சிலம்பும் - இறைவியும்

அன்னை, மனைவி, காதலி, மகள், மருமகள், அக்கா, தங்கை, தோழி, கடந்து செல்லும் யாரோ ஒருத்தி, காசுக்காக உடன் படுக்கும் விபச்சாரியானாலும் முதலில் அவள் பெண். ஆடை, ரத்தம், சதை தாண்டிய ஒரு பெண். 

எழுதப்பட்ட காப்பியத்தில் ஒரு கண்ணகி. ஆனால் இங்கு எழுதப்படாத எத்தனையோ காப்பியங்கள் நாள்தோறும் நிகழ்ந்துக்கொண்டே தான் இருக்கின்றன. கண்ணகிகள் பிறந்துக்கொண்டே தான் இருக்கின்றனர். 

முதுகலை பயிலும்போது ஏன் அதற்குப் பின்னதாய்கூட எனக்குப் பிடித்த பாடமென்றால் அது "சிலப்பதிகாரம்" தான். இப்படம் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு இதுவே பெரிய காரணம். இப்படத்திற்கு  பின்னதாக ஏற்பட்ட தெளிவுதான் எனையே எனக்குக் காட்டியதும். 

மழை இப்படத்தின் முதன்மையான ஒரு பாத்திரமாகியிருக்கிறது. ஆம், மழை என்பவள் தான் பெண். கண்களில் எதிர்காலம் குறித்த கனவுகளோடு வாழும் துறுதுறுப் பெண். தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்காலத்தை அனுபவிக்கத் தயாராகும் புதுமைப் பெண். கணவனின் கொடுமைகளைத் தாங்கித் தன் பிள்ளைகளுக்காய் வாழ எத்தனிக்கும் கனிவானப் பெண். கையிருப்பு வாழ்க்கையை ரசிக்கக் காத்திருக்கும் நவீனப் பெண். மழைக்கேது வகைகள். இருப்பினும் எல்லா மழை நாட்களும் எப்போதும் ஒன்று போலவே பார்க்கப்படுவதில்லை. மனிதனின் காலம், சூழல், மனவோட்டம் போன்றவைகளின் அடிப்படையிலேயே மழைக் குறித்த பார்வையும் மாறுபடுகிறது. இருப்பினும் மழை நாள் என்பது ஒன்று தான். இது பெண்ணுக்கும் பொருந்தும்.

இப்படத்தில் சில நாயகிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் எனக்கு தெரிந்ததென்னவோ சிலப்பதிகார பாத்திரங்களாகத் தான். ஒரு பெண் மணமுடிக்கிறாள், பின் கணவனைப் பிரிகிறாள், பிரிந்த கணவனுக்காக காத்திருக்கிறாள், தன்னிடம் ஒரு ஆண் காதல் கொண்டு நெருங்கி வரும்போதும் உள்ளுக்குள் விருப்பம் இருந்தும்  யாரும் அறியாத ஒரு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுவிடுகிறாள். காரணம் இச்சமூகம் ஒரு பெண்ணின் மீது திணித்திருக்கும் கட்டுப்பாட்டினை எண்ணி. ஏனெனில் கண்ணகிகளுக்குக் கணவனை தவிர வேறொருவன் மீது காதல் வரக்கூடாது என்பது இச்சமூகத்தின் எழுதப்படாத விதி. 
இரண்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் கணவனை ஏற்றுக்கொள்ளும் நாயகி , தன்னைச் சந்தேகங்கொள்ளும் அவனுக்கு 'என்னால் பதில் தர முடியாது,  தெரியாமலே வந்து வாழ்ந்தால் வாழு இல்லையென்றால் நான் தனியாக வாழ்ந்துகொள்கிறேன்' என்ற உறுதியில்  இன்னும் சற்று கூடுதலாக மிளிர்கிறாள். ராவணனிடமிருந்து மீண்ட சீதையின் மனோதிடம் ஏன் இந்த அளவிற்குக் கூட இருந்திருக்கவில்லையெனத் தோன்றியது. காரணம், எழுதியவர் அத்தனைப்பேருமே ஆண்கள் அவ்வளவே. 

இப்படத்தில் மிக பிடித்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது ஓவியப் பெண்ணாக வரும் மலர். திருமணம் குறித்த முடிவில் மிகத் தெளிவாக நிற்கும் மாதவி. திருமணத்திற்குப் பின்னும் தன்னை விரும்பி வரும் காதலனை ஏற்க மறுத்து, வீடு அனுப்பும்  ஒரு முரண்பட்ட காதலி. ஏன் முரண்பட்ட என்று உரைக்கிறேனென்றால் மாதவிகள் இலக்கியப்படி இப்படியான குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது மாதவிக்கான இலக்கணம். 

நாயகன் தனக்கென்று சுய சிந்தனையில்லாத தன்னைச் சார்ந்தவர்களைக் குறித்த அக்கறையும் இல்லாத ஒரு மாமனிதன். காதலி திருமணத்திற்கு மறுத்ததும் வேறு பெண்ணை மணப்பதிலும் சரி, மீண்டும் காதலியைத் தேடிச்சென்று அங்கு இன்னொரு ஆண் இருப்பதைப் பார்த்து தன்னைப்போலத்தான் அப்பெண் அந்த மனிதனையும் பயன்படுத்திக்கொள்கிறாள் என்று அவராகவே முடிவெடுப்பதிலும் சரி கருவுற்ற மனைவியைப் பற்றி சற்றும் சிந்திக்காது விசுவாசத்திற்காக சிறை செல்லும்போதும் சரி, இரண்டு வருடம் தனிமையில் வாடிய தன் மனைவியை சந்தேகப்படும்போதும் சரி, இறுதியாய் சிறிதும் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கொலைசெய்து கொலைப்படுதல் போன்ற தன் அற்ப செயல்களால் ஆண்மையை நிறுவும் ஒரு அற்புதமான கதாபாத்திரம். இதுவே இச்சமூகம் வரையறுத்து வைத்திருக்கும் ஒரு ஆணுக்கான இலக்கணமாக இருக்குமோ என்று தோன்ற செய்யும் பாத்திரம். 

படத்தின் முக்கிய கதாப்பாத்திரம் இவர்,  என் பார்வையில் பொற்கொல்லர்; இப்படத்தில் ஜெகனாக வரும் கதாபாத்திரம். எத்தனை நியாயங்களைக் கொண்டிருந்தாலும் திருட்டு திருட்டென்று தானே பொருள்படும். இக்கதாப்பாத்திரத்தின் சிந்தனைகள் வசனங்கள் அனைத்தும் சரியே. இருப்பினும் பெண்களை இறைவிகளாக தரிசிக்கும் இவரது மனம் நியாயங்களைக் கூறிக்கொண்டு செய்த சூழ்ச்சிகள் அபத்தமானவை. தன் அபத்தங்களுக்கு பலனாய் மரணத்தினைப் பெறும் பாத்திரம்.

தனக்கான கடமைகளிலிருந்து விலகி தன் விருப்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்தல் ஒரு சரியான பிழைப்பாகாதல்லவா? சிலப்பதிகாரத்தில் நாம் அறிந்து இப்படி வாழ்ந்ததாய் உரைக்கப்படும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் சோழன். அப்படித்தான் வருகிறது இப்படத்தின் அருள் (எஸ். ஜே. சூர்யா) கதாபாத்திரம். தன் மனைவி,  தன் பிள்ளையை மறந்து தான் தோல்வியுற்ற கலையை எண்ணி எண்ணி வருந்தி குடித்துத் தன் வாழ்வினையும் இழந்து, தன்னை நம்பியவர்களையும் நிம்மதியிழக்கச்செய்யும் ஒரு கதாப்பாத்திரம். சோழனைப்போலவே அவசரப்பட்டு மதியிழக்கும் ஒரு ஆண் நெடில். 
இறுதியான ஒரு பாத்திரம் இவர். அருளின் மனைவி. தன் கனவுகளும் சிதையாமல், தன் கணவனின் கலைக்கும் துணையாவேன் என்ற புரிதலோடும் ஒரு நல்ல குடும்பத்தலைவியாய் இருப்பேன் என்ற முடிவோடும் திருமண வாழ்வில் நுழைந்து நாளுக்கு நாள் ஏமாற்றத்தை சந்தித்து நோகும் நவீனப் பெண். 

தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இப்பெண்களால் மேற்கொள்ளப்படும் இறுதி முடிவுகளே இவர்களின் அடையாளமாகின்றன. காதலுண்டு என்பதற்காக திருமணமானவனை ஏற்கவில்லை மாதவி. கணவன் இறந்தான் என்பதற்காக எந்த ஊரையும் எரிக்க முற்படவில்லை இந்த கண்ணகி. அத்தனை அன்பிருக்கிறது என்பதற்காக கணவனின் தவறுக்கு மேலும் துணைப்போகவோ அவனுக்காக காத்திருக்கவோ விரும்பவில்லை அருள் மனைவி. மூன்று பெண்களுமே தங்களுக்கான வாழ்வினை வாழத் தயாராகின்றனர். சரியாகச் சொல்வதென்றால் அதன்பின் தான் வாழவே தொடங்குகின்றனர்.

யாரோ உரைப்பதற்காகவெல்லாம் பெண் குறுகிய குறிலாகப் போவதில்லை. அவள் பெண். அத்தனை சாதாரணமாகவெல்லாம் அடித்து மடக்கி குறுக்கிவிட முடியாது. ஏனெனில் அவளே இறைவி. 

இப்புரிதலுக்கு பின்னிருந்து இப்போது வரையாக சிந்திக்கிறேன் சிலப்பதிகாரம் முடிப்பாக உணர்த்தும் இந்த மூன்று உண்மைகள்

"1. அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றாகும்,

2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்,

3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்." 

 என்ன பொருள்படுகிறதென்று. 

- கீதா கார்த்திக் நேத்தா 

Comments

  1. Hyeeee semma write up . அப்படியே படம் பார்த்த மாதிரி ஒரு விமர்சனம் கிடைத்தது.அழகா இரண்டையும் பொருத்தி பார்த்து சொன்ன விதம் அந்த நுணுக்கம் அருமை.நல்ல தமிழாசிரியருக்கான அனைத்தும் பொருந்தப் பெற்றவள் கீதா.அரசு பள்ளிக்கு வந்துவிட்டால் பிள்ளைகள் அதிகம் உன்னிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: