LOVE IS LOVE

சென்னை வந்திருந்த புதிது அது. ஆறு மாதங்கள் வரை கடந்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை வரும்வரை சொந்த ஊரிலேயே எங்குமே தனியாக சென்றிடாத நான் சென்னையில் முற்றிலுமாக தனித்துவிடப்பட்டேன் என்ற உணர்வு முழுமையாக  ஆக்கிரமித்திருந்தது. எங்குச் சென்றாலும் ஒருவித பயம். யாரோடும் பழகத் தயக்கம். இதற்கிடையில் பகுதிநேர வேலைக்காக ஒரு பதிப்பகத்தில் சேர்ந்தேன். அங்கு என்னோடு ஒன்றிரண்டு பெண்களைத் தவிர அனைவரும் ஆண்கள்.

ஒருவார காலம் சென்றிருக்கும். பதிப்பகம் வந்த ஓர் இளைஞர் பணப் பெட்டியைத் திறந்ததற்காய்ச் சற்று கோபத்தோடு முறைத்து "யார் நீங்கள் புகார் அளிப்பேன்"  என்று கடிந்துகொண்டேன். பிறகுதான் தெரிந்தது என்னைப்போல் அவரும் அந்தப் பதிப்பகத்தில் ஒரு பணியாள் என்று. பிறகு "கைபேசியைத் தவறி எங்கோ  வைத்துவிட்டேன் ஒரு அழைப்பு விடுங்கள்" என்றார் அந்த இளைஞர். இப்படித் தான் எண் பகிரப்பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து வந்த புத்தாண்டின் இரவு, வாழ்த்திற்குப் பதிலாகக்  காதலுரைத்துக் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார் அந்த இளைஞர். பார்த்தேன். பதிலுரைக்கவில்லை. மறுநாள் பதிப்பகத்தில் இனம்புரியாத மகிழ்ச்சியோடு புத்தாடையில் வந்திருந்த அந்த இளைஞர் முதலில் சிரித்தார். பிறகு குறுஞ்செய்தி வந்ததா என்றார். இதெல்லாம் எனக்கு புதிதாகவும் மற்றும் சற்று பதட்டத்தை தரக்கூடிய நிகழ்வாகவும் இருந்ததால் முடிந்தளவு அதை எதையும் காட்டிக்கொள்ளாமல் அதே சமயம் சட்டென்று காயப்படுத்தி விடக்கூடாது என்ற நிதானத்திலும் எந்தக் குறுஞ்செய்தி என்றேன். இல்லை வாழ்த்து அனுப்பிருந்தேனே என்றார் அவர் ஒருவிதக் கலவரத்தோடு. மன்னிக்கவும் நிறைய குறுஞ்செய்திகள் வந்திருப்பதால் கைபேசியில் அவ்வளவையும் பதிந்து கொள்ள முடியாது. அதனால் மொத்தமாக அழிக்க நேரிட்டது. அதான் சந்தித்துவிட்டோமே இப்போது பரிமாறிக்கொள்வோம் வாருங்கள் இனிய வாழ்த்துகள் என்றேன். புன்முறுவலோடு விலகியவர் அன்று இரவு நான் விடுதியில் இருக்கும்போது அழைத்தார்.  கறாரான காதலுரைப்பாக இருந்தது அது. நீ மட்டும் சம்மதிக்கல அவ்ளோ தான் என்ற மிரட்டலோடு அழைப்பைத் துண்டித்தார்.

எனக்கென்ன சங்கடம் ‌என்றால் அவர் மீது அப்படி எதுவுமே தோன்றவில்லை என்பது தான். நான் அதைத்தான் தெரிவித்தேன். இருந்தாலும் என்னை விரைவாக மாற்றி விடலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ. வேலையில் இருந்து சென்றுவிட்டார். நம்மால் ஒரு மனிதர் வேலைய விட்டே சென்றுவிட்டாரே என்ற குற்ற உணர்வு பீடித்தது என்னை. அழைக்கலாமா? பேசலாமா? என்ற சிந்தனை ஓடியது. ஆனால் அது தவறாக முடிந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் இருந்ததால் அதை அப்படியே கடக்க நினைத்தேன். பத்து நாட்கள் கடந்திருக்கும். மறுபடியும் அதே இளைஞரின் அழைப்பு. நீ என்ன பெரிய அழகினு நினைச்சியா? ஏதோ ஊரு பிள்ளை மாதிரி இருக்க. கொஞ்சம் லட்சணம். சரி கட்டிப்போமேனு பாத்தேன். ஓவரா பண்ற. பத்தே நாள் இன்னொரு பொண்ண மடக்கி காட்டறேன் பாக்குறியா? நீ பாப்ப.. என்று என் பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இணைப்பை துண்டித்தார். யாரு இவன் என்று முதலில் கொஞ்சம் கலவரமாகிப் பிறகு சிரிக்கத் தொடங்கிவிட்டேன். சொன்னதைப்போலவே பத்து நாட்களில் இன்னொரு பெண்ணைத் தன் காதலி என்று அழைத்து வந்து அறிமுகம் செய்தார் இளைஞர். இன்றும் நான் நினைத்ததும் சற்றுப் புன்னகைக்கும் காதலென்றால் இது தான்.

முதுகலை படிக்கும் போது அதே போல் பகுதி நேர வேலையில் ஒருமுறை உடன் பணிபுரியும் இன்னொரு நபர் மணிக்கணக்கில் காதலிப்பதாகவும் நானும் காதலிக்க வேண்டும் என்று கெஞ்சியதாலும் உச்சபட்ச அழுத்தத்திற்குச் சென்று அருகிலிருந்த கட்டையை எடுத்து என் கையை நானே தாக்கிக்கொண்டு அந்த நபரை வெளியேற செய்ததுதான் என் வாழ்வில் நான் சந்தித்த மோசமான காதல் அனுபவம்.

பத்து வயதிருக்கும். உறவில் சகோதரர் ஒருவர் இறந்தபோது தான் காதல் என்ற வார்த்தையைக் கேள்வியுற்றேன். கொல்லும் அளவு உள்ளதென்றால் காதல் எந்த வகையான மிருகம் என்று தோன்றியது அந்த வயதில்.

பதினைந்து வயதில் சகோதரிக்கு வந்திருந்த காதல் கடிதத்தை இரண்டொரு முறை திக்கித் திக்கி வாசித்துப் பிறகு அதிலிருந்த செந்தமிழ் தேன்மொழியாள் பாடலைச் சரளமாகப் பாடக்கற்றது தான் காதல் எனக்குத் தந்த முதல் நல்அனுபவம்.


மகி என் கல்லூரி தோழி. நான் விடுதியில் இருப்பதால் என் சக கல்லூரி தோழிகள் ஒவ்வொரு வாரமும் அவர்களின் வீடுகளுக்கு அழைத்து விடுவார்கள். அப்படிதான் அந்த வாரம் மகியைச் சந்திக்கச் சென்றேன். மதிய உணவு முடிந்து என்னை விடுதியில் அழைத்துக்கொண்டுபோய் விட தன் காதலனுக்கு பணித்தால் மகி. ரகசிய காதலது. பேருந்து நிறுத்தத்தில் நானும் மகியும் நின்றோம். இருவரும் எதிரெதிர் திசையில் நின்றோம். அவளை பார்த்தபடி நிற்கும் எனக்கு திடீரென்று அவள் முகத்தில் பளிச்சிடும் ஒரு அழகை பார்த்தேன். திரும்பினால் அருகில் மகியின் காதலன். காதல் இவ்வளவு அழகாக்குமா? ஒரு நொடிக்குள் எப்படி என்று சிந்தித்துக் கொண்டே விடுதியை அடைந்தேன். நான் பார்த்த, இன்றும் கண்களில் பதிந்திருக்கும் காதல் இது.


தோழி ஒருத்தி எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பாள். ஒரு அழைப்பு துண்டித்தால் இன்னொன்று என நீண்டுக்கொண்டே போகும். மற்ற தோழிகள் சிலர் அவளைப் பகடி செய்வதுண்டு எத்தனை காதலர்கள் என்று. அவள் சொல்வாள். நான் யாரையும் காதலிக்கவில்லை பதிலாக அன்பு செய்கிறேன் என்று. இந்த சொல்தான் எத்தனை பொருத்தம் என்று சமயங்களில் தோன்றும். 


என் அனுபவத்தில் காதல் ஒரு அபரிமிதமான பைத்தியத்தனம். சில வேளைகளில் அது அழகு. பல வேளைகளில் ஆபத்து.

எத்தனை வேகத்தில் ஒரு அற்புதத்தை படைக்கவல்லதோ அதனினும் கூடுதலான வேகத்தோடு படைத்ததை தகர்க்க வல்லது காதல் ஒன்று தான்.
காதலைப் போல் உயிர் கொல்லியும் வேறில்லை. காதலைப் போல் மருத்துவமும் பிறிதில்லை. இருப்பினும்
ஏன் காதல் அவசியம் எனில் அது தான் வாழ்க்கையை வாழச்செய்வது.

- கீதா கார்த்திக் நேத்தா

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: