அனாகத நாதம்:
அனாகத நாதம்:
செந்தில் ஜெகன்நாதன்
சொற்றுணை பதிப்பகம் வெளியீடு. இந்த நூல் செந்தில் ஜெகன்நாதனின் இரண்டாவது நூல். முதல் நூல் மழைக்கண்.
செந்தில் ஜெகன்நாதனின் படைப்புகள் எளிய மனிதர்களின் வாழ்வினை அதன் இயல்பிலேயே பேசிச் செல்பவை. அனாகத நாதமும் எட்டு சாமானிய மனிதர்களின் வாழ்வினை அந்தப் பாதையிலேயே சொல்லிச் செல்கிறது.
எட்டுக் கதைகளும் எட்டுவிதம்.
செந்தில் ஜெகன்நாதனின் கதைகளில் தந்தை என்ற கதாப்பாத்திரம் நீங்காமல் இடம் பிடித்துவிடுகிறது. தந்தை இல்லாத மனிதன் இங்கு யாரு? இதற்கேற்ப இவர் கதைகளில் விரும்பும் மனிதராகவும் வெறுக்கும் மனிதராகவும் அடிக்கும் மனிதராகவும் அரவணைக்கும் மனிதராகவும் முதலில் தந்தையாகத்தான் தான் இருக்கிறார்.
சாயை கதையில் வரக்கூடிய ஒரு பாத்திரம். படப்பிடிப்பு தளத்தில் காக்கைகளை ஓட்ட நியமிக்கப்பட்ட ஒரு பணியாள் குறித்த கதை. இந்தப் பணியே இதுவரை நான் கேள்விப்படாத ஒன்றாகத் தோன்றியது. இக்கதையிலும் ஒரு தந்தை இருக்கிறார்.
தம்பொருள் கதையின் முடிவில் ஒரு இனம்புரியாத கனமும் கந்தவேலுவின் அமைதியும் அவரது டிவிஎஸ் எக்ஸெல் சத்தமும் நம்மையும் பீடித்துவிடுகிறது. இந்தக் கதையில் கந்தவேலு ஒரு தந்தை.
அனாகத நாதம் கதை பேசுவது இசையை. ஓர் இசை கலைஞனின் வாழ்வை. கைப்பிடித்து ஒரு பேருந்தில் ஏற்றி அதன் கூட்டத்தில் இடிபடச் செய்து பின் ஒரு இருக்கையில் அமரவைத்து விவரிக்கும் இந்த கதையின் முடிவில் ஒரு சிறு ஆசுவாசம் கிடைக்கிறது. அது தான் இசை. இக்கதையிலும் ஒரு தந்தை இருக்கிறார்.
செந்தில் ஜெகன்நாதன் தன் கதைகளின் நிலம், மனிதர்கள், கோயில் மதில் சுவர், விளையாட்டு மைதானம், நாதஸ்வரம் இசை செம்பருத்தி செடிகள் என ஒவ்வொன்றின் வழியாகவும் வாசிப்பாளரகளோடு நிதானமாக உரையாடுகிறார். மிக நிதானமாக. அதனாலேயே மிக விரைவாக நாம் கதை மாந்தர்களோடு பழகிவிடுகிறோம். செந்தில் கதையின் பெண் பாத்திரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அன்பிற்கு அன்பு. பாசத்திற்குப் பாசம். அடிக்கு எதிர்த்து அடிக்கும் பாத்திரங்கள். மிகப் பிடித்த கதாபாத்திரம் தம்பொருள் கதையில் வரும் இந்திராணி.
நல்ல வாசிப்பனுபவம்.
👏👏👏
ReplyDelete😊🙏
Delete