Loving (Jeff nichols)

Loving (2016)
- Jeff Nichols

மனிதகுலத்தின் மிக நீண்ட வரலாற்றைத் தாங்கிப் பிடித்திருப்பது வீரமாக இருந்தாலும் அதற்கு இணையாக ஈடுகொடுத்து நிற்பது காதல். ஒரு காதல் என்ன செய்யும், ஒரு காதல் எல்லாமும் செய்யும். வேண்டுமென்றால் இந்த உலகை அழித்தொழிக்கும். மாறாக ஒரு புதிய உலகை படைத்தெடுக்கும். காதலில் எல்லாமும் சாத்தியம்.
கடந்த ஆண்டு பார்த்தப் படங்களில் மிக வியக்க வைத்த ஒரு காதல் கதை லவ்விங். உண்மையாக நடந்த கதை. 

தயங்கி தயங்கி தான் கருவுற்ற செய்தியைத் தன் காதலனிடம் கூறுகிறாள் மைல்ட்ரெட். அதைக் கேட்ட மாத்திரத்தில் மகிழும் காதலன் அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். அதோடு தன் காதல் மனைவிக்கு அழகான‌ ஒரு வீடு கட்ட முயல்கிறான்.

கருப்பர்கள் மீது உச்சபட்சமான தீண்டாமையை, வெறுப்புணர்ச்சியைக் கடைப்பிடிக்கும் அந்த ஊரில் வெள்ளை ஆண்மகனான ரிச்சர்ட்க்கும் கருப்புப் பெண்மணியான மைல்ட்ரெட்டிற்கும் கலப்புத் திருமணம் நடந்து முடிகிறது.  

வெர்ஜினியாவின் ஒரு பகுதியில் வாழும் இவர்களின் திருமணம் அப்பகுதியின் சட்டத்திற்குச் செல்லுபடியாகாது என இருவரையும் கைது செய்கின்றனர். ஆனால் மைல்ட்ரெட் மட்டும் சிறையில் அடைக்கப்படுகிறாள். ஓராண்டு சிறைத் தண்டனை. குறைந்தபட்சம் இருபத்தி ஐந்து ஆண்டுகள் இருவரும் சேர்ந்தார்போல் அந்த ஊருக்குள் நுழைய அனுமதி மறுத்து கணவன் மனைவி இருவரும் ஊரைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். 

பல ஆண்டுகள் சட்டப்போராட்டத்திற்குப் பிறகு இவர்களுக்கான நியாயம் கிடைத்தது என்பது வலியோடு சற்று ஆறுதல் நிறைந்த தனி வரலாறு. 

இப்படத்தில் மிகவும் அழகாகத் தோன்றியது இவர்களின் காதல். காதல் மௌனத்திற்கு மொழி சேர்க்கும், மொழியில் மௌனத்தைக் கூட்டும் போலும். பெரும்பாலும் மௌனத்திலேயே பேசுகிறாள் மைல்ட்ரெட். அவளது கண் அசைவுகளிலும் உடல் மொழிகளிலும் நிறைந்திருக்கும் மௌனத்தால் அவள் கூற எத்தனிக்கும் பொருளை அப்படியே உணர்ந்துகொள்கிறான் ரிச்சர்ட். தன் காதல் மனைவி எடுக்கும் எல்லா முடிவுகளுக்குப் பின்னும் ரிச்சர்ட் நிற்கிறான் மனைவிக்குத் துணையாக. 

நகர வாழ்க்கையை சகித்துக் கொள்ள முடியாமல் மீண்டும் சொந்த ஊர் நினைவில் எழ தங்கள் மீதான வழக்கை மீண்டும் தொடர நினைக்கிறாள் மைல்ட்ரெட்.

இத்தம்பதியரின் வழக்கு சமுதாயத்தில் அதிர்வலைகளை உண்டாக்குகிறது. "கலப்புத் திருமணத்தால் பிறக்கும் பிள்ளைகள் குற்றவாளிகளாக இருப்பார்கள்" எனும் அளவிற்கு நீதிமன்றம் செல்கிறது. இக்கருத்தால் தங்களது வழக்கு தீர்ப்பாகும் தருணத்தைக் காண மறுக்கிறான் ரிச்சர்ட். அவனிடம் அவனது வழக்கறிஞர் "நீதிபதிக்கு ஏதேனும் கூற வேண்டுமா?" எனக் கேட்கும்போது ரிச்சர்ட் கூறுகிறான் "அவரிடம் கூறுங்கள், நான் என் மனைவியை நேசிக்கிறேன்" என்று. எவ்வளவு அழகான காதல் அது. 

இறுதியில் இவர்களது வழக்கு வெற்றியடைகிறது. லவ்விங் தம்பதியர் மீண்டும் தம் சொந்த ஊருக்குச் சென்று தங்களது வீட்டை கட்டி எழுப்புகின்றனர். படம் இப்படியாக முடிவடைகிறது. இம்முடிவில் ஆசுவாச நிம்மதி பெருமூச்சு ஒன்றை உணர்கிறேன். 

இலக்கியத்தில் கூறப்படும் காவியக் காதலுக்குச் சற்றும் குறைவில்லாதது லவ்விங் தம்பதியர் காதல். தீர்ப்பிற்கு பிறகு சில வருடங்களில் ரிச்சர்ட் இறந்துபோகிறார். மைல்ரெட்டிற்காக ரிச்சர்ட் எழுப்பிய இல்லத்தில் அவர் நினைவோடு தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து முடிக்கிறார் மைல்ட்ரெட். ‌ 

தன் கணவரின் மறைவிற்குப் பிறகு அமைதியான‌ ஒரு வாழ்வை மேற்கொண்ட மைல்ட்ரெட் ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறியிருக்கிறார்.
"கறுப்பர், வெள்ளையர், இளைஞர், முதியோர், ஓரினச்சேர்க்கையாளர்கள், நேரானவர்கள் எனப் பலரும் வாழ்க்கையில் தேடும் அன்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, குடும்பம் ஆகியவற்றை வலுப்படுத்த உதவும் நீதிமன்ற வழக்கில் ரிச்சர்ட் மற்றும் என் பெயர் இருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது." 

நானும் உரைக்கிறேன். 
அன்பு மைல்ட்ரெட், எங்களுக்கும் தான். 

Comments

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: