Antarjali Jatra (1987)
Antarjali Jatra (1987)
Goutam Ghosh - Indian director
Kamal Kumar Majumdar - Indian writer
இன்னும் ஓரிரு தினங்களில் இறக்கவிருக்கும் ஒரு முதியவருக்கு அழகிய இளம்பெண்ணை மணமுடித்து அந்த முதியவரின் சடலத்தோடு உடன்கட்டை ஏற்ற ஏற்பாடு செய்கின்றனர் முதியவரின் குடும்பத்தினர். முதலில் மறுத்து அழுது மன்றாடினாலும் பிறகு வேறு வழியின்றி அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிறாள் இளம்பெண்.
சதி வழக்கத்தின்படி இறந்த கணவனின் சொத்துக்கள் உடன்கட்டை ஏறும் பெண்ணின் குடும்பத்தாரைச் சேரும். வறுமையின் பிடியில் இருக்கும் தன் குடும்பத்தை மீட்க மகளை சதிக்கு பலிதர தயாராகிறார் இளம்பெண்ணின் தந்தை.
மரபிலேயே ஊறிப்போன ஒரு கலாச்சாரத்தை மீறுவதில் உள்ள அசௌகரியம் என்னவென்பதை அழகாக உரைத்துச்செல்கிறது திரைப்படம். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதிகளின் பிரதிநிதியாகிறாள் யசோவதி.
ஒரு முன்னேற்றத்திற்கும் மீறலுக்குமான எதுவுமே இல்லாதக் காலங்களில் இப்படியான மூடநம்பிக்கைகளின் பேரில் சதி போன்ற அநீதிகள் தொடர்ந்து நிகழ்ந்திருப்பது அக்காலத்தின் பெண்களுக்கான துயரம். மாற்றம் முதலில் தனக்குள் நிகழ வேண்டும். அவ்வாறு நிகழ அம்மாற்றத்தின் அவசியம் மற்றும் அதன் தேவை குறித்த புரிதல் வேண்டும். இவைகளுக்கெல்லாம் அடிப்படையாக கல்வி வேண்டும். குறிப்பாக எப்போதும் வஞ்சிக்கப்படும் பெண்களுக்கு.
இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமான பைஜுவாக Shatrughan Sinha நடித்திருப்பார். சதிக்கு முற்றிலும் எதிராக வரும் இவரது பாத்திரம் பேசும் புரட்சி இதில் அதிநுட்பமானது.
தனக்கு நிகழும் அநியாயத்திற்கு துணைபோகவும் முடியாமல் தன் ஆழ்மன உணர்வுகளை வெளிக்கொணரவும் முடியாமல் தவித்தாலும் அப்போதிருந்த தர்மத்தின்படி நாள்தோறும் கணவனுக்கு பணிவிடை செய்து வரும் யசோபதி உருவில் அப்போதைய பெண்களின் பரிதாப நிலையை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குநர் Goutam Ghose.சதி:
சதி என்பது தூய்மையான தியாகம் என நம்பப்பட்டிருக்கிறது. முதலில் பெண்களே முன்வந்து செய்த சதி காலப்போக்கில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அரசன் இறந்தபின் விலை உயர்ந்த அவனது பொருட்களையும் உடன் சேர்த்து எரிப்பதிலிருந்து தான் மனைவியையும் எரிக்கும் சதி முறை உருவாகியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
வென்ற அரசர்கள், தோற்ற நாட்டு வீரர்களின் மனைவிகளை வன்கொடுமை செய்ய முனையும்போது அப்பெண்கள் தமது கற்பைக் காக்க, இந்த உடல் அன்னியர்களுக்குப் போவதைவிட அக்கினிக்குப் போவதே மேல் என அக்கினியில் விழுந்து உயிரைவிட்டனர். தற்காப்புக்காக செய்யப்பட்ட இச்செயலே நாளடைவில் சதியாக உருபெற்றிருக்கலாம் என்று கூறப்படுவதுண்டு.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் குறிப்பாக ஈரான் இந்தோனேசியா நேபாளம் பாலி ஆகிய பகுதிகளில் சதி கடைபிடிக்கப்பட்டத்தற்கான சான்றுகள் வேறு வேறு வடிவங்களில் கிடைக்கப்பெற்றாலும் ராஜ்புத் வம்சத்தினர்கள் சதியை இங்கு முதலில் கடைபிடித்தனர் என்று வரலாறு கூறுகின்றது.
கணவனின் இறப்பிற்குப் பின் பெண்கள் நோய், தனிமை மற்றும் ஒதுக்கப்படுதல் போன்ற கொடுமைகளில் இருந்து மீள தாமாகவே முன்வந்து சதிக்கு தயாரானது ஒருபுறமிருந்தாலும், ஒரு விதவை இந்த சமுதாயத்தில் முற்றிலுமாகச் சமயச் சடங்குகளால் ஒதுக்கப்படும்போதும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் போதும் அவளுக்கு நிகழ்த்தப்படும் சதி அவளுக்கான விடுவிப்பாகக் கருதி ஒருபுறம் இதைச் செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.
ராஜ்புத் வம்சத்தினரிடம் இருந்து பரவிய இந்த வழக்கம் வடமேற்கு இந்தியவாழ் அந்தணர்களால் கடைபிடிக்கப்பட்டு பிறகு மற்ற பிரிவு மக்களுக்கும் பரவி இருக்கிறது. தென்னிந்தியாவில் நிகழ்த்தப்பட்ட சதிகளுக்கு சான்றாய் பல நடுகற்கள் மற்றும் தாய்தெய்வ கோயில்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கொங்குப்பகுதியில் காணப்படும் வீரமாத்தி கோயில்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே சதிக்கு சட்ட ரீதியில் எதிர்ப்பு வந்திருந்தாலும் அதே காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையில் சதி நிகழ்ந்திருப்பதும் பெரும் முரண். ஆங்கிலேயர்கள் வகுத்த சீர்திருத்தங்களில் முதன்மையானது சதிக்கு எதிரான சட்டம் கொண்டு வந்ததுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சதிக்கு எதிராக 1987 ல் சுதந்திர இந்தியாவில் சதி தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மிக ஆழமாக ஊறிப்போன கலாச்சாரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சட்டத்திற்கு அங்கங்கு எதிர்ப்புகள் வந்தாலும் காலப்போக்கில் ஒருவழியாக ஏற்று சதி முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. சதி ஒழிப்பிற்கு பெரிதும் குரல் கொடுத்தவர் இராஜாராம் மோகன் ராய்.
சதி குறித்த புரிந்துகொள்ளலை, அதை ஏற்கும் பெண்ணின் உளவியலை, அந்தக் காலக்கட்டத்தின் பின்புலத்தை, சதிக்கான காரணத்தை என சில கோணங்களில் சதி குறித்து உரையாட செய்கிறது இத்திரைப்படம்.
இந்திய எழுத்தாளர் "Kamal Kumar Majumdar " எழுதிய நாவல்களில் ஒன்றான Antarjali Jatra (The Final Passage, 1962) என்ற நாவலே அதே பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது.
இலக்கியம் என்பது வரலாற்றினை அப்படியே அறிவதற்கான முதற் சான்று. இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளரான கமல் குமார் மஜும்டர் படைப்புகள் ஒவ்வொன்றும் நம் இந்திய நாட்டின் வரலாற்றினை அப்பட்டமாக பிரதிபலிக்கும் வகைகள். இவரது நாவல்கள் பல படமாக்கப்பட்டு விருதுகளையும் குவித்திருக்கின்றன.
Comments
Post a Comment