அறைகூவல்


நிலம் தொடங்கி நீர் நெருப்பு பூமி என அனைத்தையும் பெண்ணாகவும் தாயாகவும் கற்பித்துப் போற்றித் துதிக்கும் மனிதனுக்கு உண்மையாகவே வாழும் பெண் என்பவள் யார்? அவளின்  பங்கு என்ன என்ற ஓர் ஆழ்ந்த சிந்தனையை ஓடவிட்டால் எத்தனை தூரம் அது நீண்டாளும் பதில் ஒன்று தான். பெண் என்பவள் அடிமை. அவள் சிந்தனையிலும் உணர்விலும் செயல்பாடுகளிலும் அப்படி இருப்பது தான் ஆண்மைய சமுதாயத்திற்கு வசதி.  பெண்கள் முன்னேற்றம் காணத் தொடங்கி ஒரு நூற்றாண்டை கடந்திருந்த போதிலும் ஏதாவது ஒரு சூழலால் ஏதாவது ஒரு காரணத்தால் ஏன் எது ஒன்றிலுமே அவள் அடிமையாகத்தான் இருக்கிறாள்.

காதலித்தால் கொலை. காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொலை. தனித்திருந்தால் வன்கொடுமை. வன்கொடுமைக்கு காரணம் அவள் உடுத்தும் ஆடை என்ற விளக்கம். சரி இது எல்லாவற்றிலுமிருந்து எப்படியாவது தப்பித்து வந்தால் திருமணம், வரதட்சணை. மணமான எல்லாப் பெண்களாலும் துணிந்து சொல்லவாவது இயலுமா? திருமணத்தோடு ஒரு பெண்ணின் அத்தனை துயரமும் முடிந்தது என்று. முடியாது.


இங்கு குறிப்பிடப்படும் குடும்ப முறையில் ஒரு பெண்ணின் பங்கு என்ன?  வீட்டின் வேலைகளை செய்ய, பிள்ளைகளை பெற்றெடுக்க, பேணி வளர்க்க, (சம்பாதிக்கும் பெண் என்றால் இவை அனைத்தும் இரட்டிப்பாகும்) அவ்வப்போது உடலளவிலோ மனதளவிலோ  தாக்கப்பட்டால் கூட அதை புன்முறுவலோடு  ஏற்றுக்கொண்டு சகித்து வாழ, இதுதான் பெண் குறித்த சமுதாயத்தின் பொதுப்புத்தி. இப்படி இருப்பவள் மட்டும் தான் சமுதாயம் குறிப்பிடும்படியான நல்ல பெண். இதிலிருந்து சற்று மீறினாலோ கேள்வி கேட்டாலோ ஒருவித பதட்டத்திற்கு ஆளாகிவிடும் இப்படியான சமுதாயத்தில் சரி பாதி பெண்கள் என்பது மீள முடியாத துயரம். குடும்ப முறை என்பது பெரும்பாலும் பெண்ணுக்குத் தீமையைத் தரும் நிறுவனமாக ஏன் இயங்குகிறது.

குடும்பத்தில் தொடங்கி கல்விச்சூழல், அலுவலகம், பணி இடம், பேருந்து பயணம், சந்தைக்கடை, நடைபாதை, வீடு என நீண்டுகொண்டே செல்லும் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு மட்டும் முடிவே இருப்பதில்லை. ஒரு நாளின் தொடக்கத்திலிருந்து அந்நாள் முடியும் வரை எத்தனை செய்திகள். எத்தனை எத்தனை கொடுமைகள்.

இத்தனை குற்றங்களுக்கு என்ன காரணம்?  ஒரு ஆண் அவன் அறியாமலேயே அவனுக்குள் ஊறிப்போன ஒருவித ஆதிக்க மனப்பான்மை ஒருபுறம்.  வளர்ப்பிலேயே அடக்கம் என உணர்வுகளை கட்டிப்போட்டு  இது தான் பண்பாடு கலாச்சாரம் என சுட்டிக்காட்டி ஒருவித ஒடுக்கத்திற்குள் சிக்குண்டுக் கிடக்கும் பெண் வளர்ப்பு ஒருபுறம்.

நகரமோ கிராமமோ வசதியோ ஏழ்மையோ இங்கு பெண்களின் நிலை மாத்திரம் இது ஒன்று தான்.
பெண்கள் நினைத்தால் இந்நிலையை மாற்ற முடியாதா? முடியும். ஆனால் அதை நிகழ்த்தத்தான் ஏனோ அத்தனை தயக்கம். பெண்களுக்கு பெண்களே ஆதரவற்றதின் வெளிப்பாடோ என தோன்றுகிறது இந்நிலை இத்தனை காலம் தொடர்வது. எத்தனை கனவோடு ஒரு பெண்பிள்ளை பெற்று வளர்க்கப்பட்டாலும் அத்தனையும் கனவாகவே கலைத்தெறிகிறது நம் சமுதாயத்தின் பெண்ணுக்கான கட்டமைப்பு. 


பெண் என்பவள் சாவி கொடுத்தால் ஓடும் பொம்மையோ? சுவற்றில் மாட்டியிருக்கும் ஒரு நிழற்படமோ? இல்லை, அத்தனை உணர்வுகளும் கொண்ட ஓர் உயிர்! ஓர்  ஆணுக்கு நிகரான சகமனுசி என்ற எண்ணம் முதலில் பெண்ணுக்குள் பதியவேண்டும். முதல் மாற்றம் இதுவே.

- கீதா கார்த்திக் நேத்தா 

Comments

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: