HALAL
Halal"
(Shivaji Lotan Patil
Indian film director)
இசுலாமிய மதத்தின் அடிப்படையில் கணவன் மனைவியை பிரிய நேரிடுமேயானால் கணவன், மனைவியின் மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருந்து முறையே ஒவ்வொரு மாதமும் ஒருமுறை தலாக் என்று மூன்று முறை மனைவியின் முன் உரைத்தால் அவர்களின் திருமணம் உறவு முடிவுற்றதாய் நம்பப்படுகிறது. இதை "முத்தலாக்" என்கின்றனர். ஒருவேளை இந்த மூன்று மாதகாலம் இடைவெளியில் பெண் கர்ப்பம் தரித்தால் பின் பேறுகாலம் முடிந்தபிறகு தலாக் உரைக்கப்பட்டுகிறது.
இதன் முன்னேற்றமாக முத்தலாக்கிற்கு இப்போது யாரும் மூன்று மாதங்கள் வரை அதாவது மனைவியின் மூன்று மாதவிடாய் காலம்வரைக் காத்திருப்பதில்லை உடனுக்குடன் உரைக்கப்பட்டுவிடுகிறது.
மலையாளத் திரைப்படம் 'பிரியாணி'யில் கணவன் தன் மனைவிக்கு தலாக் தலாக் என்று மூன்று வார்த்தைகளைக் குறுஞ்செய்தியில் அனுப்பி அந்த உறவை முடிப்பதாகக் காட்சியிருக்கும். எப்படி சொன்னால் என்ன. நம்பிக்கையின் அடிப்படையில் அந்த வார்த்தையை உரைத்துவிட வேண்டும். தன் வாழ்வில் அதிமுக்கியமான ஒரு உறவை முடித்துக்கொள்வதில் இருக்கும் எந்தவித சலனமும் அந்த கணவனின் முகத்தில் இருக்காது. பதிலாய் அந்த உறவை விரைவாக முடித்து கொள்வதற்கான அவரசரமே மேலோங்கி காணப்படுவதாக அந்த கதாபாத்திரமும் காட்சியும் அமைக்கப்பட்டிருக்கும்.
இத்திரைப்படத்திலும் முற்றிலும் தன் மனைவியின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு ஒரு கணவன் உடனுக்குடன் மூன்று முறை தலாக் உரைத்து மனைவியை அவள் பிறந்த வீட்டில் விட்டுவிட்டு செல்வார்.
ஒரு ஆணுக்கான தண்டனையாக முத்தலாக் இசுலாமிய நம்பிக்கையில் கருதப்படுகிறது. சரியாக கூறவேண்டும் எனில் இது முற்றிலுமாக ஒரு பெண்ணுக்கான தண்டனை மட்டுமே. முத்தலாக் வழங்கப்படும் பெண்களின் மனநிலையை அழகாக சித்தரிக்கிறது இத்திரைப்படம்.
திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணின் விருப்பம் கேட்கப்படுகிறதோ இல்லையோ முத்தலாக்கிற்கு முன் மனைவியின் விருப்பம் எதுவும் கேட்கப்படுவதில்லை. எந்த ஒரு மதத்திலுமே தீர்க்கமாக கடைபிடிக்கப்படும் சடங்குகளினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர் என்பது பெரும் துயரம்.
முத்தலாக் கொடுத்த கணவர் தன் மனைவியோடு மனம் மாறி இணைய விரும்பினால் மீண்டும் மணமுடித்து மட்டுமே இணைய முடியும் என்பது சடங்கு. முக்கியமாக அந்தப் பெண் முத்தலாக்கிற்குப் பிறகு இன்னொருவரை மணந்து பிரிந்திருக்க வேண்டும் அல்லது விதவையாகியிருக்க வேண்டும். பிறகே தலாக் கொடுத்த முதல் கணவர் மணக்க முடியும் என்பது மதத்தின் இன்னுமொரு நம்பிக்கையாகக் கடைபிடிக்கப்படுகிறது.
எத்தனை மணம்புரிந்தாலும் அத்தனை கணவரோடும் அப்பெண் உறவுக்கொள்ளவும் வேண்டும் என்பது சடங்குகள் பெயரில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி.
ஒழுக்கம் அடக்கம் என்ற பெயரில் பெண்களை பொம்மைபோல் இருத்தி சமயங்களின் சடங்குகள் நூலில் கட்டி அவளை ஆட்டுவிக்கும் சமுதாயத்தில் பெண் தான் எழுந்து அவளுக்கான கட்டுக்களை உடைத்து நியாயம் கேட்க வேண்டும். அது ஒன்றே தீர்வைப் பெற்றுத்தரும் என்ற கருத்தை ஒரு மெல்லிய கோடினைப்போல் சொல்லி நகர்கிறது படம்.
Comments
Post a Comment