Madeinusa (2005)

Madeinusa: 



புகழ்பெற்ற ஸ்பேனிஷ் திரைப்படமான The Milk of Sorrow இயக்குநர் Claudia Llosa (Peruvian film director) அவர்களின் முதல் திரைப்படம் இது. 


எந்த விதமான முன்னேற்றமும் அதுவரை கண்டிராத ஒரு குக்கிராமத்தில் நடைபெறும் சடங்கு முறையைக் கொண்டு அக்கிராமவாசியான ஒரு பெண்ணின் வாழ்வை அழுத்தமாகப் பேசுகிறது இத்திரைப்படம். 

இயற்கையின் பேரழிவுகளைக் கண்டு அஞ்சிய மனிதன் அதைத் தொழ ஆரம்பித்து பின்னர் அதற்கென உருவம், பெயர் எனச் சூட்டி வழிபட தொடங்கினான். இப்படித்தான் கடவுள் உருவாகியிருக்க வேண்டும் என்கிறது வரலாற்றாய்வு. இறைநம்பிக்கை அது சார்ந்த சடங்குகள் நிலத்திற்கு ஏற்றார்போல மாற்றம் கண்டிருந்தாலும் அடிப்படை ஒன்றுதான் என்பது புனித நூல்கள் உரைக்கும் உண்மை. 

கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் எந்தவிதமான நெறிப்பிறழ்வும் இன்றி வாழும் இந்த உலகில், இறை ஒன்றே தங்கள் வாழ்வில் எல்லாம் என்று நம்பும் மனிதர்கள் தான் மிகுதி. அம்மனிதர்களின் வாழ்வில் இறைவன் என்பவன் சில நாட்கள் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிந்தனையை காட்சிகளாக விரிக்கிறது திரைப்படம். 

உலகெங்கும் கிறித்துவ மதத்தில் இயேசு கிறித்துவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நினைவுகூரும் வகையில் புனித வெள்ளியில் தொடங்கி ஈஸ்டர்‌ ஞாயிறு வரையான மூன்று நாட்கள் விழாவாகக் கொண்டாட்டப்படுகிறது. பெருவியன் கிராமம் ஒன்றில் இம்மூன்று நாட்கள் பாவங்கள் என்பது இல்லை என்றும், இறைவன் உயிர்த்தெழும் வரை எத்தனை ‌பாவங்களை வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் அது பாவமாகாது என்றும் நம்பப்படுகின்றது. 

இதன் அடிப்படையில் தன் பெண்ணை அவளது கன்னித்தன்மையோடு புணர நினைக்கும் தந்தை, தந்தையிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தன் தாயை தேடி ஊரைவிட்டு வெளியேற காத்திருக்கும் மகள், தன்னை விட அழகாக இருக்கும் சகோதரியை பழிதீர்க்க துடிக்கும் தங்கை என ஒரு குடும்பம் புனித வெள்ளி பெருநாளுக்காகக் காத்திருக்கிறது. 


சந்தர்ப்பவசத்தால் இவர்களால் ஈட்டப்படும் பாவங்களை வைத்து சமுதாயத்தில் பல கேள்விகளை முன்வைக்கிறார் இயக்குநர். ஒரு பெண் தன்மேல் உடலளவிலும் மனதளவிலும் அழுத்தப்படும் அடக்குமுறைகளை மீறி வெளியேறும் சிரமங்களை நிதர்சனமாக காட்சிபடுத்துகிறது இத்திரைப்படம். 

கடவுள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். கடவுளோ இயற்கையோ ஏதோ ஒன்றைக் குறித்த அச்சம் தான் மனித இனத்தை இயக்குகிறது என்பது மறுப்பதற்கில்லா உண்மை. அந்த அச்சமே மனிதாபிமானம், கருணை, அன்பு என்று வெளிப்படவும் செய்கிறது. 

இயக்குநருக்கு இது முதல் படம் என்பதோடு இந்த கதை சூழலை தேர்ந்தெடுத்ததற்காக நிறைய விமர்சனங்களை பெற்றுள்ளார். அதேசமயம்  இப்படம் சில விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: