எழுத்தும் நானும் (தொடர்ச்சி)

சொந்த ஊர் வந்திருந்த சில நாட்களிலேயே பி.எட் கல்விக்காக சாரதா கல்லூரி சேர்ந்திருந்தேன். கற்றல் கற்பித்தல் பயிற்சியில் சில நாட்கள் கடந்தன. அப்போது தான் முதன்முதலில் முகநூல் அறிமுகமாகியது. எழுதுவது ஒருவகை விடுதலை வெளிப்பாடு என்றே கருதுகிகிறேன். சற்றுக்கூடுதல் சலுகையாக என்ன எழுதினாலும் அதற்கான கருத்துக்களும் பின்னூட்டங்களும் உடனே கிடைப்பது இன்னும் மகிழ்வைத் தந்தது. அப்படித்தான் கவிதைகள் எழுதிப் பழகும் ஒரு வெளியாக முகநூல் மாறியது. நாளடைவில் காலத்தின் வேகமான சுழற்சிக்கு ஏற்ப ஒரு நிமிடத்திற்குள் படித்துவிட்டுக் கடப்பதைப்போல சிறு சிறு கவிதைகள் கைவசமாகின. 

நண்பர்கள் சிலர் கவிதை குறித்து நல்ல கருத்துக்களை பகிர்ந்ததோடு அல்லாமல் இதழ்களுக்கு அனுப்புங்கள் என்றும் அறிவுறுத்தினர். அதன் பேரில் அப்போது தெரிந்திருந்த ஒரே இதழான விகடனுக்கு சில கவிதைகள் அனுப்பி வைத்தேன். பதில் எதுவும் இல்லை. கவிதைகள் பிரசுரமாகவும் இல்லை. சிலமுறை அனுப்பிப் பார்த்து பின் கைவிட்டுவிட்டேன். 

முதன்முதலில் "சஞ்சிகை" மாத இதழுக்கு கவிதை வேண்டி இதழ் ஆசிரியரும் நண்பருமான முருகராஜ் என்னை அணுகினார். பிறகு என் கவிதைகள் தொடர்ந்து சஞ்சிகையில் வெளியாகின. அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டாமா? ஒரு கதை எழுதிக்கொடுங்கள் என்றார் அவர். முதலில் மறுத்தேன். நேரமில்லாத காரணம் ஒருபுறம் இருக்க சிறுகதைகள் என்றால் நிறைய எழுத வேண்டும் என்ற தயக்கமும் இருந்தது. ஒரு முறை முயற்சி செய்து பாருங்க வரலனா விட்டுடுங்க என்றார் மீண்டும். ஊரில் நடந்திருந்த ஒரு துயரச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதத் தொடங்கினேன். அப்படித்தான் 'ஊமத்தம்பூ' கதை வெளியானது. எனது முதல் சிறுகதை அது. சஞ்சிகையில் வெளியாகிய பிறகு சில தோழர்கள் கதைக்காக வாழ்த்து தெரிவித்தபோது மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

என் சிறு சிறு கவிதைகள் பல இலக்கிய நண்பர்களையும் வாசிப்பாளர்களையும் நட்பாக்கியது. பி.எட் முடித்து நான் படித்த அரசு பள்ளியிலேயே பி.டி.ஏ மூலம் வேலைக்குச் சேர்ந்தேன். எழுத்து வாசிப்பு வேலை என அப்படியே நாட்கள் கடந்தன. 

சேலத்திற்கென்று ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். சூழல் மற்றும் பாடலுக்கான தகவல்கள் வழங்கப்பட்டன. முதல் சந்திப்பில் பல்லவியும் ஒரு சரணமும் நிறைவானது. அந்தத் தனிப்பாடலின் இசையமைப்பாளர் இசையமைத்துப் பாடப் பாட நான் அந்த இசைக்கு எழுதியிருந்தேன். இதற்குள் மாலையாகிவிட நான் சேலத்தில் இருந்து ஆத்தூர் கிளம்பும் நேரம் வந்திருந்தது. பள்ளிப் பணிகள் இருந்ததால் அடுத்த சந்திப்பை மறுவாரம் திட்டமிட்டோம். ஆனால் அதற்குள் என்னிடம் எதுவும் ஆலோசிக்காமல் வேறொரு பெண்ணை வைத்து மீதப் பாடலை முடித்திருந்தனர்.
இரண்டாண்டுகள் கடந்து அந்தப்பாடல் வெளியானது. 

ஒருமுறை நான் எழுதிய ஒரு சிறு கவிதையை ரம்மியமான ஒரு பல்லவியாக பாடி நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். அதே நண்பரின் வேண்டுகோளை ஏற்று தனிப்பாடல் ஒன்றையும் அப்போது எழுதியிருந்தேன். சில நாட்கள் கடந்து வெளியான அப்பாடல் ஒரு மெல்லிசைப் பாடலாக அமைந்திருந்தது. 

இவைகளுக்கிடையில் நாமக்கல் கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள் அறிமுகமாகினர். அவ்வப்போது அங்கு நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளுக்கு சென்று வருவதுமுண்டு. நிகழ்வில் கலந்துகொள்ளும் தோழர்கள் தங்களது வாசிப்பைக் குறித்தும் வாசிக்கும் நூல்கள் குறித்தும் பகிர்ந்து கொள்வார்கள். அப்போதிருந்த தோழர்களில் ஒரே பெண் வாசிப்பாளர் என்பதால் சில நிகழ்வுகளில் எதாவது ஒரு பொறுப்பும் தந்து பேசவும் வழியமைத்துத் தந்தார்கள் அங்கு. பேச்சுக்கும் எனக்கும் வெகுதூரம் என்பதை பலமுறை தெரியப்படுத்தியும் தோழர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 

முதல் முறை ஒரு கவிதை நூலை கொடுத்து அந்நூலின் கவிதைகள் குறித்துப் பேசச் சொன்னார்கள். இரண்டு மூன்று கவிதைகளை மேற்கோள் காட்டி கவிஞரின் அறிமுகம், நூல் உரைக்கும் சூழல், அவற்றின் பாடுபொருள் முதலியவற்றைச் சில நிமிடங்கள் பேசினேன். நிகழ்வு முடிந்து தோழர் ஒருவர் நீங்க தினமும் கண்ணாடி முன்னாடி நின்னு ஒரு பத்து நிமிடம் பேசுங்க கீதா. தொடர்ந்து இதை பண்ணினா நீங்க இன்னும் நல்லா பேசுவிங்க என்றார். எனக்குப் பிறகு ஏற்புரைக்காக அத்தோழரை அழைத்திருந்தனர் பெருந்தன்மையோடு அதை மறுத்து அவர் அமர்ந்திருந்தது நினைவு வர நீங்க ஏன் தோழர் பேசாமல் விட்டீர்கள் என்றேன். நமக்கு இதுலலாம் பெரிசா ஆர்வமில்லை கீதா என்றார். என் ஆர்வத்தை மட்டும் எப்படி கணித்திருப்பார் என்ற சிந்தனையோடு வீடடைந்தேன். 

இதேபோல் ஒருமுறை நன்றி உரைக்கான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தனர். நிகழ்வு முடிந்து நன்றி உரைக்காக நான் அழைக்கப்பட்டேன். இவ்வளவு நேரம் நம்மோடு அமைதி காத்திருக்கும் இந்த அறைக்கும் இந்த அறையின் கரும்பலகைக்கும் இங்கிருக்கும் இருக்கைகளுக்கும் இத்தனை உரைகளை அமைதியோடு கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்த எனக்கும் நன்றிகள் என்று உரைமுடித்து வந்து அமர்ந்து விட்டேன். எழுந்த சிரிப்பொலிகள் அடங்க சில நிமிடங்கள் ஆனது. இப்படியாகவும் ‌சில நாட்கள் இருக்கவே செய்தது. 

முதல் பாடல் வாய்ப்பு தந்த நண்பர் உலகேஷ் அடுத்ததாக திரைப்படத்திற்கான பாடல் வாய்ப்பை வழங்கினார். இந்த பாடல் சரியாக அமைந்துவிட்டால் ஒரு கணிசமான தொகை உங்களுக்கான சம்பளமா வழங்குவாங்க என்றார். மகிழ்ச்சி தான். ஆனால் சிரமம் என்னவென்றால் எனக்கு வழங்கிய பாடல் குத்துப்பாடல். முதலில் என்னால் முடியாது என்று மறுத்தேன். சினிமா இப்படித்தான். எழுத வந்துட்டா எல்லாமே தான் எழுதிப் பழகணும். நேரம் இருக்கு மெதுவா எழுது என்றார் நண்பர். அதற்குள் பாடலாசிரியர் என்று என் பெயரோடு படத்தின் போஸ்டர் வெளியானது. எழுதாமலேயே பெயர் வெளியான அதிருப்தி ஒருபுறமிருந்தாலும் இதற்காகவாவது எழுதிவிட வேண்டும் என்ற உறுதியும் தோன்றியது. எழுதினேன். எழுதியபடியே இருந்தேன். அந்த ஒரு மெட்டுக்கு மட்டும் நூறு பாடல்களுக்கு மேல் எழுதியிருப்பேன். சில நாட்கள் கடந்திருந்தன. ஒருவழியாகப் பல்லவி ஒன்றைத் தெரிவு செய்திருந்தனர். சரணத்திற்கு நகரும்போது எதோ ஒரு எண்ணம் தோன்ற 'போதும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்குக் குத்துப்பாடல் எழுத வரவில்லை. வாய்ப்புக்காக வருத்திக்கொண்டு எழுத என்ன இருக்கு.' என்ற புத்தி நினைவெழ என்னால இந்த பாட்டு எழுத முடியல என்று வெளிப்படையாகக் கூறிவிட்டேன். ஆனால் எழுத்தைப் பொறுத்தமட்டில் எதுவுமே வீணாகாது அல்லவா. அந்த வாய்ப்பு வழி அமைந்த நூறு பாடல்களும் எனக்குப் பாடல் எழுதுவதற்கான நல்ல பயிற்சியாக அமைந்தது. 



Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: