சிலநேரங்களில் சில மனிதர்கள்:
பணியாற்றிய காலங்களில் வகுப்பைக் காட்டிலும் அதிகமாக மரத்தடியில் பாடம் கற்பிப்பதை வழக்கமாக்கி இருந்தேன். இயற்கையோடு இயைந்த கல்வியாக அது இருக்கும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும் ஒருகாலத்தில் அதே மரத்தடியில் அமர்ந்து நான் படித்த நினைவுகளின் தூண்டுதலும் இன்னொரு காரணமாக இருந்தது.
சில வேளைகளில் அதேப் பள்ளியில் நான் ஓடி ஆடிய நினைவுகள் எழுவதுண்டு. அச்சமயங்களில், இப்போதிருக்கும் கல்விமுறையால் வகுப்பில் நிகழும் உரையாடல் போன்றோ கற்றல் கற்பித்தல் போன்றோ ஏன் ஒருபோதும் நான் படித்த காலத்தில் நிகழவேயில்லை என்ற கேள்வியும் ஏக்கமும் தோன்றி மறைவதுண்டு.
ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் இன்னும் சற்று புரிதலோடும் ஈடுபாட்டோடும் படித்திருக்கலாம். இதனால் தான் எனக்கு படிப்பில் அத்தனை ஆர்வமில்லாமல் போனதோ என்றும் தோன்றுவதுண்டு. அனேகமாக தொண்ணூறுகளில் வாழ்ந்த பெரும்பாலான மாணவர்களின் நிலை இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
எனக்கு படிப்பில் ஆர்வமில்லாததால் பள்ளி நாட்களை நான் வெறுத்தேன். முக்கியமாக எனது பத்து வயது வரை. எப்படியாவது என்னை ஏமாற்றி வீட்டில் யாராவது பள்ளிக்கு அழைத்துவந்து விடுவார்கள். அன்றெல்லாம் எனக்கு நரகம்தான்.
இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். ஐந்தாம் வகுப்பில் BUT என்ற ஒரு ஆங்கில வார்த்தைக்கு எழுத்து தெரியாமல் வகுப்பறைக்கு வெளியில் முதல் பாடவேளையில் இருந்து உணவு இடைவேளை வரை நானும் என் சக மாணவர்களும் முட்டியிட்டு தண்டனை அனுபவித்த நாள் ஒன்றை.
அப்போதிருந்த வகுப்பறைச்சூழல்
வகுப்பில் பாடப் புத்தகத்தை எடுத்து ஆசிரியர் கூறும் பக்கத்தை யாரோ ஒரு மாணவனோ மாணவியோ வாசிப்பார். அந்த மாணவனோ மாணவியோ ஏற்கெனவே நன்றாக படிப்பவராக இருப்பார். வாசிக்கும் மாணவர் என்ன வாசிக்கிறார் எதற்காக வாசிக்கிறார் என்ற எந்த ஒரு அறிதிறனும் இன்றி மற்ற மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருப்போம். அப்படித்தான் பல நாட்கள் கழிந்தன. கொஞ்சமும் உணர்வற்ற அத்தருணங்களை எதிர்கொள்ள திராணியற்ற நிலையில் தான், முதலில் பள்ளியில் நடக்கும் அத்தனை கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.
அதுவரை ஒரு வகுப்பு 'இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக' இருந்துவந்த நிலையில் எட்டாம் வகுப்பிற்குள் நுழையும் போது எல்லாம் மாறியிருந்தது. ஒரே வகுப்பு அது. வழக்கத்தைக் காட்டிலும் சற்று அதிகமான மாணவர்கள் குழுமியிருந்தோம். ஐந்து ஐந்து மாணவர்கள் அடங்கிய தனி தனி குழுக்களாக பிரித்து எங்களை அமர்த்தினார் கோவிந்தன் வாத்தியார்.
ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளுமாக வகுப்பை சரிபாதியாகப் பங்கிட்டு அமர்ந்திருந்தோம். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவியோ அல்லது தலைவனோ இருந்தார்கள். அந்த குழுவில் உள்ள மற்ற மாணவர்களின் பள்ளி வேலைகளுக்கும் படிப்பிற்கும் அந்த தலைமை மாணவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.
முந்தைய வகுப்புகள் போன்றே எந்த மாற்றமும் இல்லாமல் அந்த ஆண்டும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் வெறுமனே இருந்தாலும் குழு தலைமை மாணவர்கள் அந்நிலையை சற்று சமன் செய்தனர். கற்பிக்கப்படும் பாடங்கள் மற்றும் வீட்டுப்பாடங்களை மீண்டும் மீண்டும் குழு தலைமை மாணவர்களால் மற்ற மாணவர்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
என் குழுவிற்கும் ஒரு தலைமை மாணவி இருந்தாள். பெயர் அம்மு.
அம்முவிற்கு மிக அடர்ந்த நினைவாற்றல். எதையும் மனனம் சொய்யாமல் ஒருமுறை புரிதலோடு வாசித்துவிட்டு அதை அப்படியே திரும்ப கூறும் திறன் வாய்ந்தவள். நான் எண்ணிக்கொண்டேன் அவளது நினைவாற்றல் தான் அவளுக்கான பக்கப்பலமென்று.
அம்முவைக் குறித்து கூறவேண்டும் என்றால் அடர்ந்த கருத்த மேனி. நான்கடி உயரம் ஆனால் உயரத்தைக் காட்டிலும் பருமன். தெளிவான பேச்சுத்திறன். மிக விரைவாக வாசிக்கும் திறன் கொண்டவள்.
பள்ளி சீருடையோடு மாற்றி உடுத்திக்கொள்ளவென சில ஆடைகளே என்னிடம் இருந்தது. அதை தான் மாற்றி மாற்றி பள்ளிக்கு உடுத்திச் செல்வேன். ஆனால் அம்முவோ எப்போதும் புதிது புதிதான வடிவமைப்பில் ஆடைகளை பள்ளிக்கு உடுத்தி வருவாள். ஆனால் அவள் அணியும் ஆடைகள் அவளைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இடுப்புப் பகுதியில் சுருட்டி அவள் அணியும் பாவாடைகள் அவள் உருவத்திற்கு சற்றும் பொருந்தாததாகத் தோன்றும்.
அம்மு எல்லாரோடும் பழகும் மனப்பக்குவத்தோடு இருந்தாலும் மற்ற மாணவர்கள் அவளோடு பழக ஏனோ ஒரு தயக்கத்தை காட்டியபடியே இருந்தனர். ஆனால் அவள் மிக எளிதாக அவர்களை கடந்துச் சென்றாள். அம்முவின் அந்த முதிர்ச்சியானது அவள் வயதிற்கு மீறிய செயலாக இப்போதும் தோன்றும்.
பெரும்பாலும் அவள் தன்னை தனிமையிலேயே நிறுத்திக் கொண்டாள். தனிமை ஒருவிதமான தற்காப்பு யுக்தி என்பேன். தலைமை பண்பிற்கான அடிதளம் அது. அம்முவின் தனிமை அப்படித்தான் எனக்கு பொருளுணர்த்தியது.
மாலை வேளையில் விளையாடும் பிள்ளைகளை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள் அம்மு. அவள் அருகில் எப்போதும் எதாவது ஒரு பாடநூல் நிச்சயமாக இருக்கும். ஓரிரு நாட்கள் அவள் தனிமையை கவனித்த நான், அத்தனிமை பொறுக்காது அவளோடு சேர்ந்து அமர தொடங்கினேன். பிறகு அவளைப்போலவே நானும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தேன். சிலநேரங்களில் விளையாடும் பிள்ளைகளை. சிலநேரங்களில் மேகங்களை.
இப்படியான ஒரு நாளில் தான் என் முதல் கவிதையை நான் எழுதியிருந்தேன். எழுதிய கவிதையை அம்முவிடம் வாசித்து காட்டினேன். கவிதையை வாசித்த மாத்திரத்தில் அவள் கேட்ட முதல் வார்த்தை "உனக்கு ஒன்னும் ஆகலல. ஏன் விசித்திரமா ஏதோ பேசுற" என்பது தான். முதலில் நகைப்பாகத் தோன்றினாலும் பிறகு அப்படி எதுவும் எழுதுவதை சில ஆண்டுகள் தவிர்த்தேன்.
ஒருநாள் அம்மு பள்ளிக்கு நீலவண்ண பாவடை ஒன்றை உடுத்தி வந்திருந்தாள். அவள் அதுவரை உடுத்திவந்த ஆடைகளில் அந்த ஒரு பாவடை அவளுக்கு மிக அழகாக பொருந்தி இருந்தது. ஆனால் அன்று மற்ற மாணவர்கள் யாரும் அவளோடு சிறு வார்த்தையும் பேசவில்லை. அவள் அருகாமையில் சென்றாலே மாணவர்கள் விலகி சென்று அமர்ந்தனர். எனக்கு மாணவர்களின் அச்சூழலே புரியவில்லை.
அம்முவின் தாய்வழி பாட்டி ஊரில் பூப்பெய்தும் பெண்களுக்கு சடங்குகள் செய்வார். அச்சடங்கில் பூப்பெய்தும் பெண்களின் ஆடைகளை அம்முவின் பாட்டி தான் தூய்மையாக்கி தருவார். சடங்கு நிறைவில் அந்த ஆடைகள் மீண்டும் அம்முவின் பாட்டியிடமே வழங்கப்பட்டுவிடுவதுண்டு. அந்த ஆடைகளைக் தான் அம்மு அவ்வப்போது பள்ளிக்கும் உடுத்தி வருகிறாள் என்று மற்ற மாணவர்கள் பேசிக்கொண்டனர்.
இச்சம்பவத்திற்கு ஒருசில வாரங்கள் முன்பு வகுப்புத் தோழி ஒருத்தி பூப்பெய்தியிருந்தாள். அப்போது அவள் உடுத்தியிருந்த ஆடை தான் அம்மு அணிந்து வந்த நீல வண்ண பாவாடை என்று மற்ற மாணவர்களுக்கு அதை சுட்டி அடையாளம் காட்டினாள். அதோடு பூப்பெய்திய வகுப்புத் தோழி கூடுதலாக அந்த நீல வண்ண பாவாடையில் அங்கங்கே தென்பட்ட சிவப்பு நிறங்களை 'தான் பூப்பெய்திய நாட்களில் வெளிப்பட்ட இரத்த கரை என்றும் ஒரு தகவலை உதிர்த்தாள்.
இதைக்கேட்ட மற்ற மாணவர்கள் எதையோ கேட்க கூடாததைக் கேட்டதைப்போல வாயை அடைத்து தங்களது அதிர்ச்சியை தெரியப்படுத்தினர். அந்த வயதில் அந்த சூழலில் இப்படி ஒரு தகவல் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் தான்.
எனக்கென்னவோ பூப்பெய்திய மாணவி கூறியது போல் எதுவும் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் கூட அதிலென்ன தவறு என்ற கேள்வி தான் முதலில் மூளைக்கு உரைத்தது. அதோடு அம்மு உடுத்தியிருந்த நீல வண்ண பாவாடையில் அங்கங்கே சிவப்பு மலர்கள் உதிர்ந்து கிடப்பதைப்போல அதன் வடிவமைப்பு இருப்பதாகத்தான் என் கண்களுக்கு தெரிந்தது.
அம்முவின் பாட்டிக்கு அது தொழிலா என்று கூட தெரியாத வயது அது. எப்படி இருந்தாலும் அவர் உழைக்கிறார். அந்த உழைப்பால் கிடைக்கப்பெறும் எல்லாமும் அவள் பாட்டியின் உடைமைதான். நான் எண்ணிக்கொண்டதெல்லாம் அப்படியாவது அவளிடம் நிறைய ஆடைகள் இருக்கிறதே. என்றுதான்.
ஒருநாள் நாங்கள் எப்போதும் அமரும் வகுப்பறை வாயிலின் முதல் படியில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தோம். ஆகாயத்தில் சில மேகங்கள் குழுமியிருந்தன. அதில் ஒரு மேகத்தைக் காட்டி" இது முயல் மாதிரி இருக்குல" என்றாள் அம்மு.
"மாதிரிலாம் இல்லை. முயல் தான்" என்று சிரித்தேன்.
தேவைக்கு அதிகமாக பேசுவதை விரும்பாத அம்மு "சரிதான்" என்றாள், பின் "டூசன்ல சமூகவியல் டெஸ்ட் சொன்னாரே வாத்தியார் படிச்சிட்டியா? என்றாள்". குழு தலைவி என்பதால் அவளுக்கு என்னை படிக்க வைக்கும் பொறுப்பு இருந்தது.
படிக்கிறேன் என்றேன்.
"உனக்கு தெரியலன்னா இல்ல எதாவது புரியலனா எங்கிட்ட கேளு நான் சொல்லி தரேன்". என்றாள்.
அன்றைய தேர்வு. கார்கில் போர் குறித்தது. அம்முவின் உதவியோடு ஆசிரியரின் கேள்விக்கு சரியான பதிலை உறைந்து பாராட்டைப் பெற்றேன். அந்த பாராட்டு எனக்கு படிப்பு மீது ஒரு நாட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அன்று என் அருகில் அமர்ந்திருந்த அம்முவின் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி.
பள்ளி மாறி பின் கல்லூரிக்குச் சென்றேன். எப்போதெல்லாம் தனிமையைப் பற்றுகிறேனோ அப்போதெல்லாம் என் அருகில் எதேனும் ஒரு நூல் இருக்கும். கல்லூரி முடித்து பல ஆண்டுகள் கடந்தாயிற்று. அம்முவை இறுதியாக பார்த்த நிகழ்வு ஏதும் நினைவில் இல்லை. ஆனால் எப்போதும் தனிமையில் அமர்ந்து எதிர்ப்படும் அனைத்தையும் வேடிக்கைப் பார்ப்பது முன்பைவிட தற்சமயம் அதிகரித்திருக்கிறது. எங்கு சென்றாலும் என் அருகில் ஒரு நூலை வைத்துகொள்கிறேன் இப்போதும். வயது ஏற ஏற இன்னும் அதிகமாக ஆகாயம் பார்க்கிறேன். அப்போதெல்லாம் அம்மு என் உடன் அமர்ந்திருக்கிறாள்.
💜✨
ReplyDelete