எழுத்தும் நானும்
மனிதனுக்கான கலையில் என்னளவில் எழுத்தே தலையாயது. அது என்னவோ நல்ல எழுத்தினை உண்டாக்கும் எழுதுகோல் எனக்கு மந்திரக் கோலாகவே தென்படுகிறது. அது மட்டுமல்லாது எழுத்தாளர்கள் மாய உலகில் வாழ்பவர்கள் என்று சிறுவயது முதலே ஒரு பிம்பம் மனதின் மீது பதிந்ததாலோ என்னவோ நானும் ஒரு மந்திரக் கோலை பற்றிக்கொண்டு அம்மாயா உலகில் சஞ்சரிக்க வேண்டுமென்ற பேராசை சமீபமாய் ஒட்டிக்கொண்டது.
என் முதல் எழுத்து அல்லது எழுத்துக்கான தருணம் என்பதை நான் உணர்ந்தது எனது பதிமூன்றாம் வயதில். ஐந்து வரி கொண்ட முதல் கவிதையை அப்போது எழுதியிருந்தேன். எட்டாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்த நான் எழுதிய முதல் கவிதையை என் வகுப்புத் தோழி அமுதாவிடம் காட்டினேன். முழுவதையும் இரண்டு மூன்று முறை படித்தவள் உனக்கொன்னும் ஆகலல என்றாள். அது ஒரு கவிதை படிப்பவருக்கு அப்படியே புரிய வேண்டும் என்றில்லை என்ற தெளிவெல்லாம் அப்போது இருக்கவில்லை. மேலும் இது எனக்கான திறமை என்று உணர்த்தவோ ஊக்குவிக்கவோ எந்தச் சூழலும் அப்போது இல்லை என்பதால் அடுத்ததாக எதையுமே எழுதவில்லை.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பனிரெண்டாம் வகுப்பில் கவிதை எழுதி வர வேண்டும் என்று வீட்டுப்பாடம் வழங்கினார் தமிழாசிரியையும் வகுப்பு ஆசிரியையுமான சசிரேகா அம்மா. அந்த அளவிற்குப் படிக்கும் ஆர்வமெல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஆனால் மற்ற மாணவிகளைக் காட்டிலும் ஓரளவிற்கு தமிழ் வாசிப்பேன். எல்லா உரைநடைப் பாட வேளைகளிலும் நான் எழுந்து அப்பாடத்தை வாசிப்பதுண்டு. எப்போதும் எல்லா வீட்டுப்பாடங்களையும் சரியாக செய்து வரும் பத்துபேர்கள் இருப்பார்கள், அவர்களைத் தாண்டி வீட்டுப்பாடம் செய்யாமல் எழுந்து நிற்கும் மற்ற நாற்பது மாணவிகளில் பெரும்பாலும் நானும் ஒருத்தியாகவே இருப்பேன். ஆனால் அன்று மட்டும் எல்லோரும் நின்றோம். நான் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவி. எல்லோரும் எழுந்து நிற்பதைப் பார்த்த தமிழ் அம்மா கோபத்தின் உச்சத்தற்கே சென்றார். முதல் வரிசையில் இருந்த முதல் மாணவியின் முதுகில் ஓங்கி ஒரு அடி விட்டார். அதுவரை எந்த மாணவியையும் அவர் அடித்ததில்லை. அது தான் முதல் முறை. 'ஒருமுறை எழுதிப்பார்த்து ஒரு வார்த்தையோட வந்திருந்தா கூட நான் சொஞ்சம் நிம்மதி அடைஞ்சிருப்பேன். முயற்சிகூட பண்ணலனா எப்படி? பரிச்சை எழுதி பாஸ் பண்ணுறது மட்டும் தான் படிப்புனு நினைச்சிங்கனா அத இப்பவே மறந்துருங்க' என்று கத்த தொடங்கிவிட்டார். அந்த அதிர்ச்சியிலும் பயத்திலும் பதட்டத்திலும் வேறு வழியின்றி "மழை" என்று தலைப்பிட்டு மூன்று வரி கவிதை ஒன்றை எழுதினேன். தலைப்பு மட்டுமே இப்போது நினைவில் உள்ளது. பதட்டத்தோடு எழுதியிருந்தாலும் எனது கவிதைக்கு நல்ல பாராட்டு கிடைத்திருந்தது.
அதன்பின் சென்னை வந்தேன். முதல் நாள் கல்லூரி அன்று என் வகுப்பறையைக் கண்டுபிடித்து செல்வதற்குள் அறையின் இருக்கைகள் முழுவதும் நிரம்பிருந்தன. கடைசி பென்ச் மட்டும் யாரும் இல்லாமல் இருந்ததால் சென்று அமர்ந்தேன். அடுத்தடுத்து வந்த மாணவிகள் என்னைப்போலவே அதே பென்ச்ல் என்னோடு இணைந்தனர். இப்படி சேர்ந்திருந்த நாங்கள் ஐந்து மாணவிகளும் இணைபிரியா தோழிகள் ஆனது பெருங்கதை.
இரண்டாம் நாள் கல்லூரியில் பரமேஸ்வரி அம்மா அறிமுகமாகியதோடு அப்போதே எழுத்து குறித்து சில அறிவுரைகளை கூறிவிட்டு இப்போது நான் ஒரு தலைப்பு சொல்வேன் அதற்கொரு கவிதை கூறவேண்டும் என்றார். வகுப்பின் முன்னால் இருந்து அவர் சொன்னது என் காதுக்கு எட்டுவதற்கு சிறிது நேரம் ஆகியிருந்தது. அம்மா "அப்பளம்" என்றார் என் வகுப்பு மாணவி ஒருத்தி எழுந்து "உடைக்காமல் உன்னைப் பொரித்து எடுத்து உடைத்து உனைச் சாப்பிடுவேன்." என்றாள். எல்லோரும் கைத்தட்டினர். மாணவியைச் சத்தமாக மீண்டும் அந்தக் கவிதையை கூறச் சொன்னார் அம்மா. அவள் அழகாக அதைச் சொன்னாள். 'இவ்வளவு தான் மா கவிதை. ஆர்வமும் கொஞ்சம் மாற்று சிந்தனையும் இருந்தால் போதும்' என்றார். வெறும் புத்தகக் கல்வி வாழ்க்கைக்கு போதாது. எதாவது ஒரு திறமையை வளர்த்துக்குங்க என்றார் பரமேஸ்வரி அம்மா. உண்மை தான். வெறும் பாடப்புத்தகங்கள் கூறும் கல்வி கலைக்குப் போதாது.
ஒரு முறை பாடநூலுக்காக திருவல்லிக்கேணியில் இருக்கும் பழைய நூல் கடைகளுக்கு சித்தப்பாவும் அவரது நண்பர் பெரியசாமி அண்ணாவும் அழைத்துச்சென்றனர். பாரதிதாசனின் இருண்ட வீடு எனக்குப் பாடமாக வந்திருந்தது. கடைக்குள் நுழைந்ததும் இருண்ட வீடு வேண்டும் என்றார் சித்தப்பா. இல்லை 'எதிர்பாராத முத்தம் தரவா?' என்றார் கடைக்காரர். சுற்றிப் பார்த்தேன் பின் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது எதிர்பாராத முத்தமும் பாரதிதாசனின் நூல் என்று. வாசிப்பு மற்றும் நூல் குறித்த தெரிதல் அவ்வளவே இருந்தது அப்போது எனக்கு.
ஒரு நூல் வெளியீட்டிற்காக சித்தப்பாவோடு செல்ல நேர்ந்தது. 'அமைதி இங்கே கிடைக்கும்' புத்தக வெளியீட்டு விழா அது. நிகழ்வு முடிந்து விடுதி திரும்பும்போது 'உனக்கு எழுத்தில் விருப்பம் இருந்தால் எழுது. எழுத்து உன்னை நிச்சயமாக மேம்படுத்தும். எழுத்துத் துறையில் என்னற்ற வேலைவாய்ப்புகள் உண்டு தான். அதனால் முடியும்போது எழுது' என்றார் சித்தப்பா. முதல் முதலாக ஒரு குறிப்பேடு வைத்து அப்போது தான் எழுதத் தொடங்கினேன். நீள் கவிதைகள் அவை. பத்து கவிதைகளுக்கு மேல் எழுதியிருப்பேன். ஆனால் வகுப்பு, தேர்வு, வாசிப்பு உடன் பகுதிநேர வேலை என்று என் நாட்கள் நெருக்கடியாக நகர்ந்ததால் என்னால் மேற்கொண்டு எழுதமுடியவில்லை.
இருப்பினும் கல்லூரியில் நடைபெறும் போட்டிகளில் நிச்சயமாக கலந்துகொள்வேன். பரிசுக்காகவோ மிகுந்த ஆர்வத்தினாலோ அல்ல. தமிழ் துறை போட்டிகளில் தமிழ் துறையிலிருந்தே மிக குறைந்த மாணவிகள் தான் கலந்து கொள்வார்கள். தயக்கம், கூச்சம் போன்ற காரணங்களால் மாணவிகள் பெரும்பாலும் முன்வருவதில்லை. ஆகையால் நான் முன்சென்று கலந்துகொள்வதுண்டு. அப்படி சில பரிசுகள் வாங்கியதுமுண்டு.
முதுகலையில் ஒருமுறை தமிழ் துறை முத்தமிழ் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. பகல் கல்லூரி முடித்து மாலை பகுதிநேர வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன். போட்டிகள் எதிலும் பங்குபெற முடியவில்லை. பங்குபெற மனமும் இல்லாத சமயம். அன்று கட்டுரை போட்டிக்கான நிகழ்வுகள் ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. தமிழ் துறையில் இருந்து யாரும் கலந்துகொள்ளாத நிலையில் ருக்மணி அம்மா வகுப்பறையில் வந்து விசாரித்தார். 'பரிசு வாங்குறதும் வாங்காமல் போறதும் அப்பாற்பட்டது கலந்துகொள்ள கூட ஏன் முன்வர தயங்குறிங்க' என்று தன் வருத்தத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார். அவர் வருத்தம் தாளாமல் அப்போதே போய் போட்டியில் கலந்துகொண்டேன். பரிசு வாங்கும் நோக்கம் சிறிதும் இல்லை தான். ஆனால் என் கட்டுரை இரண்டாம் பரிசு வென்றிருந்தது. இப்போது சிந்திக்கையில் தோன்றுகிறது ஏதேனும் ஒரு சூழல் உந்தி தள்ளித்தள்ளித் தான் நான் எழுத்தின் கைகளை பற்றியிருக்கிறேன் என்று.
ஒருமுறை தோழர் நல்லக்கண்ணு அவர்களைச் சந்திக்க சென்றிருந்தேன். அது நான் அவரை சந்திக்கும் முதல் சந்திப்பு. சட்டக் கல்லூரி தோழர்களோடு சென்றிருந்த தமிழ் மாணவி நான். புத்தகங்களால் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். இத்தகைய உயரிய கருத்து சான்றோர் அறியாதது இல்லை. ஒவ்வொருவரையும் அன்பு பாராட்டித் கொண்டிருந்தார் மூத்த தோழர். தன் புத்தக அலமாரியை காண்பித்து யாருக்கு என்ன நூலில் விருப்பமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். நூலகத்தை அடுத்து அத்தனை நூல்களை அங்குதான் கண்டேன். ஆசையல்ல பேராசையோடு ஆளுக்கு ஒன்றை எடுத்தோம். என்னைக் கண்ட தோழர் படிப்பு முடித்து என்னவாகப் போகிறீர்கள் தோழர் என்றார். கவிஞர் ஆகப் போகிறேன் என்றேன். வாய்திறந்து சிரித்த தோழர் இதுக்கு முன்னாடி எழுதியிருக்கிங்களா தோழர் என்றார். கல்லூரி போட்டிகளில் கலந்து எழுதியிருக்கிறேன் தோழர் என்றேன். அப்படி என்றால் நீங்கள் இப்போதே கவிஞர் தானே தோழர் என்று மீண்டும் சிரித்தார். அதோடு 'சங்க இலக்கியத்தில் பெண் கவிஞர்கள்' என்ற நூலினை எடுத்து இது என் அன்பளிப்பாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். பிறகு கவிதை மற்றும் எழுத்துக்குறித்த நிகழ்வுகளுக்கு என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அப்படித்தான் ஒருமுறை தமிழன்பனின் "கசல் பிறைகள்" நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று வந்தேன்.
ஒருமுறை தமிழ் தென்றல் திரு.வி.க குறித்த இலக்கிய விழாவிற்கு தோழரோடு சென்றேன். அவ்விழாவில் நிகழ்த்தப்பட்ட தோழரின் உரையை ஒரு கட்டுரையாக எழுதினேன். அந்தக் கட்டுரை ஜனசக்தி நாளிதழில் வெளியானது. எழுத்துக்கான முதல் பாராட்டை அப்போது தான் மனதார உணர்ந்தேன்.
எனது முதல் கவிதை பிரசுரமானது தாமரை மாத இதழில். 'உதிர் கன்னி' என்ற தலைப்பில். திருமணமாகாத, திருமணத்திற்குக் காத்திருந்து ஏங்கும் முதிர்கன்னியான ஒரு பெண்ணின் உணர்வில் எழுதியிருந்தேன். முதல் கவிதை முதல் பிரசுரம் என்பதை எல்லாம் கடந்து 'உனக்கு அதுக்குள்ள கல்யாண ஆச வந்துடுச்சா?' என்ற கேள்வியைத் தான் அதிகம் எதிர்கொண்டேன். கவிதையின் உள்ளடக்கத்தை வைத்துத்தான் கவிஞரின் பிம்பத்தை கட்டமைக்கிறார்களா என்ற கேள்வியை எனக்குள்ளேயே தூண்டியது அக்கருத்துகள்.
இதைத் தொடர்ந்து நண்பர் உலகேஷ் மூலம் ஒரு மொழிமாற்று பாடல் எழுதும் வாய்ப்பு அமைந்தது. முதல் வாய்ப்பை நானே தட்டிக் கழித்தேன். நண்பர் விடாமல் அடுத்த வாய்ப்பை தந்தார். அப்படித்தான் கதம்மா என்ற மலையாளத் திரைப்படத்தின் மொழிமாற்றுப் படமான பாலைவன ரோஜா (தொலைக்காட்சி திரைப்படம்) என்ற படத்தில் ஒரு பாடலை எழுதினேன். பாடல் குறித்து எந்த அறிவும் அதுவரை இருந்ததில்லை. அப்பாடல் பதிவில் உடனிருந்து கேட்கும்போது தான் அதுவரையில் நான் அறிந்திருந்த எழுத்தின் சுவை சற்று கூடுதல் அழகுப் பெற்றிருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு வரியும் வார்த்தையும் ஏறி இறங்கும் இசையில் மிளிர்ந்தது. சரியாக இதற்குள் என் கல்லூரி காலமும் முடிவு பெற்றது. வாழ்க்கையின் பெரும் அனுபவத்தையும் எழுத்தையும் கைப்பற்றிக்கொண்டு சொந்த மண்ணிற்குச் சிறகடித்தேன்.
வாழ்வில் இதுபோன்ற முக்கியமான தருணங்கள் நம்மை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே செல்கின்றன அக்கா ...
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சி...
தொடர்ந்து எழுதுங்கள் ...
மகிழ்ச்சி திருமூ 😊
ReplyDelete