CLOSE
Close: (2022)
#LukasDhont
(Belgian film director)
பருவங்களில் மிகவும் ஆபத்தானது பதின் பருவமாகத்தான் இருக்கும். நெருக்கத்திற்கும் விலகலுக்கும் சரிவர பொருளறியாத பருவம் அது. தனக்குள் பல காரணிகளால் ஏற்படும் எண்ணற்ற போராட்டங்களைக் கடந்து வந்தால் மட்டுமே இப்பருவத்தில் வாழ்வு நிச்சயம்.
எட்டாம் வகுப்பு படிக்கும்போது அது அரசு நடுநிலைப் பள்ளி என்பதால் முருகன் வாத்தியார் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார் "இங்கலாம் நீ குப்ப கொட்றது சுலபம் அடுத்து பெரிய ஸ்கூல் போகப் போற அங்க போய் படிச்சி தேறினா மட்டும் தான் உனக்கு வாழ்க்கை சரியா இருக்கும் புரிஞ்சிக்க" என்று.
உண்மையிலேயே அடுத்து மேனிலை கல்விக்காக சேர்ந்த பள்ளி ஊரிலேயே மிகப்பெரிய பள்ளி. நான்காயிரம் மாணவிகள் இருந்தனர். நூற்றுக்கணக்கில் ஆசிரிய பெருமக்கள். அங்கு நான் வெறும் துகள் என்பதுதான் சரியான பொருத்தம். அப்போதிருந்த தலைமை ஆசிரியர் சற்று கடுமையான பேர்வழி. புதிய மாணவிகளின் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்பிற்குமான மாணவிகளைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி பட்டியல் தயாரித்தார். ஒரே பள்ளியில் இருந்து வந்த மாணவிகள் இருவர் கூட ஒரு வகுப்பில் சேர்ந்திருக்க முடியாதபடி இருந்தது அவரது பட்டியல். இந்த பட்டியலைத் தயார் செய்ய ஒரு மாத காலம் தேவைப்பட்டது அவருக்கு. அதுவரை மரத்தடியில்தான் எங்களது கற்றல். அந்த காலகட்டத்திற்குள் பெரும்பாலும் எல்லோரும் ஓரளவிற்கு பெயர் தெரிந்துகொள்ளும் அளவு பழகிவிட்டிருந்தோம். பட்டியலின் அடிப்படையில் வகுப்புகள் பிரித்தனர். நான் எஃப் வகுப்பிற்கு வந்திருந்தேன். என்னோடு படித்திருந்த எந்த மாணவியும் என் வகுப்பில் இல்லை. ஆனால் மரத்தடி வகுப்பில் பழகிய மாதேஸ்வரி, புவனா, சீதா இப்படிச் சில தோழிகள் இருந்தனர்.
இரண்டொரு நாட்கள் கடந்தன. பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் பேசினார். "நீங்களெல்லாம் நன்றாக படிக்கவேண்டும். இந்த அக்கறையில் தான் இந்த பட்டியலும் வகுப்பும். சில மாணவிகள் பெற்றோர்களையும் சில பெற்றோர்கள் அமைச்சர் வரைகூட சென்று பேசித் தங்களது பிள்ளையின் வகுப்பை மாற்ற கேட்கிறீர்கள். உங்கள் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளும் மாணவிகள் தானே. உணவு இடைவேளையில் பார்த்து பேசிக்கொள்ளுங்கள். நான்கு மணிக்கு மேல் பார்க்கலாம் அல்லவா? உயிர் தோழி அவள் எப்போதும் உடன் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பினால் எப்படிக் கல்வி கற்பது? கற்பதற்கான இடம் தானே பள்ளி. இது தவறு. யாரை அழைத்து வந்தாலும் நான் மாற்ற மாட்டேன்" என்று உறுதியாகக் கூறினார்.
அடுத்த நாள் உணவு இடைவேளையோடு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு பயிலும் சுடர்விழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று மாணவிகள் பேசிக்கொண்டனர்.
நான் அவளைப் பார்த்திருக்கிறேன். மரத்தடி வகுப்பில் என்னோடு பேசியிருக்கிறாள். நல்ல சிவப்பு அவள். இரட்டை பின்னலை அவள் ரிப்பன் வைத்து கட்டுவதில்லை. பூனைக்கண் அவளுக்கு. ஆம் அவளது தோழி அம்மு இப்போது என் வகுப்பில் இருக்கிறாள். பல சிந்தனைகள் ஓடியது. தற்கொலை என்ற சொல்லை முதல்முதலாகக் கேட்டது அப்போது தான். அந்த நிகழ்விற்கு பிறகு மாணவிகளை அவர்களது விருப்பப்படி விரும்பும் வகுப்பிற்கு செல்ல அனுமதித்துவிட்டார் தலைமை ஆசிரியர்.
பதின்வயது பிள்ளைகளின் உலகமே அவர்களது நண்பர்கள் தான். தாய் தந்தையர் இரண்டாம் பட்சம். இப்பருவத்தில் அல்லது இவர்களுக்குள் எதேனும் குளறுபடி நிகழும் பட்சத்தில் அது அவர்களின் உலகத்தையே பாதிக்கின்றது. உலகத்தின் பாதிப்பு மனநிலையை உருக்குலைக்கிறது.
லியோ ரெமி இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். பள்ளியில் சக மாணவியால் எதிர்கொண்ட ஒரு சிறு கேள்வியினால் லியோ ரெமியோடு கொண்ட நட்பிலிருந்து விலக முயல்கிறான்.
இல்லாத அன்பினை வெளிப்படுத்துவதில் எத்தனை சிரமங்கள் இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் உளம் முழுக்க இருக்கும் அன்பினை மறைத்துக்கொண்டு தவிப்பது எத்தனை வலியானது என்று ஒவ்வொரு காட்சியிலும் லியோ முகம் உணர்த்திக் கொண்டே இருக்கும். சற்றுமுன் பூத்த மலர் போல முகம் ரெமிக்கு. சொல்லாமல் உதிர்ந்துவிடுவது தானே பூக்களின் இயல்பு. அப்படித்தான் இருந்தது படத்தில் அவன் வருகை. இயக்குநருக்கு இது இரண்டாவது படம். தன் சொந்த அனுபவத்தை படமாகத் தந்திருக்கிறார்.
இந்தப்படத்தை மூன்று முறை நிறுத்தி நிறுத்திப் பார்த்தேன். மூன்று முறையுமே இனம்புரியாத வலியோடு வெளியேறிய அழுகையைத் தவிர்க்க முடியவில்லை. மிக அழுத்தமான ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது படம்.
- கீதா கார்த்திக் நேத்தா.
Comments
Post a Comment