சிலநேரங்களில் சில மனிதர்கள்:

முதுகலை முதலாம் ஆண்டு படிக்கையில் விடுதி அறைக்குப் புதிதாக ஒரு பெண் வந்து சேர்ந்தார். பெயர் சோபியா. எனக்கு மட்டும் தான் அவள் புதியவளாக தெரிந்திருந்தாள் போல. விடுதியில் மற்ற எல்லோருக்கும் ஓரளவிற்கு பரிச்சயமான பெண்ணாகவே இருந்ததாகத் தோன்றியது. என் அறை மாணவிகள் சிலருக்கு அவள் எப்போதோ ஒருமுறை நெருங்கிய தோழியாக இருந்துள்ளாள் என்பதும் அவள் வந்திருந்த இரண்டொரு நாட்களில் அறிந்துகொண்டேன். இருப்பினும் யாரும் அவளோடு இப்போது நெருங்கிப் பழகுவதாகத் தோன்றவில்லை. 

சோபியா நல்ல உயரம். ஐந்து அடிக்கு மேல் இருக்கலாம். தொட்டு எடுத்து கண் இமைகளில் தீட்டிக்கொள்ளும் கண் மை கருப்பு அவள் நிறம். ஆனால் நல்ல இலட்சணமான முக அமைப்பு. 

பொருட்கள் வைத்துக்கொள்ள  எனக்காக ஒதுக்கப்பட்ட அலமாரிக்கு மேல் பகுதியில் இருந்த அலமாரி சோபியாவுக்காக ஒதுக்கப்பட்டது. ஒருமுறை நான் என் அலமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்த சமயம் சோபியாவின் சில துணிகள் என் மீது விழுந்தன. இதை எதிர்பார்க்காத சோபியா பதற்றத்தோடு சாரி பாப்பா என்று கூறிக்கொண்டே துணிகளை எடுத்து மீண்டும் அடுக்கினாள். 

பரவால.. தெரியாமத்தான விழுந்தது.. ப்ரீயா விடுங்க... என்றேன். பதிலுக்கு ஒரு சிரிப்பில் அவள் நன்றியுணர்வைத் தெரியப்படுத்தினாள். 

எதேச்சையாக ஒருநாள் அறையில் சோபியா குறித்த மற்ற மாணவிகள் பேசிக்கொண்டிருந்ததில் சில தகவல்கள் அறிய வாய்த்தது. 

காஞ்சிபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த பெண். ஒரே பெண். சிறு வயதில் இருந்தே நன்றாக படிக்கும் பெண். இளம் அறிவியல் பட்டம் வரை முதல் மதிப்பெண் எடுத்த சோபியா முது அறிவியல் முதலாம் ஆண்டு படிக்கையில் ஒருநாள் நள்ளிரவு இதே விடுதி கழிவறையில் எதையோ பார்த்து பயந்து ஓடிவந்த அதிர்ச்சியில் படியில் இருந்து உருண்டு விழுந்திருக்கிறாள். எந்த அளவிற்கு இது உண்மை என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அப்போது கூறப்பட்ட செய்தி இது.

நாங்கள் இருக்கும் விடுதியின் கழிவறையும் ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையும் கட்டிட அமைப்பில் ஒட்டியிருப்பவை. இடையில் ஒரு சுவர் தான் இரண்டையும் பிரித்திருந்தது. விடுதி வந்திருந்த சில மாதங்களில் இருந்தே பிணவறையை வைத்து பல பேய்க்கதைகளை நானும் கேட்டிருந்தேன். ஆனால் இவர்கள் கூறுவதைப்போல் எதையும் பார்க்கவில்லை. 

சோபியா அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்தாள் என்றும் கூறினார்கள். பிறகு சிகிச்சை காரணமாக ஓராண்டு விடுப்பிற்குப் பிறகு மீண்டும் இப்போது தான் கல்லூரிக்கு வந்திருக்கிறாள். 

இத்தகவல் அறிந்த பிறகு எனக்கு அவள் மீதான பார்வையில் இன்னும் சற்று கரிசனம் கூடுதலாக அமைந்தது. 

ஒருமுறை கடுமையான காய்ச்சல் காரணமாக நான் விடுப்பு எடுத்திருந்தேன். அசதியோ நோய்மையோ ஏதோ ஒன்றின் தாக்கத்தால் எழுந்து அமரவும் திராணியற்று படுக்கையில் கிடந்தேன். நண்பகல் ஒரு மணிக்கு மேல் தான் மற்ற மாணவிகள் அறைக்கு வரக்கூடும்.. நான் நன்றாக உறங்கினேன். அப்படித்தான் உணர்ந்தேன். ஆழ்ந்த தூக்கத்தின் இடையே யாரோ என் கன்னத்தை வருடுவதுபோல் அல்லது என் முகத்தில் ஏதோ ஒரு எறும்போ பூச்சியினமோ ஊர்ந்து செல்வது போல் உணர்ந்ததால் தூக்கம் களைந்து மெல்ல விழித்தேன். எதிரில் யாரோ ஒருவர் முகம். திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன். அது சோபியா.. பயத்தில் கை நடுக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் "என்ன வேணும் ஏன் இங்க உக்காந்துருக்கிங்க" என்றேன். நீ தூங்கும் போது அழகா இருக்க. பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு. அதான் தொட்டுப் பார்த்தேன் என்றாள். 

முதலில் இதைக்கேட்டு திடுக்கிட்டாலும் என்னிடம் வேறு கேள்விகளோ அல்லது எதிர் வார்த்தைகளோ இல்லை. எதற்கும் மனமும் உடலும் சிறிதும் துணியாமல் மீண்டும் சுருண்டு காய்ச்சல் படுக்கையில் விழுந்தேன். 

ஓர்நாள் இரவு உறக்கத்தில் ஒரு மிகப்பெரிய அழுகை சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன். என்னைப்போல் இன்னும் சில தோழிகளும் எனக்கு முன்பு ஏற்கெனவே எழுந்து அமர்ந்திருந்தனர். உறக்கத்தில் அவ்வப்போது விட்டு விட்டு ஏதோ சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள் சோபியா. அழுவது போலவோ உறுமுவது போலவோ இருந்தது அந்தச் சத்தம். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த தோழிகளில் ஒருத்தி சோபியாவின் அருகில் சென்று அவளை எழுப்ப முயன்றாள். பிறகு தயக்கத்தோடு திரும்பி படுக்கைக்கே மீண்டும் விரைந்தாள்.

வார்டனை அழைப்பது சரியென்று முடிவெடுத்தோம். வார்டன் வந்தார். சோபியாவை எழுப்பி என்ன "உடம்பு எதாவது சரியில்லாம இருக்கா"? என்று விசாரித்தார். அவள் வழக்கமாக ஏதோ மாத்திரை உட்கொள்வதாகவும் இரண்டொரு நாட்களாக மாத்திரை தீர்ந்ததால் எடுக்கவில்லை என்று கூறியதாகவும் எங்களுக்கு அப்போது தான் தெரியவந்தது. 

"உடம்பு சரியில்லாத புள்ளைங்களலாம் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டு என் உயிர வாங்குறாங்க. எதாவது ஆனா நம்ம தலைய போட்டு உருட்ட வேண்டியது" என்று புலம்பிக்கொண்டே வார்டன் அவர் அறைக்குச் சென்றார். 

அறையில் இருந்த யாருக்கும் அதுவரை அவள் மாத்திரை எதுவும் எடுத்துப் ‌பார்த்ததாக நினைவில் இல்லை. 

பெரும்பாலான நேரத்தை நான் அறையில் தான் கடந்தேன். அதனாலேயே அறை தோழிகள் அனைவரின் நடவடிக்கைகளையும் காண நேரிட்டதுண்டு. அதில் முதன்மையானவள் சோபியா தான். ஒரு மாலை கத்தரிப்பூ வண்ணத்தில் உடையணிந்துகொண்டும் நேர்த்தியாகத் தலைவாரிக்கொண்டும் அறையில் இருந்த எங்களிடம் காண்பித்து நன்றாக இருக்கிறேனா என்று கேட்டாள் சோபியா.

நானும் ஒன்றும் புரியாதவளாய் ஆமாம் என்றேன். தோழிகள் சிலரும் அதையே கூறினார்கள்.

பிறகு நாங்கள் எதுவும் கேட்காமலேயே "நான் போய்ட்டு வந்து சொல்கிறேன் என்று மகிழ்ச்சியோடு அங்கிருந்து விடை பெற்றாள் சோபியா.

அன்று இரவு அறை திரும்பியிருந்த சோபியாவின் முகம் மாறியிருந்தது. மன உளைச்சலில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. மாலை இருந்த நேர்த்தியோ முகத்தின் ஒளியோ அவள் அறை திரும்பியபோது இல்லை. மிகுந்த அமைதியோடு தென்பட்டாள். ஏன் இந்த மாற்றம்.? என்ன நடந்திருக்கும்? என்று பல சிந்தனைகள் ஓடின.

எல்லோருக்குமே அப்படியே தோன்றியிருக்கலாம். ஆனால் யாரும் அவளிடம் எதுவும் கேட்டதாகத் தெரியவில்லை. அவளும் எதுவும் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். 

உறங்குவதற்குச் சற்று முன் ஏதோ தோன்ற அவளிடம் பேச்சுக் கொடுத்தேன் "என்னாச்சு எங்கயோ போனீங்களே?"

மெல்ல பேசத்தொடங்கினாள். எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆச்சு. அவருக்கு என் மேல ரொம்ப அன்பு. டிகிரி முடிச்சு கல்யாணம்னு பேசியிருந்தாங்க. நாங்க நல்லாதான் பழகினோம். எனக்கு உடம்பு சரியில்லாம போனப்போ கூட அவர் என்ன நல்லாதான் பாத்துகிட்டார். ஆனா இப்போ வந்து நமக்குள்ள எதுவும் செட் ஆகாதுன்னு சொல்லுறார். நான் கெஞ்சி பாத்துட்டேன் அழுது பாத்துட்டேன். ஒன்னும் சரி வரல என்று கூறிக்கொண்டே அழுதாள். 

எனக்கு ஆறுதல் சொல்லத் தெரியாது. அது ஒரு கலை அல்லது மிக நேர்த்தியாக கையாள வேண்டிய ஒரு பணி. எனக்கு அது கை வராது என்று நம்பினேன். வெறுமனே அவள் கைகளை பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தேன். பிறகு 
பரவாயில்லை. கொஞ்ச நாள் போகட்டும். திரும்பவும் பேசி பாருங்க என்றேன். விருப்பமற்று தலையை சரி என்பதைப்போல ஆட்டி வைத்தாள். 

சில நாட்கள் கடந்திருக்கும் ஒரு முறை மதிய உணவு இடைவேளையில் என் முகத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாக என் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து சோபியா அவள் நெற்றியில் ஒட்டிக்கொண்டாள். இதை பார்த்துக் கொண்டிருந்த தோழி ஒருத்தி இது அநாகரீகம் என்று அவளை கடிந்து கொண்டாள். எனக்கும் தெரியும் அது அநாகரீகமான செயல் தான். தவறு. ஆனால் அத்தனை தீவிரமாக அவள் மீது கோபம் கொள்ள ஏனோ அப்போது தோன்றவில்லை. 

அவ பொட்டை எடுத்து வச்சிகிட்டா நானும் அவள மாதிரி ஆயிடுவேன்ல. அவளை மாதிரி இருந்திருந்தா என் மாமா என்ன விட்டு போயிருப்பானா? என்று அழுவதைப்போல பாவனை செய்தாள். ஒரு குழந்தை சாயலில்.

இது என்ன புதுக்கதை என வியக்கத் தோன்றியது எனக்கு. 

நான் முதலில் தோழியை சமாதானம் செய்தேன். 

பிறகு சோபியாவிடம் பேசினேன். "என்கிட்ட இன்னும் ஒரு பாக்கெட் இதே மாதிரி பொட்டு இருக்கு. தரேன் வச்சிக்கோங்க. அழகுனால ஒருத்தர் விட்டு போறாங்க அப்படினா அவங்க போறது தான் சரியா இருக்கும் இல்லையா? நீங்க நம்பலனாலும் நீங்க அழகு தான். நம்புங்க" என்றேன். 

இந்த மனசு தான் எனக்கு இல்லை என்றாள் சோபியா. 

அந்த பருவத்தின் தேர்வு கட்டணத்தை செலுத்த வீட்டில் இருந்து எனக்கு சிறிது பணம் மணியார்டர் செய்திருந்தார்கள். அன்று பெரும் அலைச்சல். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு அறைக்கு வந்திருந்த நான் களைப்பில் பணமிருந்த கைப்பையை அப்படியே தலைக்கு வைத்து உறங்கிவிட்டேன். வெகுநேரம் உறங்கியிருந்தேன் என்று நினைக்கிறேன். விழித்தபோது இரவாகி இருந்தது. நான் எழுந்தபோது உணவும் தீர்ந்திருந்தது. பெரியதாக பசியும் இல்லாததால் மீண்டும் அப்படியே உறங்கிப் போனேன். 

அன்று இரவு முடிந்தது. காலை நான் எழும்போது சோபியா ஒரு பெரிய பாத்திரத்தில் தேநீர் வாங்கி வந்திருந்தாள். இதற்கு முன் அவள் இப்படி இந்த அளவிற்கான பாத்திரத்தில் தேநீர் வாங்கி வந்து அருந்தியதாக எனக்கு நினைவில்லை. 

வழக்கத்தினும் அன்று காலை சற்று கூடுதலான சுறுசுறுப்போடு தென்பட்டாள் சோபியா. 

"இது எனக்குத் தெரிஞ்சு மூனாவது டீ. உனக்கேது இவ்வளோ காசுனு புரியல என்றாள் சோபியாவிடம் தோழி ஒருத்தி."

எங்கப்பா காலையிலேயே இந்தப்பக்கம் வந்ததா சொல்லி என்னையும் பாத்துட்டு போனார். அவர் கொடுத்த காசு தான். என்று பதில் உரைத்தாள் சோபியா. 

எங்களுக்கென்னவோ வழக்கமான ஒரு காலை தான் அது. எப்போதும் போலவே நான் கல்லூரிக்குக் கிளம்பினேன். அறையை விட்டு கிளம்பும்போது ஒருமுறை கைப்பையை சரிபார்ப்பது வழக்கம். அப்படித்தான் அன்றும் பார்த்தேன். மணியார்டர் பணம் இல்லை. உடன் இருந்த சில்லறைகளும் காணாமல் போயிருந்தது. முதலில் அதிர்ந்தேன். பணம் காணாமல் போய்விட்டது ஒருபுறம், இப்போது தேர்வு கட்டணம் எப்படி செலுத்துவேன், யாரிடம் கேட்பது என்ற மனப்போராட்டம் ஒருபுறம் என தலைசுற்றத் தொடங்கியது. 

கைப்பையை மொத்தமாகக் கீழே கவிழ்த்து மீண்டும் புத்தகங்கள் பேனாக்கள் என ஒவ்வொன்றாக எடுத்து நிதானமாக அடுக்கினேன். பணம் இல்லை என்பதை உணர உணர இனம்புரியாத பதற்றம் ஒன்று தொற்றியது. 

என்னைக் கவனித்துக்கொண்டிருந்த தோழி முகவோட்டத்தை வைத்து "என்ன? திடீரென்று ஒரு மாதிரி இருக்க" என்றாள். 

நான் பதிலேதும் பேசவில்லை. 

"காசு எதுவும் காணோமா?" என்றாள் மீண்டும். 

எனக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. இரண்டொரு நிமிடங்கள் அப்படியே மௌனித்திருந்தேன். 

"டீ பன்னுனு வாங்கி வந்து ஆடும்போதே தெரியும் எவளோட காசையோ திருடிட்டனு.. போயும் போயும் உன்ன விட சின்ன பிள்ளைகிட்ட திருடி தின்றுக்க அறிவில்லையா?" என அறைத் தோழிகள் மாறி மாறி சோபியாவைத் திட்ட ஆரம்பித்தனர். 

"நான் எடுக்கல" என்று அத்தனை தோழிகளிடமும் தனக்காக வழக்காடினாள் சோபியா. 

அப்போது தான் அறை நுழைந்த தோழி ஒருத்தி நடந்தவற்றை யூகித்து என் கைப்பையை சோபியா பரிசோதனை செய்ததை பார்த்ததாக என்னிடம் கூறினாள். 

நான் எதுவும் பதில் கூறாமல் அங்கிருந்து வெளியேறினேன். 

பேருந்து நிலையத்தில் அமைதியாக நின்றிருந்தேன். கடந்து செல்லும் பேருந்துகள் மனிதர்கள் என யாரும் சிந்தனைக்கு எட்டவில்லை. சிறிது நேரம் அப்படியே தொடர்ந்தது. 

வீட்டில் இருந்து அழைப்பு வர கைபேசி ஒலித்தது. எடுக்க மனமில்லை. சில நிமிடங்கள் கடந்து மீண்டும் அறையை நோக்கி நடந்தேன். நான் அறைக்குள் வரும் வரை சோபியாவை எல்லோரும் கடிந்து கொண்டுதான் இருந்தார்கள்‌. ஒரு நிமிடம் அவர்களை அமைதிபடுத்த முயன்றேன். வாக்குவாதம் நீண்டிருந்தது. 

பணம் என் பையில் தான் இருக்கிறது என்று கத்தினேன். "சாரி நான்தான் சரியா பாக்கல" என்றேன் மீண்டும். "பஸ் டாப் போய் திரும்பப் பார்த்தேன். கிடைச்சிடுச்சி. அத சொல்ல தான் திரும்பி வந்தேன். மதிய வந்து பேசுறேன்" என்று யாரோட பதிலையும் எதிர் பார்க்காமல் அங்கிருந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். 

வகுப்பு தோழிகளின் உதவியோடு அன்று தேர்வு கட்டணத்தை கட்டியிருந்தேன். 

மதியம் நான் அறை திரும்பியிருந்த பிறகு யாரும் என்னிடம் பணத்தை குறித்தோ அல்லது சோபியாவைக் குறித்தோ எதுவும் பேசவில்லை. 

அன்று மாலை நெருங்கிய தோழி ஒருத்தி மட்டும் என்னிடம் வந்து கேட்டாள். "நீ காலைல திரும்பி வராம இருந்துருந்தா அவங்ககிட்ட செலவு போக மீதியிருக்கும் காசையாவது எல்லோரும் சேர்ந்து வாங்கியிருப்போம். நீ ஏன் வந்து அப்படி சொன்ன" என்றாள். 

தெரியல. ஒருவேளை அவங்க அப்பா "உண்மையாவே வந்திருந்தா".. என்று இழுத்தேன்... 

"நீ விட்ருந்தா இந்த பிரச்சினை பெருசாகிருக்கும். என்ன இதை காரணமா காட்டி இந்த வார்டன் அவங்கள வீட்டுக்கு அனுப்பிருக்க வாய்பிருக்கு. போகட்டும். இனியாவது அவங்க இப்படி நடந்துக்காம இருக்கனும். இல்லைனா அவங்க படிப்பு போய்டும். சரி நீ இந்த காச எப்படி திருப்பித்தர போற.. உன் ப்ரண்ட்ஸ்க்கு". என்றாள்..

"கொடுத்துடுவேன் சீக்கிரம். என்றேன். 

ஓவியம் மௌனி.

Comments

Post a Comment

Popular posts from this blog

I Am Not a Witch , கொட்டுக்காளி:

All We Imagine as Light: (Payal Kapadia)

அனாகத நாதம்: