும் விட பெரிய துயரம் என்னவென்றால் என்னோட அந்த டைரியை கடைசி வரை கொடுக்கவே இல்லை தோழர் அண்ணா. இறுதியாகத் தொலைந்துவிட்டதாக பதில் தந்தார். மன்னிப்பதையும் மறந்துவிடுவதையும் தவிர வேறு வழி தெரியவில்லை அப்போது.
சொந்த ஊர் வந்திருந்த போது தோழர் அண்ணாவிடம் இருந்து ஒரு அழைப்பு. நம்ம புத்தகத்துல ஒன்னுகூட விக்கல. அட்டைப்படம் பார்த்தாலே வாங்க தோணலனு திரும்ப கொடுத்துடுறாங்க. அந்த துக்கத்துலையே எனக்கு ரொம்ப நாளா உடம்பு சரியில்லை. ஆனால் இதுக்கெல்லாம் நான் ஓயனமாட்டேன். அடுத்த புக்கு போடுவேன். நீயும் தயாராகு என்றார். இப்போலாம் நான் எழுதுறது இல்லை ணா. உடம்ப பாத்துக்கோங்க என்று அலைபேசியை துண்டித்தேன்.
ஆத்தி...
ReplyDeleteதோழர் அண்ணா அண்ணா தோழர்களோட ஒரு இம்சைதான்..இருக்க உங்களுக்கு நியாயமா ஒரு விருது குடுக்கணும்.
ReplyDelete😋😋
Deleteசில நேரங்களில் நமக்கு உதவுவதாக நினைத்து கொண்டு நம்மை சிலர் படுத்தும் பாடு நமக்கே தெரியும். உங்களின் பொறுமைக்கு ஓர் மிக பெரிய வணக்கம்...
ReplyDeleteமகிழ்ச்சியும் அன்பும்
Deleteஅடுத்த புத்தகத்திற்காக காத்திருக்கிறோம். இந்த முறை பல கவிதைகள் வேண்டும்.
ReplyDeleteமகிழ்ச்சி தோழர். முயற்சிக்கிறேன். 🙂
Delete