PATERSON
வழக்கமாகச் செல்லும் துணிக்கடையின் ஆண்கள் மேற்சட்டைகளுக்கான பிரிவில் ஒல்லியான நபர் ஒருவர் இருப்பார். அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
எடுத்த மேற்சட்டையைப் போட்டுப்பார்க்க கார்த்திக் சென்ற நேரம் நானும் மௌனியும் வண்ணங்களைக் கூறி விளையாடிக்கொண்டிருந்தோம். எதிரில் இருந்த கண்ணாடியில் நான் மேற்குறிப்பிட்ட மனிதர் ஏதோ ஒரு துண்டுச்சீட்டில் வார்த்தைகளை அடுக்கி அடுக்கி ஒரு மெல்லிய புன்னகையோடு எழுதிக் கொண்டிருந்தது தெரிந்தது. நான் அந்த நபரைப் பார்ப்பதை அடுத்த முனையில் வேட்டிக்கான பிரிவில் இருந்த இன்னொரு நபர் பார்க்க 'உன் கவிதையெல்லாம் அப்புறம் எழுதிக்கலாம் கஸ்டமர பாரு' என்று கொஞ்சம் சத்தமாகக் கூறினார். அவர் குரல் வந்ததும் அவசரமாகத் துண்டுச் சீட்டை எடுத்து தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் திணித்துக்கெண்டு கலைந்திருந்த சட்டைகளை மடிக்கத் தொடங்கினார் அந்தக் கவிதை நபர்.
ஒரு கவிஞரின் அல்லாடல் இது. எப்போதும் வேறொரு உலகில் சஞ்சாரித்துக்கொண்டிருக்கும் உயிர்கள் அவர்கள். அந்த உலகில் அவர்கள் மட்டும் தான். அங்குக் கடவுள் சாத்தான் இரண்டு முகங்களும் அவர்களுக்கானதே. நிகழும் யாவும் அவர்களாலேயே ஆட்டுவிக்கப்படுவது. பித்துநிலைதான். ஆனால் எழுத்துவெளிப்பாடு அந்தக் கவிஞருக்குக் கொடுக்கும் உள்ளொளி தரிசனம் இன்னதென்று யாராலும் உணரமுடியாது அவரைத் தவிர. அதனால்தான் அந்நிலையில் அவர்கள் விரும்பித் திளைக்கிறார்கள்.
பணிக்காலங்களில் தொடங்கித் திருமணத்திற்கு முன்னதான அரசுத்தேர்வுக்காக பயன்படுத்திய நோட்டுப்புத்தகங்கள் வரை அங்கங்கு சிறு சிறு துணுக்குக்கவிதைகளாக நான் எழுதியதுண்டு. இன்றும் என் நூல்களோடு அந்தக் கவிதைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது ஒவ்வொன்றும் நான் வாழ்ந்த நாட்களின் அடையாளங்களாகத் தோன்றும். மிகத் தீவிரமாகத் தேர்வுக்குத் தயாராகும் தருணங்களின் ஊசித்துளை வெளிகளிலும் கவிதை எப்படியோ நுழைகிறது! சிலமுறை அரசு தேர்வறையில் கையிலிருக்கும் வினாத்தாள்களில் கவிதைகளை எழுதியதும் உண்டு.
இப்படித்தான் இந்த திரைப்படத்தில் ஒரு கவிஞர் இருக்கிறார்.
ஒரு நாள் பெடர்சன் தன் வேலையை முடித்து வீடு திரும்பும்போது வழியில் ஒரு சிறுமி தனியாக அமர்ந்திருப்பதைப் பார்ப்பார். கையில் ஒரு சிறுநோட்டும் பேனாவோடும் இருக்கும் அச்சிறுமிக்குத் துணையாக அமர்ந்ததோடு அவளோடு உரையாடத் தொடங்குவார். இருவரும் கவிஞர்களாக அறிமுகமாவார்கள். அப்போது சிறுமி தான் எழுதிய ஒரு கவிதையை பெடர்சனுக்கு வாசித்துக் காட்டுவாள். மீண்டும் மீண்டும் அதை முனகியவாறே பெடர்சன் வீடடைவார்.
ஒரு கவிதை போல நகரும் திரைப்படத்தில் இந்தக் காட்சிகள் உன்னத வரிகள்.
- கீதா கார்த்திக் நேத்தா.
Comments
Post a Comment